Sunday, 17 July 2011

Catholic News - hottest and latest - 14 July 2011

1. மதங்களிடையேயானப் பேச்சுவார்த்தைகள், பாரம்பரியத் தனித்தன்மைகள் மற்றும் வேறுபாடுகளை மதிப்பதுடன் இடம்பெறவேண்டும் - கர்தினால் டர்க்சன்

2. மனித மாண்பு குறித்த விழிப்புணர்வு குறைந்து வருவதே நெருக்கடிகள் பிறப்பதற்கு காரணமாகின்றது

3. மும்பை குண்டு வெடிப்புத் தாக்குதல் குறித்து இந்திய கிறிஸ்தவ அவை கண்டனம்

4. சிறைத்தண்டனைக்கு மாற்றாக ஒன்றைக் கண்டுபிடித்து குற்றவாளிகளைப் பொறுப்புடைய குடிமக்களாக மாற்ற அழைக்கின்றனர் ஆயர்கள்

5. கத்தோலிக்கக் கோவில் கட்டுவதற்கு அனுமதி தர மறுத்துள்ளது இலங்கை அரசு

6. கருக்கலைப்புக்களை எதிர்த்து போலந்தில் ஆறு இலட்சம் கையெழுத்துக்கள்

7.   கடல் தாவரத்திலிருந்து உப்பு தயாரித்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை

----------------------------------------------------------------------------------------------------------------

1. மதங்களிடையேயானப் பேச்சுவார்த்தைகள், பாரம்பரியத் தனித்தன்மைகள் மற்றும் வேறுபாடுகளை மதிப்பதுடன் இடம்பெறவேண்டும் - கர்தினால் டர்க்சன்

ஜூலை 14,2011.   அநீதிகளுக்கான காரணங்களுக்கு எதிராக அனைத்து மத சமூகங்களும் இணைந்து போரிடுவதற்கு அக்டோபர் மாதத்தின் அசிசி பல்மதக் கூட்டம் நல்லதொரு வாய்ப்பாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார் திருப்பீட அதிகாரி கர்தினால் பீட்டர் டர்க்சன்.
'உண்மையின் திருப்பயணிகள், அமைதியின் திருப்பயணிகள்' என்ற தலைப்பில் உலகின் அனைத்து மதப்பிரதிநிதிகளும் இத்தாலியின் அசிசி நகரில் கூடுவதற்கு திருத்தந்தை விடுத்துள்ள அழைப்புப் பற்றிக் குறிப்பிட்ட, திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் டர்க்சன், அனைத்து முயற்சிகளின் முதல் நோக்கமாக, வாழ்விற்கான உரிமை பாதுகாக்கப்படுவது இருக்கவேண்டும் எனவும், மதங்களிடையேயானப் பேச்சுவார்த்தைகள் அந்தந்த மதங்களின் பாரம்பரியத் தனித்தன்மைகள் மற்றும் வேறுபாடுகளை மதிப்பதாகவும் இருக்கவேண்டும் என்றார்.
ஒவ்வொரு மதத்தின் நீதி மற்றும் அமைதிக்கான அர்ப்பணம் என்பது சமூகத்தின் பொதுநலனுக்கான ஒத்துழைப்பிற்கு அவர்களைத் தூண்ட முடியும் என்ற கர்தினால், ஒவ்வொரு மதமும் தங்களுக்கேயுரிய சொத்தான ஆன்மீக வளங்கள் மற்றும் மதிப்பீடுகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளமுடியும் எனவும் தெரிவித்தார்.

2. மனித மாண்பு குறித்த விழிப்புணர்வு குறைந்து வருவதே நெருக்கடிகள் பிறப்பதற்கு காரணமாகின்றது

ஜூலை14,2011உலகின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவேண்டுமெனில், உபகரணங்கள் அல்ல மாறாக உபகரணங்களைப் பயன்படுத்துபவர்கள் மாறவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார் வத்திக்கான் வங்கியின் இயக்குனர் கோத்தி தெதெஸ்கி.
திருப்பீடத்திற்கான இத்தாலிய தூதரகத்தில் 'பொருளாதார நெருக்கடியின் விளைவுகள்' என்ற தலைப்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய தெதெஸ்கி, பொருளாதாரம் என்பது ஓர் உபகரணமே, அந்த உபகரணத்தை தவறாகப் பயன்படுத்துவது நாமே என உரைத்ததுடன், மனித வாழ்வு மற்றும் மாண்பு சரியாக மதிக்கப்படாமையே நெருக்கடிகளுக்கான மூல காரணம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
திருத்தந்தையின் 'Humane Vitae' என்ற ஏட்டிலிருந்து உதாரணங்களை முன்வைத்த வத்திக்கான் வங்கி இயக்குனர், மனித மாண்பு குறித்த விழிப்புணர்வு குறைந்து வருவதே நெருக்கடிகள் பிறப்பதற்கு காரணமாகின்றது என்றார்.

3. மும்பை குண்டு வெடிப்புத் தாக்குதல் குறித்து இந்திய கிறிஸ்தவ அவை கண்டனம்

ஜூலை14,2011. அப்பாவி பொதுமக்களைத் தாக்குவதற்கான எந்தக் காரணமும் நியாயப்படுத்தப்பட முடியாதது என அண்மை மும்பை குண்டு வெடிப்புத் தாக்குதல் குறித்து தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார் அனைத்திந்திய கிறிஸ்தவ அவையின் பொதுச்செயலர் ஜான் தயாள்.
தீவிரவாதிகள் ஒருநாளும் மனித குலத்தின் நண்பர்களாக இருக்கமுடியாது என்ற அவர், இதில் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் கிறிஸ்தவர்கள் தங்கள் செபங்களை ஒப்புக்கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
காவல்துறையும் பாதுகாப்புத்துறையும் இத்தாக்குதல்களுக்கான மூலத்தை ஆராய்ந்து உண்மைகளை வெளிக்கொணர்வதுடன், பகை உணர்வுகள் மேலோங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் ஜான் தயாள்.
இதற்கிடையே, உலகின் பல்வேறு நாடுகளின் அரசுத்தலைவர்களும் இத்தாக்குதல்கள் குறித்து தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

4. சிறைத்தண்டனைக்கு மாற்றாக ஒன்றைக் கண்டுபிடித்து குற்றவாளிகளைப் பொறுப்புடைய குடிமக்களாக மாற்ற அழைக்கின்றனர் ஆயர்கள்

ஜூலை 14,2011.   குற்றவாளிகளைப் பொறுப்புடைய குடிமக்களாக மாற்றி அவர்களையும் சமூக வாழ்வின் அங்கமாக்கும் விதத்தில் சிறைத்தண்டனைக்கு மாற்றாக ஒன்று கண்டுபிடிக்கப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் ஆஸ்திரேலிய ஆயர்கள்.
ஆஸ்திரேலியாவின் சிறைகள் மற்றும் நீதி அமைப்பு குறித்து சுற்றறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ள அந்நாட்டு ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் ஃபிலிப் வில்சன்பசிக்கு உணவும், ஆடையற்றோருக்கு உடையும், அந்நியருக்கு வரவேற்பும், நோயுற்றோருக்கு கவனிப்பும் மட்டும் நம் கடமையல்ல, சிறையிலிருப்போரைச் சென்று சந்திப்பதும் நம்மிடம் எதிர்பார்க்கப்படுகிறது என அதில் கூறியுள்ளார்.
சிறைத்தண்டனை என்பதை இறுதிக்கட்ட தண்டனை முறையாக வைத்துக்கொண்டு அதற்கு மாற்றாக ஒன்றைக் கைகொண்டு அதன் வழி குற்றவாளிகளை பொறுப்புமிக்க குடிமக்களாக மாற்ற முனையவேண்டும் என்ற அழைப்பையும் அந்த சுற்றுமடலில் முன்வைத்துள்ளார் ஆஸ்திரேலிய பேராயர் வில்சன்.

5. கத்தோலிக்கக் கோவில் கட்டுவதற்கு அனுமதி தர மறுத்துள்ளது இலங்கை அரசு

ஜூலை 14,2011.   இலங்கையின் குர்னேகல மறைமாவட்டத்தில் ஒரு புதிய கோவில் கட்டுவதற்கு அனுமதி தர மறுத்துள்ளது அந்நாட்டு அரசு.
Hendiyagala  எனுமிடத்தில் கோவில் ஒன்றைக் கட்டுவதற்கு ஆயர் ஹரல்டு ஆன்டனி பெரேரா எடுத்த முயற்சிகளுக்கு அப்பகுதியின் புத்த மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், அதைக் காரணமாகக் காட்டி அரசும் அனுமதி தர மறுத்துள்ளது.
அப்பகுதியின் 100க்கும் மேற்பட்ட கத்தோலிக்கக் குடும்பங்களுக்கான வழிபாட்டுத்தலமாக 1997ம் ஆண்டு கட்டப்பட்ட தற்காலிக கோவில் சில புத்தமதத் தீவிரவாதிகளால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதைத் தொடர்ந்துதற்போது புதிய கோவில் கட்டுவதற்கென முன்வைக்கப்பட்ட அனுமதி அரசால் மறுக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்கர்கள் புத்த மதத்தினரை மதமாற்ற முயல்வார்கள் என்ற காரணத்தைக்காட்டி, கத்தோலிக்க கோவில் கட்டுவதற்கு புத்த மதத்தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

6. கருக்கலைப்புக்களை எதிர்த்து போலந்தில் ஆறு இலட்சம் கையெழுத்துக்கள்

ஜூலை14,2011. எல்லாவிதமானக் கருக்கலைப்புக்களையும் தடைச்செய்யும் போலந்தின் சட்டப் பரிந்துரைக்கு ஆதரவாக ஆறு இலட்சம் கையெழுத்துக்களைத் திரட்டியுள்ளதாக அறிவிக்கிறது அந்நாட்டின் வாழ்வுக்கு ஆதரவான அமைப்பு.
கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டங்களில் மாற்றங்கள் வேண்டுமெனில் மூன்று மாதத்திற்குள் ஒரு இலட்சம்பேரின் ஆதரவுக் கையெழுத்துக்கள் தேவைப்படுவதாக போலந்தின் சட்டத்துறை அறிவித்திருக்க, இரண்டு வாரங்களிலேயே ஆறு இலட்சம் கையெழுத்துக்களை திரட்டியுள்ளது அந்நாட்டின் வாழ்வுக்கு ஆதரவான அமைப்பு.
கருக்கலைப்பு முறையை போலந்திற்குள் கொணர்ந்த கம்யூனிச மற்றும் நாத்ஸியிசத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்த கையெழுத்து வேட்டை நல்லதொரு வாய்ப்பு என்றார் வாழ்வுக்கான ஆத‌ரவுக்கழகத்தின் அங்கத்தினர் Jacek Sapa.

7.   கடல் தாவரத்திலிருந்து உப்பு தயாரித்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை

ஜூலை 14,2011.   உப்பினால் விளையும் உடல் பாதிப்புகளைத் தவிர்க்க, அதற்கான மாற்றுப்பொருளைக் கண்டுபிடித்துள்ளனர் இங்கிலாந்தின் ஷெபீல்ட் ஹாலம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
உடலில் உப்பின் அளவு அதிகரித்தால் உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகப் பாதிப்பு, வலிப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் நிலையில், இத்தகைய பாதிப்புகளைத் தவிர்க்கஉப்புக்கான மாற்றுப் பொருளைக் கடல் தாவரத்தில் இருந்து தயாரித்துள்ளனர் இவர்கள்.
உடலுக்குப் பாதிப்புகளையும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத இந்தத் தாவர உப்பு, உடல் பருமனைக் குறைக்கவும் பயன்படுத்தப்படலாம் எனக்கூறும் ஆராய்ச்சியாளர்கள்இது இறுதிகட்ட ஒப்புதலுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment