Friday, 15 April 2011

Catholic News - hottest and latest - 14 April 2011


1. அந்தியோக்கு மாரோனைட் கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

2. லாத்விய அரசுத்தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

3. ஐரோப்பிய அவைக் கூட்டத்தில் மதங்களுக்கிடையேயான உரையாடலுக்கான திருப்பீட அவைத் தலைவரின் உரை

4. ஏழைகளுக்கு உரிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் - திருப்பீட அதிகாரி

5. பாகிஸ்தானை ஒரு சமய சார்பற்ற நாடாக மாற்றும் முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் - கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியத் தலைவர்கள்

6. லிபியாவில் நடைபெறும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் - அனைத்து கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிப்பு அவை ஐ.நா.வுக்கு அனுப்பியுள்ள அறிக்கை

7. இலங்கையின் உள்நாட்டுப் போர் விளைவுகள் கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு - கிறிஸ்தவத் தலைவர்கள்

8. 'இலங்கைப் போர்க் குற்றப் பொறுப்பு' - ஐநா அறிக்கை தயார்

----------------------------------------------------------------------------------------------------------------

1. அந்தியோக்கு மாரோனைட் கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

ஏப்ரல் 14,2011. முதுபெரும் தலைவர்கள், இறைவாக்கினர்கள், திருப்பணியாளர்கள், ஏன், கிறிஸ்துவே வாழ்ந்து போதித்துச் சென்ற மத்தியக் கிழக்குப் பகுதி நாடுகள் தற்போது 'உண்மையின் வார்த்தை'யாம் இறைவன் தரவல்ல அமைதிக்காக ஏங்குகின்றன என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அந்தியோக்கு மாரோனைட் கிறிஸ்தவ சபையின் 77வது முதுபெரும் தலைவர் Pierre Bechara Raiஐ இவ்வியாழனன்று முதன் முறையாகத் திருப்பீடத்தில் சந்தித்த பாப்பிறை, நிலைத்த அமைதிக்காக எங்கும் மத்தியக் கிழக்கு நாடுகளில் நற்செய்தி மீண்டும் அறிவிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இளைஞர்களுக்கான ஆன்மிகம், நன்னெறி மற்றும் அறிவு வழங்கும் கல்வியில் திருச்சபையின் பங்கேற்பை வலியுறுத்திய திருத்தந்தை, அடிப்படை மதிப்பீடுகள் எவ்வித பாகுபாடுமின்றி வருங்காலத் தலைமுறையினருக்கு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
நாட்டின் வளர்ச்சி, மனிதாபிமானம், ஒருமைப்பாடு இவற்றைக் கட்டியெழுப்பும் பொறுப்புடைய மனிதர்களாக இளையோரை உருவாக்கும் திருச்சபையின் கடமையைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இளையோரின் ஆர்வமும் நம்பிக்கையும் அகில உலக சமூகத்திற்கும், திருச்சபைக்கும் தேவையான ஒன்று என்றும் கூறினார்.


2. லாத்விய அரசுத்தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

ஏப்ரல் 14,2011. லாத்விய அரசுத்தலைவர் Valdis Zatlers இவ்வியாழனன்று திருப்பீடத்தில் திருத்தந்தை மற்றும் திருப்பீட உயர் அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டார்.
திருத்தந்தையுடன் முதலில் தனியே இடம் பெற்ற இச்சந்திப்பில், திருப்பீடத்துக்கும் லாத்வியாவுக்கும்  இடையேயான உறவு குறித்தும், இரு நாடுகளிடையே 2000மாம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் மற்றும் லாத்வியாவில் கத்தோலிக்க திருச்சபைக்கு இருக்கும் தனியிடம் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
அந்நாட்டின் கத்தோலிக்கச் சமூகம், கல்வி மற்றும் சமூகப் பணியில் ஆற்றி வரும் நற்சேவைகள் குறித்தும்  பேசப்பட்டன.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கிடையே உறவுகளுக்கானத் துறைச் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார் லாத்விய அரசுத்தலைவர் Valdis Zatlers.


3. ஐரோப்பிய அவைக் கூட்டத்தில் மதங்களுக்கிடையேயான உரையாடலுக்கான திருப்பீட அவைத் தலைவரின் உரை

ஏப்ரல் 14,2011. உயரிய வாழ்க்கை மதிப்பீடுகளைத் தலைமுறை, தலைமுறையாக எடுத்துச் செல்வது கடினமாகி வரும் இன்றைய காலக்கட்டத்தில், கலாச்சாரத்தில் கிறிஸ்தவ விசுவாசம் தலையிட்டு, பணிகள் புரிவது இன்றியமையாதத் தேவையாக உள்ளதென்று கூறினார் கர்தினால் Jean Louis Tauran.
"கலாச்சாரங்களிடையே இடம்பெறும் கலந்துரையாடலின் மதக்கூறுகள்" என்ற தலைப்பில் அண்மையில் இடம்பெற்ற ஐரோப்பிய அவைக் கூட்டத்தில் மதங்களுக்கிடையேயான உரையாடலுக்கான திருப்பீட அவையின் தலைவரான கர்தினால் Tauran ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார்.
கலாச்சாரத்தில் மதங்கள் மேற்கொள்ளும் தலையீடு மனிதனைக் கட்டுப்படுத்துவதற்கு அல்ல, மாறாக, உலகின் வளங்கள் வருங்காலத் தலைமுறையினருக்கும் கிட்டும் வகையில் நியாயமாகச் செயல்பட வேண்டும் என்பதை நினைவுபடுத்தி வழிகாட்டவே என்று கர்தினால் Tauran கூறினார்.
மனிதக்கரு சோதனைகள், கருக்கலைப்பு, கருணைக் கொலை, தவறான பாலின நடவடிக்கைகள், சர்வாதிகார போக்குகள் ஆகிய வன்முறை வழிகளுக்கு எதிராக, மனிதாபிமானம் நிறைந்த, அயலாருக்கான அன்பை மையப்படுத்திய ஒரு கலாச்சாரத்தை நாம் கொண்டிருக்க வேண்டும் என விண்ணப்பித்தார் கர்தினால் Tauran.
மதச் சுதந்திரத்தை வளர்க்கவும், பாதுகாக்கவும் ஐரோப்பிய சமுதாயத்திற்கு இருக்கும் கடமையைச் சுட்டிக் காட்டிய கர்தினால் Tauran, இறைவன் பெயரால் இடம்பெறும் வன்முறைகள் எந்தச் சூழலிலும் நியாயப்படுத்த முடியாதவை என்பதையும் எடுத்துரைத்தார்.


4. ஏழைகளுக்கு உரிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் - திருப்பீட அதிகாரி

ஏப்ரல் 14,2011. உலகின் எழ்மையைப் போக்க, ஏழைகளை உலகினின்று நீக்குவதற்குப் பதில், அவர்களுக்கு உரிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
மக்கள் தொகையும் முன்னேற்றமும்என்ற தலைப்பில் நியூயார்க் நகரில் ஐ.நா.வின் தலைமையகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் இச்செவ்வாயன்று பேசிய ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப்  பார்வையாளரான பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட் இவ்வாறு கூறினார்.
குழந்தைகள் பிறப்பு, மக்கள்தொகை வளர்ச்சி ஆகியவற்றை வர்த்தகக் கண்ணோட்டத்தில் காண்பதாலேயே அவைகளைக் குறித்த பல தேவையற்ற பயங்களை மனித சமுதாயத்தில் நாம் எழுப்பி வருகிறோம் எனவும், இதற்கு மாற்றாக, தன்னலத்தைக் குறைத்து, உலக செல்வங்களைப் பகிரும் மனிதாபிமானத்தை வளர்த்தால் உலகில் ஏழ்மையை நீக்கலாம் என்றும் பேராயர் சுல்லிக்காட் எடுத்துரைத்தார்.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த கடிமான முயற்சிகளை மேற்கொண்ட உலகின் பல நாடுகள், முன்னேற்றத்தில் தட்டுப்பாடு, உற்பத்தியில் குறைவு ஆகிய எதிர்மறை விளைவுகளைச் சந்தித்து வருகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் சுல்லிக்காட், கல்வி மற்றும் பிற ஆக்கப்பூர்வமானச் செயல்பாடுகள் மூலம் உலகின் ஏழ்மையை நீக்க அரசுகள் திட்டமிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.


5. பாகிஸ்தானை ஒரு சமய சார்பற்ற நாடாக மாற்றும் முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் - கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியத் தலைவர்கள்

ஏப்ரல் 14,2011. பாகிஸ்தானில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபையும், பிற கிறிஸ்தவ சபைகளும் அந்நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியன என்று கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியத் தலைவர்கள் கூறினர்.
அரசின் சார்பில் இப்புதனன்று லாகூரில் நடைபெற்ற கருத்தரங்கில் இத்தலைவர்கள் பேசுகையில், பாகிஸ்தானை ஒரு சமய சார்பற்ற நாடாக மாற்றும் முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு ஒரு முதல் முயற்சியாக அந்நாட்டின் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகள் வன்முறையாளர்களின் கையில் சிக்கித் தவிக்கிறதென்றும், தற்கொலைப் படையினரின் தாக்குதல்கள் மிகச் சாதாரண நிகழ்ச்சிகளாக மாறி வருகின்றன என்றும் பாகிஸ்தான் ஆயர் பேரவையின்  நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் தேசிய இயக்குனர் அருள்தந்தை Emmanuel Yousaf Mani கூறினார்.
பாகிஸ்தானில் அனைத்து சட்டங்களையும் இஸ்லாமிய மயமாக்கும் முயற்சியில் அந்நாடு அண்மையில் ஈடுபட்டுள்ளதைச் சுட்டிக் காட்டிப் பேசிய ஒய்வு பெற்ற நீதிபதி Nasira Javed, ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கா மேற்கொண்ட போர் நடவடிக்கைகளைக் காரணம் காட்டி, பாகிஸ்தானில் சிறுபான்மையினரைத் துன்பங்களுக்கு உள்ளாக்குவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று கூறினார்.
அண்மையில் லாகூர் பேராலயத்திற்கு முன் விவிலியம் கிழிக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டபோது, கத்தோலிக்கத் தலைவர்கள் காட்டிய பொறுமை, அவர்கள் கத்தோலிக்கருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் விடுத்த அமைதி அழைப்புக்கள் மற்றவர்களுக்கு ஒரு தலை சிறந்த எடுத்துக்காட்டு என்று ஆங்கலிக்கன் ஆயர் மைக்கேல் நாசிர் கூறினார்.


6. லிபியாவில் நடைபெறும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் - அனைத்து கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிப்பு அவை ஐ.நா.வுக்கு அனுப்பியுள்ள அறிக்கை

ஏப்ரல் 14,2011. தற்போது லிபியாவில் நடைபெற்று வரும் போர், வன்முறை, இரத்தம் சிந்துதல் இவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; ஏனெனில், மனித வரலாற்றில் போர் எந்தக் காலத்திலும் ஒரு தீர்வைக் கொண்டு வந்ததில்லை என்று Tripoliயில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிப்பு அவை இச்செவ்வாயன்று அறிக்கையொன்றை ஐ.நா.அவைக்கு அனுப்பியுள்ளது.
Tripoliயில் உள்ள அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giovanni Innocenzo Martinelli அனுப்பியுள்ள இந்த அறிக்கையில், நாட்டை உருக்குலைத்து வரும் வன்முறைகளால் விசுவாசிகள் என்ற குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் ஆழ்ந்த வேதனையோடு இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் உடனடியாக கடைபிடிக்கப்பட்டு, பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வகைகளிலும் உதவிகள் உடனே அவர்களை அடைய வேண்டும் எனவும் இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
லிபிய மக்களின் நம்பிக்கையையும், நாட்டின் சமாதானத்தையும் நிலை நிறுத்தும் அனைத்து உலக அமைப்புக்களையும் நாங்கள் வரவேற்கிறோம்; துன்புறும் அனைத்து லிபிய இஸ்லாமியச் சகோதரர்களுடன் செபத்தால் ஒன்றித்திருக்கிறோம் என்று இவ்வறிக்கை கூறுகிறது.


7. இலங்கையின் உள்நாட்டுப் போர் விளைவுகள் கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு - கிறிஸ்தவத் தலைவர்கள்

ஏப்ரல் 14,2011. இலங்கையில் 30 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போர் 2009ம் ஆண்டு முடிவுற்றாலும், இன்னும் அந்நாட்டு மக்கள் முற்றிலும் எழுந்து நடக்க முடியாத வண்ணம் மண்டியிட்டே உள்ளனர் என்றும் அவர்களை மீண்டும் எழுந்து நடக்க வைப்பது கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு என்றும் கிறிஸ்தவத் தலைவர்கள் கூறினர்.
'சமுதாய மாற்றத்தில் கிறிஸ்தவர்களின் பொறுப்பு' என்ற தலைப்பில் இலங்கைக் காரித்தாஸ் மையத்தில் அண்மையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் இக்கருத்து கூறப்பட்டது.
பிறரன்புச் சேவையைத் தாண்டி, சமுதாய மாற்றத்திற்குத் தேவையான முயற்சிகளில் கிறிஸ்தவர்கள் ஈடுபட வேண்டுமென்றும் இந்த மாற்றங்களை உருவாக்கும்போது, கிறிஸ்தவ அமைப்புக்கள் தங்கள் சுய அடையாளங்களையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் ஒய்வு பெற்ற ஆங்கலிக்கன் ஆயர் Kumara Illangasinghe கூறினார்.
திருச்சபையும் பிற கிறிஸ்தவ அமைப்புக்களும் துன்புறும் மக்கள் பக்கமே இருக்க வேண்டும், இந்த முயற்சியில் ஈடுபடும் நாம் அனைவரும் தமிழர் சிங்களவர் என்ற பாகுபாடுகளை மறந்து கிறிஸ்தவர் என்ற ஒரே காரணத்திற்காக இந்த சமுதாய மாற்றத்தில் ஈடுபட வேண்டுமென இயேசு சபை குரு Lasantha de Abrew கூறினார்.


8. 'இலங்கைப் போர்க் குற்றப் பொறுப்பு' - ஐநா அறிக்கை தயார்
 
ஏப்ரல் 14,2011. இலங்கையில் போரின் இறுதிக்கட்டங்களில் நடந்த சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் குறித்து ஆராய்ந்து ஆலோசனைகளை வழங்க நியமிக்கப்பட்ட வல்லுநர்கள் குழு ஐ.நா. அவையின் தலைமைச் செயலரிடம் அதன் அறிக்கையை நியுயார்க்கில் இப்புதனன்று சமர்ப்பித்துள்ளது.
இந்தப் பணியைச் செய்து முடித்ததற்காகக் குழுவினரைப் பாராட்டிய தலைமைச் செயலர் பான் கி மூன், இவ்வறிக்கையின் அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அடுத்து வரும் நாட்களில் முடிவு செய்வதாகக் கூறினார்.
இந்த அறிக்கையைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடு முன்னர், இவ்வறிக்கையின் பிரதியை நாகரிகம் கருதி இலங்கை அரசுடனும் பகிர்ந்துகொள்வார் என ஐ.நா.வின் உயர் அதிகாரி ஃபர்ஹான் ஹக் நியுயார்க்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதற்கிடையே, இலங்கை அரசு இந்த அறிக்கையை நிராகரித்திருக்கிறது. இலங்கை அரசின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஐ.நா.அவையின் வல்லுநர் குழு தயாரித்தளித்த இந்த அறிக்கையில், பல குறைபாடுகள் உள்ளன என்று வர்ணித்திருக்கிறது.
கடந்த ஆண்டு பான் கி மூன் இந்த வல்லுநர் குழுவை நியமித்ததிலிருந்தே இலங்கை அரசு இந்த நியமனத்துக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்திருக்கிறது என்பதும், அந்தக் குழு உறுப்பினர்களை இலங்கைக்குள் வந்து ஆய்வு செய்ய அனுமதி தர மறுத்துள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...