Friday, 12 June 2020

"தெய்வீக உழைப்பாளி இயேசு" – திருத்தந்தையின் அறக்கட்டளை

திருத்தந்தை பிரான்சிஸ்

உழைப்பின் உயர்வை நிலைநிறுத்தும் ஒரு முயற்சியாக, "தெய்வீக உழைப்பாளி இயேசு" என்ற பெயரில், பத்து இலட்சம் யூரோக்களுடன், ஓர் அறக்கட்டளையை உரோம் மறைமாவட்டத்தில் உருவாக்குகிறேன் – திருத்தந்தை பிரான்சிஸ்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
"உரோம் மறைமாவட்டத்தின் ஆயர் என்ற முறையில், உழைப்பின் உயர்வை நிலைநிறுத்தும் ஒரு முயற்சியாக, "தெய்வீக உழைப்பாளி இயேசு" என்ற பெயரில், பத்து இலட்சம் யூரோக்களுடன், ஓர் அறக்கட்டளையை இம்மறைமாவட்டத்தில் உருவாக்குகிறேன்" என்ற சொற்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 9, இச்செவ்வாயன்று ஒரு மடலை வெளியிட்டுள்ளார்.
உரோம் மறைமாவட்டத்தில், திருத்தந்தையின் சார்பில், ஆயராகப் பணியாற்றும் கர்தினால் ஆஞ்செலோ தே தொனாத்திஸ் அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இம்மடலில், கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் தங்கள் வேலைகளை இழந்துள்ளவர்களை மனதில் வைத்து இந்த அறக்கட்டளையை தான் உருவாக்குவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொற்றுக்கிருமியினால் உருவாகியுள்ள நெருக்கடி நிலை அகன்றபின், தங்கள் வேலைகளையும், நலவாழ்வு பாதுகாப்பையும், இன்னும் பிற உரிமைகளையும் இழக்கப்போகும் தினசரி கூலித் தொழிலாளிகளுக்கு உதவிகள் செய்வதற்கு இந்த நிதி உதவவேண்டும் என்பதே தன் குறிக்கோள் என்று, திருத்தந்தை இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.
மிக அவசியமான, அவசரமான இந்நேரத்தில், தேவையில் இருக்கும் அனைவருக்கும் உதவ விழைவோர், இந்த அறக்கட்டளை வழியே தங்கள் பங்கை வழங்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
உரோம் நகரில் உள்ள அனைவரும் இந்தப் பணியில் இணைய அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, தன் மறைமாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து அருள்பணியாளர்களும், துறவியரும் இந்த அறக்கட்டளைக்கு தங்கள் நிதி உதவியை அளிப்பதில் முன்னோடிகளாக இருக்குமாறு கூறியுள்ளார்.
உரோம் மறைமாவட்டம் இந்த தொற்றுக்கிருமியின் நெருக்கடி வேளையில் ஆற்றிய பல நற்பணிகளுக்கு தன் மடலில் நன்றி கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைமாவட்டத்திற்கு ஒவ்வொரு நாளும் வந்து சேரும் விண்ணப்பங்கள் மிக அதிகமாக உள்ளன என்றும், இவ்வேளையில், மக்களுக்கு வழங்க 'ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும்' போதாததுபோல் தோன்றுகிறது என்றும் திருத்தந்தை தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.
"தெய்வீக உழைப்பாளி இயேசு" என்ற பெயரில், திருத்தந்தை உருவாக்கியுள்ள இந்த அறக்கட்டளைக்கு தன் நன்றியைத் தெரிவித்துள்ள கர்தினால் ஆஞ்செலோ தே தொனாத்திஸ் அவர்கள், திருத்தந்தை விடுத்துள்ள அழைப்பை ஏற்று, உரோம் நகரில், உழைப்பையும், உழைப்பாளர்களையும் உயர்த்திப்பிடிக்கும் ஒரு கூட்டணியை உருவாக்குவோம் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment