Wednesday, 13 July 2011

Catholic News - hottest and latest - 12 July 2011

1. கடவுளை அறிவதற்கானப் பற்றாக்குறை ஏழை நாடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது கர்தினால் சாரா

2. சீரோ மலபார் ரீதி மறைபரப்பு ஆண்டு

3. அனைத்துக் கத்தோலிக்கக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்க கர்நூல் மறைமாவட்டம் திட்டம்

4. நல்ல உயரியச் சிகிச்சைகளைக் குறைந்த செலவில் வழங்குவதே கத்தோலிக்கரின் நோக்கம் - பேராயர் சூசை பாக்கியம்

5. கோவாவில் குழந்தைகள் மீதான பாலின வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து கவலை கோவா பேராயர்

6. கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் குழந்தைத் திருமணம் : யுனிசெப்

7. உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

8. வீணாகும் 60 சதவீத உணவுப் பொருள் : மத்திய வர்த்தக அமைச்சகம் தகவல்
  

----------------------------------------------------------------------------------------------------------------

1. கடவுளை அறிவதற்கானப் பற்றாக்குறை ஏழை நாடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது கர்தினால் சாரா

ஜூலை12,2011. உணவு, உடைகள் ஆகியவைகளின் பற்றாக்குறையைவிட கடவுளை அறிவதற்கானப் பற்றாக்குறை ஏழை நாடுகளில் அதிகமாகக் காணப்படுவதாக எடுத்துரைத்தார் திருச்சபையின் பிறரன்புப் பணிகளுக்கான 'கோர் ஊனும்' அவையின் தலைவர் கர்தினால் இராபர்ட் சாரா.
ஏழை நாடுகளில் அதிகம் அதிகமாகத் தேவைப்படுவது தொழில்நுட்பக் கலைஞர்கள் அல்ல, மாறாக, மறைப்பணித் தளங்களில் பணிபுரிவோரின் கிறிஸ்தவச் சாட்சியங்களே, ஏனெனில் பிறரன்பு என்பது கடவுளிடமிருந்தே வருகிறது என்றார் அவர்.
உணவு மற்றும் உடைகளின் பற்றாக்குறையல்ல, மாறாக, கடவுளுக்கான இடத்தை சமூகத்தில் வழங்காமல் இருப்பதே துன்பங்களுக்குக் காரணமாக இருக்கின்றது என்பதையும் சுட்டிக் காட்டிய கர்தினால், ஆப்ரிக்காவில் உள்நாட்டு மோதல்கள் என்பவை, சட்டமற்ற ஒரு சுரண்டலுக்கு இட்டுச் செல்வது குறித்த கவலையையும் வெளியிட்டார்.

2. சீரோ மலபார் ரீதி மறைபரப்பு ஆண்டு

ஜூலை12,2011. வரும் ஆகஸ்ட் 15 முதல் 12 மாதங்கள் 'மறைபரப்பு ஆண்டு' என‌க் கொண்டாடப்படும் என்றும், இக்காலக் கட்டத்தில் அனைத்து விசுவாசிகளும் மறைபரப்புப் பணிகளில் தங்களை ஈடுபடுத்த வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார் சீரோ மலபார் ரீதி கத்தோலிக்கத் திருச்சபையின் புதிய தலைவர் பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி.
வட இந்தியாவில் நற்செய்தி அறிவிப்புப் பணியை கேரள கத்தோலிக்கத் திருச்சபை எடுத்து நடத்தத் துவங்கி 50 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளதையொட்டி இதனை அறிவித்த பேராயர், திருமுழுக்குப் பெற்றுள்ள ஒவ்வொருவருக்கும் நற்செய்தி அறிவிப்புப்பணிக் கடமை இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.
மறைப்பணி தொடர்புடைய அனைத்துக் கடமைகளும் திருச்சபையின் ஆன்மீகப் புதுப்பித்தலை நோக்கமாகக் கொண்டவை என்பதையும் தன் மேய்ப்புபணி சுற்றறிக்கையில் எடுத்தியம்பியுள்ளார் பேராயர் ஆலஞ்சேரி.

3. அனைத்துக் கத்தோலிக்கக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்க கர்நூல் மறைமாவட்டம் திட்டம்

ஜூலை12,2011. கர்நூல் மறைமாவட்டத்தின் அனைத்துக் கத்தோலிக்கக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்குவதை ஒரு குறிக்கோளாகக் கொண்டு திட்டங்களைத் தீட்டியுள்ளது அம்மறைமாவட்டம்.
தன் மறைமாவட்டத்தின் கல்வி நிறுவனங்களின் 102 தலைவர்களை அண்மையில் சந்தித்து இது குறித்து விவாதித்த ஆயர் அந்தோனி பூலா, பொருளாதார உதவிகள் ஒருவித தற்காலிக நிவாரணத்தையே வழங்க முடிகின்ற வேளை, கல்வியே வேலை வாய்ப்பையும் சமூக அந்தஸ்தையும் தருவதுடன் வருங்கால சமூகம் தளைக்கவும் உதவுகிறது என்றார்.
எந்த ஒரு கத்தோலிக்கக் குழந்தைக்கும் கல்விக்கூடங்களில் அனுமதி மறுக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்திய ஆயர் பூலா, கல்விக்கட்டணச் சலுகைகளையும் ஊக்குவித்தார்.
தங்கள் கிராமங்களில் கல்வி நிலையங்களைக் கொண்டிராத கத்தோலிக்க மாணவர்களுக்கு ஏனைய இடங்களில் தங்கிப் படிப்பதற்கு ஆண்டிற்கு 1000 ரூபாயே வசூலிக்கப்படும் எனவும் மீதியை மறைமாவட்டம் வழங்கும் எனவும் தெரிவித்தார் கர்நூல் ஆயர் பூலா.

4. நல்ல உயரியச் சிகிச்சைகளைக் குறைந்த செலவில் வழங்குவதே கத்தோலிக்கரின் நோக்கம் - பேராயர் சூசை பாக்கியம்

ஜூலை12,2011. ந‌ல்ல உயரியச் சிகிச்சைகளை குறைந்த செலவில் வழங்குவதே கத்தோலிக்கர்களின் நோக்கமாக இருக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் திருவனந்தபுரம் பேராயர் சூசை பாக்கியம்.
ஊழல் மற்றும் சுரண்டல் பக்கம் செல்லாமல் நன்மைகளை ஆற்றுவதன் மூலமே உண்மையான மகிழ்வையும் மனநிறைவையும் பெறமுடியும் என்று இத்தகைய சமூகப் பணிகள் காட்டி நிற்கின்றன என்ற பேராயர், இன்றையக் காலக்கட்டத்தில் சமூகப்பணிகளில் கத்தோலிக்க இளையோர் காட்டி வரும் ஆர்வத்தையும் பாராட்டினார்.
மருத்துவக்கல்லூரி மருத்துமனையின் நோயாளிகளுக்கு கடந்த 14 வருடங்களாக குமாரபுரம் கத்தோலிக்கப் பங்குத்தளம் இலவச உணவு வழங்கி வருவதையும் சுட்டிக்காட்டினார் பேராயர் சூசை பாக்கியம்.

5. கோவாவில் குழந்தைகள் மீதான பாலின வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து கவலை கோவா பேராயர்

ஜூலை12,2011. குழந்தைகள் பாலின முறையில் சுரண்டப்படுவதை தடுக்கும் நோக்குடன் கோவா அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் கோவாப் பேராயர் பிலிப்பே நேரி ஃபெராவோ.
குழந்தைகளைப் பாலின முறையில் வியாபாரப் பொருளாக பயன்படுத்துவது குறித்து தாய்லாந்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், அதில் ஈடுபட்டுள்ளோர் ஆசியாவில் வேறு இடங்களைத் தேடி வருவதாக உரைத்த பேராயர், பாலின வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட‌ குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவிலேயே அதிகம் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவில் 15 இலட்சம் சிறார்கள் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என்ற பேராயர் ஃபெராவோ, கோவாவில் குழந்தைகள் மீதான பாலின வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்தக் கவலையையும் வெளியிட்டார்.

6. கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் குழந்தைத் திருமணம் : யுனிசெப்

ஜூலை12,2011கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் 42 விழுக்காடாக இருக்கும் நிலையில், தாய், சேய் மரணம் அதிகளவில் நடப்பதாக, யுனிசெப் நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் அதிகளவு குழந்தைத் திருமணங்கள் நடக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குழந்தைத் திருமணத்தைத் தடுக்க, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகமும் யுனிசெப் நிறுவனமும் இணைந்து, குழந்தை நேய கிராமத் திட்டத்தை துவக்கி, நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
குழந்தைத் திருமணத்தால், பெண்களுக்கு, 60 விழுக்காடு இரத்த சோகை நோய், மகப்பேறு மரணம், குழந்தை பிறப்பில் சிக்கல், குறையுடன் குழந்தை பிறப்பு, கர்ப்பப்பை வளர்ச்சியின்மை ஆகியவை ஏற்படுகிறது என்ற யுனிசெப் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், குழந்தைத் திருமணம் செய்பவர்கள், மற்றும் அதற்கு உடந்தையாக இருப்பவர்களுக்கு, மூன்றாண்டு சிறை தண்டனையும், ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கச் சட்டத்தில் வழி வகுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

7. உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஜூலை12,2011. ஏழைகளுக்கு மானிய விலையில் உணவுத் தானியங்கள் கிடைக்கும் வகையில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சட்டத்தின் மூலம் நாடு முழவதும் வறுமைக் ‌கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளியவர்கள் 75 சதவீதத்தினருக்கும், புறநகர்ப் பகுதியில் உள்ள ஏழைகளுக்கும் மானிய விலையில் உணவு தானியம் கிடைக்கும்.
வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ள இச்சட்டத்தின்படி, வறுமைக் கோட்டிற்குக்கீ்ழ் உள்ளவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு மூன்று ரூபாய்க்கு ஏழு கிலோ அரிசியும், இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ கோதுமையும் கிடைக்கும் என்றும், பொதுப் பிரிவினருக்கு மாதம் 3 அல்லது 4 கிலோ அரிசியும் கிடைக்கும் எனவும், விவசாயிகளின் உற்பத்தி நெல்லுக்கு குறைந்த ஆதரவு விலை கிடைக்க வகை செய்யப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

8. வீணாகும் 60 சதவீத உணவுப் பொருள் : மத்திய வர்த்தக அமைச்சகம் தகவல்

ஜூலை12,2011. இந்தியாவில் பழம், பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களைப் பதப்படுத்தாததால், 60 சதவீதம் வரை வீணாகிறது  என மத்திய வர்த்தக அமைச்சகத்தின் அதிகாரி என்.சி. சாகா தெரிவித்தார்.
மதுரையில் நிருபர்களிடம் பேசிய சாகா, உணவுப் பொருட்களை பதப்படுத்துவதால் உணவுப் பஞ்சத்தையும், விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த முடியும். உணவுப் பொருட்களுக்கான முறையான பராமரிப்பு, பாதுகாப்பு இல்லாததால், 60 சதவீதம் வரை வீணாகிறது. இதனால், நாட்டின் பொருளாதாரம் ஆண்டு தோறும் இழப்பை சந்தித்து வருகிறது எனக் கூறினார்.
 

No comments:

Post a Comment