1. நூறாண்டு காணும் அனைத்துலக தெரசியன் கழகத்தினருக்குத் திருத்தந்தை வாழ்த்து
2. கம்யூனிச வதைப்போர் முகாமில் பத்தாண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பெலாருஸ் கர்தினால் மரணம்
3. திருச்சபை இளையோரின் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் – திருப்பீட அதிகாரி
4. உலகின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்காக கேரளாவில் 101 நாள்கள் இடைவிடாமல் செபமாலை
5. இலத்தீன் அமெரிக்காவில் புதிய ஊடகம் பற்றிய மாநாடு
6. கர்நாடக அரசுப் பள்ளிகளில் இந்துமத மறைநூல் கற்பிப்பது வருவது குறித்துத் தலத்திருச்சபைத் தலைவர்கள் கவலை
7. இராமதான் போர் நிறுத்தப் பரிந்துரைக்கு நேட்டோ பாராமுகமாய் இருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது - டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி
8. சவுதியின் பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய சட்டம் அமைதியான போராட்டங்களுக்குத் தடையாக இருக்கும் -ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. நூறாண்டு காணும் அனைத்துலக தெரசியன் கழகத்தினருக்குத் திருத்தந்தை வாழ்த்து
ஜூலை 22,2011. அனைத்துலக தெரசியன் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்துவின் பிரசன்னத்தில் தங்களது பணிவாழ்வைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அனைத்துலக தெரசியன் கழகம் தொடங்கப்பட்டதன் நூறாம் ஆண்டையொட்டி ஸ்பெயின் நாட்டின் மத்ரித்தில் இம்மாதம் 19ம் தேதியிலிருந்து மாநாட்டை நடத்தி வரும் அக்கழக உறுப்பினர்களுக்குத் திருத்தந்தையின் பெயரில் செய்தி அனுப்பிய திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருத்தந்தையின் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
கல்வி மற்றும் கலாச்சாரத்தின் வழியாக மனித மற்றும் சமூக மதிப்பீடுகளை வளர்க்கத் திருச்சபையின் நற்செய்திப்பணிக்கு உதவி வருகிறது அனைத்துலக தெரசியன் கழகம். புனித பியத்ரோ பொவேதா என்பவரால் 1911ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இச்சர்வதேச கழகத்தில், ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்ரிக்காவின் 30 நாடுகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
2. கம்யூனிச வதைப்போர் முகாமில் பத்தாண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பெலாருஸ் கர்தினால் மரணம்
ஜூலை 22,2011. அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகத் திருச்சபையில் உயிரூட்டமுடன் நற்பணியாற்றிய பெலாருஸ் கர்தினால் Kazimierz Swiatek இறைபதம் அடைந்ததையொட்டி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பெலாருஸ் கத்தோலிக்க ஆயர் பேரவைக்குத் தந்திச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, மறைந்த கர்தினால் Swiatek, கிறிஸ்துவுக்கும் அவரது திருச்சபைக்கும் வீரத்துடன் சான்று பகர்ந்ததையும், குறிப்பாக, கஷ்டமான காலங்களில் வாழ்ந்த சாட்சிய வாழ்வையும், பின்னாளில் பெலாருஸ் நாட்டின் ஆன்மீக மறுபிறப்புக்கு மிகுந்த ஆர்வத்துடன் தனது பங்களிப்பை வழங்கியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.
தற்போதைய எஸ்டோனியக் குடியரசின் வால்காவில் 1914ல் போலந்து குடும்பத்தில் பிறந்தார் மறைந்த கர்தினால் Swiatek. இரஷ்யப் பேரரசரால் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்ட இவரது குடும்பம், 1917ம் ஆண்டு இரஷ்யப் புரட்சிக்குப் பின்னா மீண்டும் பெலாருஸ் திரும்பியது.
1939ல் குருவான இவர், இரண்டு ஆண்டுகளிலேயே “புரட்சிகர அருட்பணியாளர்” என்று சோவியத் கம்யூனிசக் காவல்துறையால் முத்திரை குத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். 1941ல் நாத்சி ஜெர்மனி சோவியத்தை ஆக்ரமித்த போது சிறையிலிருந்து தப்பித்து மேய்ப்புப்பணிகளைத் தொடர்ந்தார். ஆனால் 1944ல் மீண்டும் கைது செய்யப்பட்டு பத்தாண்டுகள் வதைப்போர் முகாம் தண்டனை கொடுக்கப்பட்டு கடும் குளிர் நிறைந்த சைபீரியாவுக்கு அனுப்பப்பட்டார். 1954ல் தண்டனை காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டார். 1994ல் கர்தினாலாக உயர்த்தப்பட்ட இவர், 2006 வரை Minsk-Mohilev பேராயராகப் பணியாற்றினார். அதாவது தனது 91வது வயது வரைப் பணியாற்றினார்.
2011, ஜூலை 21ம் தேதி தனது 96வது வயதில் இறைவனடி சேர்ந்தார் கர்தினால் Swiatek.
இத்தாலிய கத்தோலிக்க அமைப்பு, இவரது சாட்சிய வாழ்வை 2004ல் கவுரவித்தது.
3. திருச்சபை இளையோரின் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் – திருப்பீட அதிகாரி
ஜூலை 22,2011. இளையோருக்கு நற்செய்தி அறிவிப்பதற்கு அவர்களின் கலாச்சாரத்தில் மேலோங்கி நிற்கும் சுதந்திரம், அறிவியல் ஆகிய விழுமியங்களைத் திருச்சபை புரிந்து கொள்ள வேண்டுமென்று புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியை ஊக்குவிப்பதற்கானத் திருப்பீட அவைத் தலைவர் கூறினார்.
“இளையோரும் கத்தோலிக்கத் திருச்சபையும் : இன்றைய இளையோர்ப் பணிக்கான உதவிகள்” என்ற தலைப்பில் மத்ரித் அரசர் ஹூவான் கார்லோஸ் பல்கலைகழகத்தில் நடைபெறும் கோடை விடுமுறைப் பயிற்சியில் உரையாற்றிய பேராயர் Rino Fisichella, இளையோர் மத்தியிலான பணி குறித்து விளக்கினார்.
இளையோரிடம் சுதந்திரம் பற்றிப் பேசாமல் எவரும் அவர்களிடம் கிறிஸ்துவைப் பற்றிப் பேச முடியாது, ஏனெனில் இக்கால இளையோர் தங்களது கலாச்சாரத்தைச் சுதந்திரத்தில் வைத்துள்ளார்கள் என்று பேசினார் பேராயர்.
சுதந்திரம், எப்பொழுதும் உண்மையோடு தொடர்பு கொண்டது, உண்மையே சுதந்திரத்தைப் பிறப்பிக்கின்றது என்றும் பேசிய அவர், திருச்சபை அறிவியலுக்குச் சாதகமாக இருக்கின்றது என்றார்.
வருகிற ஆகஸ்ட் 18 முதல் 21 வரை மத்ரித்தில் திருத்தந்தை பங்கு கொள்ளும் உலக இளையோர் தினம் நடைபெறவிருக்கின்றது. இதில் சுமார் 10 இலட்சம் இளையோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
4. உலகின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்காக கேரளாவில் 101 நாள்கள் இடைவிடாமல் செபமாலை
ஜூலை 22,2011. உலகின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கும் திருச்சபையின் தூய்மையான வாழ்வுக்குமென கேரளாவின் தாமரச்சேரி மறைமாவட்டம் 101 நாள்கள் இடைவிடாமல் செபமாலை செபிக்கும் பக்தி முயற்சியை இவ்வியாழனன்று தொடங்கியுள்ளது.
கேரளாவின் தாமரச்சேரி மறைமாவட்டத்தின் பெத்தானியா புதுப்பித்தல் மையத்தில் இப்பக்தி முயற்சியைத் தொடங்கி வைத்தார் அம்மறைமாவட்ட ஆயர் Remigious Inchananiyil.
மேலும், இப்பக்திமுயற்சி குறித்துப் பேசிய அம்மையத்தின் இயக்குனர் அருட்பணி James Kiliyananickal, இந்த உலகம் நற்செய்திக்காகத் தாகம் கொண்டுள்ளது என்றார். இச்செப வழிபாட்டில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அக்குரு தெரிவித்தார்.
இது, உலகப் போக்கால் ஆக்ரமிக்கப்பட்டுள்ள இக்கால உலகிற்கு நற்செய்தி அறிவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
வருகிற அக்டோபர் 29 வரை நடைபெறும் இச்செபமாலை வழிபாட்டில் தாமரச்சேரி மறைமாவட்டத்தின் 117 பங்குகளிலிருந்து இரவும் பகலும் தொடர்ச்சியாகக் கத்தோலிக்கர் கலந்து கொள்வார்கள். இந்நாட்களில் ஒப்புரவு அருட்சாதனமும் உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
தாமரச்சேரி மறைமாவட்டத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக இத்தகைய மாரத்தான் செபமாலை பக்தி முயற்சி நடத்தப்பட்டு வருகிறது.
5. இலத்தீன் அமெரிக்காவில் புதிய ஊடகம் பற்றிய மாநாடு
ஜூலை 22,2011. “திருச்சபையும் டிஜிட்டல் ஊடக உலகமும்” என்ற தலைப்பில் இலத்தீன் அமெரிக்காவின் சிலே நாட்டில் வருகிற அக்டோபரில் மாநாடு ஒன்று நடைபெறவிருக்கின்றது.
இலத்தீன் அமெரிக்கத் திருச்சபையின் கணனி வலை அமைப்பும் இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவையும் திருப்பீடச் சமூகத் தொடர்பு அவையும் இணைந்து இம்மாநாட்டை நடத்தவுள்ளன.
வருகிற அக்டோபர் 17 முதல் 19 வரை சந்தியாகோவில் இம்மாநாடு நடைபெறும்.
6. கர்நாடக அரசுப் பள்ளிகளில் இந்துமத மறைநூல் கற்பிப்பது வருவது குறித்துத் தலத்திருச்சபைத் தலைவர்கள் கவலை
ஜூலை 22,2011. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் அரசுப் பள்ளிகளில் இந்துமத மறைநூல் கட்டாயமாகக் கற்பிக்க அனுமதியளிப்பது குறித்துத் தலத்திருச்சபைத் தலைவர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
கர்நாடக அரசுப் பள்ளிகளில் பகவத் கீதை பற்றிய வகுப்புகள் நடத்துவதற்கு இந்துமதக் குழுக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அம்மாநிலக் கல்வித்துறை கடந்த ஜூன் 9ம் தேதி அறிவித்ததிலிருந்து பரவலான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இவ்விவகாரம் குறித்து தற்போது எதிர்ப்புகள் அதிகரித்து வரும்வேளை தலத்திருச்சபையும் இந்த எதிர்ப்புக்களுடன் இணைந்துள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பெங்களூர் பேராயர் பெர்னார்டு மொராஸ், சமயசார்பற்ற ஓர் அரசு, ஒரு மதத்தை மட்டும் திணிக்கவோ அல்லது வளர்க்கவோ ஒருபோதும் முயற்சிக்கக் கூடாது என்றார்.
“கிறிஸ்தவமும் இசுலாமும் வெளிநாட்டு மதங்கள், அவற்றில் நம்பிக்கை வைப்பவர்கள் இந்தியர்கள் அல்ல” என்று புதுடெல்லியிலுள்ள கர்நாடக அரசின் பிரதிநிதி Dhananjay Kumar இவ்வாரத்தில் கூறியதையடுத்து எதிர்ப்புக்கள் வலுவடைந்து வருகின்றன என்று ஊடகங்கள் கூறுகின்றன.
7. இராமதான் போர் நிறுத்தப் பரிந்துரைக்கு நேட்டோ பாராமுகமாய் இருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது - டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி
ஜூலை 22,2011. இசுலாமியரின் இராமதான் மாதத்தையொட்டி பரிந்துரைக்கப்பட்ட போர் நிறுத்தத்தை நேட்டோ அமைப்பும் ஐரோப்பாவும் பாராமுகமாய் இருப்பது தனக்கு ஆச்சரியத்தைக் கொடுப்பதாக லிபிய நாட்டு டிரிப்போலியின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giovanni Innocenzo Martinelli கவலை தெரிவித்தார்.
தற்போது குண்டுகள் தொடர்ந்து விழுந்து கொண்டிருந்தாலும் அப்பாவி மக்கள் பலியாகுவதைத் தவிர்ப்பதற்காகப் புதிய மனிதாபிமான யுக்திகள் கடைபிடிக்கப்படுவதையும் ஆயர் Martinelli, ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
குண்டுகளை வீசுமுன் அவற்றைப் போடப்போகும் பகுதிகளில் எச்சரிக்கைத் துண்டுத் தாள்கள் வீசப்படுவதாயும் அதனால் மக்கள் அவ்விடங்களை விட்டு வெளியேறுவதாயும் அவர் கூறினார்.
ஆயினும் இந்தக் குண்டுவீச்சுக்கள் ஏன் என்ற கேள்வியையும் ஆயர் எழுப்பியுள்ளார்.
8. சவுதியின் பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய சட்டம் அமைதியான போராட்டங்களுக்குத் தடையாக இருக்கும் -ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்
ஜூலை 22,2011. சவுதி அரேபியாவில் தற்போது தயாரிக்கப்பட்டு வரும் பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய இரகசியச் சட்டம் அமைதியான போராட்டங்கள் இடம் பெறுவதற்குத் தடையாக இருக்கும் என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற அனைத்துலக மனித உரிமைகள் கழகம் கூறியது.
இச்சட்டத்தில் குறிக்கப்பட்டுள்ள பல நடவடிக்கைகள் மனித உரிமைகள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் என்று அக்கழகம் தனது அச்சத்தை வெளியிட்டுள்ளது.
விசாரணையின்றி நீண்டகாலக் காவல், சட்டத்தின்படி உதவிகளைப் பெறும் வழிகளுக்குக் கட்டுப்பாடு, மரண தண்டனைகளை அதிகரித்தல் உட்பட பல நடவடிக்கைகள் அதில் உள்ளன எனக் கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment