1. வத்திக்கான் - ஐரோப்பிய நாடுகளில் நற்செய்தி அறிவிப்பு
2. புனித பூமியில் கிறிஸ்தவ சமூகங்களைப் பேணிக் காப்பதற்கு பிரிட்டன் கிறிஸ்தவத் தலைவர்கள் அழைப்பு
3. இஸ்ரேலுக்கு எதிரான ஆயுதத் தடைக்கு ஐரோப்பிய குழுக்கள் அழைப்பு
4. மெக்சிகோவில் சுற்றுலாப் பயணிகளுக்கான மேய்ப்புப்பணியின் ஏழாவது உலக மாநாடு
5. அயர்லாந்து கிறிஸ்தவர்கள் வன்முறையைக் கைவிட ஆயர் அழைப்பு
6. சன்டியாகோ மறைமாவட்டம் - 450 வருட மக்கள் சேவை
7. சீனாவில் திருத்தந்தையின் அனுமதியின்றி நடைபெறும் ஆயர் திருநிலைப்பாடுகளுக்கு ஹாங்காக் கத்தோலிக்கர் எதிர்ப்பு
8. மியான்மார் அரசு கைதிகளை மோதல்களுக்குப் பயன்படுத்துகிறது – மனித உரிமைகள் குழு குறை
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. வத்திக்கான் - ஐரோப்பிய நாடுகளில் நற்செய்தி அறிவிப்பு
ஜூலை13,2011. ஐரோப்பாவின் சில முக்கிய நகரங்களில் மீண்டும் நற்செய்தி அறிவிக்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது புதிய நற்செய்திப்பணிக்கானத் திருப்பீட அவை.
இந்தப் புதிய திட்டம் குறித்து திருப்பீட சார்புத் தினத்தாளான லொசெர்வாத்தோரே ரொமானோவில் (L’Osservatore Romano) விளக்கியுள்ள இத்திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Rino Fisichella, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஐரோப்பிய நகரங்களின் ஆயர்களுடன் வத்திக்கானில் இத்திங்களன்று நடத்திய கூட்டத்தில் இத்திட்டம் குறித்து கலந்து பேசிய பேராயர் Fisichella, “மாநகரங்களின் திட்டம்” என்று இதற்குப் பெயரிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இப்புதிய முயற்சியானது, 2012ம் ஆண்டு தவக்காலத்தில் தொடங்கப்படும். இதையொட்டிய பல்வேறு செயல்பாடுகள் ஒவ்வொரு நகரங்களின் பேராலயங்களில் இடம் பெறும்.
Barcelona, Budapest, Brussels, Cologne, Dublin, Lisbon, Liverpool, Paris, Turin, Warsaw, Vienna ஆகிய மாநகரங்களின் ஆயர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
2. புனித பூமியில் கிறிஸ்தவ சமூகங்களைப் பேணிக் காப்பதற்கு பிரிட்டன் கிறிஸ்தவத் தலைவர்கள் அழைப்பு
ஜூலை13,2011. புனித பூமியில் கிறிஸ்தவ சமூகங்களைப் பேணிக் காப்பதற்கென நிதியுதவிக்கு அழைப்பு விடுக்கத் திட்டமிட்டுள்ளனர் பிரிட்டன் கிறிஸ்தவ சபைத் தலைவர்கள்.
இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் கத்தோலிக்கப் பேராயர் வின்சென்ட் நிக்கோல்சும் ஆங்லிக்கன் பேராயர் வில்லியம்சும் இணைந்து இம்மாதம் 18 மற்றும் 19 தேதிகளில் லாம்பத் மாளிகையில் கூட்டம் நடத்தி புனிதபூமிக் கிறிஸ்தவர்களின் நல்வாழ்வுக்காக அழைப்பு விடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதையொட்டி ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபையின் பொது அவையின் 2011ம் ஆண்டு அவைக் குழுக்களுக்கு விண்ணப்பித்த கான்டர்பரி பேராயர் ரோவன் வில்லியம்ஸ், புனித பூமிக் கிறிஸ்தவச் சமூகங்களைப் பேணிக் காப்பதற்கென நிதியுதவிக்கு அழைப்பு விடுத்தார்.
புனித பூமிக் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் துன்பங்களைத் தான் நேரிடையாகக் காண முடிந்ததாகவும் அவர்களின் அண்மை எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப நிதியுதவிகள் தேவை எனவும் பேராயர் வில்லியம்ஸ் தெரிவித்தார்.
3. இஸ்ரேலுக்கு எதிரான ஆயுதத் தடைக்கு ஐரோப்பிய குழுக்கள் அழைப்பு
ஜூலை13,2011. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனப் பகுதிகளுக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள “பிரிவினைச் சுவர்” சட்டத்துக்குப் புறம்பானது என்று, நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் அறிவித்து ஏழு ஆண்டுகள் ஆகிய பின்னர், தற்போது ஆயுத வியாபாரத்திற்கெதிரான ஐரோப்பிய குழுக்கள் இஸ்ரேலுக்கு எதிரான ஆயுதத் தடைக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதே விண்ணப்பத்தை முன்வைக்கும் பாலஸ்தீனியக் குழுவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ள ஐரோப்பிய குழுக்கள், இஸ்ரேலுக்கு எதிரான ஆயுதத் தடையைக் கொண்டு வருமாறு ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளன.
ஆயுதங்கள் வாங்குதல், அவற்றை இடமாற்றம் செய்தல், இராணுவ வாகனங்கள், கருவிகள் உட்பட ஆயுதங்கள் தொடர்புடைய அனைத்தும் தடை செய்யப்படுமாறு ஐரோப்பிய குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.
உலகில் 14 நாடுகளில் 111 இடங்களில் இருபதாயிரம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. உலகின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் அணுஆயுத நாடுகளில் வாழ்கின்றனர். நாடுகள், இந்த ஆயுதங்களைப் பாதுகாக்கவும் நவீனப்படுத்தவும் பத்தாயிரம் கோடி டாலரை ஆண்டுதோறும் செலவழிக்கின்றன என்று ஊடகங்கள் கூறுகின்றன.
4. மெக்சிகோவில் சுற்றுலாப் பயணிகளுக்கான மேய்ப்புப்பணியின் ஏழாவது உலக மாநாடு
ஜூலை13,2011. 2012ம் ஆண்டு ஏப்ரல் 23 முதல் 27 வரை மெக்சிகோவில் திருப்பீடம் நடத்தும் சுற்றுலாப் பயணிகளுக்கான மேய்ப்புப்பணியின் ஏழாவது உலக மாநாட்டிற்கு அந்நாட்டு அரசு தனது முழு ஆதரவை வழங்க உறுதியளித்திருப்பதாகத் திருப்பீடத்துக்கான மெக்சிகோ தூதுவர் Hector Frederick Ling Altamirano அறிவித்தார்.
தென் மெக்சிகோவின் Cancun நகரில் இம்மாநாடு நடைபெறவுள்ளது. கத்தோலிக்க உலகில் சுற்றுலாப் பயணிகளுக்கான மேய்ப்புப்பணியில் ஈடுபட்டுள்ள துறவிகள், பொதுநிலையினர் இதில் கலந்து கொள்வார்கள்.
மெக்சிகோ நகரிலுள்ள குவாதாலூப்பே அன்னைமரி திருத்தலம் உலகில் கத்தோலிக்கர் அதிகமாகச் செல்லும் திருத்தலமாகும்.
WTO என்ற உலக சுற்றுலா நிறுவனத்தின் கணிப்புப்படி, உலகில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாகச் செல்லும் நாடுகளில் பத்தாவது இடத்தையும் இலத்தீன் அமெரிக்காவில் முதல் இடத்தையும் வகிக்கின்றது மெக்சிகோ.
2010ல் மட்டும் 2 கோடியே 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் மெக்சிகோவைப் பார்வையிட்டனர். இவ்வெண்ணிக்கை 2009ம் ஆண்டைவிட 45 இலட்சம் அதிகம்.
5. அயர்லாந்து கிறிஸ்தவர்கள் வன்முறையைக் கைவிட ஆயர் அழைப்பு
ஜூலை13,2011. வட அயர்லாந்தில் மீண்டும் வகுப்புவாத வன்முறைகள் தலைதூக்கியுள்ள வேளை, அப்பகுதியின் கத்தோலிக்கரும் பிரிந்த கிறிஸ்தவ சபையினரும் ஒன்றிணைந்து அமைதியில் வாழ முடியும் என்பதை அவர்கள் உலகினருக்கு நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பெல்பாஸ்ட் ஆயர் Noel Treanor.
இத்திங்களன்று நடைபெற்ற பேரணியின் போது 22 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளதையொட்டி இவ்விண்ணப்பத்தை முன்வைத்த ஆயர், ஊர்வலங்களில் கலந்து கொள்வோர் வன்முறையைத் தூண்டாத வண்ணம் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
1690ம் ஆண்டு ஜூலை 12ம் நாள், பிரிந்த கிறிஸ்தவ சபை இளவரசர் ஆரஞ்சின் வில்லியம், கத்தோலிக்க அரசர் 2ம் ஜேம்சைத் தோற்கடித்ததைக் கொண்டாடும் விதமாக, பிரிந்த கிறிஸ்தவ சபையினர் ஆண்டுதோறும் ஜூலை 12ம் நாளை "Orangeman தினம்" என்று கடைப்பிடிக்கின்றனர்.
6. சன்டியாகோ மறைமாவட்டம் - 450 வருட மக்கள் சேவை
ஜூலை13,2011. "கிறிஸ்து இன்றும், நேற்றும் என்றும்" என்ற தலைப்பில் சிலே நாட்டு சன்டியாகோ உயர் மறைமாவட்டம் தனது 450ம் ஆண்டைச் சிறப்பித்து வருகிறது.
1561ம் ஆண்டு திருத்தந்தை 4ம் பத்திநாதர் சன்டியாகோ உயர் மறைமாவட்டத்தை உருவாக்கியது பற்றிப் பேசிய பேராயர் Ricardo Ezzati, இம்மாதத்தில் அங்கு நடைபெறும் பல்வேறு நடவடிக்கைகள் பற்றி விளக்கினார்.
தென் அமெரிக்க நாடான சிலேயில் தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டதன் 200ம் ஆண்டு சில வாரங்களுக்கு முன்னரும், சிலே நாட்டின் 200வது ஆண்டு கடந்த ஆண்டிலும் சிறப்பிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த பேராயர், நாடு விடுதலை அடைவதற்கு 250 ஆண்டுகளுக்கு முன்னரே கத்தோலிக்கத் திருச்சபை அங்கு மறைப்பணியாற்றி வருகின்றது என்றார்.
7. சீனாவில் திருத்தந்தையின் அனுமதியின்றி நடைபெறும் ஆயர் திருநிலைப்பாடுகளுக்கு ஹாங்காக் கத்தோலிக்கர் எதிர்ப்பு
ஜூலை13,2011. சீனாவில் திருத்தந்தையின் அனுமதியின்றி நடைபெறும் ஆயர் திருநிலைப்பாடுகளை எதிர்த்து ஹாங்காக் கத்தோலிக்கர், ஹாங்காக்கிலுள்ள சீன அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இவ்வியாழனன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஷன்ட்டூ ஆயர் திருநிலைப்பாடு உட்பட முறையின்றி நடத்தப்பட்ட எல்லா ஆயர் திருநிலைப்பாடுகளையும் இரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
அத்துடன், இத்தகைய நிகழ்வுகளில் சீன ஆயர்கள் கலந்து கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படுவது நிறுத்தப்படுமாறும் ஹாங்காக்கில் ஆர்ப்பாட்டம் நடத்திய கத்தோலிக்கர் சீன அதிகாரிகளை வலியுறுத்தினர்.
8. மியான்மார் அரசு கைதிகளை மோதல்களுக்குப் பயன்படுத்துகிறது – மனித உரிமைகள் குழு குறை
ஜூலை13,2011. மியான்மாரில் அதிக சுதந்திரம் கேட்டு பல ஆண்டுகளாகப் போரில் ஈடுபட்டுள்ள இனங்களின் புரட்சியாளர்களுடன் இராணுவம் நடத்தும் போரில் கைதிகள் முதல் வரிசையில் நின்று போரிடுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்று ஒரு முக்கிய அனைத்துலக மனித உரிமைகள் குழு குறை கூறியது.
கைதிகள் இவ்வாறு கட்டாயமாகப் பயன்படுத்தப்படுவது போர்க் குற்றங்களாகும், இது குறித்து ஐ.நா. நிறுவனம் புலன் விசாரணை நடத்துமாறு ஹூயுமன் ரைட்ஸ் வாச் மனித உரிமைகள் குழு கேட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடாகிய மியான்மாரின் இராணுவம், சுமார் இருபது ஆண்டுகளாக, கைதிகள் உட்பட அப்பாவி குடிமக்களை, சுமைதூக்கிகளாகப் பயன்படுத்துகிறது என்று ஊடகங்கள் கூறுகின்றன.
மியான்மாரில் ஏறக்குறைய இரண்டாயிரம் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர். மேலும், இந்நாட்டின் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட புலம் பெயர்ந்தோர் அண்டை நாடான தாய்லாந்தில் வாழ்கின்றனர்.
No comments:
Post a Comment