செய்திகள்-10.03.15
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : மன்னிக்கத் தெரிந்தவர்களே மன்னிப்பை பெறுகின்றனர்
2. மத்தியக் கிழக்குப் பகுதி புனித தலங்களுக்கு புனித வெள்ளி நிதி
3. உக்ரனில் துன்புறும் மக்களுக்கு உதவ 4 இலட்சம் டாலர் நிதி
4. திருமணம் குறித்த தகுந்த படிப்பினைகள் தேவை - கர்தினால் Burke
5. தீவிரவாதிகாளால் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு பங்களாதேஷில் செப வழிபாடு
6. ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற்காப்புக் கவசங்களாக சிரியா கிறிஸ்தவர்கள்
7. எகிப்தில் காப்டிக் அனனை மரி கோவில் தாக்கப்பட்டுள்ளது
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : மன்னிக்கத் தெரிந்தவர்களே மன்னிப்பை பெறுகின்றனர்
மார்ச்,10,2015. கடவுள் நம்மை மன்னிக்கிறார், அதேவேளை, நாமும் பிறரை மன்னிக்க வேண்டும் என நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான்
தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இச்செவ்வாய்
காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனிடம் மன்னிப்பை வேண்டுபவர்கள், அவர் கற்பித்த 'வானகத்திலுள்ள எங்கள் தந்தாய்' என்ற செபத்தின் படிப்பினைகளை பின்பற்றுபவர்களாக இருக்கவேண்டும் என்றார்.
இறைவன் அனைத்து வல்லமையும் உடையவராக இருந்தாலும், அவரின் வல்லமை, இதயத்தின் மூடிய கதவுகளுக்கு முன்னால் கைகட்டி நிற்கிறது, ஏனெனில் நமக்குத் தவறிழைத்தவர்களை நாம் மன்னிக்கவில்லையென்றால், இறைவனுக்கும் நம் இதயக் கதவுகள் மூடப்பட்டதாகவே இருக்கும் என்றார் திருத்தந்தை.
நான் தவறு செய்துவிட்டேன், மனம் வருந்துகிறேன் என்று கூறுவதும், நான் பாவமிழைத்துவிட்டேன், மன்னிப்பை வேண்டுகிறேன் என உரைப்பதும் வேறு வேறு என்பதை விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘எனக்குத் தவறிழைத்தவர்களை நான் மன்னிப்பதுபோல், இறைவா என்னை மன்னித்தருளும்' என நாம் செபிப்பது வாழ்வில் உண்மையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றார்.
நாம் பிறருக்கு வழங்கும் மன்னிப்பே நமக்கு இறைவனால் திருப்பி வழங்கப்படுகிறது, ஏனெனில், இறைமன்னிப்பிற்கு, நாம் பிறரை மன்னிப்பது ஒரு முன்நிபந்தனையாக உள்ளது என மேலும் கூறினார் திருத்தந்தை.
ஆதாரம்: வத்திக்கான வானொலி.
2. மத்தியக் கிழக்குப் பகுதி புனித தலங்களுக்கு புனித வெள்ளி நிதி
மார்ச்,10,2015. "மிகவும் துன்பகரமான வேளைகளில், கடவுள் நம் தந்தை; அவர் தன் குழந்தைகளை ஒருநாளும் கைவிடுவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்ற செய்தியை, இச்செவ்வாயன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் Twitter பக்கத்தில் எழுதியுள்ளார்.
இதற்கிடையே, துன்புறும் மத்தியக் கிழக்குப் பகுதியின் புனித தலங்களுக்கு உதவும் வகையில், புனித வெள்ளியன்று உலகம் முழுவதும் தலத்திருஅவைகளில் நிதி திரட்டப்பட உள்ளது என்ற அறிக்கையை, கீழை வழிபாட்டு முறை திருஅவைகளுக்கென பணியாற்றும் பேராயம் வெளியிட்டுள்ளது.
சிரியாவிலிருந்தும், ஈராக்கிலிருந்தும் பல இலட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறி வரும் இன்றையச் சூழலில், நம் கிறிஸ்தவ அன்பை வெளிப்படுத்தும் அழைப்பு, சக்திவாய்ந்த வகையில் எழுப்பப்படுகிறது என்று இச்செய்தியில் கூறியுள்ள அப்பேராயத்தின் தலைவர், கர்தினால் Leonardo Sandri அவர்கள், மத்தியக் கிழக்குப் பகுதியில் இன்று ஆயுதங்களின் ஓசை மேலோங்கி இருப்பதுடன், பேச்சுவார்த்தை மற்றும் இணக்க வாழ்வு குறித்த எதிர்பார்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.
மத்தியக்
கிழக்குப் பகுதியின் புனிதத் தலங்களுக்கென மேற்கொள்ளப்படும் நிதி
திரட்டலில் உலகெங்கும் உள்ள கத்தோலிக்கர்கள் ஆர்வமுடன் பங்கேற்பார்கள் என்ற
நம்பிக்கையையும், கர்தினால் சாந்த்ரி அவர்கள் தன் செய்தியில் வெளியிட்டுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. உக்ரனில் துன்புறும் மக்களுக்கு உதவ 4 இலட்சம் டாலர் நிதி
மார்ச்,10,2015. உக்ரைனில் துன்புறும் மக்களுக்கு உதவும் அந்நாட்டு தலத்திருஅவையின் திட்டங்களுக்கு 4 இலட்சம் டாலரை வழங்குவதாக அறிவித்துள்ளது Knights of Colombus அமைப்பு.
உக்ரைன்
நாட்டில் நிலவும் பெரும் மனிதகுல நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள
அகதிகளுக்கும் குழந்தைகளுக்கும் இந்த குளிர்காலத்தில் உணவு வழங்கும்
நோக்கில் நிதியுதவிகளை வழங்க முன்வந்துள்ளதாக உரைக்கும் Knights of Colombus அமைப்பு, உக்ரைனில் இடம்பெறும் ஆயுத மோதல்கள் பற்றி பேசும் உலக சமூகங்கள், அங்கு துன்புறும் முதியோர், குழந்தைகள் மற்றும் அகதிகள் குறித்து கவனம் செலுத்துவதில்லை என தெரிவிக்கிறது.
அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் கூற்றுப்படி, உக்ரைன் நாட்டிற்குள்ளேயே குடிபெயர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 10 இலட்சமாகும்
ஆதாரம்: CNS/வத்திக்கான வானொலி.
4. திருமணம் குறித்த தகுந்த படிப்பினைகள் தேவை - கர்தினால் Burke
மார்ச்,10,2015. திருமணம் மற்றும் குடும்பம் குறித்த திருஅவையின் படிப்பினைகள், விசுவாசிகளுக்குத் தகுந்த முறையில் வழங்கப்படாவிட்டால், ஐரோப்பிய நாடுகளில், புதிய நற்செய்தி அறிவித்தல் பணி தோல்வியடையும் ஆபத்தில் உள்ளது என்று திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.
புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியின் வெற்றியானது, கிறிஸ்தவர்கள் திருஅவை படிப்பினைகளை உறுதியுடன் கடைபிடிப்பதைச் சார்ந்துள்ளது என்று கூறினார், Knights of Malta அமைப்பின் தலைவர், கர்தினால் Raymond Burke அவர்கள்.
கிறிஸ்தவத் தம்பதியரின் விசுவாசச் சாட்சியங்களும், திருமணம்
போன்ற உயரிய உண்மைகளுக்காக துன்புறவும் தயாராக இருக்கும் கிறிஸ்தவர்களும்
திருஅவையின் புதுப்பித்தலுக்கு மிகவும் முக்கியமானவர்கள் என்றும் கூறினார்
அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த கர்தினால் Burke.
திருஅவை இன்று எதிர்கொள்ளும் சவால்களுள் முக்கியமானது, அதன் வாழ்வு குறித்தது, அதாவது, குடும்பங்கள் குறித்தது என்று கர்தினால் Burke அவர்கள் மேலும் கூறினார்.
ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி
5. தீவிரவாதிகாளால் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு பங்களாதேஷில் செப வழிபாடு
மார்ச்,10,2015.
ஐ.எஸ். இஸ்லாமிய தீவிரவாதிகளால் மத்தியக் கிழக்குப் பகுதியில் கொல்லப்பட்ட
மக்களுக்கென சிறப்பு செபவழிபாடு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது
பங்களாதேஷ் தலத்திருஅவை.
ஐ.எஸ். இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட மக்களுக்காக அமைதி ஊர்வலம் ஒன்றை அண்மையில் மேற்கொண்ட பங்களாதேஷ் கிறிஸ்தவர்கள், இம்மாதம் 22ம் தேதி ஞாயிறன்று, அனைத்து கிறிஸ்தவக் கோவில்களிலும் சிறப்பு செபவழிபாடு இடம்பெறும் என அறிவித்தனர்.
மதத்தின் பெயரால் அப்பாவிக் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என உரைத்த பங்களாதேஷ் கிறிஸ்தவர்கள், தீவிரவாதிகளின் இந்த கொலைகள் நிறுத்தப்பட அனைத்து உலகத் தலைவர்களும் முயற்சி செய்ய வேண்டும் என விண்ணப்பித்துள்ளனர்.
ஐ.எஸ். இஸ்லாம் தீவிரவாதிகளின் கைகளில் பலியான கிறிஸ்தவர்களுக்கென அண்மையில் பங்களாதேஷில் இடம்பெற்ற ஊர்வலத்தின்போது, மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
ஆதாரம்: Asia News/வத்திக்கான வானொலி.
6. ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற்காப்புக் கவசங்களாக சிரியா கிறிஸ்தவர்கள்
மார்ச்,10,2015. எந்தப் பிணையத் தொகையும் வழங்காமல் ஐ.எஸ் இஸ்லாமியப் புரட்சியாளர்களிடமிருந்து 52 கிறிஸ்தவக் குடும்பங்களின் விடுதலையைப் பெற்றுள்ள போதிலும், இன்னும் நிறையக் குடும்பங்கள் விடுதலைச் செய்யப்பட வேண்டியுள்ளது என அறிவித்தார் சிரியாவிற்கான திருப்பீடத் தூதர்.
அனைத்துக் கிறிஸ்தவக் குடும்பங்களையும் விடுவிப்பதற்கான முயற்சியின் இடையே குர்த் இனத்தவரின் தாக்குதல்கள் தலையிட்டதால், விடுதலை தள்ளிப் போடப்பட்டுள்ளது என்றார், சிரியாவிற்கான திருப்பீடத் தூதர் பேராயர் மாரியோ செனாரி.
தங்களை குர்த் இனத்தவரின் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றிக்கொள்ள ஒரு கவசமாகப் பயன்படுத்தவே ஐ.எஸ். இஸ்லாமிய தீவிரவாதிகள், இக்கிறிஸ்தவக் குடும்பங்களைக் கடத்திச் சென்றுள்ளனர் என தான் நம்புவதாகவும் கூறினார் பேராயர் செனாரி.
கிறிஸ்தவர்கள் சிரியாவில் ஆற்றும் பிறரன்புப் பணிகளை அறிந்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள், கிறிஸ்தவர்களை மதிப்புடனேயே நடத்துவதாக சில செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஆதாரம்: Asia News/வத்திக்கான வானொலி.
7. எகிப்தில் காப்டிக் அனனை மரி கோவில் தாக்கப்பட்டுள்ளது
மார்ச்,10,2015. எகிப்தின் Kafr el-dawar பகுதியிலுள்ள காப்டிக் கத்தோலிக்க வழிபாட்டுமுறையின் அன்னைமரி கோவில், தீவிரவாதிகளால் தாக்கப்பட்டுள்ளது.
ஆயுதம் தாங்கிய சில தீவிரவாதிகள், அதிகாலையில் இப்பகுதிக்கு வந்து, எறிகுண்டு மூலம் இக்கோவிலைத் தாக்கியதில் கோவில் சேதமடைந்துள்ளதுடன், பாதுகாப்புக்காக நின்ற இரு காவல்துறையினரும் காயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவம் குறித்து பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த அலக்சாந்திரியாவின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் அடெல் சாக்கி அவர்கள், இத்தகைய தாக்குதல்கள் அண்மை காலமாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்றார்.
ஆதாரம்: FIDES/வத்திக்கான வானொலி.
No comments:
Post a Comment