1. ஐ.நா. இளையோர் கருத்தரங்கு குறித்து பேராயர் சுள்ளிக்காட்
2. தலித் கிறிஸ்தவர்களின் உரிமைக்கான டெல்லி போராட்டம், நீதி கிட்டும் வரை ஓயாது
3. மலாவி நாட்டில் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் துவக்க அரசுக்கு ஆயர் விண்ணப்பம்
4. சொமாலிய அகதிகளிடையே இயேசு சபையினரின் பணி
5. தென்கொரியாவின் இனப்பெருக்க ஆற்றல் அழிப்புத் தண்டனை குறித்து ஆயர்கள் கேள்வி
6. வட இலங்கை மக்கள் தொடர்ந்து பீதியுடன் வாழ்ந்து வருகின்றனர் : யாழ் துணை வேந்தர்
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. ஐ.நா. இளையோர் கருத்தரங்கு குறித்து பேராயர் சுள்ளிக்காட்
ஜூலை 26, 2011. வருங்காலத்திற்கான நம்பிக்கையாக இருக்கும் இளையோரை நாடுகளிடையே, கலாச்சாரங்களிடையே மற்றும் மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளைக் கட்டியெழுப்பும் கருவிகளாக ஐநாவும் கத்தோலிக்கத் திருச்சபையும் நோக்குவதாக உரைத்தார் பேராயர் ஃபிரான்சிஸ் சுல்லிக்காட்.
இத்திங்களும் செவ்வாயும் ஐ.நா. நிறுவனத்தில் இடம்பெற்ற இளையோர் மாநாடு குறித்துப் பேட்டியளித்த ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளர் பேராயர் சுள்ளிக்காட், மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்வு முறையை இளைஞர்களில் உருவாக்க ஐ.நா. நிறுவனம் கைக்கொள்ளவேண்டிய பொறுப்புணர்வுகளை வலியுறுத்தினார்.
வருங்காலத்தைக் கட்டியெழுப்பும் பணியில் இளையோருக்கு எடுத்துக்காட்டுகளாகச் செயல்படவேண்டிய இன்றையத் தலைமுறையினரின் கடமையையும் சுட்டிக்காட்டினார் பேராயர்.
வாழ்வதற்கான உரிமை குறித்த விவகாரங்கள், எயிட்ஸ் நோய்த் தொடர்பான ஒழுக்கரீதிக் கேள்விகள், குழந்தைகள் மீதான பெற்றோர்களின் உரிமைகள் போன்றவைகளில் ஐநாவின் நிலைப்பாடு முரண்பாடுடையதாக இருப்பதாகக் கவலையை வெளியிட்ட ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சுள்ளிக்காட், இது கத்தோலிக்கத் திருச்சபைக்கு ஒரு சவாலாக இருப்பதாகவும் உரைத்தார்.
வாழ்விற்கு ஆதரவானப் போராட்டத்திற்கு இளைஞர்களைத் தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய அவர், சிசுக்களைக் கருவிலேயே கொல்வதால் அல்ல, மாறாக, சிறார்கள் மற்றும் இளைஞர்கள் மீது செய்யப்படும் முதலீடுகளாலேயே வறுமையை விரட்டமுடியும் என மேலும் கூறினார்.
2. தலித் கிறிஸ்தவர்களின் உரிமைக்கான டெல்லி போராட்டம், நீதி கிட்டும் வரை ஓயாது
ஜூலை 26, 2011. தலித் கிறிஸ்தவர்களின் உரிமைக்கான டெல்லி போராட்டம் வன்முறையற்றது மட்டுமல்ல, நீதி கிட்டும் வரை ஓயாதது என்றார் டெல்லி பேராயர் வின்சென்ட் கொன்சசாவோ.
தலித் கிறிஸ்தவர்களின் உரிமைக்காக டெல்லியின் ஜந்தர் மந்தரில் உண்ணாநோன்புப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் மக்களுக்கு உரை நிகழ்த்திய பேராயர், தலித் கிறிஸ்தவர்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதற்கு தற்போதைய மத்திய அரசு பெரும் தடைக்கல்லாக இருக்கிறது என்றார்.
புத்தம், சீக்கியம் மற்றும் இந்து மதங்களைச் சார்ந்த தலித் இன மக்களுக்கு வழங்கப்படும் அரசுச் சலுகைகள், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களைச் சார்ந்த அதே இன மக்களுக்கு மறுக்கப்படுவதை கண்டித்தும், உரிமைகளை வேண்டியும் இத்திங்களன்று டெல்லியில் துவக்கப்பட்ட உண்ணாநோன்பு போராட்டம், இவ்வியாழன் பாராளுமன்றம் நோக்கிய பெரும் ஊர்வலத்துடன் நிறைவுக்கு வரும்.
3. மலாவி நாட்டில் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் துவக்க அரசுக்கு ஆயர் விண்ணப்பம்
ஜூலை 26, 2011. மலாவி நாட்டில் செவிமடுப்பதற்கும் பேச்சுவார்த்தைக்குமான தேவை இருப்பதாகவும், அதனை முயற்சி எடுத்துத் துவக்க வேண்டியது அரசின் கடமையாகிறது எனவும் வலியுறுத்தினார் அந்நாட்டு பேராயர் Gervazio Tarcisius Ziyaye.
அனைத்து விதமான வன்முறைகளும் நிறுத்தப்பட்டு, மக்களின் தேவைகளுக்கு செவிமடுக்கப்படவேண்டும் என்ற பேராயர், கடைகளும் வீடுகளும் வன்முறையாளர்களால் சூறையாடப்பட்டதை தான் நேரில் காண நேர்ந்ததாகவும் கூறினார்.
பொருளாதார நெருக்கடிகளால் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழி 'பேச்சுவார்த்தைகளை' கைக்கொள்வதே என்ற பேராயர், மக்களின் குரலுக்குச் செமடுக்க அரசு முன்வரவேண்டும் என்றார்.
அரசுக்கும் தலத்திருச்சபைக்கும் இடையே எவ்விதப் பதட்ட நிலைகளும் இல்லை என்ற பேராயர் Ziyaye, அரசுத்தலைவரைச் சந்திக்க மலாவி ஆயர் பேரவை முன்வைத்துள்ள விண்ணப்பம் இன்னும் பதிலுக்காகக் காத்திருக்கின்றது என மேலும் கூறினார்.
4. சொமாலிய அகதிகளிடையே இயேசு சபையினரின் பணி
ஜூலை 26, 2011. வறுமை காரணமாக கென்யா மற்றும் எத்தியோப்பியாவில் நுழையும் சொமாலிய அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களுக்கு உதவுவதற்கான நிதியுதவிகள் தேவைப்படுவதாக விண்ணப்பித்துள்ளது இயேசு சபையினரின் அகதிகளுக்கான JRS அமைப்பு.
பல ஆண்டுகளான மோதல்களாலும் வறட்சியாலும் 20இலட்சம் மக்கள் வரை தங்கள் சொந்த இடத்தை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்ற கிழக்கு ஆப்ரிக்க JRS அமைப்பின் இயக்குனர் குரு Frido Pflueger, இம்மாதம் 20ந்தேதி வரை 1 இலட்சத்து 20 ஆயிரம் சொமாலியர்கள் கென்யாவிலும் எத்தியோப்பியாவிலும் அடைக்கலம் தேடியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள தானிய உற்பத்திக்குறைவு, மத்திய அரசின் நிர்வாகக் குறைபாடு, புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்ல முடியாமை போன்றவைகளால் மக்களின் துன்பங்கள் அதிகரித்துள்ளதாக இயேசு சபை குரு மேலும் கூறினார்.
JRS என்ற இயேசு சபையினரின் அமைப்பு, ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஐந்து இலட்சம் அகதிகள் மற்றும் குடிபெயர்ந்தோரிடையே கல்வி, நலஆதரவு, மற்றும் சமூகப்பணிகளை ஆற்றி வருகின்றது.
5. தென்கொரியாவின் இனப்பெருக்க ஆற்றல் அழிப்புத் தண்டனை குறித்து ஆயர்கள் கேள்வி
ஜூலை 26, 2011. சிறார்களைப் பாலினக் குற்றங்களுக்கு உட்படுத்துவோரை வேதியல் முறையில் இனப்பெருக்க ஆற்றல் அழிப்புத் தண்டனைக்கு உட்படுத்தும் தென்கொரிய அரசின் புதிய சட்டம் குறித்து குறை கூறியுள்ளது தலத்திருச்சபை.
15 வயதிற்குட்பட்டச் சிறார்களிடம் பாலின முறையில் தவறாக நடந்து கொள்வோர் ஆண்மை இழக்க வைக்கப்படுவார்கள் என்ற அரசின் புதிய சட்டம் குறித்து கருத்து தெரிவித்த தென் கொரிய ஆயர் பேரவையின் அதிகாரி குரு பால் லீ சங் யாங், சிறார்களுக்கு எதிரான பாலினக் குற்றங்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை, ஆனால், இத்தகைய செயற்கைத் தண்டனைகளுக்குப் பதிலாக மாற்றுத் தண்டனைகளைக் கொணர்வது நல்லது என்றார்.
இத்தகைய தண்டனைகள் மூலமாக பாலினக் வகைக் குற்றங்களை முற்றிலுமாக ஒழித்துவிட முடியுமா என்பது குறித்தும் அரசு சிந்திக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது கொரிய தலத்திருச்சபை.
தென்கொரிய அரசின் கூற்றுப்படி, கடந்த நான்கு ஆண்டுகளில் 15 வயதிற்குட்பட்ட சிறார்கள் மீதான பாலின வகை அத்துமீறல்கள் அந்நாட்டில் 52.7 விழுக்காடு அதிகரித்துள்ளன.
6. வட இலங்கை மக்கள் தொடர்ந்து பீதியுடன் வாழ்ந்து வருகின்றனர் : யாழ் துணை வேந்தர்
ஜூலை 26, 2011. முப்பதாண்டுகளாக போரினால் பாதிக்கப்பட்ட வட இலங்கை மக்கள் தொடர்ந்து பீதியுடன் வாழ்ந்து வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
நீண்ட காலப் போர் மற்றும் பொருளாதார நெருக்கடிகளினால பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் போது அவர்களின் மனநிலை கவனத்திற் கொள்ளப்பட வேண்டுமென லங்காதீப பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார் அவர்.
வடக்கின் பல பகுதிகளில் பௌதீக ரீதியான அபிவிருத்தி ஏற்பட்டுள்ள போதிலும் மக்கள் மத்தியில் இன்னமும் அச்சம் நீடித்து வருவதாகத் தெரிவித்த அவர், வட பகுதி மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்.
வடக்கு மக்களின் தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் இன்னமும் எஞ்சியிருப்பதாகவும், மக்களின் பிரச்சனைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு தீர்வுத் திட்டங்களை முன்வைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர்.
வேலையற்ற இளைஞர்கள் தொடர்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை மேலும் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment