Saturday, 2 April 2011

Catholic News - hottest and latest - 31 Mar 2011

1. அப்போஸ்தலிக்க நிர்வாகி : அமைதிக்கானப் பாதை ஆப்ரிக்க ஒன்றியத்தின் வழியே செல்ல வேண்டும்

2. சென்டெய் ஆயர் : புகுஷிமா அணுமின் நிலையப் பகுதியில் கிறிஸ்தவர்களும் இடர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பது மகிழ்வைத் தருகிறது

3. ஒசாகா துணை ஆயர் : புகுஷிமாவில் உருவாகியுள்ள ஆபத்து ஜப்பானுக்கும் அகில உலகுக்கும் பாடம்

4. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தப்படும் நிகழ்ச்சியைக் காண வரும் மக்களை வரவேற்க உரோம் தயார்

5. பாகிஸ்தான் சிறையிலிருக்கும் ஆசியா பீபி திருத்தந்தையைச் சந்திக்க ஆவல்

6. இயேசு சபை கருத்தரங்கு : அகதிகள், புலம் பெயர்ந்தோர் அனைவரும் பாதுக்காக்கப்பட வேண்டும்

7. கிறிஸ்தவ அமைப்புக்கள் வலியுறுத்தல் : மலேசியாவில் விவிலியத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு தடைகளையும், நிபந்தனைகளையும் அரசு முற்றிலும் நீக்க வேண்டும்

8. மியான்மாரில் நிகழும் அரசு மாற்றங்கள் உண்மையான குடியரசை நோக்கிய மாற்றங்களாக இருக்க வேண்டும் : பான் கி மூன்

----------------------------------------------------------------------------------------------------------------

1. அப்போஸ்தலிக்க நிர்வாகி : அமைதிக்கானப் பாதை ஆப்ரிக்க ஒன்றியத்தின் வழியே செல்ல வேண்டும்

மார்ச் 31,2011. மனித குலத்தைக் காப்பதற்காக லிபியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள அந்நிய நாட்டுத் தாக்குதல்களால் அப்பாவி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று Tripoli மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியான ஆயர் Giovanni Innocenzo Martinelli கூறியுள்ளார்.
லிபியாவில் நிலவும் வன்முறைச் சூழலைத் தீர்க்க, இச்செவ்வாயன்று லண்டனில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஆப்ரிக்க ஒன்றியத்திலிருந்து ஒருவரையும் அழைக்காதது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறதென்று ஆயர் Martinelli, FIDES செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
லிபியாவில் புரட்சி செய்து வரும் குழுக்களில் ஒரு குழுவினர் மற்றொரு குழுவினருக்கு எதிராகப் போரிடுவதற்கு அவர்களுக்கு இராணுவத் தளவாடங்களை அளிப்பது சரியான தீர்வாகாது என்று ஆயர் Martinelli எச்சரித்தார்.
தற்போது ஐரோப்பியப் படைகள் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் மிகத் துல்லியமாக நடைபெறுவதாகக் கூறினாலும், இந்தத் தாக்குதல்களில் ஒரு மருத்துவமனையும் பாதிக்கப்பட்டதைத் தான் அறிந்துள்ளதாகவும், அம்மருத்துவமனையில் உள்ளவர்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதை உணர முடிந்ததென்றும் ஆயர் விளக்கினார்.
ஆப்ரிக்காவின் ஒரு பகுதியாக விளங்கும் லிபியாவில் நிரந்தர தீர்வு உண்டாக வேண்டுமெனில், அரேபிய நாட்டுத் தலைவர்களும், ஆப்ரிக்க ஒன்றியத்தின் தலைவர்களும் சேர்ந்து வந்து இந்தத் தீர்வைக் காண்பதே சிறந்த வழி என்று ஆயர்  Martinelli வலியுறுத்தினார்.


2. சென்டெய் ஆயர் : புகுஷிமா அணுமின் நிலையப் பகுதியில் கிறிஸ்தவர்களும் இடர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பது மகிழ்வைத் தருகிறது

மார்ச் 31,2011. புகுஷிமா அணுமின் நிலையத்தின் அருகில் அணுக்கதிர் வீச்சு ஆபத்தைத் துணிந்து எதிர்கொண்டு உழைத்து வரும் பல ஊழியர்கள் மத்தியில் கிறிஸ்தவர்களும் உழைத்து வருவது மிகுந்த மகிழ்வைத் தருகிறதென்று Sendai மறைமாவட்ட ஆயர் Martin Tetsuo Hiraga கூறினார்.
ஜப்பான் மக்களுக்கும், மனித குலத்திற்கும் உண்டாகியிருக்கும் இந்த ஆபத்தை நீக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மனிதகுலம்  தலை வணங்கி மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறிய ஆயர், இந்தச் செயல் வீரர்கள் மத்தியில் நற்செய்தி மதிப்பீடுகளுக்கும், கிறிஸ்தவத்திற்கும் உயர்ந்த சாட்சிகளாய் உழைத்து வரும் கிறிஸ்தவர்களுக்குத் தன் சிறப்பான வாழ்த்துக்களைக் கூறினார்.
தற்சமயம் புகுஷிமா அணுசக்தி நிலையத்திற்குள் 180 தன்னார்வத் தொண்டர்கள் உழைத்து வருகின்றனர் என்றும், இவர்கள் 50 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிந்து, பணி நேரங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து, பணி செய்து வருகின்றனர் என்றும் வத்திக்கானின் FIDES செய்தி நிறுவனம் கூறுகிறது.

3. ஒசாகா துணை ஆயர் : புகுஷிமாவில் உருவாகியுள்ள ஆபத்து ஜப்பானுக்கும் அகில உலகுக்கும் பாடம்

மார்ச் 31,2011. புகுஷிமாவில் உருவாகியுள்ள ஆபத்துக்களைக் கண்ட பின்னர் ஜப்பான் வருங்காலத்தில் அணுசக்தி நிலையங்களைப் பற்றிய தன் நிலைப்பாட்டை ஆராய வேண்டும் என்று Osaka மறைமாவட்டத்தின் துணை ஆயர் Michael Goro Matsuura கூறினார்.
மிக ஆபத்தான இந்த விபத்து, உலகில் வாழும் அனைவரையும் விழித்தெழ வைத்துள்ளது என்று கூறிய ஆயர் Matsuura, அணுசக்தி நிலையங்களை ஜப்பானிலும்  இன்னும் பிற நாடுகளிலும் எழுப்புவது குறித்து ஜப்பான் அரசு மிகத் தீவிரமாக எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் அப்படி செய்வது மனித குலத்திற்கு இந்நாடு செய்யக்கூடிய ஒரு பெரும் சேவை என்றும் வலியுறுத்திக் கூறினார்.
புகுஷிமா அணுசக்தி நிலையத்தைச் சுற்றி 30 கிலோமீட்டர் வட்டத்தில் வாழும் அனைவரும் மிகுந்த கவலையுடன் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் பிற இடங்களுக்குச் செல்ல தயாராக உள்ளதாகவும் Saitama மறைமாவட்ட ஆயர் Marcellino Daiji Tani கூறினார்.
அணுசக்தியை இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜப்பான் ஆயர் அவை சென்ற ஆண்டு தங்கள் நிலைப்பாட்டை அறிவித்திருந்தது. புகுஷிமா விபத்துக்குப் பின், ஜப்பான் ஆயர் பேரவை அணு ஆயுதங்களை இந்த உலகிலிருந்து முற்றிலும் அழிக்க வேண்டும் என்று தங்கள் அரசுக்கும், அமெரிக்க அரசுத் தலைவருக்கும், இன்னும் பிற உலகத் தலைவர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் என்று FIDES செய்தியொன்று கூறுகிறது.

4. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தப்படும் நிகழ்ச்சியைக் காண வரும் மக்களை வரவேற்க உரோம் தயார்

மார்ச் 31,2011. இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் மே மாதம் முதல் தேதியன்று முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்படும் புனித நிகழ்ச்சியைக் காண வரும் அனைத்து மக்களையும் வரவேற்க உரோமை மாநகரம் தயாராக உள்ளதென இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்கள் கூறினர்.
இந்த நிகழ்வுக்கு வருகை தரும் பல்லாயிரம் மக்களைச் சமாளிக்க முடியாமல் உரோமையில் பதட்டநிலைகள் உருவாகலாம் என்று கூறப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ஏற்பாடு குழுவினரின் சார்பில் இச்செவ்வாயன்று பேசிய பேரருள் தந்தை Liberio Andreatta செய்தியாளர்களிடம் கூறினார்.
ஏப்ரல் 30 சனிக்கிழமை Circus Maximus என்ற உரோமைத் திடலில் நடைபெறும் திருவிழிப்புச் சடங்கு, மே மாதம் முதல் தேதி புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் திருத்தந்தையால் நிகழ்த்தப்படும் திருப்பலி, மற்றும் மே 2ம் தேதி திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்தோனே தலைமையில் நடைபெறும் நன்றியறிதல் திருப்பலி ஆகிய மூன்று நிகழ்வுகளுக்கும் நுழைவுச் சீட்டு எதுவும் கிடையாது என்று அருள்தந்தை Andreatta விளக்கினார்.
இந்நிகழ்வையொட்டி, திருப்பயணிகளுக்கான அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவரும் ஏப்ரல் 30, மே 1, மே 2 ஆகிய மூன்று நாட்கள் பொது வாகனங்களில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
இம்மூன்று நாட்களிலும் உணவு, தண்ணீர் ஆகியவற்றை வழங்க பல பன்னாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளனவென்றும் இந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

5. பாகிஸ்தான் சிறையிலிருக்கும் ஆசியா பீபி திருத்தந்தையைச் சந்திக்க ஆவல்

மார்ச் 31,2011. பாகிஸ்தானில் Sheikupura சிறையில் இருக்கும் ஆசியா பீபி என்ற கிறிஸ்தவப் பெண் திருத்தந்தையைச் சந்திக்கத் தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
தேவ நிந்தனை குற்றத்திற்காக மரண தண்டனை சுமத்தப்பட்டு, சிறையில் இருக்கும் ஆசியா பீபியை அவரது கணவர் அண்மையில் சென்று சந்திக்கும்போது, அவர் தனது விருப்பத்தை வெளியிட்டார்.
தவக்காலத்திற்கான உண்ணாநோன்பை சிறையில் மேற்கொண்டுள்ள ஆசியா பீபி, மிகுந்த களைப்புடன் காணப்பட்டார் என்று அவரது கணவர் கூறினார்.
திருத்தந்தையைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், அச்சந்திப்பை தான் இப்போது மேற்கொண்டுள்ள இந்தச் சிலுவையின் பயனாகத் தனக்குக் கிடைத்த உயிர்ப்பாக இருக்கும் என்று ஆசியா பீபி கூறியதாக அவரது கணவர் தெரிவித்தார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன்னைப் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து அறிந்து வருவதையும், தன்னைப் பற்றி தன் உரையில் குறிப்பிட்டதையும் தான் அறிந்தபோது, தொடர்ந்து வாழ வேண்டும் என்ற உந்துதலும், நம்பிக்கையும் தனக்குப் பிறந்ததென ஆசியா பீபி தன் கணவரிடம் கூறியுள்ளார்.
திருத்தந்தையை நேரில் சந்தித்து, அவருக்குத் தன் நன்றியைக் கூறுமளவுக்குத் தான் வாழ்ந்தாலே போதும் என்ற தன் ஆவலையும் ஆசியா பீபி வெளியிட்டதாக அவரது கணவர் கூறினார்.

6. இயேசு சபை கருத்தரங்கு : அகதிகள், புலம் பெயர்ந்தோர் அனைவரும் பாதுக்காக்கப்பட வேண்டும்

மார்ச் 31,2011. சட்டப்படி அங்கீகாரம் பெற்றவர், பெறாதவர் என்று எந்த நிலையில் இருந்தாலும், அகதிகள், புலம் பெயர்ந்தோர் அனைவரும் பாதுக்காக்கப்பட வேண்டுமென்று இயேசுசபையினர் நடத்திய ஒரு கருத்தரங்கில் கூறப்பட்டது.
இயேசுசபையினரின் அகதிகள் பணிக் குழுவினர் இச்செவ்வாயன்று Brusselsல் நடத்திய ஒரு கருத்தரங்கில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளில் அகதிகளுக்கு சரியான பாதுகாப்பு  இல்லை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
ஆப்ரிக்க, அரேபிய நாடுகளில் அண்மையில் ஏற்பட்டுள்ள பல புரட்சிகளின் எதிரொலியாக ஐரோப்பாவிற்கு வந்து சேரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, சிறப்பாக, தற்போது இத்தாலியின் Lampedusaவில் உருவாகியிருக்கும் அகதிகள் நிலை இக்கூட்டத்தில் பேசப்பட்டது.
ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகள் வருவது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் பாதிக்கும் ஒரு பிரச்சனை என்றும், இதற்குத் தகுந்த தீர்வுகள் காண்பது இந்த ஒன்றியத்தின் கடமை என்றும் கருத்தரங்கில் கலந்து கொண்ட பலரும் கருத்து தெரிவித்தனர்.
இயேசுசபையினர் நடத்தும் அகதிகள் பணி தற்போது  உலகின் 50 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், ஐரோப்பிய நாடுகளில் 12 இடங்களில் இப்பணிகளுக்கான அலுவலகங்கள் உள்ளதென்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

7. கிறிஸ்தவ அமைப்புக்கள் வலியுறுத்தல் : மலேசியாவில் விவிலியத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு தடைகளையும், நிபந்தனைகளையும் அரசு முற்றிலும் நீக்க வேண்டும்

மார்ச் 31,2011. மலேசியாவில் விவிலியத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு தடைகளையும், நிபந்தனைகளையும் அரசு முற்றிலும் நீக்க வேண்டும் என்று அந்நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்தவ அமைப்புக்களும் அரசை வலியுறுத்தி வருகின்றன.
Alkitab என்று அழைக்கப்படும் இவ்விவிலியப் பிரதிகளில் கடவுளை அல்லா என்று குறிப்பிட்டதால் உருவான பிரச்சனையைத் தொடர்ந்து, மலேசிய அரசு இவ்விவிலியப் பிரதிகளில் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
அண்மையில் தன்னிடம் இருந்த விவிலியங்களை மீண்டும் அளிக்க முன் வந்தபோது, அவ்விவிலியங்களில் கிறிஸ்தவர்களின் பயன்பாட்டிற்கு மட்டும் என்று முத்திரை குத்தி, அவற்றிற்கு எண்கள் இட்டு வெளியிட தீர்மானித்தது.
நாட்டின் அமைதியைக் குலைக்கும் ஒரு புத்தகம் என்று Alkitabஐ அரசு கூறியிருப்பது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு கருத்து என்று கூறும் கிறிஸ்தவ அமைப்புகள், அரசு விதித்திருக்கும் அனைத்துத் தடைகளையும் நீக்கி, விவிலியத்தை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று போராடி வருகின்றன.


8. மியான்மாரில் நிகழும் அரசு மாற்றங்கள் உண்மையான குடியரசை நோக்கிய மாற்றங்களாக இருக்க வேண்டும் : பான் கி மூன்

மார்ச் 31,2011. மியான்மாரில் நிகழும் அரசு மாற்றங்கள் உண்மையான குடியரசை நோக்கிய மாற்றங்களாக இருக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
மியான்மார் மக்கள் பல ஆண்டுகளாய் விரும்பி வரும் குடியரசு, ஒப்புரவு ஆகிவற்றை உறுதி செய்யும் ஒரு அரசாக இப்போது பொறுப்பேற்கும் அரசு விளங்க வேண்டுமேயொழிய, பழைய இராணுவ அரசின் தொடர்ச்சியாக இது இருக்கக் கூடாதென்று இப்புதனன்று வெளியிட்ட ஒரு செய்தியில் பான் கி மூன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 50 ஆண்டளவாய் இராணுவ ஆட்சியைக் கண்டுள்ள மியான்மாரில் தற்போது நிகழும் மாற்றங்களுக்கான முடிவுகள் அனைத்து கட்சிகளையும் கலந்து ஆலோசித்து எடுக்கப்படும் முடிவுகளாக இருக்க வேண்டும் என்று பான் கி மூன் வலியுறுத்தினார்.
அமைதிக்கான நொபெல் பரிசையும், மக்களின் பெரும்பான்மை ஆதரவையும் பெற்ற Aung San Suu Kyi கடந்த 20 ஆண்டுகளாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, கடந்த நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டபோது, மற்ற அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்கக் கோரி ஐ.நா.பொதுச் செயலர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...