Wednesday, 6 July 2011

Catholic News - hottest and latest - 04 July 2011

1. உண்மை ஒளிரவேண்டும் என இவ்வுலகு எதிர்பார்க்கிறது என்கிறார் திருத்தந்தை

2. திருத்தந்தையின் மூவேளை செப உரை

3. உரோம் நகரின் ஏழைகளுக்கு உதவும் திருத்தந்தையின் பணிகளுக்கென க‌ர்தினால்களின் பங்களிப்பு

4. இந்தியத் தலத்திருச்சபையின் கல்வி,மருத்துவம் மற்றும் நலஆதரவுப்பணிகளில் கிறிஸ்துவின் அன்பும் கருணையும்
   வழிந்தோடுகிறது கர்தினால்

5. சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கை கத்தோலிக்கப் பெண்கள் பள்ளியினை கட்டியெழுப்ப இந்திய ஹைகமிஷனர் உதவி

6. குஜராத் படுகொலை தொடர்புடைய ஆவணங்கள் அழிக்கப்பட்டது குறித்து தலத்திருச்சபை கண்டனம்

7. வட கொரியாவில் பசியால் வாடும் மக்களுக்கு ஐரோப்பிய ஐக்கிய அவை உணவு உதவி

----------------------------------------------------------------------------------------------------------------

1. உண்மை ஒளிரவேண்டும் என இவ்வுலகு எதிர்பார்க்கிறது என்கிறார் திருத்தந்தை

ஜூலை 04, 2011.  தற்பெருமையும் சுயநலமும் வெற்றிகொள்ளப்பட்டு, பிறரன்பு என்பது செயல்பாடுடையதாய் மாறி, பொய்களால் மறைக்கப்படாத உண்மை இவ்வுலகில் ஒளிரவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தையின் 60வது குருத்துவத் திருநிலைப்பாட்டையொட்டி அவர் பெயரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கண்காட்சி ஒன்றைத் துவக்கி வைத்து உரையாற்றிய பாப்பிறை, கிறிஸ்துவிலே உண்மையும் அன்பும் ஒன்று சேர்ந்து வருகின்றன, அதுவே கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையாகவும் இருக்கிறது என்றார்.
உண்மையின் பிரசன்னத்தைக் கொண்டிராத அன்பு, பார்வை ஒளியிழந்ததாகவும், அன்பில்லாத உண்மை, ஒலிக்கும் வெண்கலம் போன்றதாயும் இருக்கும் எனவும் எடுத்துரைத்தார் பாப்பிறை.
ஒவ்வொருவரும் மேலும் மனிதாபிமானம் உடையவராக வாழவேண்டுமெனில், உண்மை மற்றும் அன்பின் அழகு நம் இதயத்தின் ஆழத்தைச் சென்று தட்ட வேண்டும் எனவும் உரைத்த அவர், கலைஞர்கள் ஒரு நாளும் உண்மை மற்றும் பிறரன்பிலிருந்து தங்கள் கலைப்படைப்புகளைப் பிரிக்கக்கூடாது எனவும், உண்மை மற்றும் பிறரன்பிலிருந்து அழகைப் பிரிக்கவும் முயலக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
திருத்தந்தையின் 60வது குருத்துவத் திருநிலைப்பாட்டையொட்டி துவக்கப்பட்டுள்ள இக்கண்காட்சி, திருப்பீடத்தின் கலாச்சார அவையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2. திருத்தந்தையின் மூவேளை செப உரை

ஜூலை 04, 2011.  இன்றைய உலகின் அநீதி, ஏழ்மை மற்றும் துன்பங்களுக்கான பதில்கள் இறையன்பில் காணக்கிடக்கின்றன என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்போரே எல்லோரும் என்னிடம் வாருங்கள். என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது" என்ற இஞ்ஞாயிறு நற்்செய்தி வாசக வார்த்தைகளை மேற்கோள்காட்டி தன் ஞாயிறு மூவேளை ஜெப உரையை வழங்கிய திருத்தந்தை, அன்று மக்கள் கூட்டத்தை நோக்கி கருணைப் பார்வையுடன் செயல்பட்ட இயேசு இன்றும் இவ்வுலகை நோக்கி அப்பார்வையைத் தொடர்கிறார், ஏனெனில் பல்வேறு துன்ப நிலைகளால் அழுத்தப்பட்டிருக்கும் மக்கள், தங்கள் வாழ்வின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் இழந்து நிற்கிறார்கள் என்றார்.
ஏழை நாடுகளில் பெருமெண்ணிக்கையில் வாழும் ஏழைகளையும், பணக்கார நாடுகளில் மனநிறைவின்றி வாழும் மக்களையும், பல நாடுகளில் துன்புறும் குடியேற்றதாரர்கள் மற்றும் அகதிகளையும் இம்மூவேளை செப உரையின்போது நினைவு கூர்ந்தார் திருத்தந்தை. இறைவன் அனைவருக்கும் இளைப்பாறுதல் வழங்குகிறார், ஆனால் அதற்கு முன் நிபந்தனையாக, 'என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்' என்பதையும் எடுத்துரைக்கிறார் இயேசு என்ற திருத்தந்தை, இயேசுவின் நுகம் என்பது அன்பின் கட்டளை எனவும் எடுத்துரைத்தார். அதிகாரத்திற்கென வன்முறையைக் கைக்கொள்வதையும், எவ்விலை கொடுத்தும் வெற்றியைப் பெற முயல்வதையும் மனித குலம் கைவிட்டு, சுற்றுச்சூழலுக்கான மதிப்புடன் வன்முறையற்ற வழிகளைக் கைகொள்வதே நல்லதொரு வருங்காலத்திற்கு வழிவகுக்கும் என மேலும் கூறினார் பாப்பிறை.

3. உரோம் நகரின் ஏழைகளுக்கு உதவும் திருத்தந்தையின் பணிகளுக்கென க‌ர்தினால்களின் பங்களிப்பு

ஜூலை 04, 2011.  உரோம் நகரின் ஏழைகளுக்கு உதவும் பணிகளுக்கான‌த் தங்கள் பங்களிப்பாக 72,000 டாலர்களை, திருத்தந்தையின் 60வது குருத்துவ விழாவை முன்னிட்டு திருத்தந்தையிடம் வழங்கினர் கர்தினால்கள்.
கடந்த புதனன்று புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் திருவிழாவன்று சிறப்பிக்கப்பட்ட திருத்தந்தையின் 60வது குருத்துவ திருநிலைப்பாட்டை ஒட்டி வெள்ளியன்று திருத்தந்தையுடன் இணைந்து மதிய உணவருந்திய கர்தினால்கள், திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்கானத் தங்கள் பங்களிப்பாக இத்தொகையை அளித்தனர்.
உரோம் நகரின் ஏழைகளுக்காகவும், அந்நகரில் வாழும் குடியேற்றதாரர்கள் மற்றும் அகதிகளிடையேயானப் பணிகளுக்கெனவும் இதனைத் திருத்தந்தையிடம் வழங்குவதாக அறிவித்தார் கர்தினால்கள் அவையின் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ சொதானோ.
புனித பேதுரு விழாவன்று கர்தினால்கள் அவை, உரோம் நகரின் 200 ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கியதையும் குறிப்பிட்டார் கர்தினால் சொதானோ. உரோம் நகரிலும் ஏழ்மை அதிகரித்து வரும் இன்றையச் சூழலில், எக்காலத்தையும் விட தற்போது திருச்சபை, பிறரன்பின் திருச்சபையாக வாழ ஆவல் கொள்கிறது என மேலும் உரைத்தார் கர்தினால்.

4. இந்தியத் தலத்திருச்சபையின் கல்வி,மருத்துவம் மற்றும் நலஆதரவுப்பணிகளில் கிறிஸ்துவின் அன்பும் கருணையும்
   வழிந்தோடுகிறது - கர்தினால்        

ஜூலை 04, 2011.  கல்வி, மருத்துவம் மற்றும் நலஆதரவுத் துறைகளில் இந்திய தலத்திருச்சபை கொண்டிருக்கும் மறைப்பணி ஈடுபாட்டில் கிறிஸ்துவின் அன்பும் கருணையும் வழிந்தோடுகின்றது என்றார் இந்தியாவின் பம்பாய் கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ்.
இயேசுவின் திரு இதய விழாவையொட்டி செய்தி வழங்கிய கர்தினால், நமக்கான இயேசுவின் உயரிய அன்பு குறித்து நினைக்கும் நாம், நற்செய்தி மதிப்பீடுகளான நீதி, அமைதி மற்றும் உண்மைக்கு நம்மைத் திறக்கவேண்டும் என்பது குறித்து அதன் வழி நினைவூட்டப்படுகிறோம் என்றார்.
ஏறத்தாழ 25,000 கல்வி நிறுவனங்கள், 746 மருத்துவமனைகள், 2547 மருந்தகங்கள் மற்றும் பல்வேறு மருத்துவமையங்களை நடத்திவரும் இந்தியத் திருச்சபை, தன் அன்பு நடவடிக்கைகள் மூலம் உண்மையின் அழகைப் பரப்பி வருகிறது என மேலும் கூறினார் கர்தினால் கிராசியாஸ்.

5. சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கை கத்தோலிக்கப் பெண்கள் பள்ளியினை கட்டியெழுப்ப இந்திய ஹைகமிஷனர் உதவி

2004ம் ஆண்டின் சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கையின் Payagala பெண்கள் பள்ளியினை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு உதவும் நோக்கில் 21 இலட்சத்து 80, 000 ரூபாயை கர்தினால் மால்கம் இரஞ்சித்திடம் வழங்கியுள்ளார் அந்நாட்டிற்கான இந்திய ஹைகமிஷனர்.
Payagalaவின் Holy Angel பெண்கள் பள்ளியினை மீண்டும் கட்டியெழுப்ப உதவிகள் வழங்கப்படவேண்டும் என கொழும்பு கர்தினால் விண்ணப்பம் விடுத்ததைத் தொடர்ந்து, இதற்கு இந்நிதி உதவியை வழங்கியுள்ளார் இந்திய ஹைகமிஷனர் Ashok Kantha.

6. குஜராத் படுகொலை தொடர்புடைய ஆவணங்கள் அழிக்கப்பட்டது குறித்து தலத்திருச்சபை கண்டனம்

ஜூலை 04, 2011.  குஜராத்தில் 2002ம் ஆண்டு ஏறத்தாழ 2000 இசுலாமியர்கள் கொல்லப்பட்டது தொடர்புடைய காவல்துறை ஆவணங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன என மாநில அரசு தரப்பில் தற்போது கூறப்பட்டுள்ளது, அநீதி இடம்பெற்றுள்ளதைக் குறிப்பிடுகின்றது என்றார் மனித உரிமைகளுக்காக உழைக்கும் இந்திய இயேசுசபை குரு ஒருவர்.
எந்த ஓர் ஆவணமும் ஐந்தாண்டுகளுக்கே பாதுகாக்கப்படும் அதன் பின்னர் அழிக்கப்பட்டுவிடும் என அரசு தரப்பில் இந்த செயல்பாடு நியாயப்படுத்தப்பட்ட போதிலும், ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அது தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்வியை எழுப்பியுள்ளார் ஆஹமதாபாத்தில் நீதி, அமைதி மற்றும் மனித உரிமைகளுக்கான மையத்தை நடத்தி வரும் இயேசு சபை குரு செத்ரிக் பிரகாஷ்.
இப்படுகொலைகள் இடம்பெற்று ஏறத்தாழ 10 ஆண்டுகள் ஆகியும்  பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் நீதி தேடிக் காத்திருக்கின்றார்கள் என்ற கவலையை வெளியிட்ட குரு பிரகாஷ், தொடர்ந்து நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் ஒரு வழக்குத் தொடர்புடைய ஆவணங்கள் அழிக்கப்பட அனுமதிக்கப்பட்டால், நீதி என்பது கிட்டவே வழி இல்லை என்றார்.

7. வட கொரியாவில் பசியால் வாடும் மக்களுக்கு ஐரோப்பிய ஐக்கிய அவை உணவு உதவி

ஜூலை 04, 2011.  வட கொரியாவில் பசியால் வாடும் மக்களுக்கு 1 கோடி யூரோ உணவு உதவிகளை வழங்குவதாக இத்திங்களன்று அறிவித்தது ஐரோப்பிய ஐக்கிய அவை.
போதிய உணவின்மையால் துன்புறும் ஏறத்தாழ ஆறு இலட்சத்து ஐம்பது ஆயிரம் பேரின் உயிரைக் காப்பாற்ற இந்த உதவியை வட கொரியாவிற்கு வழங்குவதாகக் கூறும் ஐரோப்பிய ஐக்கிய அவை, இதுவரை வடகொரிய அரசு தன் மக்களில் மூன்றில் இரு பகுதியினருக்கு வழங்கி வந்த உணவு உதவிகள் 60 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளதாகவும் கவலையை வெளியிட்டுள்ளது.
இந்த உணவு உதவி, WFP எனும் உலக உணவு திட்ட நிறுவனத்தின் மூலம் விநியோகிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது ஐரோப்பிய ஐக்கிய அவை.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...