Saturday, 30 July 2011

Catholic News - hottest and latest - 29 July 2011

1. 2011ல் இதுவரை நடந்த திருத்தந்தையின் முக்கிய நிகழ்வுகள்

2. பாலியல் கல்வி கற்பிப்பதற்குப் பெற்றோருக்கு இருக்கும் உரிமையைத் திருப்பீடம் ஐ.நா.வுக்கு நினைவுபடுத்துகிறது

3. தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிமை கோரியப் பேரணியில் கர்தினால், ஆயர்கள்

4. மங்கோலியாவிலுள்ள ஒரேயொரு கத்தோலிக்க மருத்துவ மையம் மீண்டும் திறப்பு

5. இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுமாறு குடியுரிமை ஆர்வலர்கள் போராட்டம்

6. பாகிஸ்தான் கிறிஸ்தவ சபை அனைத்துலக Hepatitis நோய் தினத்தைக் கடைபிடித்தது

7. யுனெஸ்கோவின் அனைத்துலக எழுத்தறிவு விருதுகள்

8. பட்டினியால் ஒவ்வொரு நாளும் 250 குழந்தைகள் சொமாலியாவில் உயிரிழக்கின்றனர்

----------------------------------------------------------------------------------------------------------------

1. 2011ல் இதுவரை நடந்த திருத்தந்தையின் முக்கிய நிகழ்வுகள்

ஜூலை 29,2011. 2011ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இடம் பெற்ற திருத்தந்தை 16ம் பெனடிக்டின் முக்கிய நிகழ்வுகளை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.
முதல் மூன்று மாதங்களில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வாக, மறைந்த திருத்தந்தை 2ம் ஜான் பாலின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமையை கடந்த ஜனவரி 14ம் நாள் ஏற்றுக் கொண்டதாகும் எனக் குறிப்பிட்டது திருப்பீடம்.
அதற்கு அடுத்த நாள் இடம் பெற்ற, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கத்தோலிக்கத் திருச்சபையில் முழுமையாய் இணைய விரும்பும் முன்னாள் ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபையினர்க்கென ஏற்படுத்தப்பட்ட முதல் திருஆட்சிப்பீடத்தை அடுத்த நிகழ்வாகக் குறித்துள்ளது திருப்பீடம்.
பின்னர் பிலிப்பைன்ஸ் ஆயர்கள், கேரளாவின் சீரோ-மலங்கரா ரீதி ஆயர்கள் ஆகியோரை அட் லிமினா சந்திப்பில் சந்தித்தது, பின்னர் மார்ச் 10ம் தேதி தவக்காலத்தில் திருத்தந்தையின் நாசரேத்தூர் இயேசு இரண்டாம் பாகம் நூல் வெளியிடப்பட்டது போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளது திருப்பீடம்.
பிப்ரவரியில், இரஷ்ய அரசுத்தலைவர், லெபனன் அரசுத்தலைவர், ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ஆகியோரைத் திருத்தந்தை சந்தித்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2. பாலியல் கல்வி கற்பிப்பதற்குப் பெற்றோருக்கு இருக்கும் உரிமையைத் திருப்பீடம் ஐ.நா.வுக்கு நினைவுபடுத்துகிறது

ஜூலை 29,2011. இளையோர் குறித்த ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கொள்கைகள், மனிதப் பாலியல் கூறுகள், இனவிருத்தி நலவாழ்வு உள்ளிட்ட விவகாரங்களில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிப்பதற்குக் கொண்டிருக்கும் உரிமையை மதிப்பதாய் இருக்க வேண்டும் என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
இளையோர் குறித்த ஐ.நா.நிறுவனத்தின் உயர்மட்ட அளவிலான கூட்டத்தில் இவ்வியாழனன்று உரையாற்றிய, ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட், பிள்ளைகள், ஒழுக்கநெறி சார்ந்த பொறுப்புணர்வையும் பிறரை மதிக்கும் நற்குணத்தையும் குடும்பங்களில் கற்றுக் கொள்கின்றனர் என்றார்.
வன்முறையும் பிளவுகளுமற்ற, அதேவேளை அமைதியும் நல்லிணக்கமும் கொண்ட சமுதாயச் சூழலில் ஒவ்வோர் இளைஞனும் இளைஞியும் வளர்க்கப்பட வேண்டும் என்பதையும் பேராயர் சுள்ளிக்காட் நினைவுபடுத்தினார்.
வரும் ஆகஸ்டில் மத்ரித்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தலைமையில் நடக்கும் உலக இளையோர் தினம், மனிதன் குறித்த உண்மையில் வேரூன்றப்பட்டுள்ள ஆன்மீகக் கூறுகளின் முக்கியத்துவத்தை இளையோர் கற்றுக் கொள்ள உதவுவதாக இருக்கும் என்ற தனது நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 18 முதல் 21 வரை மத்ரித்தில் நடைபெறும் 13வது உலக இளையோர் தினத்தில் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட இளையோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிமை கோரியப் பேரணியில் கர்தினால், ஆயர்கள்

ஜூலை 29,2011. இந்தியாவின் அரசியல் அமைப்பில் பிற்படுத்தப்பட்ட இனத்தவர்க்கு வழங்கப்படும் சலுகைகள் தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கும் வழங்கப்படுமாறு இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் வலியுறுத்தினார்.
தலித் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் சம உரிமை கோரி இவ்வியாழனன்று புதுடெல்லியில் நடத்தப்பட்ட மாபெரும் பேரணியில் கலந்து கொண்ட மும்பை கர்தினால் கிரேசியஸ், பிறமதத் தலித்துக்கள் பெறும் சலுகைகள், தலித் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அளிக்கப்படாமல் இருப்பது தெளிவான பாகுபாட்டைக் காண்பிக்கின்றது என்றார்.
இது, எல்லாருக்கும் சமத்துவத்துக்கு உறுதி அளிக்கும் இந்தியாவின் அரசியல் அமைப்பை மீறுவதாகவும் இருக்கின்றது என்றார் மும்பை கர்தினால்.
இத்திங்கள் முதல் மூன்று நாட்களுக்குத் தொடர் உண்ணாவிரதப் போராட்டமும் நான்காவது நாள் பேரணியும் இடம் பெற்றன. இதில் ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் உட்பட பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனை இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையும் இந்திய தேசிய கிறிஸ்தவ சபைகள் அவையும் நடத்தின.

4. மங்கோலியாவிலுள்ள ஒரேயொரு கத்தோலிக்க மருத்துவ மையம் மீண்டும் திறப்பு

ஜூலை 29,2011. மங்கோலிய நாட்டிலுள்ள ஒரேயொரு கத்தோலிக்க மருத்துவ மையம் மீண்டும் இவ்வியாழனன்று திறக்கப்பட்டுள்ளது.
மங்கோலியத் தலைநகர் Ulaan Baatar ல், புனிதர்கள் பேதுரு பவுல் பேராலய வளாகத்திலுள்ள புனித மேரி மருந்தகத்தை, அந்நகர் ஆயர் Wenceslao Padilla திறந்து வைத்தார்.
இம்மருந்தகம் 2004ல் செயோல் உயர்மறைமாவட்ட அருட்பணியாளர் மைக்கிள் கிம் ஜூங்-ஹோவால் முதலில் தொடங்கப்பட்டது. இங்கு 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

5. இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுமாறு குடியுரிமை ஆர்வலர்கள் போராட்டம்

ஜூலை 29,2011. இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுமாறு குடியுரிமை ஆர்வலர்கள் இவ்வியாழனன்று கொழும்புவில் போராட்டம் நடத்தினர்.
இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது காணாமல்போன தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுமாறு அரசை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் அனைத்து மதங்களின் ஆர்வலர்களும் அரசியல் கட்சிகளும் கலந்து கொண்டனர்.
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய் என்று கோஷமிட்டபடி ஆயிரத்துக்கு அதிகமானோர் புகைப்படங்களையும் அட்டைகளையும் ஏந்திக் கொண்டு  சென்றதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் கறுப்பு ஜூலை தினத்தையொட்டி இப்போராட்டம் நடத்தப்பட்டது.
இலங்கையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் இருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.

6. பாகிஸ்தான் கிறிஸ்தவ சபை அனைத்துலக Hepatitis நோய் தினத்தைக் கடைபிடித்தது

ஜூலை 29,2011. பாகிஸ்தானில் மீட்புப்படை கிறிஸ்தவ சபையும் பாகிஸ்தான் சிறுபான்மை கூட்டமைப்பும் இணைந்து இவ்வியாழனன்று அனைத்துலக Hepatitis நோய் தினத்தைக் கடைப்பிடித்தன.
பஞ்சாப் மாநிலத்தின் வெஹாரியில் கடைபிடிக்கப்பட்ட இவ்வுலக தினத்தில் அரசு சாரா அமைப்புகள், அரசியல் கட்சிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஈரலைப் பாதிக்கும் hepatitis நோய்க் கிருமிகளை ஒழிப்பதற்கு உலக அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு மருத்துவ நிபுணர்கள் இவ்வுலக நாளில் வேண்டுகோள் விடுத்தனர்.
உலகில் போதைப்பொருள்கள் எடுப்போரில் hepatitisபி நோய்க் கிருமிகளால் 13 இலட்சம் பேரும் hepatitisசி நோய்க் கிருமிகளால் ஒரு கோடிப் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

7. யுனெஸ்கோவின் அனைத்துலக எழுத்தறிவு விருதுகள்

ஜூலை 29,2011. புருண்டி, மெக்சிகோ, காங்கோ சனநாயகக் குடியரசு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய பகுதிகளில் இடம் பெறும் எழுத்தறிவுப் புகட்டும் திட்டங்களுக்கு இவ்வாண்டு யுனெஸ்கோவின் அனைத்துலக எழுத்தறிவு விருதுகள் கிடைத்துள்ளன.
வருகிற செப்டம்பரில் புதுடெல்லியில் சிறப்பிக்கப்படும் அனைத்துலக எழுத்தறிவு நாளன்று இவ்விருதுகள் வழங்கப்படும் என்று யுனெஸ்கோ அறிவித்தது.
இவ்விருதுகள் ஒவ்வொன்றும் இருபதாயிரம் டாலரைக் கொண்டுள்ளது.
இவ்விருதைப் பெறும் அமெரிக்க ஐக்கிய நாட்டை மையமாகக் கொண்ட Room to Read  அமைப்பு, இந்தியா, இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், கம்போடியா, லாவோஸ், வியட்நாம், ஜாம்பியா, தென்னாப்ரிக்கா ஆகிய ஒன்பது நாடுகளில் உள்ளூர் மொழிகள் மூலம் பாலியல் சமத்துவம் மற்றும் கல்வியறிவை வளர்த்து வருகிறது.  

8. பட்டினியால் ஒவ்வொரு நாளும் 250 குழந்தைகள் சொமாலியாவில் உயிரிழக்கின்றனர்

ஜூலை 29,2011. ஆப்ரிக்க நாடான சொமாலியாவில் தலைவிரித்தாடும் பஞ்சத்தால் தினமும் 250 குழந்தைகள் வீதம் உயிரிழக்கின்றனர்' என்று கூறப்படுகின்றது.
இந்நாட்டில் பல ஆண்டுகளாக காணப்படும் பசி பட்டினி பஞ்சத்தால் அதன் தெற்குப் பகுதியை "பஞ்சத்துக்கு இலக்கான பகுதி'  என அறிவித்துள்ளது ஐ.நா.
இப்பகுதியில் ஒவ்வோர் ஆறு நிமிடத்துக்கும் ஒரு குழந்தை பலியாகி வருகிறது என்றும், சொமாலியா மட்டுமல்லாமல், எத்தியோப்பியா, கென்யா ஆகிய ஆப்ரிக்க நாடுகளிலுள்ள மக்கள்,  நீண்ட காலமாக வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர் என்றும் ஐ.நா.கூறியது.
சொமாலியா, கென்யா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 20 இலட்சம் பேர் உள்ளனர். இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சரியான ஊட்டச்சத்து இன்றி ஆபத்தான நிலையில் வாழ்கின்றன.
 

No comments:

Post a Comment