Monday, 9 March 2015

செய்திகள் - 07.03.15

செய்திகள் - 07.03.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை-தனிவரத்தை அல்ல, இயேசுவை மையமாக வைத்துச் செயல்பட அழைப்பு

2. ஜப்பானில் கிறிஸ்தவம் மீண்டும் உயிர்பெறத் தொடங்கியதன் 150ம் ஆண்டு

3. மார்ச் 13 வத்திக்கான் பசிலிக்காவில் பாவ மன்னிப்பு திருவழிபாடு

4. வெப்பநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து எவரும் விதிவிலக்குப் பெறுவதில்லை

5. மொசாம்பிக்கின் தேசிய ஒற்றுமை அரசியல்வாதிகளின் தன்னலத்தால் அச்சுறுத்தப்பட்டுள்ளது

6. உலக மகளிர் தினம் - பாலியல் சமத்துவத்துக்கு அழைப்பு

7. இந்தியா உட்பட 15 நாடுகள் நதிகளின் வெள்ளப்பெருக்கால் அதிகம் பாதிக்கப்படும் ஆபத்து

8. பாகிஸ்தானில் ஹோலி கொண்டாடிய இந்துக்களின் பாதுகாப்புக்காக முஸ்லிம் மாணவர்கள்

9. செவ்வாய் கிரகத்தில் கடல் இருந்ததற்கு ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை-தனிவரத்தை அல்ல, இயேசுவை மையமாக வைத்துச் செயல்பட அழைப்பு

மார்ச்,07,2015. திருஅவையின் பாதை எவரையும் என்றென்றைக்கும் தீர்ப்பிடுவது அல்ல, ஆனால், நேர்மையான இதயத்துடன் தன்னிடம் கேட்பவருக்கு கடவுளின் கருணையைப் பொழிவதாகும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையின் பாதை, வேலிகளைவிட்டு வெளியேறி, தொலைவில் வாழ்வோரைத் தேடிச் செல்வதாகும் என்றும் Communion and Liberation (CL) என்ற இத்தாலிய திருஅவை இயக்கத்தின் ஏறக்குறைய ஒரு இலட்சத்து இருபதாயிரம் உறுப்பினர்களிடம் கூறினார் திருத்தந்தை.
இந்த CL இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டு நிறைவையொட்டி இச்சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இம்மக்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அறுபது ஆண்டுகள் கடந்தும் இவ்வியக்கத்தின் உயிர்த்துடிப்பு குறையாமல் உள்ளது என்று பாராட்டினார்.
CL இயக்கத்தைத் தோற்றுவித்த அருள்பணியாளர் Luigi Giussani அவர்களின் எழுத்துக்களும், ஆன்மீகமும் தனது சொந்த வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, திருஅவையின் அனைத்து ஆன்மீகத்துக்கும், தனிவரங்களுக்கும் இயேசுவே மையமாக இருக்கிறார், நம் அனைவரின் வாழ்விலும் இயேசு கிறிஸ்து ஒருவரே மையமாக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்தினார்.
இயேசுவின் காலத்தில் இருந்தது போன்று இன்றும் நம் வாழ்வு ஒரு சந்திப்போடு தொடங்குகின்றது, கருணை என்ற பண்பினால் நிறைந்தவர்கள் இயேசுவை உண்மையிலேயே அறிந்து கொள்கின்றனர் என்று கூறினார்.
CL இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டு நிறைவு, இந்த இயக்கத்தை ஆரம்பித்த அருள்பணியாளர் Giussani அவர்கள் இறந்ததன் பத்தாம் ஆண்டு ஆகிய இரு நிகழ்வுகளின் அடிப்படையில் இச்சந்திப்பு நடைபெற்றது. இவ்வியக்கத்தில் ஐம்பது நாடுகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. ஜப்பானில் கிறிஸ்தவம் மீண்டும் உயிர்பெறத் தொடங்கியதன் 150ம் ஆண்டு

மார்ச்,07,2015. நம் விசுவாச வாழ்வை கிறிஸ்து என்ற பாறையின் மீது கட்டுவோம் என்ற வார்த்தைகளை தனது டுவிட்டர் செய்தியாக இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், ஜப்பானில் கிறிஸ்தவர்கள் மறைவான வாழ்விலிருந்து பொதுவில் வெளிப்படையாக வாழத் தொடங்கியதன் 150ம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்வதற்கு, பிலிப்பீன்ஸ் கர்தினால் Orlando B. Quevedo அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை.
இம்மாதம் 14 முதல் 17 வரை நாகசாகியில் நடைபெறும் நிகழ்வுகளில் திருத்தந்தையின் பிரதிநிதியாக, பிலிப்பீன்சின் Cotabato பேராயர் கர்தினால் Quevedo அவர்கள் கலந்துகொள்வார்.
ஜப்பானில் ஏறக்குறைய 1549ம் ஆண்டில் போர்த்துக்கீசிய மறைபோதகர்களால் கிறிஸ்தவம் பரவத் தொடங்கியது. பின்னர் கிறிஸ்தவர்கள் கடும் துன்பங்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டனர். கிறிஸ்தவமும் தடைசெய்யப்பட்டது. 1858ம் ஆண்டின் ஹாரிஸ் உடன்படிக்கையினால் வெளிநாட்டவர் அந்நாட்டில் நுழைய அனுமதிக்கப்பட்டனர். 1865ம் ஆண்டில் மீண்டும் கிறிஸ்தவர்கள் வெளிப்படையாக தங்களின் விசுவாசத்தை வெளிப்படுத்தத் தொடங்கினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. மார்ச் 13 வத்திக்கான் பசிலிக்காவில் பாவ மன்னிப்பு திருவழிபாடு

மார்ச்,07,2015. இம்மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாவ மன்னிப்பு திருவழிபாட்டை தலைமை வகித்து நடத்துவார் என்று, திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பாளரான பேரருள்திரு Guido Marini அவர்கள் அறிவித்துள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றி, தனிப்பட்ட நபர்களுக்கு பாவமன்னிப்பும் வழங்குவார் என்றும் பேரருள்திரு Marini அவர்கள் அறிவித்துள்ளார்.
இன்னும், புனித பூமியில் புனித இடங்கள் காக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, வத்திக்கானுக்கும் ஐ.நா.வுக்கும் அழைப்பு விடுத்துள்ளது பாலஸ்தீன வெளிவிவகார அமைச்சகம்.
எருசலேமில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் குருத்துவ கல்லூரியும், பெத்லகேமில் மசூதியும் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது பாலஸ்தீன வெளி விவகார அமைச்சகம்.
புனித பூமியிலுள்ள கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் புனித இடங்கள் காக்கப்படுவதற்கு, வத்திக்கானும், அனைத்துலக சமுதாயமும் ஆவன செய்யுமாறு கேட்டுள்ள பாலஸ்தீன அமைச்சகம், எருசலேம் Normtsiaun ஆலயத்துக்குத் தீ வைத்து, கிறிஸ்தவம் மற்றும் இயேசு கிறிஸ்துவின் திருவுருவத்துக்கு எதிராகப் பழிச்சொற்கள் எழுதப்பட்டதற்குத் தனது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.
     
ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி

4. வெப்பநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து எவரும் விதிவிலக்குப் பெறுவதில்லை

மார்ச்,07,2015. இவ்வுலகில் வெப்பநிலை மாற்றத்தின் தாக்கங்களிலிருந்தும், உலகுக்கு மிகவும் கவலை தரக்கூடிய இந்நிலையை அகற்றுவதற்கு இருக்கும் பொறுப்பிலிருந்தும் எவரும் விதிவிலக்குப் பெறுவதில்லை என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் இவ்வெள்ளியன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீட நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், இயற்கையோடும், ஒருவர் ஒருவரோடும் நாம் சார்ந்திருப்பதை ஏற்று, மனித சமுதாயம் மற்றும் இப்புவியின் பொது நலன்மீது நாம் அனைவரும் அக்கறையுடன் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.
வெப்பநிலை மாற்றத்தின் முழு தாக்கங்கள் குறித்து அறிவியலாளர்கள் ஆராய்ந்துவரும் அதேவேளை, இத்தாக்கங்களைக் குறைப்பதற்கும், இதனால் பாதிக்கப்படும் வறியோரையும், வருங்காலத் தலைமுறைகளையும் பாதுகாப்பதற்கும் நாம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார் பேராயர் தொமாசி.
வருகிற நவம்பர் 30 முதல் டிசம்பர் 11 வரை பாரிசில் நடைபெறவிருக்கும் வெப்பநிலை மாற்றம் குறித்த ஐ.நா. உலக மாநாடு வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் உலகளாவிய உடன்படிக்கையை உருவாக்கும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார் பேராயர் தொமாசி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. மொசாம்பிக்கின் தேசிய ஒற்றுமை அரசியல்வாதிகளின் தன்னலத்தால் அச்சுறுத்தப்பட்டுள்ளது

மார்ச்,07,2015. மொசாம்பிக் நாட்டில் அரசியல்வாதிகளின் தன்னலம் மற்றும் அரசியல் பிளவுகளால் தேசிய ஒற்றுமை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று அந்நாட்டு ஆயர்கள் குறை கூறியுள்ளனர்.
மொசாம்பிக்  ஆயர் பேரவையின் நிரந்தரக் குழு வெளியிட்ட அறிக்கையில், நாட்டினர் அனைவருக்கும் பெரும் சொத்தாகவும், மதிப்புமிக்கதாகவும் விளங்கும் நாட்டின் ஒற்றுமை, பேராசை குணம் கொண்ட சில அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார சக்தியால் அலைக்கழிக்கப்படுகின்றது என்று குறை கூறியுள்ளது.
நாட்டின் தேசிய ஒற்றுமையை எந்த ஒரு காரணத்துக்காகவும் நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும், பெரும்பாலான அரசு நிறுவனங்கள் அரசியல்மயமாகி வருவதால், தீர்மானம் எடுக்கும் நடைமுறையிலிருந்து பலர் ஒதுக்கப்படுகின்றனர் என்றும் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.
வளமைமிக்க சிறுபான்மையினரின் நேர்மையற்ற நடத்தையால் ஏழைகளுக்கு அநீதி இழைக்கப்படுவதைத் தெளிவாகப் பார்க்க முடிகின்றது என்றும், சுற்றுச்சூழல் முழுமையாகப் புறக்கணிக்கப்படுகின்றது, இயற்கை வளங்களைச் சுரண்டுவதில் ஒளிவுமறைவு நிலவுகின்றது என்றும் மொசாம்பிக் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

6. உலக மகளிர் தினம் - பாலியல் சமத்துவத்துக்கு அழைப்பு

மார்ச்,07,2015. உலகில் பாலியல் சரிசமநிலையில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டாலும், அரசியல், கல்வி வாய்ப்பு, ஊதியம் உட்பட பல துறைகளில் இன்னும் பாகுபாடுகள் காணப்படுகின்றன என்று ஐ.நா. அதிகாரிகள் கூறினர்.
மார்ச் 8ம் தேதி சிறப்பிக்கப்படும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஐ.நா. உயர்மட்டக் கூட்டத்தில் பேசிய ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், கடந்த இருபது ஆண்டுகளில் அரசியல் வாழ்வில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளது, குழந்தை பிறப்பின்போது இடம்பெறும் இறப்புகள் குறைந்துள்ளன மற்றும் ஆரம்பக் கல்வி வாய்ப்பில் பாகுபாடுகள் முடிவடைந்துள்ளன என்று தெரிவித்தார்.
ஆயினும், உலகில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஓர் உறுப்பினர் பெண் என்றும், தற்போதைய விகித நிலை தொடர்ந்தால், பெண்கள் நாடாளுமன்றங்களில் சரிசமநிலைக்கு வர இன்னும் 81 ஆண்டுகள் எடுக்கும் என்றும் கூறினார் பான் கி மூன்.
உலக அளவில் ஏறக்குறைய ஐம்பது விழுக்காட்டுப் பெண்கள் ஊதியத்தோடு வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர், இந்நிலை, கடந்த இருபது ஆண்டுகளில் இருந்ததைவிட தற்போது நாற்பது விழுக்காட்டுக்கும் அதிகம் என்றும் ஐ.நா. அதிகாரிகள் கூறினர்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

7. இந்தியா உட்பட 15 நாடுகள் நதிகளின் வெள்ளப்பெருக்கால் அதிகம் பாதிக்கப்படும் ஆபத்து

மார்ச்,07,2015. இந்தியா, பங்களாதேஷ், சீனா ஆகிய நாடுகள், நதிகளின் வெள்ளப்பெருக்கால் அதிகம் பாதிக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்குகின்றன என்று அமெரிக்க ஐக்கிய நாட்டை மையமாகக் கொண்ட உலக வளங்கள் நிறுவனமும், நான்கு டச்சு ஆய்வுக் குழுக்களும் நடத்திய ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது.
உலகில் ஓராண்டில் நதிகளின் வெள்ளப்பெருக்கால் ஏறக்குறைய 2 கோடியே 10 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், வெப்பநிலை மாற்றம் மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சியால், இம்மக்களின் எண்ணிக்கை 2030ம் ஆண்டுக்குள் 5 கோடியே 40 இலட்சமாக உயரும் என்றும் இந்த ஆய்வு கூறியுள்ளது.
உலகில் நதிகளின் வெள்ளப்பெருக்கால் அதிகம் பாதிக்கப்படும் மக்களில் ஏறக்குறைய எண்பது விழுக்காட்டினர், இந்தியா, பங்களாதேஷ், சீனா, வியட்நாம், பாகிஸ்தான் உட்பட 15 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தியாவில் ஏறக்குறைய 50 இலட்சம் பேர் இத்தகைய ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் என்றும் அந்த ஆய்வு மேலும் கூறியுள்ளது.
உலக அளவில் நதிகளின் வெள்ளப்பெருக்கால் ஆண்டுதோறும் 9,600 கோடி டாலர் பெறுமான வீட்டு உற்பத்திப் பொருள்கள் சேதமடைகின்றன; இதில் இந்தியாவில்    மட்டும் 1,400 கோடி டாலர், பங்களாதேசில் 540 கோடி டாலர் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த அளவு 2030ம் ஆண்டில் 52,100 கோடி டாலராக உயரும் என்றும் அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.

ஆதாரம் : Reuter / வத்திக்கான் வானொலி

8. பாகிஸ்தானில் ஹோலி கொண்டாடிய இந்துக்களின் பாதுகாப்புக்காக முஸ்லிம் மாணவர்கள் 

மார்ச்,07,2015. கராச்சியில் உள்ள சுவாமி நாராயண் கோயிலில் உற்சாகமாக ஹோலி பண்டிகையைக் கொண்டாடிய இந்துக்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் முஸ்லிம் மாணவர்கள் மனிதச் சங்கிலி அமைத்தனர்.
தேசிய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் மனிதச் சங்கிலிக்கான ஏற்பாடுகளை செய்தனர். இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், பிற மதங்களுடன் நல்லிணக்கத்தை தழைக்கச் செய்வதற்கும், பல்வேறு மத, இனப் பிரிவினர் மத்தியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காகவும் மனிதச் சங்கிலி அமைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இமாம்பர்காவில் ஷியா பிரிவினருக்கு அரவணைப்பாக நின்று நாங்கள் ஆதரவு காட்டியபோது டாக்டர் ஜெய்பால் சாப்ரியா எங்களோடு இணைந்து ஒத்துழைப்பு கொடுத்தார். பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நிற்க உறுதிபூண்டுள்ளோம் என்று அந்த கூட்டமைப்பின் மூத்த நிர்வாகி பவாத் ஹசன் கூறினார்.
இந்து கோயில்கள் அவமரியாதைக்கு உள்ளாகின்றன. கட்டாயப்படுத்தி விருப்பத்துக்கு மாறாக பெண்கள் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். கலாச்சாரம், மத நடவடிக்கைகள் நசுக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது இந்துக்களுக்கு துணை நிற்பதுதான் நியாயம். நாங்கள் மத அடிப்படைவாதிகள் அல்ல. சமூகம் மாற வேண்டும். அந்த மாற்றத்தில் நாமும் அங்கம் வகிக்கவேண்டும் என்று ஹசன் அவர்கள் மேலும் கூறினார்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி

9. செவ்வாய் கிரகத்தில் கடல் இருந்ததற்கு ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

மார்ச்,07,2015. செவ்வாய் கோளத்தில் ஒரு காலத்தில் கடல் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன என்று புதிய ஆய்வில் விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில், கோடார்ட் விண்வெளி உயிரியல் மையத்தைச் சார்ந்த தலைமை அறிவியலாளர் மைக்கேல் மும்மா கடந்த ஆறு ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
செவ்வாய் கோளத்தில் வட துருவத்தில் இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடல் இருந்தது. அது ஆர்க்டிக் பெருங்கடலின் அளவுக்குப் பெரிய கடலாக இருந்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
பூமியில் இருப்பதைப் போலவே ஒரு வகையான நீர் செவ்வாயிலும் இருந்துள்ளது. அதாவது, இங்கு இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள், ஒரு ஆக்ஸிஜன் அணு சேர்ந்த நீர் போலவே செவ்வாயிலும் இருந்துள்ளது.
அதேசமயம் இன்னொரு வகையான நீரும் செவ்வாயில் இருந்திருக்கிறது. அந்த வகையான நீர், ஹைட்ரஜன் அணு ஒன்றில் உள்ள தனிமமான டியூட்ரியம் என்பதைக் கொண்டிருந்தது.
பூமியில் உள்ள நீரில் இருக்கும் டியூட்ரியத்தின் அளவைக் காட்டிலும், செவ்வாயில் எட்டு மடங்கு அதிகமாக டியூட்ரியம் இருந்தது என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, செவ்வாய் கிரகத்தை 137 மீட்டர் ஆழத்தில் மூழ்கடித்துவிடக் கூடிய அளவுக்கு ஒரு காலத்தில் அந்த கடலின் நீர் அளவு இருந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment