Monday, 4 July 2011

Catholic News - hottest and latest - 02 July 2011

1.   திருத்தந்தை : பெற்றோர் குழந்தைகளுக்கு மறைக்கல்வி வழங்குவதில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

2. திருப்பீடத்தின் 2010ம் ஆண்டின் வரவு செலவு பட்டியல்

3. நைஜீரியாவில் இசுலாமிய வங்கி தொடங்கப்படுவதற்கு லாகோஸ் கர்தினால் எதிர்ப்பு

4. இஸ்பெயினில் மனித வாழ்வை ஆதரித்து செப வழிபாடுகள்

5. நற்செய்தி அறிவிப்புக்கான விதிமுறைகள் குறித்த உடன்பாட்டிற்குக் உலகக் கிறிஸ்தவத் தலைவர்கள் இசைவு

6. சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு, ஐ.நா. அறிக்கை

7. இலங்கை 'போர்க்குற்றம்' -  நவநீதம்பிள்ளை எச்சரிக்கை

8. உலகில் சுமார் 260 கோடிப் பேருக்குக் கழிப்பறைகள் தேவை

----------------------------------------------------------------------------------------------------------------
1. திருத்தந்தை : பெற்றோர் குழந்தைகளுக்கு மறைக்கல்வி வழங்குவதில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

ஜூலை02,2011. கத்தோலிக்கப் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு மறைக்கல்வி வழங்குவதில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், இதன்மூலம் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உறுதியான விசுவாசப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.
இந்த ஒரு பணியில், முதலில் பெற்றோர் விசுவாசத்திற்குச் சாட்சிகளாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை, பிள்ளைகளை வளர்ப்பதில் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் கண்டு பெற்றோர் பயப்படக் கூடாது என்று கூறினார்.
இவ்வேளைகளில் முழு கிறிஸ்தவ சமூகமும் அவர்களோடு இருக்கின்றது என்றுரைத்த அவர், திருவழிபாடுகளில், குறிப்பாகத்  திருநற்கருணையில் பெற்றோர் தங்களுக்குத் தேவையான சக்தியைப் பெறுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
பிள்ளைகளுக்குக் கிறிஸ்தவக் கல்வி வழங்கும் முக்கிய பொறுப்பு குடும்பங்களுக்கு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டினார் திருத்தந்தை.
இத்தாலியின் Altamura-Gravina-Acquaviva delle Fonti மறைமாவட்டத்தின் சுமார் ஏழாயிரம் பேரை வத்திக்கானில் பாப்பிறை ஆறாம் பவுல் மண்டபத்தில் சந்தித்து உரையாற்றிய  திருத்தந்தை, திருச்சபை என்பதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
தனக்கு மட்டுமே வாழ்தல், நுகர்வுத் தன்மை, பொறுப்புக்களிலிருந்து விலகியிருக்கும் போக்கு போன்ற இக்காலத்திய போக்குகள், பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றன, ஆனால் கிறிஸ்தவச் சமூகங்கள் எப்போதும் தகுந்த விசுவாசப் பாதைகளைத் தேர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார் திருத்தந்தை.

2. திருப்பீடத்தின் 2010ம் ஆண்டின் வரவு செலவு பட்டியல்

ஜூலை02,2011. திருப்பீடத்தின் 2010ம் ஆண்டின் வரவு செலவில், செலவைவிட வரவு ஏறக்குறைய ஒரு கோடி யூரோக்கள் அதிகம் இருந்ததாக இச்சனிக்கிழமை வெளியிடப்பட்ட திருப்பீட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பீட நிர்வாகம் மற்றும் வரவு செலவுக்குப் பொறுப்பான கர்தினால்கள் அவை, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே தலைமையில் கடந்த மூன்று நாட்களாகக் கூட்டம் நடத்திய பின்னர் இவ்வறிக்கையை வெளியிட்டது.
2010ல் வரவு 245,195,561 யூரோக்கள் ஆகவும் செலவு 235,347,437 யூரோக்கள் ஆகவும் இருந்து 9,848,124 யூரோக்கள் மீதமாக அவ்வரவு செலவு பட்டியலில் காட்டப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு போலவே, 2010ம் ஆண்டிலும் இலாபம் காட்டியுள்ள திருப்பீடம், திருப்பீடத்தின் பல்வேறு துறைகள், அகிலத் திருச்சபையில் திருத்தந்தையின் மேய்ப்புப்பணிக்கு உதவுதல் போன்றவைகளுக்கே முக்கியமாகச் செலவாகியதாகக் குறிப்பிட்டுள்ளது.
2010, டிசம்பர் 31ம் தேதியோடு திருப்பீடத்தில் பணியாற்றியோரின் எண்ணிக்கை 2806 ஆகவும் இது 2009ல் 2762 ஆகவும் இருந்தது எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.
அதேசமயம், வத்திக்கான் நகர நிர்வாகத்தின் பணியாளர்கள் 2010, டிசம்பர் 31ம் தேதியோடு 1876 ஆகவும் ஆனால் அவ்வெண்ணிக்கை 2009ல் 1891 ஆகவும் இருந்தது எனவும் அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.
2010ல் வத்திக்கான் அருங்காட்சியத்தைப் பார்வையிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது இந்த இலாபத்திற்கு ஒரு காரணம் எனவும், இந்தப் பார்வையாளர்களுக்கு இந்தக் கர்தினால்கள் அவை தனது நன்றியையும் தெரிவித்துள்ளது. 

3. நைஜீரியாவில் இசுலாமிய வங்கி தொடங்கப்படுவதற்கு லாகோஸ் கர்தினால் எதிர்ப்பு

ஜூலை02,2011. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் இசுலாமிய வங்கி தொடங்கப்படுவதற்கு மத்திய வங்கி ஆதரவு அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அந்நாட்டு கர்தினால் Anthony Olubunmi Okogie.
நைஜீரியாவில் இசுலாமிய வங்கித் தொடங்கப்படுவதற்கு, மத்திய வங்கி ஆதரவு வழங்கப் பரிந்துரைக்கும் நடுவண் அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த லாகோஸ் பேராயர் கர்தினால் Okogie, இந்நடவடிக்கை அந்நாட்டை இசுலாமிய ஆட்சியின்கீழ் வைத்துவிடும் என்று எச்சரித்தார்.
இசுலாமிய வங்கி அமைப்பைப் புகுத்துவது, அந்நாட்டில் இசுலாம் தீவிரவாதிகளால் ஏற்கனவே நாடு எதிர்நோக்கும் சமயப் பதட்டநிலை மேலும் தீவிரமடைய வழி செய்யும் என்றும் கர்தினால் கூறினார்.

4. இஸ்பெயினில் மனித வாழ்வை ஆதரித்து செப வழிபாடுகள்

ஜூலை02,2011. இஸ்பெயினில் அமலில் இருக்கும் கருக்கலைப்புச் சட்டம் மாற்றியமைக்கப்படுவதற்கு அழைப்பு விடுத்து அந்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் செப வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இஸ்பெயினில் கருக்கலைப்புச் சட்டம் அமலுக்கு வந்து ஜூலை 5ம் தேதியோடு ஓராண்டு ஆகும் வேளை, இச்சட்டம் மாற்றியமைக்கப்பட்டு மனித வாழ்வை ஆதரிப்பதற்கானப் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதற்காக வழிபாடுகள் நடக்கின்றன.
இஸ்பெயினின் 36 மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இவ்வெள்ளியன்று தொடங்கப்பட்டுள்ள செப வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.
இவ்வழிபாடுகள் 5ம் தேதி வரை நடைபெறும்.
இஸ்பெயினில் 2010ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி கருக்கலைப்புச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டது.

5. நற்செய்தி அறிவிப்புக்கான விதிமுறைகள் குறித்த உடன்பாட்டிற்குக் உலகக் கிறிஸ்தவத் தலைவர்கள் இசைவு

ஜூலை02,2011. கிறிஸ்துவுக்குச் சாட்சி பகர்தல் மற்றும் தொடக்ககாலத் திருச்சபையை மையமாக வைத்து நற்செய்தி அறிவிப்புக்கான வழிகாட்டி விதிமுறைகள் குறித்த உடன்பாட்டிற்குக் உலகக் கிறிஸ்தவத் தலைவர்கள் இசைவு தெரிவித்துள்ளனர்.
திருப்பீட பல்சமய உரையாடல் அவை, உலகக் கிறிஸ்தவ சபைகள் மன்றம், உலக லூத்தரன் கூட்டமைப்பு ஆகியவைகள் இணைந்து, பலசமயங்கள் கொண்ட உலகில் கிறிஸ்தவ சாட்சியம் என்ற தலைப்பில் இவ்வாரத்தில் வெளியிட்ட அறிக்கையில் இவ்விசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாற்பதுக்கும் மேற்பட்ட வல்லுனர்கள் ஐந்து ஆண்டுகள் செய்த பணியின் பயனாக இவ்வறிக்கை வெளிவந்துள்ளது.
உலகில் கிறிஸ்தவர்கள் சாட்சியாக வாழும் முறைகள் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று பெரிய அவைகளில் கத்தோலிக்க, ஆங்லிக்கன், ஆர்த்தடாக்ஸ், பிரிந்த கிறிஸ்தவ சபை, இவாஞ்சலிக்கல், பெந்தகோஸ்து, இன்னும் பிற தனிப்பட்ட சபைகள் உறுப்பினர்களாக உள்ளன. இவற்றில் உலகின் சுமார் 200 கோடிப்பேர் அதாவது உலகக் கிறிஸ்தவர்களில் சுமார் 90 விழுக்காட்டினர் உறுப்பினர்களாக உள்ளனர். 

6. சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு, ஐ.நா. அறிக்கை

ஜூலை02,2011. சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருவதாக UNWTO என்ற ஐ.நா.வின் உலக சுற்றுலா நிறுவனம் அறிவித்தது.
மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிக்காவில் இந்நிலை மந்தமாகக் காணப்பட்டாலும் இவ்வாண்டின் இறுதியில் இப்பகுதிகளிலும் சுற்றுலாக்கள் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்தது.
2010ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இவ்வாண்டில் இதே காலத்தில் சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4.5 விழுக்காடு அதிகரித்துள்ளதாக UNWTO கூறியது.  
இந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை சுமார் 26 கோடியே 80 இலட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர், இவ்வெண்ணிக்கை கடந்த ஆண்டில் சுமார் 25 கோடியே 60 இலட்சம் என்றும் அந்நிறுவனம் அறிவித்தது.
தென் அமெரிக்கா, தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் சுற்றுலாக்கள் அதிகரித்துள்ளன.

7. இலங்கை 'போர்க்குற்றம்' -  நவநீதம்பிள்ளை எச்சரிக்கை
   
ஜூலை02,2011. இலங்கை போர்க் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் தாமதம் செய்யக்கூடாது, ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணையை நடத்த இலங்கை தவறினால் சர்வதேச நடவடிக்கைக்கு அது வழிவகுக்கும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை எச்சரித்துள்ளார்.
சிறைப் பிடிக்கப்பட்டவர்களைச் சுட்டுக்கொன்றது மற்றும் பிற தாக்குதல் சம்பவங்கள் குறித்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில்,  இலங்கை கவனமாக ஆராயவேண்டும் என்று ஐ.நா உறுப்பு நாடுகள் மத்தியில் மிக அதிகளவு எதிர்பார்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.
போரின் இறுதிக் கட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து கருத்து தெரிவித்த நவநீதம்பிள்ளை இவ்வாறு  சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த விசாரணை ஒரு காலவரம்பற்ற, முடிவில்லாத வழிமுறையாக இருக்கக்கூடாது என்று கூறிய நவநீதம் பிள்ளை,  இலங்கை அரசு முன்பு நடத்திய ஒரு விசாரணையில், அதற்குத் தரப்பட்ட பணியை முடிக்க தவறிவிட்டது, எந்த ஓர் அறிக்கையையும் வெளியிடவில்லை, அந்த விசாரணையின் விளைவாக ஒருவர்கூட நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்படவில்லை என்றார்.
அதே போல் இப்போதும் நடந்தால், சர்வதேச சமூகம், மேல் நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தில் இருக்கிறது என்று கூறிய நவநீதம் பிள்ளை,  ஐ.நா மனித உரிமை அவை இந்த விடயத்தை மேலும் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

8. உலகில் சுமார் 260 கோடிப் பேருக்குக் கழிப்பறைகள் தேவை

ஜூலை02,2011. உலகில், குறிப்பாக வளரும் நாடுகளில் சுமார் 260 கோடிப் பேர் சரியான கழிப்பறை வசதிகளின்றி வாழ்கின்றனர் என்று ஐ.நா.கூறியது.
தகுந்த கழிப்பறை வசதிகள் இல்லாததால் வயிற்றுப்போக்கு நோய் ஏற்படுகின்றது என்றும் வளரும் நாடுகளில் ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறாரின் இறப்புக்கு இரண்டாவது காரணமாக அமைவது வயிற்றுப்போக்கு என்றும் ஐ.நா.கூறியது.
மக்களுக்குப் போதுமான நலவாழ்வு வசதிகளை அமைத்துக் கொடுப்பது ஐ.நா.வின் மில்லென்யத் திட்டத்தில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment