1. உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் அங்கத்தினர்களுக்கு திருத்தந்தையின் உரை
2. சீனாவில் சமய சுதந்திரம் கேட்டு ஹாங்காக்கில் கத்தோலிக்கர் பேரணி
3. போலந்தில் இரண்டாவது அனைத்துலக அப்போஸ்தலிக்க இறைஇரக்க மாநாடு
4. அடைபட்ட துறவு வாழ்வில் 84 வருடங்கள் வாழ்ந்து வரும் ஓர் அருட்சகோதரி, உலக சாதனை படைத்துள்ளார்
5. பாகிஸ்தானில் சிறுபான்மை சமய அமைச்சகம் கலைக்கப்படுவதற்கு சிறுபான்மை மதத் தலைவர்கள் எதிர்ப்பு
6. இலங்கை காவல்துறையால் சித்ரவதைப்படுத்தப்பட்டவர் குறித்த விவரங்களை ஆசிய மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ளது
7. ஆயுத மோதல்களின் போது குழந்தைகள் பாதிப்புக்குள்ளாவது குறித்து ஐ.நா.பொதுச்செயலர் கவலை
8. உலகில் சிறந்த 10 போராட்டங்கள் பட்டியலில் உப்பு சத்தியாகிரகம்
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் அங்கத்தினர்களுக்கு திருத்தந்தையின் உரை
ஜூலை01, 2011. உலகின் ஏழை எளிய மக்களின் உண்மையான அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய உதவும் நிறுவனங்களுடன் பணிபுரிவதற்கான அர்ப்பணத்தை மீண்டும் ஒருமுறை திருச்சபை புதுப்பிப்பதாக, இவ்வெள்ளியன்று ஐநாவின் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் அங்கத்தினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை கூறினார்.
உரோம் நகரில் இடம்பெற்ற FAO நிறுவனத்தின் 37வது அவைக்கூட்டத்தில் கலந்துகொண்ட சுமார் 400 பிரதிநிதிகளுக்கு உரை வழங்கிய திருத்தந்தை, முதலில் அந்தச் சர்வதேச நிறுவனத்தின் புதிய தலைவர் ஹோசே கிராசியானோ த சில்வாவுக்குத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இன்றைய உணவுப் பிரச்சனைகளுக்கானக் காரணமாக, உற்பத்திக் குறைபாடுகளைப்பற்றி மட்டும் சிந்திக்காமல், அதைவிட ஆழமாகச் சென்று ஆராயும் போது, ஏழ்மை,வளர்ச்சியற்ற நிலை மற்றும் பசிக்கு, மனிதனின் சுயநலப் போக்குகளே முக்கியக் காரணம் எனத் தெரிய வருகிறது என்றார்.
இலாபம் என்ற குறிக்கோளில் உயர் ஒழுக்கரீதி கொள்கைகளும் பாதுகாப்புச் சட்டங்களும் நீக்கப்பட்டு, மனிதனின் அடிப்படை உரிமையான உணவு மறுக்கப்படுவது குறித்து மனிதகுலம் எங்ஙனம் மௌனம் காக்கமுடியும் என்ற கேள்வியையும் முன்வைத்தார் பாப்பிறை.
சர்வதேச அளவில் இடம்பெறும் வியாபாரங்கள் குறித்த கொள்கைகள், அனைத்து மனித குலத்தின் நன்மையை கருத்தில் கொண்டதாய் வடிவமைக்கப்பட வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை, இதன் மூலமே ஒருமைப்பாட்டை வளர்க்க முடியும் எனவும் அதில் FAO நிறுவனம் சிறப்புப் பங்காற்ற முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
உணவு இன்மையால் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகளே என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இதனால் அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன் இளவயது மரணங்களும் இடம்பெறுகின்றன மற்றும் சிறிய அளவிலான உணவுக்காகக்கூட அவர்கள் சுரண்டப்படும் அபாயம் இருப்பதையும் குறிப்பிட்டு கவலையை வெளியிட்டார்.
2. சீனாவில் சமய சுதந்திரம் கேட்டு ஹாங்காக்கில் கத்தோலிக்கர் பேரணி
ஜூலை01,2011. சீனாவில் சமய சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஹாங்காக் முன்னாள் ஆயர் கர்தினால் ஜோசப் ஜென் தலைமையில் கத்தோலிக்கர் ஹாங்காக்கில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர்.
சீனாவில் சிறையிலுள்ள “பாப்பிறைக்கு விசுவாசமாயுள்ள மறைந்து வாழும் கத்தோலிக்கத் திருச்சபையை”ச் சேர்ந்த ஆயர்களும் அருட்பணியாளர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் இப்பேரணியில் வலியுறுத்தப்பட்டது.
திருப்பீடத்துடனான ஒன்றிப்பை வெளிப்படுத்தும் நோக்கத்தில் தூயவர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவான இவ்வியாழனன்று திருப்பலியில் கலந்து கொண்ட பின்னர், ஹாங்காக்கிலுள்ள சீனாவின் மத்திய அரசு அலுவலகத்தின் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட கத்தோலிக்கர் கூடி நின்று, சீன அரசு, அருட்பணியாளர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதற்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பினர்.
இப்பேரணி குறித்துப் பேசிய ஹாங்காக் கத்தோலிக்கப் பேச்சாளர் பாட்ரிக் பூன், சீனக் கத்தோலிக்கரின் சமய சுதந்திரம் சகித்துக்கொள்ளப்பட முடியாத வகையில் மீறப்படுவதால் தாங்கள் தெருக்களில் வந்து போராட வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறினார்.
3. போலந்தில் இரண்டாவது அனைத்துலக அப்போஸ்தலிக்க இறைஇரக்க மாநாடு
ஜூலை01,2011. இறைவனின் இரக்கத்தை அதிகமாக உணர்ந்து அதை நோக்கி மக்களை வழிநடத்துவதே திருச்சபையின் ஒட்டு மொத்த மறைப்பணி என்று இறைஇரக்கம் குறித்த அனைத்துலக மாநாட்டின் பொதுச் செயலர் அருட்பணி Patrice Chocholski கூறினார்.
வருகிற அக்டோபரில் போலந்தில் இடம்பெறவிருக்கின்ற இரண்டாவது அனைத்துலக அப்போஸ்தலிக்க இறைஇரக்கம் மாநாடு குறித்து ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த அருட்பணி Chocholski, இம்மாநாடு, இறைஇரக்கம் நோக்கி அகிலத் திருச்சபையையும் திருப்பும் எண்ணம் கொண்டுள்ளது என்றார்.
இறைஇரக்கம் குறித்த அனைத்துலக முதல் மாநாடு உரோமையில் 2008ல் நடைபெற்றது. அதன்பின்னர் ஐந்து கண்டங்களிலும் சுமார் ஐம்பது தேசிய மாநாடுகள் நடைபெற்றுள்ளன.
இம்மாநாட்டு அவையின் தலைவராக ஆஸ்ட்ரியாவின் வியன்னா பேராயர் கர்தினால் Christoph Schönborn இருந்து வருகிறார்.
4. அடைபட்ட துறவு வாழ்வில் 84 வருடங்கள் வாழ்ந்து வரும் ஓர் அருட்சகோதரி, உலக சாதனை படைத்துள்ளார்
ஜூலை01,2011. அடைபட்ட துறவு வாழ்வில் 84 வருடங்கள் வாழ்ந்து வரும் ஓர் அருட்சகோதரி, இத்தகைய துறவு வாழ்க்கையில் அதிகமான ஆண்டுகள் வாழ்ந்து உலக சாதனை படைத்துள்ளார்.
இஸ்பெயினில், Cistercian Buenafuente del Sistal அடைபட்ட துறவு இல்லத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பிறந்த அதே நாளில் சேர்ந்த அருட்சகோதரி தெரேசா, துறவு வாழ்வில் 84 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார், தற்சமயம் அச்சகோதரிக்கு வயது 103 ஆகும்.
தனது இத்தனை ஆண்டு துறவு வாழ்வு பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அருட்சகோதரி தெரேசா, இவ்வாழ்க்கையில் தான் பெற்ற மிகப்பெரும் கொடை செபம் என்று தெரிவித்துள்ளார்.
வலேரியா என்ற இயற்பெயரைக் கொண்ட அருட்சகோதரி தெரேசா, 1927ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி துறவு சபையில் சேர்ந்தார்.
5. பாகிஸ்தானில் சிறுபான்மை சமய அமைச்சகம் கலைக்கப்படுவதற்கு சிறுபான்மை மதத் தலைவர்கள் எதிர்ப்பு
ஜூலை01,2011. பாகிஸ்தானில் சிறுபான்மை சமய அமைச்சகத்தைக் கலைத்து அதனை மாநில வாரியாகப் பிரிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு அந்நாட்டு இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவத் தலைவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
சிறுபான்மை அமைச்சகத்தை மாநில அளவுக்குக் கொண்டு செல்வது, சிறுபான்மை மதத்தவரைப் புண்படுத்துவதாக இருக்கும் என்று அத்தலைவர்கள் குறை கூறினர்.
அரசின் இச்செயல், சிறுபான்மை சமூகங்களின் தேசிய தனித்துவத்தை இருட்டடிப்பு செய்வதற்கான முயற்சியாக இருக்கின்றது என்று, உலக சிறுபான்மை கூட்டமைப்பு உரிமைக் குழுவின் ஜூலியஸ் சாலிக் கூறினார்.
கிறிஸ்தவர்கள், நாட்டில் தொடர்ந்து அநீதிகளையும் பாகுபாடுகளையும் காழ்ப்புணர்வுகளையும் எதிர் கொண்டு வருவதால் அவர்கள் மத்திய அரசு அளவில் தங்களது இருப்பைக் கொண்டிருப்பது மிகவும் இன்றியமையாதது என்று சாலிக் மேலும் கூறினார்.
பாகிஸ்தான் அரசின் அண்மைப் புள்ளி விபரங்களின்படி, நாட்டின் சுமார் 17 கோடியே 70 இலட்சம் மக்களில் 5.5 விழுக்காட்டினர் இந்துக்கள், 2 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.
6. இலங்கை காவல்துறையால் சித்ரவதைப்படுத்தப்பட்டவர் குறித்த விவரங்களை ஆசிய மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ளது
ஜூலை01, 2011. 1988க்கும் 2011க்கும் இடைப்பட்டக் காலத்தில் மிகக்கொடுமையான முறையில் இலங்கை காவல்துறையால் சித்ரவதைப்படுத்தப்பட்ட 323 பேர் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது ஆசிய மனித உரிமைகள் அமைப்பு.
இலங்கை காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் குறித்த 1500 சம்பவங்களைத் திரட்டியுள்ள ஹாங்காங்கைத் தலைமையிடமாகக் கொண்ட ஆசிய மனித உரிமைகள் அவை, மனம்போன போக்கில் மக்களைக் கைது செய்துள்ள காவல்துறை, அவர்கள் செய்யாதக் குற்றத்தை அவர்களைக் கொடுமைப்படுத்தி ஒப்புக்கொள்ள வைத்துள்ளதாகவும் குற்றங்சாட்டுகிறது.
எவ்விதத் தண்டனைப் பயமும் இன்றி இலங்கை காவல்துறைச் செயல்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் இம்மனித உரிமைகள் அவையின் இலங்கை இயக்குனர் பேசில் ஃபெர்னாண்டோ. கிறிஸ்தவப் படிப்பினைகளின் பின்னணியில் இது குறித்து வெளிப்படையாகப் பேசி, இத்தகைய உரிமை மீறல்களை இலங்கையிலிருந்து அகற்ற உதவுவது தலத்திருச்சபையின் கடமை என்றார் உரிமை நடவடிக்கையாளர் அருட்பணி சரத் இட்டமல்கோடா.
7. ஆயுத மோதல்களின் போது குழந்தைகள் பாதிப்புக்குள்ளாவது குறித்து ஐ.நா.பொதுச்செயலர் கவலை
ஜூலை01, 2011. அண்மைக் காலங்களில் ஆயுத மோதல்களின் போது பள்ளிகளும் மருத்துவமனைகளும் தாக்கப்படுவதும், குழந்தைகள் அச்சுறுத்தப்படுவதும் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு அவைகள் நிறுத்தப்படுவதற்கான அழைப்பை முன்வைத்துள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
குழந்தைகளுக்கான கல்வியையும் நல பராமரிப்பு நடவடிக்கைகளையும் தடைச் செய்யும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் ஐ.நா. நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார் அவர்.
சிறார்களைப் படைவீரர்களாகத் தேர்வுச் செய்வது தடைச் செய்யப்படவேண்டும் என்பதில் அரசுகள், அரசு சாரா அமைப்புகள், பொது மக்கள் குழுக்கள் ஆகியவை ஆற்றி வரும் பணிகள் பற்றியும் குறிப்பிட்ட பொதுச்செயலர் பான் கி மூன், இது குறித்தக் காலவரையறையுடன் கூடிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டிய அவசரத் தேவை உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
8. உலகில் சிறந்த 10 போராட்டங்கள் பட்டியலில் உப்பு சத்தியாகிரகம்
ஜூலை01,2011. உலக நாடுகளில், அதிகத் தாக்கத்தை ஏற்படுத்திய பத்து போராட்டங்களில், மகாத்மா காந்தியின் உப்பு சத்தியாகிரகமும் இடம் பெற்றுள்ளது
அமெரிக்காவின், "டைம்ஸ்' பத்திரிகை, உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்திய பத்துப் போராட்டங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், மகாத்மா காந்தியின் உப்பு சத்தியாகிரகமும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில், சுதந்திரப் போராட்டக் காலத்தின் போது, அதாவது, 1930ம் ஆண்டு மார்ச்சில், குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகிலுள்ள, சபர்மதி ஆசிரமத்திலிருந்து, சிறிய கிராமமான தண்டிக்கு மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டார். இது தண்டி யாத்திரை என அழைக்கப்பட்டது.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக, வன்முறையற்ற முறையில், காந்தியால் நடத்தப்பட்ட இந்தத் தண்டி யாத்திரை மக்களிடையே பலத்த வரவேற்பு பெற்றது. இது குறித்து, "டைம்ஸ்' தெரிவித்துள்ள செய்தியில், "சத்யாகிரகா என்றால், "உண்மையான படை' என்று பொருள். பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தை உடைக்க உப்பு சத்தியாகிரகம் உதவியது. இந்த வன்முறையற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, எண்பதாயிரம் இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்' எனத் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment