Thursday, 21 July 2011

Catholic News - hottest and latest - 21 July 2011

1.  அணுஆயுதம் தொடர்புடைய ஒழுக்கரீதிக் கேள்விகள் கடந்த 60 ஆண்டுகளாக திருச்சபையால் எழுப்பப்பட்டு வருகின்றன‌

2. உலக இளைஞர் தினக் கொண்டாட்டம் வாழ்வையே மாற்றியமைக்கும் ஓர் அனுபவம்

3. தலித் மக்களின் உரிமைக்கானப் போராட்டத்திற்கு விஜயவாடா ஆயர் அழைப்பு

4.   பானம நாட்டின் வாழ்வுக்கு ஆதரவான நடவடிக்கைகளுக்கு ஆயர்கள் பாராட்டு

5. மக்களிடமிருந்து அரசு விலகிப்போனதே போராட்டங்களுக்கான காரணம் என்கிறது மலாவித் திருச்சபை

6. புகையிலைப் பொருட்களுக்குத் தடை விதிக்க 11 மாநில முதல்வர்கள் உறுதி

7. அக்டோபர் மாத இறுதியில் உலக மக்கள் தொகை 700 கோடியைத் தொடும்

----------------------------------------------------------------------------------------------------------------

1.  அணுஆயுதம் தொடர்புடைய ஒழுக்கரீதிக் கேள்விகள் கடந்த 60 ஆண்டுகளாக திருச்சபையால் எழுப்பப்பட்டு வருகின்றன‌

ஜூலை 21, 2011. அணுஆயுதங்களின் தயாரிப்பு மற்றும் பயன்பாடு தொடர்புடைய ஒழுக்கரீதிக் கேள்விகள் கடந்த 60 ஆண்டுகளாக திருச்சபையால் எழுப்பப்பட்டு வருகின்றன என்றார் ஐநாவிற்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் கென்சாஸ் நகர் புனித வளன் மறைமாட்ட ஆயர் இராபர்ட் வில்லியம் ஃபின், அணுஆயுதம் குறித்த திருச்சபையின் படிப்பினைகள் பற்றி விவாதிக்க ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் சுள்ளிக்காட், அமெரிக்காவிற்கும் இரஷ்யாவிற்கும் இடையேயான பனிப்போர் காலத்தில் உருவாக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான அழிவுதரும் ஆயுதங்கள் குறித்து என்னச் செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது என்றார்.
இன்று 14 நாடுகளின் 111 இடங்களில் 20,000 அணு ஆயுதங்கள் உள்ளன என்ற பேராயர், உலகின் மக்கள் தொகையில் பாதிப்பேர் அணுஆயுதத்தைக் கொண்டுள்ள நாடுகளில் வாழ்கின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஒவ்வோர் ஆண்டும் உலகில் அணு ஆயுதத்தைப் பாதுகாப்பது மற்றும் நவீனப்படுத்துவதற்கென 10,000 கோடி டாலர் செலவழிக்கப்படுகிறது என்பது குறித்த கவலையையும் வெளியிட்ட ஐநாவிற்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர், இது ஏழை மக்களின் வளர்ச்சித் திட்டங்களிலிருந்து திருடப்பட்டவை எனவும் கூறினார்.
வளர்ச்சிக்கான‌ அணுசக்தித் திட்டங்களை அணுஆயுதமாக மாற்றும் சக்தி 40 நாடுகளுக்கு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டினார் பேராயர் சுள்ளிக்காட்.
அணுஆயுதம் என்பது பாதுகாப்பிற்கானதே என சில நாடுகள் நியாயம் கற்பிக்க முயன்றாலும் அது ஒரு தப்பான எண்ணப்போக்கு என்ற பேராயர், அணுஆயுதப் போரில் வெற்றியாளர் என்று எவரும் இருக்கமாட்டார்கள், மாறாக பலியானவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் மட்டுமே இருப்பார்கள் என மேலும் உரைத்தார்.

2. உலக இளைஞர் தினக் கொண்டாட்டம் வாழ்வையே மாற்றியமைக்கும் ஓர் அனுபவம்

ஜூலை 21, 2011.   உலக இளைஞர் தினக் கொண்டாட்டங்கள் என்பது வாழ்வையே மாற்றியமைக்கும் ஓர் அனுபவம் என இளையோர் கருதுவதாக அண்மையில் உலகம் முழுவதும் இளையோரிடம் எடுக்கப்பட்ட ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது.
ஆகஸ்டில் இஸ்பெயினின் மத்ரித்தில் திருத்தந்தையுடன் இடம்பெற உள்ள இளையோர் தினக்கொண்டாட்டங்கள் குறித்து உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த 1800 இளையோரிடம் GAD என்ற இஸ்பானிய மையம் நடத்திய ஆய்வில், 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் இதனை ஒரு வாழ்வு மாற்ற நடவடிக்கையாக நோக்குவதாகத் தெரிய வந்துள்ளது.
இளையோர் தினக் கொண்டாட்டங்களை 93 விழுக்காட்டினர் 'புதிய மாற்றத்திற்கான ஓர் அனுபவமாகநோக்குவதாகவும், 92 விழுக்காட்டினர் இதனை இயேசுவின் நற்செய்தியை பரப்புவதற்கான ஒரு வாய்ப்பாகக் காண்பதாகவும், 90 விழுக்காட்டினர் திருச்சபைக்கான ஓர் அர்ப்பணமாகவும், 90 விழுக்காட்டினர் தங்களின் ஆன்மீக ஏக்கத்தை நிறைவு செய்வதற்கான ஒரு சந்திப்பாகவும் நோக்குவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இயேசு கிறிஸ்து மீதான விசுவாசம், மற்றவர்களை மன்னிக்கவும், ஏழைகளுடன் ஒருமைப்பாட்டை அறிவிக்கவும் உதவுவதாக இந்த ஆய்வில் பங்குபெற்ற இளையோர் தெரிவித்தனர்.

3. தலித் மக்களின் உரிமைக்கானப் போராட்டத்திற்கு விஜயவாடா ஆயர் அழைப்பு

ஜூலை 21, 2011.   நற்செய்தி அறிவிப்பின்போதே அமைதி, ஒப்புரவு, மற்றும் நீதிக்கென உழைப்பதற்கான அர்ப்பணத்தைத் தூண்டுவதாக துறவறத்தாரின் செயல்பாடுகள் இருக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் ஆந்திராவின் விஜயவாடா ஆயர் பிரகாஷ் மல்லவரப்பு.
விஜயவாடாவின் இலயோலா கல்லூரி அரங்கில் இடம்பெற்ற இந்திய துறவத்தார் அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய ஆயர் மல்லவரப்பு, இம்மாதம் 25 முதல் 27 வரை இடம்பெறும் தலித் மக்களுக்கான உண்ணா நோன்புப் போராட்டத்தில் அனைவரையும் ஊக்குவிக்க வேண்டிய துறவறத்தாரின் கடமைகளையும் வலியுறுத்தினார்.
தலித் மக்களுடன் ஒருமைப்பாட்டை அறிவிக்கும் விதமாக ஒரு நாளை, செபம் மற்றும் உண்ணாநோன்பின் நாளாகச் சிறப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் ஆயர்.

4.   பானம நாட்டின் வாழ்வுக்கு ஆதரவான நடவடிக்கைகளுக்கு ஆயர்கள் பாராட்டு

ஜூலை 21, 2011.   அமெரிக்க நாடுகளின் அவைக் கூட்டத்தில் பானமா நாட்டுப் பிரதிநிதிகள், வாழ்வுக்கு ஆதரவான நடவடிக்கைகளை வலியுறுத்தியது குறித்து தங்கள் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளனர் பானம ஆயர்கள்.
குடும்பங்கள் பதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்க நாடுகளின் கூட்டத்தில் பானம‌ அரசுப் பிரதிநிதிகள் வலியுறுத்தியது, அனைத்து நாடுகளுக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்க முடியும் என்றனர் தலத்திருச்சபை அதிகாரிகள்.
குடும்பத்தைப் பாதுகாப்பது என்பது மனிதகுலத்தைப் பாதுகாப்பதற்கு ஒப்பாகும் என்ற ஆயர்கள், வாழ்வின் பாதுகாப்பிற்கானப் பானம அரசின் பரிந்துரைகளுக்கு அனைத்து அமெரிக்க நாடுகளும் ஆதரவு அளித்துள்ளது குறித்த மகிழ்ச்சியையும் வெளியிட்டனர்.

5. மக்களிடமிருந்து அரசு விலகிப்போனதே போராட்டங்களுக்கான காரணம் என்கிறது மலாவித் திருச்சபை

ஜூலை 21, 2011.   மலாவி நாட்டின் முக்கிய நகரங்களில் அரசு எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெறுவதற்கான முக்கியக் காரணம், அந்நாட்டு மக்களிடமிருந்து அரசு விலகிப் போனதேயாகும் என்கின்றனர் மலாவித் தலத்திருச்சபைத் தலைவர்கள்.
எரிசக்தி எண்ணெய் பற்றாக்குறையைக் காரணம் காட்டி மக்கள் போராடி வருகின்றபோதிலும், போராட்டத்திற்கான உண்மைக் காரணம், மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க மறுப்பதேயாகும் என்றார் மலாவி ஆயர் பேரவையின் பொதுச்செயலர் குரு ஜார்ஜ் புலேயா.
தான் செய்த தவறுகளை ஏற்றுக்கொள்ள அரசு தயாராக இல்லை எனவும் குற்றஞ்சாட்டினார் அவர்.
இதற்கிடையே, மக்கள் வன்முறைகளிலிருந்து ஒதுங்கி நிற்கவேண்டும் என, மலாவித் திருச்சபையும் கிறிஸ்தவ சபைகளின் அவையும் இணைந்து அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகவும் ஏழைநாடுகளுள் ஒன்றான மலாவியில் 75 விழுக்காட்டு மக்கள், ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவான வருமானத்திலேயே வாழ்கின்றனர்.

6. புகையிலைப் பொருட்களுக்குத் தடை விதிக்க 11 மாநில முதல்வர்கள் உறுதி

ஜூலை 21, 2011.   புகையிலைப் பொருட்கள் பாதிப்பிலிருந்து தங்கள் மாநிலத்தவரைப் பாதுகாக்க, அதற்குத் தடை விதிப்பதாக 11 மாநில முதல்வர்கள் உறுதியளித்துள்ளனர்.
இந்தியாவில் வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரில் 86 விழுக்காட்டினர் குட்கா சாப்பிடுவோர் என, அண்மை, தேசிய மற்றும் குடும்ப நலவாழ்வு நிறுவனத்தின் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இது குறித்துப் பேசிய தேசிய புகையிலை ஒழிப்பு அமைப்பின் பொதுச் செயலர் சேகர் சல்கார், புகையிலைப் பழக்கத்தால், வாய்ப் புற்றுநோய்ப் பாதிப்புக்கு ஆளான அசாம், கோவா, பஞ்சாப், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, அருணாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், சத்திஸ்கர், இராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், தங்களது முதல்வர்களைச் சந்தித்துப் பேசினர் என்றார்.
புகையிலை தொடர்பான விளம்பரங்களுக்கு தடை, கல்வி நிறுவனங்கள் அருகில் புகையிலை விற்கத் தடை, புகையிலை பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம் மாநில மக்களை, புகையிலைப் பழக்கத்தில் இருந்து விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டதைத் தொடர்ந்து, இந்தக் கோரிக்கைகள் அடங்கிய உறுதிமொழிப் படிவத்தில் கையெழுத்திட்ட 11 மாநில முதல்வர்களும், புகையிலைப் பாதிப்பைத் தடுத்து நிறுத்தப் போதுமான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

7. அக்டோபர் மாத இறுதியில் உலக மக்கள் தொகை 700 கோடியைத் தொடும்

ஜூலை 21, 2011.   ஒரு வினாடிக்கு 5 குழந்தைகள் என்ற விகிதத்தில் பிறப்புகள் இடம்பெறுவதால், வரும் அக்டோபர் மாத இறுதியில் உலகின் மக்கள் தொகை 700 கோடியைத் தொடும் என நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.
கடந்த 1960ல் உலக மக்கள் தொகை 300 கோடியாக இருந்தது, 40 ஆண்டுகளில் அதாவது 1999ல் அது இரட்டிப்பாகி 600 கோடியானது. இப்போது ஒவ்வொரு வினாடிக்கும் 5 குழந்தைகள் பிறப்பதால், மக்கள் தொகை ஆண்டுக்கு 7.8 கோடி அதிகரித்து, வரும் அக்டோபர் மாத இறுதியில் 700 கோடியைத் தொடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே நிலை நீடித்தால், 2025ம் ஆண்டில் மக்கள் தொகை 800 கோடியாவும், 2050ம் ஆண்டில் 900 கோடியாகவும் அதிகரிக்கும் என ஐ.நா. அவை தெரிவித்துள்ளது.
ஏழை நாடுகளில் வேகமாக மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலோ நிலைமை எதிர்மாறாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment