1. சீனாவில் நடத்தப்படும் திருச்சபை சட்டத்துக்குப் புறம்பான ஆயர் திருநிலைப்பாடுகளுக்குத் திருத்தந்தை கண்டனம்
2. சட்டத்திற்குப் புறம்பான ஆயர் திருநிலைப்பாடுகள் உறவுகளைப் பின்னுக்குத் தள்ளுகின்றன – சீனப் பேராயர்
3. கோர் ஊனும் திருப்பீட அவை சொமாலியாவிற்கு எழுபதாயிரம் டாலரை அனுப்புகிறது
4. திருப்பீடம் : நியுயார்க்கில் இளையோர் குறித்த நிகழ்வு
5. தென்னாப்ரிக்காவில் எய்ட்ஸ் நோயை ஒழிப்பதில் வத்திக்கான் அமைப்பு முன்னணி
6. துனிசியாவில் சனநாயக அரசுக்கு கத்தோலிக்கத் திருச்சபை முழு ஆதரவு
7. அனைத்துலக நெல்சன் மண்டேலா தினம் – 67 நிமிட நடவடிக்கை
8. 'இலங்கை இறுதிப்போர் சம்பவங்கள் பற்றி ஆராய வேண்டும்' - இந்தியா
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. சீனாவில் நடத்தப்படும் திருச்சபை சட்டத்துக்குப் புறம்பான ஆயர் திருநிலைப்பாடுகளுக்குத் திருத்தந்தை கண்டனம்
ஜூலை 16,2011. திருத்தந்தையின் ஒப்புதலின்றி திருநிலைப்படுத்தப்பட்ட சீன ஆயரைக் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து விலக்குவதாக இச்சனிக்கிழமை திருப்பீடம் அறிவித்தது.
ஜூலை14, இவ்வியாழனன்று அருட்பணி Joseph Huang Bingzhang திருத்தந்தையின் ஒப்புதலின்றி திருநிலைப்படுத்தப்பட்டது குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீடம், இந்தத் திருநிலைப்பாட்டை ஏற்க வேண்டாமென்று திருப்பீடம் அக்குருவிடம் பலமுறைக் கேட்டிருந்தும் அவர் அதற்குப் பணியாததால் அவர் திருச்சபை சட்டம் 1382ன்படி திருச்சபையிலிருந்து விலக்கப்படுகிறார் என்று கூறியது.
அத்துடன், சீன அரசு, அந்நாட்டில் திருச்சபையை நடத்தும் முறை குறித்துத் திருத்தந்தை மிகுந்த கவலை அடைந்திருப்பதாகவும் தற்போதைய இன்னல்கள் கூடிய விரைவில் களையப்படும் என்று அவர் நம்புவதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது.
சில ஆயர்கள் இந்தத் திருநிலைப்பாட்டில் கலந்து கொள்ளமாட்டோம் என்ற பலவழிகளில் எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் அதில் கலந்து கொள்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர், இதற்கு இவர்கள் இறைவன் முன்னிலையிலும், அகிலத் திருச்சபையின் முன்னிலையிலும் பாராட்டைப் பெறுகிறார்கள் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
அத்துடன், இந்தத் தங்களது ஆயர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அருட்பணியாளர்கள், துறவிகள் மற்றும் விசுவாசிகளையும் பாராட்டுவதாக அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.
சீனக் கத்தோலிக்கர்கள் தங்களது மனசாட்சியைப் பின்பற்றிச் சுதந்திரமாகச் செயல்படவும் தூய பேதுருவின் வழிவருபவர் மற்றும் உலகளாவியத் திருச்சபையுடன் ஐக்கியமாக இருக்கவும் உரிமையைக் கொண்டுள்ளார்கள் என்றும் திருப்பீட அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
சீனாவில் 80 இலட்சம் முதல் ஒரு கோடியே 20 இலட்சம் வரையிலான கத்தோலிக்கர் உள்ளனர். இவர்கள் சீன அரசுக்குக் கீழ் இயங்கும் கத்தோலிக்கத் திருச்சபை, திருத்தந்தைக்கு விசுவாசமாக இருக்கும் மறைந்து வாழும் கத்தோலிக்கத் திருச்சபை என இரண்டு பிரிவுகளாகச் செயல்படுகின்றனர்.
2. சட்டத்திற்குப் புறம்பான ஆயர் திருநிலைப்பாடுகள் உறவுகளைப் பின்னுக்குத் தள்ளுகின்றன – சீனப் பேராயர்
ஜூலை 16,2011. சீனாவில் நடத்தப்படும் இவ்வாயர் திருநிலைப்பாடுகள் குறித்து கருத்துத் தெரிவித்த திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயச் செயலர் பேராயர் Savio Hon Tai-Fai, சீனாவின் இந்நடவடிக்கை, சீனாவுக்கும் வத்திக்கானுக்கும் இடையேயான உறவுகளைப் “பின்னுக்குத் தள்ளும் புதிய நடவடிக்கையாக” இருக்கின்றது என்றார்.
திருச்சபை அரசால் நிர்வாகம் செய்யப்பட வேண்டும் என்பதில் சீன அரசும் அரசியல்வாதிகளும் உறுதியாய் இருக்கின்றனர் என்று ஹாங்காக்கைச் சேர்ந்த பேராயர் Hon Tai-Fai, La Stampa என்ற இத்தாலிய நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
2010, நவம்பர் மற்றும் அண்மையில் நடந்துள்ள ஆயர் திருநிலைப்பாடுகள், 1950களில் இருந்த நிலைக்கு இட்டுச் செல்கின்றன என்றும் பேராயர் Hon Tai-Fai தெரிவித்தார்.
3. கோர் ஊனும் திருப்பீட அவை சொமாலியாவிற்கு எழுபதாயிரம் டாலரை அனுப்புகிறது
ஜூலை 16,2011. கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சொமாலியா நாடு மீது திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கொண்டுள்ள அக்கறை மற்றும் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் விதமாக அந்நாட்டிற்கு எழுபதாயிரம் டாலரை அனுப்புகிறது கோர் ஊனும் என்ற திருப்பீட பிறரன்பு அவை.
Mogadishu வில் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக இருக்கும் Djibouti ஆயர் Giorgio Bertin க்கு இந்நிதியுதவியை அனுப்பியுள்ளது இத்திருப்பீட அவை.
மேலும், கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சொமாலியா, எத்தியோப்பியா, கென்யா ஆகிய ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகளுக்குப் பிரிட்டனும் 5 கோடியே 22 இலட்சத்து 50 ஆயிரம் பவுண்டுகளை அனுப்புவதற்கு உறுதியளித்துள்ளது.
இந்த நிதியுதவியானது, சொமாலியாவில் புரதச்சத்தின்மையால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள சுமார் எழுபதாயிரம் சிறார் உட்பட அந்நாட்டின் ஐந்து இலட்சம் பேருக்கும் வழங்கப்படும் என்று பிரிட்டன் சர்வதேச வளர்ச்சித்துறை அறிவித்தது.
தென் சொமாலியாவில் உணவு உதவிகள் செல்வதற்கு இசுலாம் தீவிரவாதிகள் தடையாக இருப்பதால் அப்பகுதியில் உணவுப் பஞ்சம் கடுமையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் தற்சமயம் ஒரு கோடிப் பேர் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக உணவுத் திட்ட அமைப்பு அறிவித்தது.
4. திருப்பீடம் : நியுயார்க்கில் இளையோர் குறித்த நிகழ்வு
ஜூலை 16,2011. இளையோரைப் பாதுகாத்து மனித மாண்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இம்மாதத்தில் நியுயார்க்கில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது திருப்பீடம்.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உயர்மட்ட அவை இம்மாதத்தில் இளையோர் குறித்து கூட்டம் நடத்தவிருக்கும் அதேநேரத்தில் ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர்ப் பணிக்குழுவானது “இளையோர் பாதுகாப்பு மற்றும் மனித மாண்பை ஊக்குவித்தல்” என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர்ப் பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட், இம்மாதம் 24ம் தேதி மாலை திருக்குடும்ப ஆலயத்தில் திருப்பலி நிகழ்த்துவார். 25ம் தேதி திருப்பீடத்தின் இளையோர்க்கான நிகழ்வு நடைபெறும்.
5. தென்னாப்ரிக்காவில் எய்ட்ஸ் நோயை ஒழிப்பதில் வத்திக்கான் அமைப்பு முன்னணி
ஜூலை 16,2011. தென்னாப்ரிக்காவில் எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் வத்திக்கான் அமைப்பு முன்னணியில் இருப்பதாகத் திருப்பீட நலவாழ்வு அவைச் செயலர் பேரருட்திரு Jean-Marie Mupendawatu தெரிவித்தார்.
2004ல் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் நிறுவப்பட்ட நல்ல சமாரித்தன் அமைப்பு, எய்ட்ஸ் ஒழிப்பு நடவடிக்கையில் முன்னணியில் இருப்பதாக, L’Osservatore Romano வத்திக்கான் தினத்தாளுக்கு அளித்த பேட்டியில் விளக்கினார் பேரருட்திரு Mupendawatu.
எய்ட்ஸ் நோய்க் கிருமிகளை அழிக்கும் மருந்துகளை இலவசமாக வழங்குவதே இந்த வத்திக்கான் அமைப்பின் நோக்கம் எனத் தெரிவித்த பேரருட்திரு Mupendawatu, இதனால் எய்ட்ஸ் நோயாளிகளின் ஆயுட்காலம் 11 ஆண்டுகளிலிருந்து 22 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கின்றது என்ற ஐ.நா. அதிகாரிகளின் கூற்றையும் தெரியப்படுத்தினார்.
2010ம் ஆண்டின் இறுதியில் உலகில் 3 கோடியே 40 இலட்சம் பேர் எய்ட்ஸ் நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 5 விழுக்காட்டினரே போதுமான உதவிகளைப் பெற்றனர்.
2015க்குள் இதனால் தாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை வெகுவாய்க் குறைப்பதற்கு உலக நலவாழ்வு நிறுவனம் முயற்சித்து வருகிறது.
6. துனிசியாவில் சனநாயக அரசுக்கு கத்தோலிக்கத் திருச்சபை முழு ஆதரவு
ஜூலை 16,2011. வட ஆப்ரிக்க நாடான துனிசியாவில் இடம் பெறும் சனநாயகத்தை நோக்கிய மாற்றங்களுக்குக் கத்தோலிக்கத் திருச்சபை தனது முழு ஆதரவையும் வழங்குகின்றது என்று துனிஸ் பேராயர் Maroun Lahham கூறினார்.
கடந்த ஜனவரியில் ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்று தற்சமயம் புதிய சனநாயக அரசியல் அமைப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் துனிசியாவில் முழு சமய சுதந்திரம் வழங்கப்படும் என்ற தனது நம்பிக்கையையும் பேராயர் தெரிவித்துள்ளார்.
துனிசியாவில் இடம் பெற்று வரும் சனநாயக மாற்றங்கள் குறித்து மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்ட பேராயர் Lahham, இசுலாம் மதமும் நாடும் தனித்தனியாகச் செயல்படும் என்ற தனது எதிர்பார்ப்பையும் வெளியிட்டார்.
துனிசியாவிலுள்ள சுமார் 22 ஆயிரம் கத்தோலிக்கரில் ஏறத்தாழ அனைவருமே வெளிநாட்டவர்.
7. அனைத்துலக நெல்சன் மண்டேலா தினம் – 67 நிமிட நடவடிக்கை
ஜூலை 16,2011. நெல்சன் மண்டேலா மனித சமுதாயத்திற்கு 67 வருடங்கள் சேவை செய்ததைக் கவுரவிக்கும் விதமாக ஒவ்வொருவரும் தங்களது நேரத்தில் 67 நிமிடங்களைப் பொதுநலச் சேவைக்காகச் செலவழிக்குமாறு கேட்டுள்ளார் ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன்.
அனைத்துலக நெல்சன் மண்டேலா தினம் ஜூலை 18ம் தேதி கடைபிடிக்கப்படுவதையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன் இவ்வாறு கேட்டுக் கொண்டார்.
பிறருக்குச் சேவை செய்யுங்கள், நல்மாற்றத்திற்குத் தூண்டுதலாக இருங்கள் என்றும் வலியுறுத்தியுள்ள பான் கி மூன், நம்மால் உலகை மாற்ற முடியும், அதனை நல்லதோர் உலகாக அமைப்பது நம் கையில் இருக்கின்றது என்றும் கூறியுள்ளார்.
இரண்டாவது அனைத்துலக நெல்சன் மண்டேலா தினமாகிய இவ்வாண்டு ஜூலை 18ம் தேதி நெல்சன் மண்டேலா தனது 93வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தென்னாப்ரிக்காவில் நிறவெறியை எதிர்த்ததால் 27 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் மண்டேலா.
8. 'இலங்கை இறுதிப்போர் சம்பவங்கள் பற்றி ஆராய வேண்டும்' - இந்தியா
No comments:
Post a Comment