செய்திகள்-11.03.15
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. புனித வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ், Rebbibia சிறை கைதிகளுடன்
2. திருத்தந்தை : என் வாழ்வு இறைவன் கைகளில் உள்ளது
3. "மனித மாண்பை வளர்க்கும் பெண்கள்" ஐ.நா.வில் திருப்பீடத்தின் கருத்தரங்கு
4. மும்பையில் 'இறைவனுடன் 24 மணி நேரங்கள்'
5. ISIS தீவிரவாதத்திலிருந்து அப்பாவி மக்களைக் காக்கவேண்டும் - முதுபெரும் தந்தை
6. "மாறுவேடத்தில் வாழும் இயேசுவுக்கு உதவுங்கள்" - நிதி திரட்டும் முயற்சி
7. சூரியஒளி விமானம் இந்தியாவில் தரையிறங்கியது
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. புனித வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ், Rebbibia சிறை கைதிகளுடன்
மார்ச்,11,2015. ஏப்ரல் 2, புனித வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் உள்ள Rebbibia சிறையில் உள்ள கைதிகளைச் சந்திப்பார் என்றும், மாலை 5.30 மணிக்கு, அங்குள்ள கோவிலில் ஆண்டவரின் இறுதி இரவுணவு திருப்பலியை ஆற்றும் வேளையில், சிறைபட்டிருக்கும் பெண் கைதிகள் சிலரின் காலடிகளைக் கழுவுவார் என்றும் திருப்பீடம் அறிவித்துள்ளது.
மேலும், அனைத்துலக நற்கருணை மாநாடுகளுக்குப் பொறுப்பாகப் பணியாற்றும் திருப்பீட அவையின் தலைவராகப் பணியாற்றிவரும் பேராயர் பியெரோ மரினி (Piero Marini) அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பொறுப்பில் மீண்டும் உறுதி செய்துள்ளார்.
திருவழிபாடு மற்றும் அருள் அடையாளங்களின் நெறிமுறைகள் பேராயத்தின் தலைவர், கர்தினால் இராபர்ட் சாரா, அருள் பணியாளர்கள் பேராயத்தின் தலைவர், கர்தினால் பெனியாமினோ ஸ்டெல்லா, மற்றும் பொதுநிலையினர் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் ஸ்டானிஸ்லாவ் ரில்கோ ஆகியோரை, நற்கருணை மாநாடு திருப்பீட அவையின் உறுப்பினர்களாக திருத்தந்தை நியமித்துள்ளார்.
திருவழிபாடு இயலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள, 73 வயது நிறைந்த பேராயர் மரினி அவர்கள், முன்னாள் திருத்தந்தையர் இரண்டாம் ஜான்பால், பெனடிக்ட் ஆகிய இருவரும் நிகழ்த்திய வழிபாடுகளை ஒருங்கிணைக்கும் பணியில் பல ஆண்டுகள் பணியாற்றியவர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை : என் வாழ்வு இறைவன் கைகளில் உள்ளது
மார்ச்,11,2015. தன் வாழ்வு இறைவன் கைகளில் உள்ளது என்றும், அவருக்கு விருப்பம் எனில், தன் வாழ்வை எடுத்துக் கொள்ளலாம்; இருந்தாலும், தனக்கு
உடல் துன்பம் அதிகம் இல்லாமல் இறைவன் தன்னை எடுத்துக் கொள்ளவேண்டும்
என்பதும் தன் செபம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் அளித்த
ஒரு பேட்டியில் கூறினார்.
அர்ஜென்டீனா நாட்டின் Buenos Aires புறநகரில் இயங்கிவரும் La Carcova News என்ற ஒரு மாத இதழுக்கு திருத்தந்தை அளித்த பேட்டியின் இறுதியில், அண்மையில் அவரது உயிருக்கு எழுந்துள்ள ஆபத்துக்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, திருத்தந்தை இவ்வாறு பதில் அளித்தார்.
அர்ஜென்டீனாவில் "Gran Buenos Aires" என்ற பெயரில் இயங்கிவரும் ஒரு சிறுநகர் குழுவினரால் துவக்கப்பட்டுள்ள La Carcova மாத இதழ், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் தலைமைப் பணியில் ஈராண்டுகள் நிறைவு செய்யும் தருணத்தையொட்டி, அவரிடம் இந்தப் பேட்டியை மேற்கொண்டது.
சமுதாயத்தின் விளிம்புகளில் வாழும் மனிதர்கள், போதைப்பொருள் பயன்பாடு, கணணி வழியே இளையோரைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள கற்பனை உலகம் போன்றவற்றைக் குறித்து, எளிய மக்கள் எழுப்பியக் கேள்விகளுக்கு திருத்தந்தை தன் பதில்களை அளித்துள்ளார்.
அர்ஜென்டீனா நாடு இவ்வாண்டு சந்திக்கவிருக்கும் தேர்தல்கள் குறித்து திருத்தந்தையின் கருத்துக்கள் என்ன என்ற கேள்விக்கு, தெளிவான எண்ணங்கள் கொண்டோரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்றும், நேர்மையுடன் செயலாற்றும் தலைவர்கள் தேவை என்றும் திருத்தந்தை பதில் அளித்தார்.
அர்ஜென்டீனா நாட்டுக்கு, திருத்தந்தை எப்போது பயணம் மேற்கொள்வார் என்ற கேள்விக்கு, இறைவனின் விருப்பம் இருந்தால், ஏனைய திட்டங்கள் இயைந்து வந்தால், 2016ம்
ஆண்டின் துவக்கத்தில் தான் அர்ஜென்டீனா நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள
முடியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் பேட்டியின் இறுதியில்
குறிப்பிட்டார்.
ஆதாரம் : CNA/ CNS / வத்திக்கான் வானொலி
3. "மனித மாண்பை வளர்க்கும் பெண்கள்" ஐ.நா.வில் திருப்பீடத்தின் கருத்தரங்கு
மார்ச்,11,2015. நியூ யார்க் நகரில் நடைபெறும் ஐ.நா.அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பாக பங்கேற்கும் பணியாளர்கள் இணைந்து, "மனித மாண்பை வளர்க்கும் பெண்கள்" என்ற தலைப்பில், மார்ச் 18, அடுத்த புதனன்று கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளனர்.
Haiti நாட்டின் முன்னாள் பிரதமர், பேராசிரியர் Michèle Pierre-Louis, CRS எனப்படும் கத்தோலிக்கத் துயர்துடைப்புப் பணிகள் இயக்கத்தின் தலைவர், பேராசிரியர் Carolyn Woo, Texas நகரில் பணியாற்றிவரும் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பின் தலைவர், அருள் சகோதரி, Norma Pimentel ஆகியோர் இக்கருத்தரங்கில் உரையாற்றுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 8ம் தேதி சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக மகளிர் நாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கருத்தரங்கு, பெண்களின் உள்ளார்ந்த சக்தியை வெளிச்சமிட்டுக் காட்டும் ஒரு முயற்சியாக அமையும் என்று கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளவர்கள் கூறினர்.
மிகவும் குழப்பமானச் சூழல்களிலும் தெளிவாகச் சிந்திக்கும் திறன் பெற்றவர்கள் பெண்கள் என்பதால், அவர்கள் அற்புத அறிவுத்திறன் பெற்றவர்கள் என்று மறைந்தத் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள் கூறியுள்ளதும், கடவுளின் கனிவான முகத்தை இவ்வுலகிற்கு வெளிப்படுத்துவது எவ்விதம் என்பதை பெண்கள் உணர்ந்தவர்கள் என்பதால், அவர்களை ஒதுக்கிவிடாமல், இணைத்துச்
செல்வதே சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு சிறந்த வழி என்று திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதும் இங்கே குறிப்பிடத் தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. மும்பையில் 'இறைவனுடன் 24 மணி நேரங்கள்'
மார்ச்,11,2015. கடவுளின் கருணையை அனைவரும் சுவைக்கும் வகையில் கோவில்கள் அனைத்தையும் திறந்து வைத்து, நற்கருணை ஆராதனையில் மக்கள் ஈடுபட, அருள் பணியாளர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும் என்று மும்பை பேராயர், கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.
'இறைவனுடன் 24 மணி நேரங்கள்' என்ற கருத்துடன் இவ்வெள்ளி, சனி ஆகிய நாட்களில் திருவழிபாடுகளும், ஒப்புரவு அருள் அடையாளமும் நடைபெறுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள அழைப்பினையொட்டி கர்தினால் கிரேசியஸ் அவர்கள், மும்பை அருள் பணியாளர்களுக்கு இந்த அறிக்கையை அளித்துள்ளார்.
"கருணையில் சிறந்த கடவுள்" என்ற கருத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, மார்ச் 13, இவ்வெள்ளியன்று மாலை 7.30 மணிக்குத் துவங்கி, அடுத்தநாள் மாலை 7.30 மணிக்கு நடைபெறும் திருப்பலியுடன் நிறைவேறும் என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார்.
உலகமயமாகிவரும் அக்கறையின்மை என்ற குறையை நீக்க, இந்த 24 மணி நேர செபத்தில், உலகெங்கும் துன்புறுவோருக்கு சிறப்பான செபங்களை எழுப்பவேண்டும் என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
5. ISIS தீவிரவாதத்திலிருந்து அப்பாவி மக்களைக் காக்கவேண்டும் - முதுபெரும் தந்தை
மார்ச்,11,2015. மனிதர்கள், கட்டிடங்கள், கலாச்சாரம் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்திவரும் இஸ்லாமியத் தீவிரவாதத்திலிருந்து அப்பாவி மக்களைக் காக்கும்படி, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, முதலாம் இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் வான்படைத் தாக்குதல்களின் உதவியோடு, குர்த் இனத்தவரின் படைகள் ISIS தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் துன்புறுகின்றனர் என்று முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.
மனிதகுலத்திற்கு ஏற்பட்டுள்ள இந்தப் பெரும் துயரைக் கண்டும் காணாததுபோல் இருக்க முடியாது என்றும், அகில
உலக சமுதாயம் மக்களைக் காக்கும் பணியில் உடனடியாக ஈடுபடவேண்டும் என்றும்
ஈராக் ஆயர்கள் பேரவைத் தலைவரான முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள்
விண்ணப்பித்துள்ளார்.
ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
6. "மாறுவேடத்தில் வாழும் இயேசுவுக்கு உதவுங்கள்" - நிதி திரட்டும் முயற்சி
மார்ச்,11,2015. கிறிஸ்துவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் துன்பங்களைத் தாங்கி வாழும் மக்களுக்கு உதவும் வகையில், அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலத்திருஅவை, மார்ச் 14, 15 ஆகிய நாட்களில், அந்நாட்டின் அனைத்து கத்தோலிக்கக் கோவில்களிலும் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
CRS எனப்படும் கத்தோலிக்கத் துயர் துடைக்கும் அமைப்பு, "மாறுவேடத்தில் வாழும் இயேசுவுக்கு உதவுங்கள்" என்ற பெயரில் மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கு, அமெரிக்க ஆயர்கள் பேரவை ஆதரவு அளித்துள்ளது.
உலகெங்கும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள பல கோடி மக்களின் வழியாக, துன்புறும் இயேசுவுடன் நம்மையே இணைத்துக்கொள்ள தவக்காலம் தகுந்ததொரு தருணம் என்று அமெரிக்க ஆயர் பேரவையின் பொறுப்பாளர்களில் ஒருவரான, பேராயர் Dennis Schnurr அவர்கள் கூறினார்.
சென்ற ஆண்டு, CRS அமைப்பினர் வழியாகத் திரட்டப்பட்ட நிதி, காசாப் பகுதியிலும், ஈராக் நாட்டிலும் வன்முறைகளுக்கு உள்ளான கிறிஸ்தவர்களின் துயர் துடைக்கும் முயற்சிகளுக்கு உதவியாக இருந்ததென்று, CRS அமைப்பைச் சார்ந்த ஒருவர் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. சூரியஒளி விமானம் இந்தியாவில் தரையிறங்கியது
மார்ச்,11,2015. உலகை சுற்றிவரும் சாதனைப்பயணத்தை துவங்கியிருக்கும் சூரிய ஒளியால் இயங்கும் விமானம், தனது பயணத்தின் இரண்டாம் கட்டமாக, இந்தியாவின் அகமதாபாத் நகரில் வெற்றிகரமாக தரையிறங்கியிருக்கிறது.
‘சோலார் இம்பல்ஸ்-2’ (Solar Impulse 2) என்று அழைக்கப்படும் அந்த விமானம், தனது பயணத்தை திங்கட்கிழமை அபுதாபியிலிருந்து தொடங்கியது. ஒமானின் தலைநகர் மஸ்கட்டில் திங்கள் இரவு தரையிறங்கியது.
அங்கிருந்து செவ்வாய்க்கிழமை காலை தனது இரண்டாம் கட்டப்பயணத்தைத் துவங்கிய இந்த விமானம், அரேபியக்கடலை வெற்றிகரமாக கடந்து, செவ்வாய்க்கிழமை இரவு இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
அடுத்த ஐந்து மாதங்களில் அனைத்து கண்டங்களுக்கும் பயணிக்கவுள்ள இந்த விமானம், பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களையும் கடக்கவுள்ளது.
2050ம் ஆண்டுக்குள் மின்சாரத்திற்கான மூலப்பொருளாக சூரிய சக்தியே பெருமளவில் பயன்படும் என்று ஆய்வறிக்கைகள் கூறும் நிலையில், தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு பெரிய முன்னேற்றமாக இந்த சூரிய ஒளி விமானம் பார்க்கப்படுகிறது.
2010ம் ஆண்டு, Solar Impulse 1 என்ற முயற்சியால் ஓரளவு வெற்றி பெற்றிருந்தாலும், உலகைச் சுற்றிவர எடுக்கப்பட்டுள்ள Solar Impulse 2ன் இந்த முயற்சி வியக்கத்தக்க முயற்சியாகவும், கடினமான முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment