Sunday, 17 July 2011

Catholic News - hottest and latest - 15 July 2011

1. தென் சூடானில் நிலையான அமைதி நிலவ மன்னிப்பும் ஒப்புரவும் தேவை திருப்பீட அதிகாரி

2. மும்பை குண்டு வெடிப்புக்களுக்கு இந்திய ஆயர்கள் கண்டனம்

3. சவுதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஓர் இலங்கைப் பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கப்படுமாறு இலங்கை ஆயர் பேரவை அழைப்பு

4. பானமாவில் அரசியல்வாதிகளின் போக்கு குறித்து ஆயர் பேரவை வருத்தம்

5. பாகிஸ்தானில் குழந்தைத் தொழில்முறையை ஒழிப்பதற்கு திருச்சபைப் பணியாளர்கள் உறுதி

6. கங்கையைச் சுத்தம் செய்ய 100 கோடி டாலர் கடன்

7. இராணுவ மையத்தில் அணு ஆயுதக் குவிப்பு: ஜெர்மனி அரசு மீது சமூக ஆர்வலர் வழக்கு

8. காங்கோவில் தட்டம்மை மற்றும் காலராவினால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழப்பு

----------------------------------------------------------------------------------------------------------------

1. தென் சூடானில் நிலையான அமைதி நிலவ மன்னிப்பும் ஒப்புரவும் தேவை திருப்பீட அதிகாரி

ஜூலை15,2011. உலகின் 193வது நாடாக உருவாகியுள்ள தென் சூடான் குடியரசிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் நிலையான அமைதி நிலவ மன்னிப்பும் ஒப்புரவும் தேவை என்று திருப்பீட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதிய தென் சூடான் குடியரசு, ஐ.நா.வின் உறுப்பு நாடாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவையால் இவ்வியாழனன்று அங்கீகரிக்கப்பட்டு ஐ.நா.நிறுவனத்தில் தென் சூடான் கொடியும் பறக்கவிடப்பட்டது.
இதையொட்டிப் பேசிய, ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட், குடிமக்களின் வாழ்வுக்கானப் பாதுகாப்பு, அவர்களின் சொத்துக்களை மீட்டல், அண்டை நாடுகளுடன் நல்லுறவுகள் உட்பட இப்புதிய நாடு பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றது என்றார்.
தென் சூடானின் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு திருத்தந்தையின் அம்மக்களுக்கான ஆசீரையும் செய்தியையும் தான் வழங்கியதாகவும் ஃபீடெஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார் பேராயர். 
பிற நாடுகளிலும் நாட்டிற்குள்ளேயும் புலம் பெயர்ந்துள்ள சுமார் மூன்று இலட்சம் மக்களைக் குடியமர்த்துவது, இப்புதிய நாடு செய்ய வேண்டிய உடனடிப் பணியாக இருக்கின்றது என்றும் பேராயர் சுல்லிக்காட் கூறினார். 

2. மும்பை குண்டு வெடிப்புக்களுக்கு இந்திய ஆயர்கள் கண்டனம்

ஜூலை15,2011. மும்பையில் இப்புதன் மாலை மூன்று இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளதையொட்டி தங்களது கடுமையான கண்டனத்தையும் கவலையையும் வெளியிட்டுள்ளனர் இந்திய கத்தோலிக்க ஆயர்கள்.
மும்பையின் தெற்குப் பகுதியில் ஜவேரி பஜார் மற்றும் ஓபரா ஹவுஸ் பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புக்கள், நடுத்தரமான மற்றும் சக்திவாய்ந்த குண்டுகள் என்றும், தாதரில் நடந்த குண்டுவெடிப்பு மிதமானது என்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த ஒரு நபரையும் சேர்த்து, இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 18 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 140க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் சிதம்பரம் தெரிவித்தார்.
இப்பயங்கரவாத நிகழ்வை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட இந்திய ஆயர்கள், இந்நேரத்தில் நாட்டின் பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கையில் நாட்டினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொண்டனர்.
இதில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுடனானத் தங்களது தோழமையுணர்வையும் இந்திய ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்குக் கண்டனம் தெரிவித்த ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், இப்பயங்கரவாதச் செயல்கள், உலக நாடுகளின் அமைதிக்கும் இறையாண்மைக்கும் பெரும் சவாலாக உள்ளன என்றார்.
மேலும், நோக்கம் எதுவாக இருந்தாலும் இப்பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்க முடியாது, இது ஒரு பெரும் குற்றச்செயல் என்றார் பான் கி மூன்.

3. சவுதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஓர் இலங்கைப் பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கப்படுமாறு இலங்கை ஆயர் பேரவை அழைப்பு

ஜூலை15,2011. சவுதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ரிஜானா நஃபீக் என்ற இலங்கை இசுலாமியப் பெண்ணுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு அப்பெண் விடுதலை செய்யப்படுமாறு இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
சவுதி அரேபியாவில் தான் வேலை செய்து வந்த வீட்டில் புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2005ம் ஆண்டு முதல் சிறையில் இருக்கிறார் ரிஜானா நஃபீக். இப்பெண் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலை செய்வதற்காகப் பொய்யானக் கடவுட்சீட்டுடன் சென்ற போது அவருக்கு வயது 17 ஆகும். இக்குற்றம் தொடர்பாக, இப்பெண்ணுக்குத் தெரியாத ஒரு மொழியில் எழுதியிருந்த ஒரு தாளில் இவர் கையெழுத்துப் போட்டதன் அடிப்படையில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
ரிஜானா நஃபீக்கின் விடுதலைக்காக விண்ணப்பித்துள்ள இலங்கை ஆயர்கள், அந்தக் குழந்தையை இழந்த பெற்றோருக்குத் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர். அதேசமயம், இப்பெண் குற்றம் சாட்டப்பட்டுள்ள சூழலைப் புரிந்து கொள்ளுமாறும் ஆயர்கள் கேட்டுள்ளனர்.
ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கூற்றுப்படி, உலகில் அதிக அளவில் மரணதண்டனை நிறைவேற்றும் நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்றாகும். 2009ம் ஆண்டின் இறுதியில் சவுதியில் 104 வெளிநாட்டவர் உட்பட குறைந்தது 141 பேர் மரணதண்டனை நிறைவேற்றப்படக் காத்திருந்தனர் என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அனைத்துலக மனித உரிமைகள் கழகம் கூறியது.
ஆப்ரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக இத்தண்டனைக்குப் பலியாகின்றனர் என்றும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் கூறியது.

4. பானமாவில் அரசியல்வாதிகளின் போக்கு குறித்து ஆயர் பேரவை வருத்தம்

ஜூலை15,2011. மத்திய அமெரிக்க நாடான பானமாவில் பொது மக்களுடைய தேவைகளும் அரசியல்வாதிகளின் தேவைகளும் பிரித்துப் பார்க்கப்படுவதற்கு அந்நாட்டின் ஆயர் பேரவை தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.
பொது மக்களுடைய நம்பிக்கையையும் மதிப்பையும் பெறுவதிலிருந்து வெகுதூரம் விலகியிருக்கும் சில அரசியல்வாதிகளின் போக்குகள் குறித்து தாங்கள் கவலை கொண்டுள்ளதாகக் கூறினர் ஆயர்கள்.
அரசியல், மனிதாபிமானம் நிறைந்ததாக இருக்கக வேண்டியது இன்றியமையாதது மற்றும் அது அவசியமானது என்றுரைக்கும் பானம நாட்டு ஆயர்கள்,  வாக்களர்களின் விருப்பத்தை மதிப்பதாயும் மனித மாண்புக்கும் பொது நலனுக்கும் முன்னுரிமை கொடுப்பதாயும் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
1821ல் இஸ்பெயினிடமிருந்தும் 1903ல் கொலம்பியாவிடமிருந்தும் விடுதலையடைந்த பானம நாட்டில்  சுமார் 85 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.

5. பாகிஸ்தானில் குழந்தைத் தொழில்முறையை ஒழிப்பதற்கு திருச்சபைப் பணியாளர்கள் உறுதி

ஜூலை15,2011. பாகிஸ்தானில் குழந்தைத் தொழில்முறையையும் ஏழ்மையையும் ஒழிப்பதற்கு அந்நாட்டுத் திருச்சபையின் சமூகப் பணியாளர்கள் உறுதி எடுத்தனர்.
பாகிஸ்தானில் இவ்வியாழனன்று கடைபிடிக்கப்பட்ட குழந்தைத் தொழில்முறை எதிர்ப்பு நாளில் இவ்வாறு உறுதி வழங்கினர் திருச்சபையின் சமூகப் பணியாளர்கள்.
பாகிஸ்தான் கத்தோலிக்கத் திருச்சபையின் சமூகநல அமைப்பான காரித்தாஸ், குழந்தைத் தொழிலாளருக்குக் கல்வி வழங்குவதில்  2007ம் ஆண்டிலிருந்து தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.  சுமார் 360 குழந்தைத் தொழிலாளர் வேலை முடிந்து தினமும் மூன்று மணி நேரம் பாடங்கள் படிக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
ஊடகங்களின் அறிக்கையின்படி, பாகிஸ்தானில் ஏறக்குறைய 33 இலட்சம் குழந்தைத் தொழிலாளர் இருக்கின்றனர்.
உலகில் வீட்டு வேலை செய்யும் குழந்தைத் தொழிலாளரில் 60 விழுக்காட்டினர் ஆசியாவில் உள்ளனர். இவர்களில் 90 விழுக்காட்டினர் சிறுமிகள் என்று சர்வதேச அடிமைத்தன ஒழிப்பு நிறுவனம் கூறியது.

6. கங்கையைச் சுத்தம் செய்ய 100 கோடி டாலர் கடன்

ஜூலை15,2011. இந்தியாவில் இந்துக்களின் புனித நதியாகவும் நாட்டின் வாழ்வாதாரங்களுக்கு முக்கிய நதியாகவும் விளங்கும் கங்கையைச் சுத்தம் செய்வதற்கு உலக வங்கி நூறு கோடி டாலரைக் கடனாக வழங்க இசைவு தெரிவித்துள்ளது.
கங்கை சுத்தப் பணி என்ற இந்தத் திட்டத்தின்கீழ் 2020க்குள் இந்நதியில் கலக்கும் சாக்கடைகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் நிறுத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
2500 கிலோ மீட்டர் தூரத்திற்கு உத்தரபிரதேசம், பீஹார், மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் பாயும் கங்கை நதி, இந்தியாவின் சுமார் 120 கோடி மக்களில் 25 விழுக்காட்டினருக்கு குடிநீரை வழங்குகின்றது.
கங்கை நதி, உலகில் மிகவும் மாசடைந்துள்ள நதிகளில் ஒன்றாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நதியில் தினமும் 1,200 கோடி லிட்டர் தொழிற்சாலை மற்றும் நகரக்கழிவுகள் கலக்கின்றன என்றும் ஊடகங்கள் கூறுகின்றன. 

7. இராணுவ மையத்தில் அணு ஆயுதக் குவிப்பு: ஜெர்மனி அரசு மீது சமூக ஆர்வலர் வழக்கு

ஜூலை15,2011. மேற்கு ஜெர்மனியில் உள்ள இராணுவ மையத்தில் அதிக அளவு அணு ஆயுதங்கள் குவிக்கப்பட்டு உள்ளன என்று சொல்லி இந்த அணு ஆயுதங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என ஆர்வலர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இவ்வியானன்று நடைபெற்றது. ரைனே லேண்ட் பாலடினேட் இராணுவ மையத்தில் ஏறக்குறைய இருபது அணு வெடி குண்டுகள் உள்ளன என்று வழக்குத் தொடர்ந்த அமைதி ஆர்வலர் எல்க் கோலர் அரசின் மீது குற்றம் சாட்டினார்.
இப்படி அணு ஆயுதங்களைக் குவிப்பது ஜெர்மனியின் அடிப்படைச் சட்டத்திற்கு எதிரானது என அணு எதிர்ப்பு ஆர்வலரான எல்க் கோலர் மேலும் தெரிவித்தார்.
ஜெர்மனி அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ள கோலர் ஓய்வு பெற்ற மருந்தாளுனர் ஆவார். அவர் கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி பெடரல் அரசு மீது வழக்கு தொடர்ந்தார். நாட்டில் குவித்து வைக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்கள் யாருடையதாக இருந்தாலும் உடனடியாக அகற்ற வேண்டும் என அவர் கூறினார்.

8. காங்கோவில் தட்டம்மை மற்றும் காலராவினால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழப்பு

ஜூலை15,2011. ஆப்ரிக்காவின் காங்கோ சனநாயகக் குடியரசில் தட்டம்மை  மற்றும் காலராவினால் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் தாக்கப்பட்டுள்ளனர் என்று ஃபீடெஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது.
2010ம் ஆண்டு செப்டம்பர் முதல் 1,15,484 பேர் தட்டம்மைக் கிருமியால் தாக்கப்பட்டுள்ளனர், இவர்களில் 1,145 பேர் இறந்துள்ளனர்.
தற்சமயம் குறைந்தது 9,15,000 சிறாருக்குத் தடுப்பூசி போடும் திட்டம் இருப்பதாக அச்செய்தி நிறுவனம் கூறியது.
 

No comments:

Post a Comment