Wednesday, 10 June 2020

பூமியை பசுமையாய் வைப்பதற்கு, பெருங்கடல்கள் காப்பாற்றப்படவேண்டும்

பூமியை பசுமையாய் வைப்பதற்கு, பெருங்கடல்கள் காப்பாற்றப்படவேண்டும் மெக்சிகோ கடலில் நெகிழிப்பொருள்கள் அகற்றப்படுகின்றன

வாழ்விற்கு அடிப்படையான தேவைகள், போக்குவரத்து, வர்த்தகம் போன்றவற்றிற்கு மட்டுமல்ல, உலகளாவிய காலநிலை மாற்றத்தைக் குறைக்கவும், பெருங்கடல்கள் முக்கிய பங்காற்றுகின்றன
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
நாம் அனைவரும், ஒருவர் ஒருவரோடும், இயற்கையோடும் எவ்வளவு நெருக்கமாக தொடர்புகொண்டுள்ளோம் என்பதை, கோவிட்-19 கொள்ளைநோய் மிகத் தெளிவாக நினைவூட்டியுள்ளது என்று, ஐ.நா. நிறுவனத்தின் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.
ஜூன் 08, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட, பெருங்கடல்கள் உலக நாளுக்கு வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கூறியுள்ள கூட்டேரஸ் அவர்கள், கோவிட்-19 கொள்ளைநோய் முடிவுறவும், சிறந்ததோர் உலகை மீண்டும் உருவாக்கவும் உழைத்துவரும் நாம், வருங்காலத் தலைமுறைகளுக்கென, கடல்கள் மற்றும் பெருங்கடல்கள் உள்ளிட்ட இயற்கை உலகோடு நமக்குள்ள உறவுகளைச் சரிசெய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
வாழ்வின் அடிப்படைத் தேவைகளான போக்குவரத்து, வர்த்தகம் போன்றவற்றிற்கு மட்டும் அல்ல, உலகளாவிய காலநிலை மாற்றத்தைக் குறைக்கவும், பெருங்கடல்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்று, கூட்டேரஸ் அவர்களின் செய்தி கூறுகிறது.
காலநிலை மாற்றத்தால், கடல்மட்டங்கள் அதிகரித்து, நம் அடிப்படைத் தேவைகளையும், வாழ்வாதாரங்களையும், கடற்கரை நகரங்களையும், தீவு நாடுகளையும் மிகவும் அச்சுறுத்துகின்றது என்று கூறியுள்ள கூட்டேரஸ் அவர்கள், நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொண்டுள்ளதால், இந்நிலை நம் வாழ்வையும் பாதிக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பெருங்கடல்களின் குறைந்தது முப்பது விழுக்காட்டுப் பகுதியைக் காப்பாற்றும்பொருட்டு, 2030ம் ஆண்டுக்குள், நம் பூமிக்கோளத்தின் இயற்கை வளங்களைக் காப்பாற்றுவதற்கு நம்மை அர்ப்பணிக்கவேண்டும் எனவும், ஐ.நா. பொதுச்செயலரின் செய்தி கூறுகிறது.
பூமிக்கோளத்தின் 71 விழுக்காட்டுப் பகுதி, நீரால் நிறைந்துள்ளது. (UN)

No comments:

Post a Comment