Thursday, 28 April 2011

Catholic News - hottest and latest - 27 April 2011


1. இரண்டாம் ஜான்பால் அருளாளராக உயர்த்தப்படும் திருச்சடங்குத் திருப்பலியில் புனிதப் பொருளாக அவரது இரத்தம்

2. இரண்டாம் ஜான்பால் அருளாளராக உயர்த்தப்படும் திருச்சடங்கைக் காண வரும் பல்லாயிரம் போலந்து நாட்டவர்கள்

3. இலங்கை உள்நாட்டுப் போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நா.வின் அறிக்கை பற்றி கிறிஸ்தவத் தலைவர்கள் கருத்து

4. கர்நாடகாவில் புனித வெள்ளியன்று கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகள்

5. பாஸ்காத் திருவிழிப்புத் திருச்சடங்கின் போது இறையடி சேர்ந்த சீன ஆயர்

6. தலாய் லாமாவைத் தொடர்ந்து திபெத்து அரசின் அடுத்தப் பிரதமர் தெரிவு

7. ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி இவைகளுக்குப் பின் ஆஸ்பஸ்டாஸ் வடிவில் எழுந்துள்ள ஆபத்து

----------------------------------------------------------------------------------------------------------------

1. இரண்டாம் ஜான்பால் அருளாளராக உயர்த்தப்படும் திருச்சடங்குத் திருப்பலியில் புனிதப் பொருளாக அவரது இரத்தம்

ஏப்ரல் 27,2011. வருகிற மே மாதம் முதல் தேதியன்று, 50க்கும் மேற்பட்ட உலகத்தலைவர்களும் பிற சமயத் தலைவர்களும் கலந்து கொள்ளவிருக்கும் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அருளாளராக உயர்த்தப்படும் திருச்சடங்குத் திருப்பலியில் அவரது இரத்தம் அடங்கிய ஒரு சிறு பேழை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இடம் அளிக்கப்படும்.
இப்பேழை புனிதப் பொருளாக இத்திருப்பலி நேரத்தில் பீடத்தில் வைக்கப்படும். திருப்பலிக்குப் பின், திருத்தந்தையின் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களுக்கான அலுவலகத்திற்கு அருகில் உள்ள ஒரு கோவிலில் இப்பேழை பாதுகாக்கப்படும்.
திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களின் இரத்தம் அடங்கிய நான்கு பேழைகள் உள்ளன. இவற்றில் ஒன்று வத்திக்கானிலும், மற்றொன்று வத்திக்கானுக்குச் சொந்தமான Bambino Gesu மருத்துவமனையை நடத்தி வரும் புனித வின்சென்ட் டி பால் பிறரன்பு மகளிர் சபை அருட்சகோதரிகள் கண்காணிப்பிலும் வைக்கப்படும்.
மீதி இரு பேழைகள் போலந்து நாட்டில் உள்ள ஓர் ஆலயத்தில் புனிதப் பொருளாக பீடத்தில் பதிக்கப்படும் என்றும் தற்போது கட்டுமானத்தில் உள்ள இக்கோவில் மேமாதம் முதல் தேதிக்குப் பின் திறக்கப்படும் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


2. இரண்டாம் ஜான்பால் அருளாளராக உயர்த்தப்படும் திருச்சடங்கைக் காண வரும் பல்லாயிரம் போலந்து நாட்டவர்கள்

ஏப்ரல் 27,2011. வருகிற ஞாயிறன்று இறையடியார் இரண்டாம் ஜான்பால் அருளாளராக உயர்த்தப்படும் திருச்சடங்கைக் காண பல்லாயிரம் போலந்து நாட்டவர்கள் இவ்வியாழனன்று தங்கள் பயணத்தை துவக்குகின்றனர். இவர்கள் மீண்டும் மே மாதம் 3ம் தேதி தங்கள் நாட்டுக்குத் திரும்புவர் என்றும் அந்த நாள் போலந்து நாட்டில் ஒரு தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதென்றும் செய்திகள் கூறுகின்றன.
இதற்கிடையே, மே மாதம் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் நடைபெறும் இத்திருச்சடங்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில் மறு ஒளிபரப்பு செய்யப்படும் என்று மற்றொரு செய்திக் குறிப்பு கூறுகின்றது.
வருகிற ஞாயிறு பிற்பகல் இரண்டு மணிக்கு ஆரம்பமாகும் இவ்வொளிபரப்பில் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அருளாளராக உயர்த்தப்படுவதற்கு மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள் ஆவணப் படமாகக் காட்டப்படும்.
மற்றும், திருத்தந்தை இரண்டாம் ஜான்பாலின் செயலராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்த கர்தினால் Stanislaw Dziwisz வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர் Vincent Nichols ஆகியோரின் வாழ்த்துச் செய்திகளும் ஒளிபரப்படும் என்று செய்திகள் கூறுகின்றன.


3. இலங்கை உள்நாட்டுப் போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நா.வின் அறிக்கை பற்றி கிறிஸ்தவத் தலைவர்கள் கருத்து

ஏப்ரல் 27,2011. இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடைபெற்ற பல்வேறு அத்துமீறலானச் செயல்கள் மற்றும் குற்றங்கள் குறித்த ஐ.நா.வின் அறிக்கை வருங்கால நடவடிக்கைகளுக்கு ஒரு அடித்தளமாக கருத்தப்பட வேண்டும் என்று இலங்கையின் கிறிஸ்தவத் தலைவர்கள் அறிக்கையொன்று வெளியிட்டுள்ளனர்.
இத்திங்கள் மாலையில் நியூயார்க்கில் வெளியான இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் மனதிற் கொண்டு இலங்கை வாழ் அனைவரும், முக்கியமாக, இலங்கையில் உள்ள மதத் தலைவர்கள் மற்றும் அரசுத் துறைகள் செயல்பட வேண்டும் என்று கிறிஸ்தவத் தலைவர்களின் இவ்வறிக்கை வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. சமர்ப்பித்துள்ள இந்த அறிக்கையில் இலங்கை அரசு பொது மக்கள் மீது நடத்திய பல்வேறு தாக்குதல்கள், மற்றும் அரசுக்கு எதிராகப் போராடியவர்கள் மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்திய குற்றம் ஆகியவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
போர் குற்றங்கள் குறித்த பல்வேறு புகார்களைத் தீர ஆராய்வதற்கு தனிப்பட்ட ஒரு குழு நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நா.வின் இவ்வறிக்கை வலியுறுத்தியுள்ளது.


4. கர்நாடகாவில் புனித வெள்ளியன்று கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகள்

ஏப்ரல் 27,2011. புனித வெள்ளியன்று கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகள் மத சார்பற்ற இந்தியாவுக்கு ஒரு பெரும் அவமானமான நிகழ்ச்சியென்று கிறிஸ்தவத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
புனித வெள்ளியன்று கர்நாடகாவில் உள்ள பகல்கோட் (Bagalkot) மற்றும் தெவன்கெரே (Devangere) மாவட்டங்களின் இரு கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் புனித வெள்ளி திருச்சடங்குகளின் போது தாக்கப்பட்டுள்ளன.
இந்து அடிப்படை வாதக் குழுக்களில் ஒன்றான சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த 50 பேர் ஆயுதங்கள் தாங்கிய வண்ணம் இரு கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலங்களில் சடங்குகளை நிறுத்தி, அங்கு இருந்த கிறிஸ்தவர்களை இந்து மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தினர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.
இத்தாக்குதல்களில் வழிபாடுகளை நடத்திய மத போதகர்களை இக்குழுவினர் தாக்கியதாகவும், இதைக் கண்டும் காவல்துறையினர் செயல்படாமல் இருந்தனர் என்றும் இந்திய கிறிஸ்தவர்களின் உலகக் குழுவினர் என்ற அமைப்பின் தலைவர் சஜன் ஜார்ஜ் கூறினார்.
கர்நாடகாவில் தொடர்ந்து கிறிஸ்தவர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் எதிராக நடைபெறும் வன்முறைகள் அதிகரித்து வருகிறதென்றும் மாநில அரசு இவ்வன்முறைகளை நிறுத்துவதற்கு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்றும் ஜார்ஜ் மேலும் கூறினார்.


5. பாஸ்காத் திருவிழிப்புத் திருச்சடங்கின் போது இறையடி சேர்ந்த சீன ஆயர்

ஏப்ரல் 27,2011. சீன ஆயர் Peter Li Hongye சென்ற சனிக்கிழமை இரவு பாஸ்காத் திருவிழிப்புத் திருச்சடங்கின் போது இதய நோயால் பாதிக்கப்பட்டு, இறையடி சேர்ந்தார். இவரது அடக்கம் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
91 வயதான ஆயர் Li திருத்தந்தைக்குப் பிரமாணிக்கமாய் இருந்ததால், கடந்த 30 ஆண்டுகளாய் சீன அரசால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்றும் 2004ம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் இச்செய்தி கூறுகிறது.
1944ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட Li கைது செய்யப்பட்டு, 1955 முதல் 1970 வரை கடுமையான உழைப்புக்கு உள்ளாக்கப்பட்டார். சீன அரசின் ஒப்புதல் இன்றி, இவர் 1987ம் ஆண்டு (Luoyang) லுவோயாங் மறைமாவட்டத்தின் ஆயராகத் திருநிலைப் படுத்தப்பட்டார்.
10000 கத்தோலிக்கர்களைக் கொண்ட லுவோயாங் மறைமாவட்டத்தில் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் இவரது இறுதி சடங்குகளில் மக்கள் கலந்து கொள்வதற்குச் சீன அரசு தடை விதித்துள்ளது.


6. தலாய் லாமாவைத் தொடர்ந்து திபெத்து அரசின் அடுத்தப் பிரதமர் தெரிவு

ஏப்ரல் 27,2011. திபெத்து நாட்டின் சொந்த மண்ணுக்கு வெளியில் இருந்து இயங்கும் அரசின் அடுத்தப் பிரதமராக ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் பணிபுரியும் Lobsang Sangay தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று இவ்வரசு இப்புதனன்று அறிவித்துள்ளது.
500 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க திபெத்து நாட்டின் 14வது தலைவராகத் தெரிவு செய்யப்பட தலாய் லாமா அண்மையில் தான் இந்தப் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து Sangay தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Sangayன் தெரிவு பற்றிய செய்தி அனைத்து மக்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளதென்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
சீன அரசின் ஆதிக்கத்திற்குக் கீழ் வைக்கப்பட்டுள்ள திபெத்து பகுதியில் மக்கள் தங்களுக்கு உரிய தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற வேண்டும் என்று பல ஆண்டுகளாகப் போராடி வந்தவர் தலாய் லாமா.
உலக சமாதானத்திற்கான நொபெல் பரிசைப் பெற்றுள்ள தலாய் லாமாவின் பதவியையும் அவரது முயற்சிகளையும் சீன அரசு இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
75 வயது நிறைந்த தலாய் லாமாவை வெறும் அரசியல் தலைவராக மட்டும் மக்கள் பார்க்கவில்லை, அவரை ஒரு உயர்ந்த ஆன்மீகத் தலைவராகவும் மக்கள் கண்டு வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.


7. ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி இவைகளுக்குப் பின் ஆஸ்பஸ்டாஸ் வடிவில் எழுந்துள்ள ஆபத்து

ஏப்ரல் 27,2011. ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி இவைகளால் உண்டான அழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் தற்போது ஆஸ்பஸ்டாஸ் வடிவில் ஆபத்து எழுந்துள்ளதென்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மார்ச் மாதம் 11ம் தேதி ஜப்பானைப் பெரும் அழிவுக்குள்ளாக்கிய இயற்கைப் பேரிடர்கள், அதைத் தொடர்ந்த அணுக்கதிர் வீச்சு ஆபத்து இவைகளின் மத்தியில் ஆஸ்பஸ்டாஸ் குறித்த ஆபாயங்களில் மக்களின் கவனம் அதிகம் செலுத்தப்படவில்லை.
தற்போது, கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஆஸ்பஸ்டாஸ் நுண்ணிழைகளின் ஆபத்து அதிகரித்துள்ளதென்றும், நுரையீரலுக்குள் நேரடியாக நுழைந்து விடும் ஆபத்துள்ள இந்த நுண்ணிழைகளால் புற்று நோய் உட்பட்ட பல ஆபத்துக்கள் உள்ளன என்றும் இப்புதன் வெளியான அறிக்கை ஒன்று கூறுகிறது.
இரண்டாம் உலகப் போரின் அழிவுகளுக்குப் பின் தன்னைக் கட்டியெழுப்பிய ஜப்பான், ஆஸ்பஸ்டாஸை அதிகம் நம்பியிருந்ததென்பதும், 1975ம் ஆண்டுக்குப் பின் இதன் ஆபத்தை உணர்ந்த ஜப்பான், அதை முற்றிலும் தடை செய்ததேன்பதும் குறிப்பிடத்தக்கது.
எனினும் Sendai பகுதியில் 1970களில் கட்டப்பட்ட பல அடுக்குமாடி கட்டிடங்களின் இடிபாடுகளை அகற்றும் பணி இப்போது நடைபெறுவதால், ஆஸ்பஸ்டாஸ் குறித்த ஆபத்தை அம்மக்கள் மீண்டும் சந்திக்க உள்ளனர் என்று இச்செய்திக் குறிப்பு கூறுகிறது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...