Saturday, 2 April 2011

Catholic News - hottest and latest - 02 April 2011

1. முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கென 11 பேரின் விபரங்கள் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

2. உலக அமைதிக்காக அசிசியில் அக்.27ல் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், உலக மதத் தலைவர்கள் செபம்

3. இணையதளத்தில் இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் குறித்த வீடியோ படக் காட்சிகள்

4. கர்தினால் விதயத்தில் மறைவு குறித்து இந்திய ஆயர்கள் இரங்கல் செய்தி

5. நிதி குறித்த வத்திக்கானின் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன

6. கத்தோலிக்க, யூதமதத் தலைவர்கள் செபத்தின் முக்கியத்துவத்திற்கு அழுத்தம் 

7. மெக்சிகோவில் தற்கொலைகள் அதிகரித்து வருவது குறித்து கர்தினால் கவலை


----------------------------------------------------------------------------------------------------------------

1. முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கென 11 பேரின் விபரங்கள் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

ஏப்.02,2011. கேரளாவின் சங்கணாச்சேரி மறைமாநில முதல் ஆயரும் கேரளாவின் திருநற்கருணை ஆராதனை சகோதரிகள் சபையை நிறுவியவருமான இறையடியார் தாமஸ் குரியாலாச்சேரி (Thomas Kurialacherry) உட்பட நான்கு இறையடியார்கள், ஐந்து வணக்கத்துக்குரியவர்கள் மற்றும் இரண்டு மறைசாட்சிகளை முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கென அவர்கள் குறித்த விபரங்கள் திருத்தந்தையிடம் இச்சனிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டன.
இத்தாலியக் குருக்களான Serafino Morazzone, Clemente Vismara, இத்தாலிய அருட்சகோதரிகள் Elena Aiello, Enrica Alfieri, ஸ்பெயினின் அருட்சகோதரி Maria Caterina Irigoyen Echegaray ஆகிய வணக்கத்துக்குரியவர்களின் பரிந்துரைகளால் புதுமைகள் நடந்துள்ளன.    
பிரான்சின் மறைசாட்சி Pietro-Adriano Toulorge, ஸ்பெயினின் மறைசாட்சிகள் குரு Francesco Stefano Lacal, பொதுநிலையினர் Castán San José மற்றும் 21 பேரின் பெயர்களும் திருத்தந்தையிடம் பரிந்துரைக்கப்பட்டன.
கேரளாவின் ஆயர் தாமஸ் குரியாலாச்சேரி, கானடாவின் கிறிஸ்தவ சகோதரர்கள் சபைத் துறவி Adolfo Châtillon, இத்தாலியின் அருட்சகோதரிகள் Maria Chiara, Maria Dolores Inglese, Irene Stefani, ஜெர்மனியின் பொதுநிலை விசுவாசி Bernardo Lehne ஆகிய இறையடியார்களின் வீரத்துவமான புண்ணிய வாழ்க்கை குறித்த விபரங்கள் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
இவர்கள் குறித்த விபரங்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்தும் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானத் திருப்பீடப் பேராயத் தலைவரான கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ திருத்தந்தையிடம் சமர்ப்பித்தார்.

2. உலக அமைதிக்காக அசிசியில் அக்.27ல் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், உலக மதத் தலைவர்கள் செபம்

ஏப்.02,2011. உலகில் அமைதியும் நீதியும் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வருகிற அக்டோபர் 27ம் தேதி இத்தாலியின் அசிசியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உலக மதத் தலைவர்களுடன் ஒருநாள் செபம் செய்யவிருக்கிறார்.
இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், அசிசியில் 1986ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி உலக மதத் தலைவர்களுடன் உலக அமைதிக்காகச் செபம் செய்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளின் 25ம் ஆண்டை நினைவுகூரும் விதமாக இவ்வாண்டு அக்டோபர் 27ம் தேதி அசிசியில் இதே செப நாள் இடம் பெறவிருக்கின்றது.
இந்த நினைவுநாளைச் சிறப்பிப்பது குறித்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வாண்டு சனவரி முதல் தேதி தனது மூவேளை செப உரையில் குறிப்பிட்டார்.
இத்தினம் குறித்து இச்சனிக்கிழமை அசிசியில் இடம் பெற்ற நிருபர் கூட்டத்தில் விளக்கிய அசிசி ஆயர் Domenico Sorrentino, இந்நாளுக்குத் தயாரிப்பாக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அக்டோபர் 26ம் தேதி வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் உரோம் மறைமாநில விசுவாசிகளுடன் திருவிழிப்புச் செபம் நடத்துவார் என்றார்.
உலகெங்கும் இருக்கின்ற அனைத்து கிறிஸ்தவசபைகளும் சமூகங்களும் இத்தகைய செபக்கூட்டங்களை இதே நேரத்தில் நடத்துவதற்கு அழைக்கப்படுகிறார்கள் என்றும் ஆயர் அறிவித்தார்.
உண்மையின் திருப்பயணிகள், அமைதியின் திருப்பயணிகள்என்ற தலைப்பில் வருகிற அக்டோபர் 27ம் தேதி இடம்பெறும் இந்த முக்கியச் செபக்கூட்டத்தில் தன்னோடு சேர்ந்து கத்தோலிக்கர் செபிக்குமாறும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுள்ளார் என்றும் நிருபர் கூட்டத்தில் கூறப்பட்டது

3. இணையதளத்தில் இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் குறித்த வீடியோ படக் காட்சிகள்

ஏப்.02,2011. இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் வரலாற்றிலோ அல்லது திருச்சபையிலோ ஏற்படுத்திய தாக்கத்திற்காக அல்ல, மாறாக பற்றுறுதி, நம்பிக்கை, அன்பு ஆகிய கிறிஸ்தவப் புண்ணியங்களை அவர் வாழ்ந்த விதத்திற்காகவே அவர்  முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்படவிருக்கிறார் என்று கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ தெரிவித்தார்.
இத்திருத்தந்தை இறந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதியிலிருந்து இவரது புனித வாழ்வை இறைமக்கள் பறைசாற்றத் தொடங்கினர் என்றுரைத்த கர்தினால் அமாத்தோ, ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் மக்கள் அவரது கல்லறையைத் தரிசிக்கின்றனர் என்றார்.
வருகிற மே முதல் தேதி இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்படவுள்ளதையொட்டி உரோம் திருச்சிலுவை பாப்பிறைப் பல்கலைகழகத்தில் இவ்வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய புனிதர் நிலைக்கு உயர்த்தும் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானத் திருப்பீடப் பேராயத் தலைவரான கர்தினால் அமாத்தோ இவ்வாறு கூறினார்.
திருச்சபையில் ஒருவரை முத்திப்பேறு பெற்றவராகவும் புனிதராகவும் அறிவிப்பது அவரது உயரிய இறையியல் புரிதலை வைத்தோ அல்லது அவர் ஆற்றி்ய அரும்பெரும் பணிகளை வைத்தோ அல்ல, மாறாக அவர் கிறிஸ்தவப் புண்ணியங்களை அசாதாரண வழியில் வாழ்ந்து பிறருக்கு எடுத்துக்காட்டாய் இருப்பதை வைத்தே அவர் இந்நிலைகளுக்கு உயர்த்தப்படுகின்றார் என்றும் அவர் விளக்கினார்.
மேலும், இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் பல நாடுகளுக்குத் திருப்பயணம் மேற்கொண்டது, அவரது உரைகள், சந்திப்புக்கள் என அவரைப் பற்றிய பல விபரங்கள் Youtube மற்றும் Facebook ல் பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. வத்திக்கான் வானொலியும் CTV என்ற வத்திக்கான் தொலைக்காட்சி மையமும் இணைந்து இவற்றை வெளியிட்டுள்ளன.
www.facebook.com/vatican.johnpaul2 என்றும் www.youtube.com/giovannipaolii என்றும் வலைத்தளத்தில் சொடுக்கினால் இந்த வீடியோ ஒலி-ஒளிக் காட்சிகளைக் காணலாம்.  இக்காட்சிகளை ஒவ்வொரு நாளும் Facebook   மற்றும்   Youtube களில் எண்ணற்ற மக்கள்  பார்த்தும் கேட்டும் பயனடைந்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

4. கர்தினால் விதயத்தில் மறைவு குறித்து இந்திய ஆயர்கள் இரங்கல் செய்தி

ஏப்.02,2011. கேரளாவின் சீரோ-மலபார் ரீதி கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான கர்தினால் மார் வர்கி விதயத்தில் (Varkey Vithayathil) இறைபதம் அடைந்ததையொட்டி இந்திய கத்தோலிக்க ஆயர்கள் தங்களது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர்.
கர்தினால் விதயத்தில், இவ்வெள்ளிக்கிழமை திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருந்த போது மயக்கமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பிற்பகல் 2 மணிக்கு மரணமடைந்தார்.
உலக இரட்சகர் சபையைச் சேர்ந்த கர்தினால் விதயத்தில், ஆழமான விசுவாச மனிதர், தைரியமான தலைவர் மற்றும் செப வாழ்வில் வேரூன்றியவர் என்று புகழ்ந்தார் இந்திய ஆயர்கள் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
இவரின் இறப்பு மூலம், சீரோ-மலபார் ரீதி கத்தோலிக்கத் திருச்சபையும் அகில இந்திய திருச்சபையும் ஓர் ஆழமான மற்றும் தைரியமான ஆன்மீகத் தலைவரை இழந்துள்ளது என்று இந்திய ஆயர்கள் பேரவையின் பொதுச் செயலர் பேராயர் ஆல்பர்ட் டி சூசா கூறினார்.
கர்தினால் விதயத்தில் அவர்களின் இறுதி அடக்கச்சடங்கு இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை நான்கு மணிக்குத் தொடங்கியது. இத்திருப்பலியில் முதலில் பேசிய எர்ணாகுளம் அங்கமாலி பேராயர் இல்ல நிர்வாகி ஆயர் Mar Bosco Puthur, ஆழமான விசுவாச மனிதராகிய கர்தினால் விதயத்தில் மிகுந்த தாழ்ச்சி மற்றும் நம்பிக்கையுடன் இறைபராமரிப்பில் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர் என்றார்.
கர்தினால் விதயத்தில், கேரளாவின் பாரூரில் 1927ம் ஆண்டு மே 29ம் தேதி பிறந்தார். இவர் உலக இரட்சகர் துறவு சபையில் சேர்ந்து 1954ல் குருவாகத் திருநிலைபடுத்தப்பட்டார். 1996ல் பேராயராக நியமிக்கப்பட்ட இவர், 1999ல் எர்ணாகுளம் அங்கமாலி பேராயராகவும் சீரோ-மலபார் ரீதி கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 2001ல் கர்தினாலாக உயர்த்தப்பட்டு, 2005ம் ஆண்டு வத்திக்கானில் நடைபெற்ற பாப்பிறைத் தேர்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் கர்தினால் விதயத்தில். 2008 முதல் 2010 வரை இந்திய ஆயர் பேரவையின் தலைவராகவும் இவர் பணியாற்றினார்.
கர்தினால் விதயத்தில் அவர்களின் இறப்போடு இந்தியக் கர்தினால்களின் எண்ணிக்கை 5 ஆகவும் இவர்களில் 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 3 ஆகவும் மாறியது.
தற்சமயம் திருச்சபையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 200. இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 116 ஆகும்.

5. நிதி குறித்த வத்திக்கானின் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன

ஏப்.02,2011. தனியாட்கள் வத்திக்கான் நாட்டிற்குள்ளும் நாட்டிற்கு வெளியேயும் பத்தாயிரம் யூரோக்களுக்கு அதிகமாக எடுத்துச் செல்லும் போது அதை அதற்குரிய அதிகாரிகளிடம் அறிவிக்க வேண்டும் என்று நிதி குறித்த வத்திக்கானின் புதிய விதிமுறைகள் கூறுகின்றன.
கருப்புப் பணம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்தல் ஆகியவற்றுக்கு எதிரான அனைத்துலக விதிமுறைகளோடு ஒத்திணங்கும் வகையில் வத்திக்கானில் இப்புதிய  விதிமுறைகள் ஏப்ரல் முதல் தேதியன்று அமலுக்கு வந்துள்ளன.
இந்த விதிமுறைகளை மீறுகிறவர்களுக்கு சிறைத்தண்டனை உட்பட தண்டனைகள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வத்திக்கான் நாட்டிற்குள்ளும் நாட்டிற்கு வெளியேயும் எடுத்துச் செல்லப்படும் பத்தாயிரம் யூரோக்கள், பணத்தாள்களாகவோ நாணயங்களாகவோ அல்லது காசோலைகளாகவோ, எப்படியிருந்தாலும் அவை குறித்த விபரங்கள் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட வேண்டும்.

6. கத்தோலிக்க, யூதமதத் தலைவர்கள் செபத்தின் முக்கியத்துவத்திற்கு அழுத்தம் 

ஏப்.02,2011. உலகில் கடவுளின் பிரசன்னத்திற்குச் சான்று பகர்வதற்குச் செபம் இன்றியமையாதது என்று கத்தோலிக்க மற்றும் யூதமதத் தலைவர்கள் கூறினர்.
இஸ்ரேல் யூதமதத் தலைமைக் குருவின் பிரதிநிதிகள் மற்றும் யூதர்களுடனானத் திருப்பீடக் குழுவின் பிரதிநிதிகள் அடங்கிய குழு எருசலேமில் இவ்வியாழனன்று நிறைவு செய்த மூன்று நாள் கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இந்த நவீன உலகம், வாழ்க்கை மீது அர்த்தமும் நோக்கமுமின்றி வாழ்கின்றது, இத்தகைய உலகுக்கு விசுவாசமும் மதத்தவரின் தலமைத்துவமும் முக்கிய பங்காற்ற வேண்டுமெனவும் அவ்வறிக்கை கூறுகிறது.
உலகில் இறைவனின் பிரசன்னத்திற்கு விசுவாசிகள் சாட்சிகளாக வாழுமாறும் அவ்வறிக்கைப் பரிந்துரைக்கிறது.

7. மெக்சிகோவில் தற்கொலைகள் அதிகரித்து வருவது குறித்து கர்தினால் கவலை

ஏப்.02,2011. மெக்சிகோ நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து வருவது குறித்து அந்நாட்டு மெக்சிகோ நகர் கர்தினால் நொர்பெர்த்தோ ரிவேரா கரேரா (Norberto Rivera Carrera) கவலை தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ ஆய்வாளர் Guilherme Luiz Guimaraes Borges இவ்வாரத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், அந்நாட்டில் 1970க்கும் 2007க்கும் இடைப்பட்ட காலத்தில் தற்கொலைகளின் எண்ணிக்கை 275 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் 15க்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட இளையோர் இந்த ஆபத்தை அதிகம் எதிர்நோக்குகின்றனர் எனவும்  கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையை வைத்து சுமார் இரண்டாயிரம் இளையோரிடம் பேசிய கர்தினால் ரிவேரா கரேரா, இளையோர் எத்தகைய மகிழ்ச்சியை அடைய விரும்புகின்றனர் என்ற கேள்வியை எழுப்பி நல்ல சமாரித்தன் போல பிரச்சனையில் இருக்கும் மற்றவர்க்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.  

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...