Friday, 8 April 2011

Catholic News - hottest and latest - 07 April 2011

1. சீரோ மலபார் ரீதி ஆயர்களுக்குத் திருத்தந்தை வழங்கிய உரை

2. லிபியாவில் முழு அமைதி நிலவ திருத்தந்தை விடுத்த அழைப்பிற்கு Tripoli அப்போஸ்தலிக்க நிர்வாகியின் நன்றி

3. புனித வியாழனன்று திருத்தந்தை நிறைவேற்றும் திருப்பலியில் எடுக்கப்படும் காணிக்கை ஜப்பான் மக்களுக்கு அனுப்பப்படும்

4. புனித அந்தோணியார் கோவில் உட்பட பல வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களை இலங்கை அரசு புதுப்பிக்கும் திட்டம்

5. பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கும் போது, பெற்றோர் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் - அயர்லாந்து ஆயர்கள்

6. வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் கோபுரம் மிக உறுதி வாய்ந்ததாய் உள்ளது

7. மாற்றுத் திறனாளிகள் நாளைக் கொண்டாடிய பங்களாதேஷ் காரித்தாஸ் அமைப்பு

8. இடியுடன் கூடிய மழை, புயல்கள் ஒவ்வொரு மணி நேரத்திலும் 760 முறைகள் ஏற்படுகின்றன - அறிவியல் ஆய்வு

----------------------------------------------------------------------------------------------------------------
1. சீரோ மலபார் ரீதி ஆயர்களுக்குத் திருத்தந்தை வழங்கிய உரை

ஏப்ரல் 07,2011. இயேசு கிறிஸ்துவிடமிருந்து திருச்சபையை வழிநடத்தும் அதிகாரத்தை நேரடியாகப் பெற்ற திருத்தூதர்களின் வேண்டுதல்களால் நாம் இன்றையத் திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பை சரிவரச் செய்ய முடியும் என்று திருத்தந்தை கூறினார்.
இந்தியாவின் சீரோ மலபார் ரீதி ஆயர்களை இவ்வியாழன் மதியம் திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
தன் உரையின் துவக்கத்திலேயே, அண்மையில் மறைந்த கர்தினால் மார் வர்கி விதயத்தில் குறித்து குறிப்பிட்ட திருத்தந்தை, இந்தியத் திருச்சபைக்கு கர்தினால் விதயத்தில் ஆற்றிய தலை சிறந்த சேவையை நன்றியோடு தான் நினைத்துப் பார்ப்பதாகவும் கூறினார்.
உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள். உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்: பிறர் உங்களைவிட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள். நீங்கள் ஒருமனத்தவராய் இருங்கள்” (உரோமையருக்கு எழுதிய திருமுகம் 12 : 9-10,16) என்ற பவுலடியாரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிய திருத்தந்தை, பவுல் அடியாரின் இந்த அன்புக் கட்டளை ஆயர்களின் இதயங்களையும் அவர்களது பணிகளையும் வழிநடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
திருமணங்கள் புனிதமானது, அங்கு உருவாகும் உறவு நிரந்தரமானது என்ற உண்மைகளை திருச்சபையின் படிப்பினைகளிலிருந்தும், இந்திய கலாச்சாரத்தின் அடிப்படைகளிலிருந்தும் இளையோருக்கு உணர்த்துவது திருச்சபையின் கடமை என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை, இளையோருக்கு இவ்வுண்மைகளைப் பொறுமையுடன் உணர்த்துவது திருச்சபையின்  கடமை என்றும் கூறினார்.
கல்வியிலும், பிறரன்புச் சேவைகளிலும் அதிகம் ஈடுபட்டுள்ள கேரளத் தலத் திருச்சபையில் இளையோர் பலர் இறையழைத்தலை ஏற்பதைத் திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டு, இந்த அழைத்தலில் அவர்கள் வளர்வதிலும் ஆயர்கள் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


2. லிபியாவில் முழு அமைதி நிலவ திருத்தந்தை விடுத்த அழைப்பிற்கு Tripoli அப்போஸ்தலிக்க நிர்வாகியின் நன்றி

ஏப்ரல் 07,2011. லிபியா மற்றும் ஐவரி கோஸ்ட் பகுதிகளில் முழு அமைதி நிலவ திருத்தந்தை இப்புதன் பொது மறைபோதகத்தின்போது விடுத்த அழைப்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார் Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகியான ஆயர் Giovanni Innocenzo Martinelli.
ஆயுதங்களை விடுத்து, அரசியல் முறைகளில் தீர்வு காண்பதற்கு திருத்தந்தை விடுத்துள்ள இந்த அழைப்பும், செபங்களும், ஒரு உந்து சக்தியாக உள்ளதென்று ஆயர் Martinelli எடுத்துரைத்தார்.
இதற்கிடையே, ஐவரி கோஸ்டில் தொடரும் வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது அப்பாவி பொது மக்களே என்று அந்நாட்டிற்கான திருப்பீடத் தூதர் பேராயர் Ambrose Madtha கூறினார்.
வன்முறைகளுக்குப் பயந்து மக்கள் தங்களுக்குள்ள அனைத்தையும் விட்டு விட்டு, கோவில்களில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்று கூறிய பேராயர், இவர்களுக்கு, உணவு, குடிநீர், மருந்துகள் ஆகிய பல்வேறு அடிப்படைத் தேவைகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன என்று கூறினார்.


3. புனித வியாழனன்று திருத்தந்தை நிறைவேற்றும் திருப்பலியில் எடுக்கப்படும் காணிக்கை ஜப்பான் மக்களுக்கு அனுப்பப்படும்

ஏப்ரல் 07,2011. வருகிற ஏப்ரல் 21ம் தேதி, இயேசுவின் இறுதி இரவுணவை நினைவுகூரும் நாளான புனித வியாழனன்று திருத்தந்தை நிறைவேற்றும் திருப்பலியில் எடுக்கப்படும் காணிக்கை ஜப்பான் மக்களுக்கு அனுப்பப்படும் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.
திருப்பீடத்தின் இந்த முயற்சி மற்ற மறைமாவட்டங்களையும் இந்த வழியில் சிந்திக்க ஒரு தூண்டுதலாக இருக்கும் என்று நம்புவதாக திருப்பீடத்தின் 'Cor Unum' அவை Fides செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளது.
திருப்பீடத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஜப்பானின் Sendai மறைமாவட்ட ஆயர் Martin Tetsuo Hiraga திருத்தந்தையின் இந்த முயற்சிக்கு ஜப்பான்  மக்களின் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
'Cor Unum' அவை அனுப்பியிருந்த 150000 டாலர்கள் தங்களை வந்தடைந்துள்ளன என்பதை நன்றியோடு குறிப்பிட்ட ஆயர் Hiraga, இந்தத் தொகையைக் கொண்டு மக்களின் வீடுகளையும், சேதமடைந்துள்ள கோவில்களையும் மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று கூறினார்.
நிலநடுக்கம், மற்றும் சுனாமியால் சேதமடைந்துள்ள வீடுகளை மீண்டும் வாழ்வதற்குரிய இடங்களாய் மாற்ற இன்னும் ஒரு மாத காலம் ஆகும் என்றும் ஆயர் Hiraga கூறினார்.


4. புனித அந்தோணியார் கோவில் உட்பட பல வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களை இலங்கை அரசு புதுப்பிக்கும் திட்டம்

ஏப்ரல் 07,2011. இலங்கையில் யாழ்ப்பாணத்தை அடுத்துள்ள கச்சத்தீவில் புகழ்பெற்ற புனித அந்தோணியார் கோவில் உட்பட பல வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களைப் புதுப்பிக்கப் போவதாக கலாச்சாரம் மற்றும் புராதான சின்னங்களைக் காக்கும் அரசுத்  துறையின் அமைச்சர் அறிவித்துள்ளார்.
இவ்வரசுத் துறையின் அமைச்சர் T.B.Ekanayake இச்செவ்வாயன்று கர்தினால் மால்கம் இரஞ்சித்தைச் சந்தித்தபோது, அரசின் இத்திட்டம்பற்றிக் கூறினார்.
இலங்கையின் வளர்ச்சிக்கு கத்தோலிக்க சமயம் அளித்துள்ள பெரும் பங்கை அரசு உணர்ந்து, கத்தோலிக்க மற்றும் பிற மதங்களின் வழிபாட்டுத் தலங்களைப் புதுப்பிக்கவும், பாதுகாக்கவும் முன் வந்திருப்பது மகிழ்வைத் தருகிறதென்று கர்தினால் இரஞ்சித் கூறினார்.
வழிபாட்டுத் தலங்களைக் காப்பதற்கு அரசு எடுத்துள்ள முயற்சிகளை இலங்கை ஆயர் பேரவைக்கு எடுத்துச் சொல்லி, முக்கியமான திருத்தலங்களைப் பட்டியலிட்டு, அரசுக்கு அறிவிக்குமாறு அமைச்சர் கர்தினால் இரஞ்சித்தைக் கேட்டுக் கொண்டார் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.


5. பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கும் போது, பெற்றோர் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் - அயர்லாந்து ஆயர்கள்

ஏப்ரல் 07,2011. பள்ளிகள் இளையோரின் எதிர்கால எண்ணங்களையும், பழக்க வழக்கங்களையும் மாற்றும் கருவி என்பதால் அந்தப் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கும் போது, பெற்றோர் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்று அயர்லாந்து ஆயர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
குடும்பங்களும், பங்குத் தளங்களும் கத்தோலிக்கப் பள்ளிகளுடன் இணைந்து செயல்பட வேண்டுமெனும் நோக்கத்துடன் அவைகளை ஒருங்கிணைக்கும் ஓர் அமைப்பை 2010ம் ஆண்டு அயர்லாந்து ஆயர் பேரவை உருவாக்கியது.
இந்த ஆயர் பேரவையின் அமைப்பு இப்புதனன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், கத்தோலிக்கப் பள்ளிகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகளை எழுப்பியபோது, பெற்றோருக்கு தனிப்பட்டதொரு விண்ணப்பத்தை வெளியிட்டது.
கத்தோலிக்கப் பள்ளிகள் மனிதரின் விசுவாசத்திற்கும், சிந்திக்கும் திறமைக்கும் தகுந்த மதிப்பு அளிப்பதால், இப்பள்ளிகள் அயர்லாந்தில் இன்னும் பலரால் விரும்பி தேர்வு செய்யப்படுகின்றன என்று இவ்வறிக்கை கூறுகிறது.
இப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள், பயின்று வரும் மாணவர்கள் இங்கு கற்றுக் கொண்டவைகளின் அடிப்படையில் அயர்லாந்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உழைப்பார்கள் என்ற நம்பிக்கையும் இந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.


6. வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் கோபுரம் மிக உறுதி வாய்ந்ததாய் உள்ளது

ஏப்ரல் 07,2011. வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் கோபுரம் மிக உறுதி வாய்ந்ததாய் உள்ளதென்று ஆய்வுக் குழுவொன்று தன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
புகழ்பெற்ற ஓவியரும் சிற்பியுமான மிக்கேலாஞ்சலோவால் வடிவமைக்கப்பட்டு, 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோபுரம் இக்காலத்திய கான்க்ரீட் கட்டிடங்களை விட வலுவுள்ளதென்று கூறியுள்ள இந்த ஆய்வறிக்கை, வத்திக்கான் நாளிதழான L'Osservatore Romano வில் இச்செவ்வாயன்று வெளியானது.
520 அடி உயரமுள்ள இந்தக் கோபுரம் இரு இரும்பு வளையங்களைக் கொண்டு கட்டப்பட்டதென்று இது வரை எண்ணப்பட்டது. ஆயினும் இந்த ஆய்வின்போது மேற்கொள்ளப்பட்ட சில நுண்ணிய முறைகளின் வழியே, இந்தக் கோபுரம் ஆறு இரும்பு வளையங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதென்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்தக் கோபுரத்தின் வடிவமைப்பு, மற்றும் கட்டப்பட்டுள்ள முறை ஆகியவை இக்கோபுரம் மிக உறுதி வாய்ந்தது என்பதை உணர்த்துகிரதென்று இவ்வறிக்கை கூறுகிறது.


7. மாற்றுத் திறனாளிகள் நாளைக் கொண்டாடிய பங்களாதேஷ் காரித்தாஸ் அமைப்பு

ஏப்ரல் 07,2011. பங்களாதேஷ் காரித்தாஸ் அமைப்பு மாற்றுத் திறனாளிகள் நாளை இப்புதனன்று கொண்டாடியது.
Mymensingh மாவட்டத்தின் Haluaghat எனும் இடத்தில் நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் மேற்கொண்ட ஊர்வலம், கருத்தரங்கு, மற்றும் கலைநிகழ்ச்சிகள் வழியாக இந்த நாள் கொண்டாடப்பட்டது.
தனக்குள்ள உடல் குறையைக் கண்டு, பள்ளியில் தனக்கு அனுமதி கிடைக்கவில்லை என்ர்பதை எடுத்துச் சொன்ன Hosne Ara என்ற 23 வயது இஸ்லாமியப் பெண், காரித்தாஸ் அமைப்பின் உதவியால் தான் பெற்ற கல்விக்கும், வேலைக்கும் தன் வாழ்நாளெல்லாம் நன்றியறிந்திருப்பதாகக் கூறினார்.
இன்று பிற அரசு அமைப்புக்களும், அரசு சாரா அமைப்புக்களும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் செய்ய முன் வந்திருப்பதற்குக் காரணம் காரித்தாஸ் காட்டிய வழியே என்று Hosne Ara மேலும் கூறினார்.
காரித்தாஸின் உதவியால் கைவினைப் பொருட்களைச் செய்துவரும் Wahab Mian என்ற 53 வயது இஸ்லாமியரும் தன் அனுபவங்களை எடுத்துச் சொல்லி, காரித்தாஸுக்கு தன் நன்றியைக் கூறினார்.
காரித்தாஸ் அமைப்பு மேற்கொண்ட ஒரு ஆய்வின் படி, பங்களாதேஷில் 10 விழுக்காட்டு மக்கள் மாற்றுத்திறனாளிகள் என்று கணிக்கப்பட்டுள்ளது.


8. இடியுடன் கூடிய மழை, புயல்கள் ஒவ்வொரு மணி நேரத்திலும் 760 முறைகள் ஏற்படுகின்றன - அறிவியல் ஆய்வு

ஏப்ரல் 07,2011. உலகில் இடியுடன் கூடிய மழை, புயல்கள் ஒவ்வொரு மணி நேரத்திலும் 760 முறைகள் ஏற்படுகின்றன என்று அறிவியல் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
வியென்னாவில் கூடியுள்ள ஐரோப்பிய புவியியல் ஒன்றியம் இத்தகவலை வெளியிட்டது. மேலும், இந்த எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் குறைந்து வருகிறதென்றும் கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையும் புயலும் புவியின் மத்தியப் பகுதிகளில் அதிகம் உள்ளதென்றும், ஆப்ரிக்காவின் காங்கோ பகுதியிலேயே இவை மிக அதிகம் காணப்படுவதாகவும் இவ்வறிக்கை கூறுகிறது.
இந்தப் புயல்கள் குறித்த ஆய்வுகள் 1925ம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று உலகெங்கும் அமைந்துள்ள 40க்கும் அதிகமான ஆய்வு நிலையங்களில் ஒவ்வொரு முறையும் மின்னல் தாக்கும்போது புயல்களின் பிரசன்னம் கணக்கிடப்படுகின்றது என்று BBC செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...