Monday, 11 July 2011

Catholic News - hottest and latest - 08 July 2011

1. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் காஸ்தெல் கண்டோல்போவில் விடுமுறையைத் தொடங்கியுள்ளார்

2. தென் சூடான் நிகழ்ச்சியில் திருத்தந்தையின் பிரதிநிதி குழு

3. பழைய மற்றும் புதிய சூடான் நாடுகள் சமய வாரியாக ஒன்றாகவே இருக்கும் - கார்ட்டூம் கர்தினால்

4. திருப்பீடமும் அஜர்பைஜானும் வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன

5. அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் இலத்தீன் அமெரிக்க மேய்ப்புப்பணிகளுக்கு 21 இலட்சம் டாலருக்கு மேற்பட்ட நிதியுதவி

6. மத்திய பிரதேசத்தில் கிறிஸ்தவர்களின் கல்விப் பணிக்குப் பாராட்டு

7. ஐரோப்பாவில் நிதிப் பிரச்சனையால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

8. காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி தர 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் காஸ்தெல் கண்டோல்போவில் விடுமுறையைத் தொடங்கியுள்ளார்

ஜூலை08,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் செபித்தல், வாசித்தல், புத்தகங்கள் எழுதுதல் ஆகியவற்றில் தனது கோடை விடுமுறையைச் செலவழிக்கத் திட்டமிட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லம் அமைந்திருக்கும் காஸ்தெல் கண்டோல்போவுக்கு இவ்வியாழன் உள்ளூர் நேரம் மாலை 5.50 மணிக்குச் சென்ற திருத்தந்தை, அங்கு கூடியிருந்த மக்களிடம், மலைகளும் ஏரியும் கடலும், அழகான ஆலயமும் நல்ல மக்களும் நிறைந்த இவ்விடத்தில் விடுமுறை நாட்களைச் செலவிட வந்திருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
இறைவன் நல்ல விடுமுறை நாட்களைத் தருவாராக என்றும் என்று அம்மக்களிடம் தெரிவித்தார் திருத்தந்தை.
திருத்தந்தையின் இவ்விடுமுறை குறித்து நிருபர்களிடம் பேசிய திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருட்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, திருத்தந்தை ஓய்வெடுப்பதற்குச் சிறந்த வழியாக, அவர் தனக்கு மிகவும் பிடித்த இறையியல் மற்றும் திருமறைநூல்கள் பற்றி வாசிப்பதையும் எழுதுவதையுமே கொண்டுள்ளார் என்று கூறினார்.
நாசரேத்தூர் இயேசு பற்றிய திருத்தந்தையின் இரண்டு நூல்களின் தொடர்ச்சியாக, இயேசுவின் குழந்தைப்பருவம் பற்றி இவ்விடுமுறை நாட்களில் அவர் எழுதுவார் என்றும் அருட்தந்தை லொம்பார்தி கூறினார்.
காஸ்தெல் கண்டோல்போ, உரோமைக்குத் தென் கிழக்கே 15 மைல் தூரத்தில் அல்பானோ ஏரியை நோக்கிய குன்றின் மேலுள்ள அழகிய ஊராகும்.
வருகிற செப்டம்பர் வரை காஸ்தெல் கண்டோல்போவில் இருக்கும் திருத்தந்தை, ஆகஸ்டில் (18-21) மத்ரித்திற்கும் செப்டம்பரில் (22-25) ஜெர்மனிக்கும் செல்வார்.

2. தென் சூடான் நிகழ்ச்சியில் திருத்தந்தையின் பிரதிநிதி குழு

ஜூலை08,2011. இச்சனிக்கிழமையன்று Juba நகரில் இடம் பெறும் தென் சூடான் புதிய குடியரசாக அறிவிக்கப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்குத் திருத்தந்தை தனது பிரதிநிதி குழுவை அனுப்புகிறார் என்று திருப்பீடப் பேச்சாளர் அருட்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
கென்ய ஆயர் பேரவையின் தலைவரும் நைரோபி பேராயருமான கர்தினால் John Njue தலைமையிலான இப்பிரதிநிதி குழுவில் சூடானுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் லியோ பொக்கார்தி, கென்யத் திருப்பீடத் தூதரகச் செயலர் பேரருட்திரு ஹாவியர் ஹெரெரா கொரோனா ஆகியோர் உள்ளனர்.
இத்திருப்பீடப் பிரதிநிதி குழு, தென் சூடான் புதிய நாட்டின் அதிகாரிகளுக்கும் அந்நாட்டின் குடிமக்களுக்கும் அமைதியும் வளமையும் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பர் என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
1972ம் ஆண்டு முதல் பழைய சூடானுடன் அரசியல் உறவைக் கொண்டுள்ள திருப்பீடம், இப்புதிய குடியரசு விண்ணப்பித்தால் அது குறித்துத் தகுந்த கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார்.
சூடானில் தெளிவாகத் தெரியும் பிரச்சனைகள், திறந்த மனதுடனான அமைதியுடன்கூடிய உரையாடல் வழி தீர்க்கப்பட சர்வதேச சமுதாயம் உதவுமாறு திருப்பீடம் அழைப்பு விடுப்பதாகவும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
இதன்மூலம் சூடான் மக்கள் அமைதி, சுதந்திரம், வளர்ச்சி ஆகியவற்றை அனுபவிக்க இயலும் என்றும் அவர் கூறினார்.

3. பழைய மற்றும் புதிய சூடான் நாடுகள் சமய வாரியாக ஒன்றாகவே இருக்கும் - கார்ட்டூம் கர்தினால்

ஜூலை08,2011. சூடான் நாடு அரசியல் ரீதியாக இரண்டாகப் பிரிந்தாலும் சமய வாரியாக இரண்டு நாடுகளும் ஒன்றாகவே இருக்கும் என்று சூடான் கர்தினால் Gabriel Zubeir Wako தெரிவித்தார்.
இவ்வாரத்தில் நடந்து முடிந்த மேற்கு ஆப்ரிக்க ஆயர்கள் கூட்டத்தில் இவ்வாறு கூறினார் கார்ட்டூம் கர்தினால் Wako.
இன்னும், இக்கூட்டத்தில் பேசிய தென் சூடான் ஆயர் ருடோல்ப் டெங் மஜாக், தென் சூடான் தனி நாடாகப் பிரிவது, தனது வாழ்நாளில் நடக்கும் என்று நினைத்துப் பார்க்க முடியாத ஒரு விடயம் என்றும், ஆப்ரிக்காவிலும் வேறு கண்டங்களிலும் வாழும் திருச்சபை சூடானியர்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும், WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகள் அவையும் தென் சூடானுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
ஐ.நா. அமைதிகாப்புப் பணியின் ஏழாயிரம் இராணுவத்தினரும் 900 சர்வதேச அளவிலான காவல்துறைப் பணியாளரும் தென் சூடானில் இருந்து அந்நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவுவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. 
மேலும், தென் சூடான் சுதந்திர விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருக்கும் சர்வதேச காரித்தாஸ் பொதுச் செயலர் மைக்கிள் ராய் பேசுகையில், இந்த நாள் அம்மக்களுக்கு நம்பிக்கையின் நேரமாக இருக்கின்றது என்றார்.  
இந்தச் சுதந்திரத்திற்காக இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருப்பதையும், இன்னும் இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டுக் கட்டாயமாக வெளியேறியிருப்பதையும் ராய் நினைவுகூர்ந்தார்.

4. திருப்பீடமும் அஜர்பைஜானும் வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன

ஜூலை08,2011. மத்திய ஆசிய நாடான அஜர்பைஜானும் திருப்பீடமும் வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.
முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிற நாடுகளிலும் உடன்பாடுகள் ஏற்படுவதற்கு இது ஒரு முன்மாதிரிகைச் சட்டமாக அமையக்கூடும் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அஜர்பைஜான் குடியரசிலுள்ள கத்தோலிக்கத் திருச்சபை சட்டரீதியாகப் பாதுகாப்பைப் பெறும் எனவும் சமய சுதந்திரத்திற்கும் உறுதி வழங்கப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.
யுரேசியாவின் கவ்காசுஸ் பகுதியில் பெரிய நாடாக இருக்கும்  அஜர்பைஜானுக்கு வடக்கே இரஷ்யாவும் தெற்கே ஈரானும் எல்லைகளாக அமைந்துள்ளன. 1991ல் முன்னாள் சோவியத் யூனியனிடமிருந்து சுதந்திரமடைந்தது. அஜர்பைஜான் குடியரசு அதிகாரப்பூர்வமாக சமயச்சார்பற்றதாக இருந்தாலும் அந்நாட்டின் 99 விழுக்காட்டினர் முஸ்லீம்கள். சுமார் 400 பேரே கத்தோலிக்கர். 
தற்போது அஜர்பைஜானில் கத்தோலிக்கர் நல்ல முறையில் நடத்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

5. அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் இலத்தீன் அமெரிக்க மேய்ப்புப்பணிகளுக்கு 21 இலட்சம் டாலருக்கு மேற்பட்ட நிதியுதவி

ஜூலை08,2011. இலத்தீன் அமெரிக்காவின் 20 நாடுகளில் இடம் பெறும் மேய்ப்புப்பணிகளில் 86 திட்டங்களுக்கு உதவுவதற்கென, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் இலத்தீன் அமெரிக்காவுக்கான ஆணையம் 21 இலட்சம் டாலருக்கு மேற்பட்ட நிதியுதவிக்கு இசைவு தெரிவித்துள்ளது.
இந்நிதியுதவி குறித்துப் பேசிய இவ்வாணையத் தலைவர் பேராயர் ஹோசே கோமஸ், 2010ல் நிலநடுக்கங்களால் பாதிக்கப்ட்ட ஹெய்ட்டி மற்றும் சிலே நாடுகளுக்கு அதிக உதவிகளைச் செய்து வருவதாகக் கூறினார்.
கோப்ரே பிறரன்பு அன்னை கியூபாவின் பாதுகாவலியாக அறிவிக்கப்பட்டதன் 400ம் ஆண்டுக் கொண்டாட்டங்களுக்கும் அந்நாட்டின் நற்செய்திப்பணிக்கும் சிறப்பாக நிதியுதவி ஒதுக்கப்பட்டதாக பேராயர் அறிவித்தார்.
எல் சால்வதோர், அர்ஜெண்டினா, பெரு, கொலம்பியா போன்ற நாடுகளுக்கும் இவ்வுதவிகள் வழங்கப்படுகின்றன என்றார் லாஸ் ஆஞ்சலீஸ் பேராயர் கோமஸ். 

6. மத்திய பிரதேசத்தில் கிறிஸ்தவர்களின் கல்விப் பணிக்குப் பாராட்டு

ஜூலை08,2011. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் வழங்கி வரும் தரமான கல்விக்குப் பாராட்டுத் தெரிவித்த அதேவேளை முஸ்லீம் சமூகமும் அதேபோல் தரமான கல்வி வழங்குமாறு வலியுறுத்தினார் அம்மாநிலக் காங்கிரஸ் கட்சித் தலைவர் திக்விஜய் சிங்.
மத்திய பிரதேச மாநிலத்தில் 95 விழுக்காட்டுக்கு அதிகமானவர்கள் கல்வி கற்றவர்கள், இவர்களிடமிருந்து ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
முஸ்லீம்களும் கிறிஸ்தவர்கள் போல் தரமான கல்வி வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் என்று மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரான திக்விஜய் சிங் கூறினார்.
சிறுபான்மை மதத்தவர் தங்களது உரிமைகளின் பாதுகாப்புக்காக எடுக்கும் முயற்சிகளில் தான் ஆதரவு அளிப்பதாகவும் சிங் கூறினார்.

7. ஐரோப்பாவில் நிதிப் பிரச்சனையால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜூலை08,2011. ஐரோப்பாவில் வேலைவாய்ப்பின்மை, மற்றும் வருவாய்க் குறைவுப் பிரச்சனைகளால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை 2007ல் இருந்ததைவிட 2009ல் அதிகரித்திருப்பதாக ஆய்வாளர்கள் இவ்வெள்ளிக்கிழமை கூறினர்.
நிதி நெருக்கடியால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளாக, கிரேக்கத்தையும் அயர்லாந்தையும் குறிப்பிடும் அவ்வாய்வாளர்கள், 2007க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளன என்றும் கூறினர்.
வாகனங்களைப் பயன்படுத்தியோரின் எண்ணிக்கைக் குறைவே  இதற்குக் காரணமாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தற்கொலை விகிதம், கிரேக்கத்தில் 17 விழுக்காடும் அயர்லாந்தில் 13 விழுக்காடும் அதிகரித்ததாகவும் பத்து ஐரோப்பிய நாடுகளில் எடுத்த ஆய்வு தெரிவிக்கிறது.

8. காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி தர 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

ஜூலை08,2011. காஷ்மீரில் தீவிரவாதத்தின் பக்கம் இளைஞர்கள் சென்று விடாமல் தடுக்க அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும், அதற்காக இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவும் மத்திய அரசு முடிவு  செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளிப்பதற்காக காஷ்மீருக்கு சிறப்பு தொழில் நிதியுதவியாக 1,000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு இவ்வியாழனன்று இதற்கு ஒப்புதல் அளித்தது.
தேசிய திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் சேர்ந்து இளைஞர்களுக்கு  வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும். இளைஞர்களுக்கான பயணம் மற்றும் பராமரிப்புச் செலவு, தங்கும் செலவு ஆகியவற்றை மத்திய அரசு ஏற்கும். ஆரம்பத்தில் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களுக்கான உதவித் தொகையை கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏற்கும்.
அந்நிறுவனத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டால் உதவித் தொகையில் 50 விழுக்காடு திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...