Saturday, 6 June 2020

இனவெறி என்ற தொற்றுநோயை முற்றிலும் ஒழித்து...

இனவெறி என்ற தொற்றுநோயை முற்றிலும் ஒழித்து... ஐ.நா.வின் மனித உரிமை அவையின் தலைவர், Michelle Bachelet

அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ள இனவெறி என்ற தொற்றுநோயை முற்றிலும் ஒழித்து, அந்நாடு முன்னோக்கிச் செல்லவேண்டும் - ஐ.நா.வின் மனித உரிமை அவையின் தலைவர்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ள இனவெறி என்ற தொற்றுநோயை முற்றிலும் ஒழித்து, அந்நாடு முன்னோக்கிச் செல்லவேண்டும் என்று, ஐ.நா.வின் மனித உரிமை அவையின் தலைவர், Michelle Bachelet அவர்கள், ஜூன் 3, இப்புதனன்று அறிக்கையொன்றை வெளியிட்டார்.
மே மாதம் 25ம் தேதி, மின்னியாபொலிஸ் நகரில், George Floyd அவர்களின் கழுத்தை, காவல்துறை அதிகாரி ஒருவர் 8 நிமிடங்கள் தன் முழங்காலால் அழுத்தியதைத் தொடர்ந்து, Floyd அவர்கள் மரணமடைந்ததையடுத்து, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல்வேறு நகரங்களில் வன்முறையுடன் கூடிய போராட்டங்கள் இடம்பெற்றன.
இந்நிலையில், ஐ.நா.வின் மனித உரிமை அவையின் தலைவர், Bachelet அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ஆயுதங்கள் எதுவும் ஏந்தாத ஆப்ரிக்க அமெரிக்க மக்கள் பலர் கொலையுண்டதை கண்டித்து எழுந்துள்ள போராட்டங்களின் குரல் கேட்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இனவெறியின் அனைத்து வடிவங்களையும் அந்நாட்டு தலைவர்கள் தயக்கமேதுமின்றி கண்டனம் செய்யவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள Bachelet அவர்கள், அந்நாட்டில் வாழும் ஆப்ரிக்க அமெரிக்க மக்கள், மூச்சுவிட இயலாத அளவு அவர்களை நெருக்கிவரும் பல்வேறு சமுதாயப் பாகுபாடுகள் நீக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் மீது, அளவுக்கு மீறிய அடக்குமுறை பயன்படுத்தப்பட்டதையும், இந்த போராட்டங்களைப்பற்றி செய்திகள் சேகரிக்கச் சென்ற 200க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் மீது காவல்துறை வன்முறையைப் பயன்படுத்தியதையும் Bachelet அவர்கள் தன் அறிக்கையில் கண்டனம் செய்துள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில், 1,00,000த்திற்கும் அதிகமானோர் கோவிட் 19 தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் இறந்துள்ள இச்சூழலில், இனவெறி, வன்முறை என்ற நோய்கள் இன்னும் பலரை உயிர்ப்பலி கொள்வது கண்டனத்திற்குரியது என்று Bachelet அவர்கள் தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment