1. கிராமப்புற வாழ்வு மதிப்பீடுகளுக்குச் சாட்சியாக செயல்படுமாறு விவசாயிகளுக்குத் திருத்தந்தை அழைப்பு
2. அனைத்துச் சமூகங்களும் அமைதியுடன் வாழ்வதற்கு கல்வி முக்கிய பங்காற்ற முடியும் - பேராயர் தொமாசி
3. அசிசியில் இடம்பெற உள்ள அனைத்து மதங்களின் கூட்டம் குறித்து திருப்பீடச்செயலர்
4. கிழக்கு ஆப்ரிக்காவின் உணவு நெருக்கடியைக் களைய உடனடி உதவிகள் தேவைப்படுவதாக அறிவித்துள்ளது CAFOD அமைப்பு
5. ஏழை நாடுகளுக்கான ஆஸ்திரேலிய அரசின் பொருளாதார உதவிகள் குறித்து பாராட்டியுள்ளது காரித்தாஸ் அமைப்பு
6. கற்பழிப்புக் குற்றங்கள் அதிகரிப்பு : இந்திய மகளிர் ஆணைக்குழு தலைவர் கவலை
7. இலங்கையில் மது மற்றும் புகைப்பிடிப்பதன் காரணமாக மாதந்தோறும் 7875 பேர் உயிரிழப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. கிராமப்புற வாழ்வு மதிப்பீடுகளுக்குச் சாட்சியாக செயல்படுமாறு விவசாயிகளுக்குத் திருத்தந்தை அழைப்பு
ஜூலை07,2011. கிறிஸ்தவ நாகரீகம் மற்றும் விசுவாசத்தினால் வழிநடத்தப்பட்டு, கிராமப்புற வாழ்வு மதிப்பீடுகளுக்குச் சாட்சியாகச் செயல்படுமாறு இத்தாலிய விவசாய கூட்டமைப்பின் அங்கத்தினர்களுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Coldiretti என அழைக்கப்படும் தேசிய விவசாய சங்கத்தின் ஏறத்தாழ 15 ஆயிரம் விவசாயிகள் உரோம் நகரில் கூடி விவாதித்து வரும் கூட்டத்திற்குத் திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அனுப்பியுள்ள செய்தியில், திருச்சபை படிப்பினைகளைப் பின்பற்றி, குடும்பத்தின் பாதுகாப்பு, சமூக வளர்ச்சி,பொருளாதார முன்னேற்றம் ஆகியவைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிக்கும் விவசாயிகளின் பணிகள் பாராட்டப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கானத் திருத்தந்தையின் செபம் மற்றும் ஊக்கமும் அச்செய்திவழி உறுதி கூறப்பட்டுள்ளது.
2. அனைத்துச் சமூகங்களும் அமைதியுடன் வாழ்வதற்கு கல்வி முக்கிய பங்காற்ற முடியும் - பேராயர் தொமாசி
ஜூலை07,2011. வளர்ச்சிக்குத் திறவுகோலாக இருக்கும் கல்விக்கு, மற்ற சமூக நிறுவனங்களைப் போலவே, சமய நிறுவனங்களும் தங்கள் பங்கை ஆற்ற இயலும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா.பொருளாதார மற்றும் சமூக அவையின் உயர்மட்ட அளவிலானக் கூட்டத்தில் இப்புதன்கிழமை உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி இவ்வாறு தெரிவித்தார்.
உலகில் சிறாருக்குத் தரமான கல்வி வழங்குவதில் ஒவ்வொரு நாட்டிற்கும் தவிர்க்கமுடியாத கடமை ஒரு பக்கம் இருக்கின்ற போதிலும், இந்தப் பணியைப் பெற்றோரும், திருச்சபைகளும், உள்ளூர் சமூகங்களும் செய்ய வேண்டிய கடமையையும் கொண்டுள்ளன என்றார் பேராயர் தொமாசி.
2011ம் ஆண்டின் உலகக் கண்காணிப்பு அறிக்கையின்படி, 2008ல் சுமார் 6 கோடியே 75 இலட்சம் சிறார் பள்ளிக்குச் செல்லாமல் இருந்தனர் என்பதைச் சுட்டிக் காட்டிய பேராயர், இந்த நிலைமை தொடர்ந்தால் 2015க்குள் உலக அளவில் அனைவருக்கும் ஆரம்பக்கல்வி என்ற திட்டத்தைச் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்று எச்சரித்தார்.
மிகவும் வளர்ச்சி குன்றிய நாடுகளில் மூன்று நாடுகளில் பள்ளிக்குச் செல்லும் சிறார் 50 விழுக்காட்டுக்கும் குறைவாகவும் 17 நாடுகளில் இவ்விகிதம் 80 விழுக்காட்டுக்கு அதிகமாகவும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நூற்றாண்டுகளாக, சமயக் குழுக்கள் அடிப்படை கல்விக்கு ஆதரவளித்து வருகின்றன என்றும் எடுத்துக்காட்டாக, கத்தோலிக்கத் திருச்சபை ஒவ்வொரு கண்டத்திலும் சுமார் இரண்டு இலட்சம் ஆரம்ப மற்றும் நடுத்தரப் பள்ளிகளை நடத்துகின்றது, இவற்றில் சுமார் 5 கோடியே 80 இலட்சம் மாணவர்களும் 35 இலட்சம் ஆசிரியர்களும் இருக்கின்றனர் என்றும் பேராயர் தொமாசி கூறினார்.
மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஏறக்குறைய 2 கோடியே 80 இலட்சம் சிறார் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.
உலக அளவில் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு அரசுகளும் தனியார் அமைப்புகளும் தங்களது நிதியுதவிகளை அதிகரிக்குமாறும் பேராயர் கேட்டுக் கொண்டார்.
3. அசிசியில் இடம்பெற உள்ள அனைத்து மதங்களின் கூட்டம் குறித்து திருப்பீடச்செயலர்
ஜூலை 07, 2011. அக்டோபர் மாதம் 27ந்தேதி இத்தாலியின் அசிசியில் இடம்பெறவிருக்கும் அனைத்து மதங்களின் கூட்டத்திற்கு எடுக்கப்பட்டுள்ள தலைப்பான 'உண்மைக்கான திருப்பயணிகள், அமைதிக்கானத் திருப்பயணிகள்', என்பதே அந்நிகழ்வின் முழுப்பொருளையும் வெளிப்படுத்துவதாக உள்ளது என்றார் திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே.
உலகம் முழுவதும் உள்ள அனைத்து மதத்தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்து அவர்களோடு இணைந்து செபித்த 1986ம் மற்றும் 2002ம் ஆண்டுகளின் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ள இந்நிகழ்வு, இவ்வுலகிற்கானப் பொது அர்ப்பணத்தில் மதங்கள் தங்களிடையே ஒருவித இணக்கத்தைக் காணமுடியும் என்பதன் நிரூபணமாக இருக்கும் என்றார் கர்தினால் பெர்த்தோனே.
இவ்வாண்டு அக்டோபரில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ள, விஞ்ஞான மற்றும் கலாச்சாரத் துறையில் பணியாற்றும் இறைநம்பிக்கையற்றவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளதாகவும் கூறினார் அவர்.
அமைதிக்கான அர்ப்பணம் என்பது மதங்களுக்கு மட்டுமே உரியது அல்ல, மாறாக அனைத்து மக்களுக்கும் உரியது என்பதை வலியுறுத்தும் விதமாகவே அனைவருக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளதாக மேலும் கூறினார் திருப்பீடச்செயலர் கர்தினால் பெர்த்தோனே.
4. கிழக்கு ஆப்ரிக்காவின் உணவு நெருக்கடியைக் களைய உடனடி உதவிகள் தேவைப்படுவதாக அறிவித்துள்ளது CAFOD அமைப்பு.
ஜூலை 07, 2011. கிழக்கு ஆப்ரிக்காவில் மழையும் தானிய உற்பத்தியும் குறைந்து, கால்நடைகள் பெருமளவில் உயிரிழந்து, மக்கள் உணவு தேடி பல நூறு மைல்கள் அலையும் இன்றைய நிலைகளை மாற்ற உடனடி உதவிகள் தேவைப்படுவதாக அறிவித்துள்ளது கத்தோலிக்க உதவி நிறுவனமான CAFOD அமைப்பு.
காலம் கடந்து போவதற்கு முன்னர் உதவிகள் வழங்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள இப்பிறரன்பு அமைப்பு, ஏற்கனவே, குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான உணவு மையங்கள் அமைத்தல், கிணறு வெட்டுதல், நீர் சேமிப்பு, வறட்சியையும் தாண்டி பலன் கொடுக்கும் பயிர்களுக்கான விதைகளை வழங்குதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறுகிறது.
இதற்கிடையே, உணவு நெருக்கடியால் பல இலட்சக்கணக்கான ஆப்ரிக்கர்கள் துன்புறும் இவ்வேளையில், உலகிலுள்ள அனைத்து நல்மனதுடையோரின் கவனத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார் தென் கென்ய ஆயர் பீட்டர் கிஹாரா.
5. ஏழை நாடுகளுக்கான ஆஸ்திரேலிய அரசின் பொருளாதார உதவிகள் குறித்து பாராட்டியுள்ளது காரித்தாஸ் அமைப்பு
ஜூலை 07, 2011. ஏழை நாடுகளுக்கான ஆஸ்திரேலிய அரசின் பொருளாதார உதவிகள் குறித்து தனிசுதந்திர அமைப்பு ஒன்று முன்வைத்துள்ள பரிந்துரைகளை ஆஸ்திரேலிய அரசு ஏற்றுள்ளது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது அந்நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.
கடந்த பதினைந்து ஆண்டுகால வெளிநாட்டு உதவிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வை ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஏற்றுள்ளதன் மூலம், உதவிகள் குறித்த வெளிப்படையான பொறுப்பான நடவடிக்கைகளுக்கு வழிவகுத்துள்ளார் என்றார் காரித்தாஸ் ஆஸ்திரேலியாவின் உயர் அதிகாரி Jack de Groot.
வெளிநாடுகளின் ஏழைகளுக்கான உதவிகள் அவர்களையேச் சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்வதற்கு இந்த ஆய்வுகள் உதவும் என்ற அவர், நலஆதரவு, கல்வி, வாழ்க்கைத்தரம், நீதி மற்றும் அவசரகால உதவிகளுக்கு தற்போது முன்னுரிமைக் கொடுக்கப்படுவது குறித்த மகிழ்ச்சியையும் வெளியிட்டார்.
6. கற்பழிப்புக் குற்றங்கள் அதிகரிப்பு : இந்திய மகளிர் ஆணைக்குழு தலைவர் கவலை
ஜூலை 07, 2011. "இந்தியாவில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன, குறிப்பாக, உத்தரபிரதேச மாநிலத்தில் கற்பழிப்புக் குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன,'' என்று தேசிய மகளிர் ஆணைக்குழு தலைவர் யாஸ்மின் அப்ரார் கவலை வெளியிட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்திலும், டில்லியிலும் அண்மை நாட்களாக கற்பழிப்பு குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்ற அவர், கேரள மாநிலத்தில் சிறுமி ஒருவரைப் பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியதில் அரசியல்வாதிகள் முதல், காவல்துறை அதிகாரிகள் வரை சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மாநிலத்தில், பெண்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது என்று உத்தரப்பிரதேச அரசு கூறுகின்ற போதிலும், உத்தரபிரதேச மாநிலத்தில்தான் கற்பழிப்புக் குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன. குற்றங்களின் எண்ணிக்கை, இங்கு மோசம் என்ற நிலையிலிருந்து, மிக மோசம் என்ற நிலைக்குச் சென்றுள்ளது எனக் குற்றஞ்சாட்டினார்.
பெண்களின் பாதுகாப்புக்கு என தேசிய மகளிர் ஆணைக்குழு ஏற்படுத்தியுள்ள தேசிய கண்காணிப்புக் குழு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, அங்கு பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து அறிந்து, அவர்களுக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கவனத்தில் கொண்டு செயல்படும் எனத் தேசிய மகளிர் ஆணைக்குழு தலைவர் யாஸ்மின் அப்ரார் கூறினார்.
7. இலங்கையில் மது மற்றும் புகைப்பிடிப்பதன் காரணமாக மாதந்தோறும் 7875 பேர் உயிரிழப்பு
ஜூலை 07,2011. மது மற்றும் புகைப் பழக்கத்தினால் ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ 7875 பேர் இலங்கையில் உயிரிழப்பதாக நலத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மாரடைப்பு மற்றும் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழப்பதாக அவர் கூறினார்.
பல்வேறு காரணங்களுக்காக நாள் தோறும் 950 பேர் இலங்கையில் உயிரிழப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, போதைக்கு முற்றுப்புள்ளி என்ற திட்டத்தை அரசாங்கம் எடுத்து நடத்துகின்ற போதிலும், அதிகமானவர்கள் மது மற்றும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாகக் கவலையையும் வெளியிட்டார்.
No comments:
Post a Comment