Monday, 9 March 2015

செய்திகள் - 09.03.15

செய்திகள் - 09.03.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : அமைதியிலும் எளிமையிலும் செயலாற்றுவதே இறைவனின் பாணி

2. திருத்தந்தை : இறையியலும் புனிதத்துவமும் பிரிக்கமுடியாதவை

3. திருத்தந்தையுடன் பெல்ஜியம் அரசத் தம்பதியர் சந்திப்பு

4. திருத்தந்தை : நம் இதயத்திற்குள் நுழைந்து, நம்மை தூய்மைப்படுத்த இயேசுவை அனுமதிப்போம்

5. திருத்தந்தை - பெண்களை ஒதுக்கிவாழும் உலகம், வளமற்ற உலகம்

6. பேராயர் தொமாசி : பாதுகாப்பான சுற்றுச்சூழலும் மனித உரிமைகளும் தொடர்புடையவை

7. ஆயுத இறக்குமதியில் சவுதி அரேபியா முதலிடத்தில்
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : அமைதியிலும் எளிமையிலும் செயலாற்றுவதே இறைவனின் பாணி

மார்ச்,09,2015. ஆடம்பரமாக அல்ல, மாறாக அமைதியிலும் தாழ்ச்சியிலும் செயலாற்றுவதே இறைவனின் பாணி என இத்திங்கள் காலை திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் காலை திருப்பலி நிறைவேற்றி, மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், படைப்பின் துவக்க காலத்திலேயே இறைவன் பெரிய மாய வித்தைகளால் அல்ல, மாறாக சாதாரண களிமண்ணிலிருந்து மனிதனை உருவாக்கியதைக் காண்கிறோம் என்றார்.
மோசேயின் உதவியுடன் மக்களை மீட்டது,  எரிக்கோவை வீழ்த்தியது, சிறுவன் தாவீதின் மூலம் கோலியாத்தை வீழ்த்தியது, மூன்று அரசர்களும் மாடடைக் குடிலில் ஒரு குழந்தையைக் கண்டது என அனைத்தும் சிறியவைகளாக, தாழ்ச்சியுடையவைகளாக இருந்தன என்ற திருத்தந்தைபாலைவனத்தில் இயேசுவை சோதித்த சாத்தானுக்கு வழங்கப்பட்ட பதிலுரைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
அமர்ந்து சிந்தித்தோமென்றால், நம் வாழ்விலும்  எளிய செயல்கள் மூலமே இறைவன் நம்மை முன்னோக்கி அழைத்துச் சென்றுள்ளதை உணர்வோம் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை : இறையியலும் புனிதத்துவமும் பிரிக்கமுடியாதவை

மார்ச்,09,2015. பாதுகாப்பான கண்ணாடிக் கூண்டுக்குள்ளிருந்து மக்களைப் பார்வையிடும் நிலைகளிலும், கல்வித் தொடர்புடைய வாக்குவாதங்களிலும் பயன்படுத்தப்பட்டுவந்த இறையியலை விட்டு நாம் உண்மையான இறையியலை பாதுகாக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்,
அர்ஜென்டினாவின் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், நூற்றாண்டைக் கொண்டாடுவதை முன்னிட்டு, அதன் தலைவர் கர்தினால் மாரியோ அவ்ரேலியோ போலிக்கு வாழ்த்துச்செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் இறையியல் துறை நூற்றாண்டைக் கொண்டாடுவது, இரண்டாம் வத்திக்கான பொதுச்சங்கம் நிறைவுற்றதன் 50ம் ஆண்டோடு இணைந்து சிறப்பிக்கப்படுகின்றது என அதில் கூறியுள்ளார்.
இறையியலைக் கற்பது மற்றும் கற்பிப்பது என்பது, நற்செய்தி, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதைப் புரிந்துகொண்டு அதை அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் அறிவிப்பதாகும் எனவும் தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை அவர்கள், இறையியலும் புனித்தத்துவமும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்துள்ளன, அவை பிரிக்க முடியாதவை எனவும் தெரிவித்துள்ளார்.
இரக்கம் என்பது ஒரு மேய்ப்புப்பணி நடவடிக்கை மட்டுமல்ல, அதுவே இயேசு கொணர்ந்த நற்செய்தியின் மையக்கருத்து எனக் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது கோட்பாடுகள், சட்டங்கள், நன்னெறி வழிமுறை, ஆன்மீகம் ஆகியவை இரக்கத்தை மையம் கொண்டதாக அமையவேண்டும், இல்லையெனில் நம் இறையியலும், உரிமைகளும், மேய்ப்புப்பணி நடவடிக்கைகளும் வீழ்ச்சியடையும் எனவும் கூறியுள்ளார்.
இறையியலைக் கற்பது என்பது வெறும் புள்ளிவிவரங்களையும் தகவல்களையும் கற்று, ஓர் இறையியல் அருங்கட்சியமாக வாழ்வதல்ல என்று அச்செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறை உண்மைகளை கிறிஸ்தவ மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் முன்னெடுத்துச் செல்வதே இறையியல், ஏனெனில் திறமையற்ற அறிவாளியாகவோ, இரக்கமற்ற நன்னெறியாளராகவோ வாழ்வதல்ல இது என மேலும் கூறியுள்ளார்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தையுடன் பெல்ஜியம் அரசத் தம்பதியர் சந்திப்பு

மார்ச்,09,2015. "தாழ்ச்சியே மனிதரை மீட்கிறது. தற்பெருமையோ அவர்கள் தங்கள் பாதையை இழக்கச் செய்கிறது" என்று, தன் Twitter பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இத்திங்களன்று பெல்ஜியம் மன்னர் Philippe அவர்களையும், அரசி Mathilde அவர்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
அதன்பின், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், நாடுகளுடன் உறவுகொள்ளும் வத்திக்கான் துறையின் செயலர், பேராயர் Paul Richard Gallagher அவர்களையும், பெல்ஜியம் அரசத் தம்பதியர் சந்தித்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை : நம் இதயத்திற்குள் நுழைந்து, நம்மை தூய்மைப்படுத்த இயேசுவை அனுமதிப்போம்.

மார்ச்,09,2015. இறைவனுக்கு எதிராகச்செயல்படும் நம் அனைத்துக் குணநலன்களையும் விரட்டி, நம் உள்ளமெனும் கோவிலைச் சுத்தப்படுத்த, இயேசுவை நாம் அனுமதிப்போம் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எருசலேம் கோவிலில் வியாபாரிகளை விரட்டி, கோவிலை சுத்தப்படுத்திய இயேசுவின் செயல் பற்றிக் கூறும் இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் பற்றி, ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மற்றவர்களைக் காயப்படுத்தும் நம் உள்ளுணர்வுகளையும், புறம்பேசுதல், பகைமை, பொறாமை, உலகாயுதப்போக்கு போன்றவற்றையும் நம்மிலிருந்து விலக்கி, நம்மைத் தூய்மையாக்க, நாம் இயேசுவை அனுமதிக்கிறோமா என்ற கேள்வியை முன்வைத்தார்.
இயேசு நமக்கெனக் கொணர்வது சாட்டையல்ல, மாறாக, இரக்கமே, ஆகவே அவரை நம் இதயத்திற்குள் அனுமதித்து நம்மைத் தூய்மையாக்குவோம் என்ற அழைப்பை முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வை அன்பின் அடையாளமாக வெளிப்படுத்தி, ஏழைகள் மற்றும் சக்தியற்றவர்கள் மத்தியில் அக்கறையுடன் செயலாற்றவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வையே இறைவனின் கோவிலாக மாற்றினோமென்றால், நம்மிலும் நம் சாட்சியத்திலும் பிறர் இயேசுவைக் கண்டுகொள்ள உதவுகிறோம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசுவாசத்துடன் இணைந்து, நாம் நிறைவேற்றும் திருப்பலிகள், நம்மை இறைவனின் திருக்கோவிலாக வளர உதவுகின்றன என மேலும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. திருத்தந்தை - பெண்களை ஒதுக்கிவாழும் உலகம், வளமற்ற உலகம்

மார்ச்,09,2015. பெண்களை ஒதுக்கிவாழும் உலகம், கனிதராத, வளமற்ற ஓர் உலகாக மாறிவிடும் என்று, உலக மகளிர் நாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
உலக மகளிர் நாளான இஞ்ஞாயிறன்று மூவேளை செப உரை வழங்கியபின், இறுதியில், உலக மகளிருக்கு தன் வாழ்த்துக்களை வெளியிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெண்கள், வாழ்வைக் கொணர்பவர்கள் மட்டுமல்ல, உலக விடயங்களை வேறு, வேறு கண்ணோட்டங்களில் நோக்குவதற்கும் உதவுபவர்கள் என்று கூறினார்.
உலக விடயங்களை வேறு கோணங்களில் பார்த்து, அவற்றை கற்பனைச் சக்தியுடனும், பொறுமையுடனும் இதயத்தில் உணரவல்லவர்கள் பெண்கள் என்றும் பாராட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மனிதாபிமானமும், வரவேற்கும் மனநிலையும் கொண்ட சமுதாயத்தைக் கட்டியெழுப்ப உழைக்கும்  பெண்களுக்கும், திருஅவையிலும் சமுதாயத்திலும் நற்செய்தியின் சாட்சிகளாக விளங்கும் பெண்களுக்கும் தன் தனிப்பட்ட வாழ்த்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக மகளிர் நாளன்று வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. பேராயர் தொமாசி : பாதுகாப்பான சுற்றுச்சூழலும் மனித உரிமைகளும் தொடர்புடையவை

மார்ச்,09,2015. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நீதியோடும், மதித்தலோடும், சரிநிகர் தன்மைகளோடும் தொடர்புடைய ஒன்று என ஐ.நா. அவைக் கூட்டத்தில் எடுத்துரைத்தார், திருப்பீட அதிகாரி, பேராயர் சில்வானோ தொமாசி.
மனித உரிமைகள் அவையின் 28வது கூட்டத்தில் ஜெனீவாவில் உரையாற்றிய திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர், பேராயர் தொமாசி அவர்கள், சுத்தமான, நலமான, பாதுகாப்பான சுற்றுச்சூழலைக் கொண்டிருப்பதில் தொடர்புடைய மனித உரிமைகள் குறித்து எடுத்துரைத்தார்.
சுற்றுச்சூழலை அழிப்பது, நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனித உரிமைகளை பாதிக்கவல்லது என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் தொமாசி அவர்கள், இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் சமநீதி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றார்.
இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் இயற்றப்படும்போது, அவை, மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக இருக்கவேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார், திருப்பீடப் பிரதிநிதி பேராயர் தொமாசி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. ஆயுத இறக்குமதியில் சவுதி அரேபியா முதலிடத்தில்

மார்ச்,09,2015. சவுதி அரேபியாதான் உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடு என்று, நாடுகளின் பாதுகாப்புச் செலவினங்கள் தொடர்பான உலக அளவிலான புதிய அறிக்கை ஒன்று கூறுகின்றது.
ஆயுத இறக்குமதியில் இதுவரை முதல் இடத்தில் இருந்து வந்த இந்தியாவை பின்னுக்குத் தள்ளி, சவுதி அரேபியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மேலும், இதுவரை ஐந்தாவது இடத்தில் இருந்த சீனா, இப்போது மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த IHS என்ற சந்தைப் புலனாய்வு நிறுவனம் கூறுகின்றது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இராணுவத் தளவாட வியாபாரம், 13 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கிலும், ஆசிய பசிபிக் பகுதியிலும் மோதல்கள் அதிகரித்துள்ள காரணத்தினாலும், வளர்ந்துவரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் இராணுவ விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாலும் இந்த வியாபார அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகின்றது.
உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதி நாடாக அமெரிக்க ஐக்கிய நாடு தொடர்ந்து உள்ள நிலையில், அடுத்த நிலைகளில் இரஷ்யாவும் பிரான்ஸும் உள்ளன.

ஆதாரம் : BBC /வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment