Thursday, 7 July 2011

Catholic News - hottest and latest - 06 July 2011

1. சுற்றுலாப் பயணிகள், தாங்கள் செல்லும் நாடுகளின் பழக்கவழக்கங்களை முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும் - திருப்பீட குடியேற்றதாரர் அவை

2. சீனாவிலுள்ள கத்தோலிக்கத் திருச்சபை, திருச்சபையின் கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் - திருப்பீடம்

3. ஜிம்பாபுவேயில் அருட்பணியாளர்கள் தாக்கப்படக்கூடும், திருச்சபையின் நீதி அவை கவலை

4. கொலம்பியாவில் புரட்சிக் குழுக்களுடன் அமைதிக்கானப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு கத்தோலிக்கத் திருச்சபை தயாராகவுள்ளது

5. கொரியத் தீபகற்பத்திற்கு உணவுப் பாதுகாப்பு ஒரு சவாலாக இருக்கின்றது ஆயர் மத்தியாஸ்

6. மியான்மார் அகதிகளுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்கி வருகிறது திருச்சபை

7. காவல்துறை, நீதிமன்றங்கள், நீதித்துறை போன்றவை பெண்கள் விடயத்தில் தவறுகின்றன ஐ.நா.

8. அபுதாபி அனைத்துலக தீவிரவாத எதிர்ப்பு மாநாடு

----------------------------------------------------------------------------------------------------------------

1. சுற்றுலாப் பயணிகள், தாங்கள் செல்லும் நாடுகளின் பழக்கவழக்கங்களை முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும் - திருப்பீட குடியேற்றதாரர் அவை

ஜூலை06,2011. சுற்றுலாப் பயணிகள் புனித இடங்களைப் பார்வையிட வரும் போது, அவ்விடங்கள் இயேசு கிறிஸ்துவை அறிவிப்பதற்கு வெளிப்படையான தளமாக அமைகின்றன என்று திருப்பீடம் கூறியது.
வருகிற செப்டம்பர் 27ம் தேதி சிறப்பிக்கப்படும் அனைத்துலக சுற்றுலா தினத்தை முன்னிட்டுச் செய்தி வெளியிட்ட திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்வோர்க்கான அவை, சுற்றுலாப் பயணிகள் புனித இடங்களுக்கு வரும் போது அவர்கள் கிறிஸ்துவை அதிகமாக அறிந்து அன்பு செய்வதற்கு நாம் எவ்வாறு உதவு முடியும் என்பதையும் விளக்கியுள்ளது.
இக்காலத்தில் ஒன்பது கோடிக்கு மேற்பட்ட மக்கள் சர்வதேச அளவில் பயணம் செய்கின்றனர் என்றும், இவ்வகையில் சுற்றுலா, கலாச்சாரங்களுக்கிடையே இருக்கும் தடைகளை உடைத்து சகிப்புத்தன்மை, மதிப்பு, ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றை வளர்க்கின்றது என்றும் அச்செய்தி கூறுகின்றது.
பிளவுண்டுள்ள இன்றைய நமது உலகு அமைதியான ஓர் எதிர்காலம் நோக்கிச் செல்வதற்கு இம்மதிப்பீடுகள் படிக்கற்களாக அமைகின்றன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
சுற்றுலா செல்லும் நாடுகளின் தனிப்பட்ட இயல்பு, சட்டங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை மதிக்கும் வகையில் சுற்றுலாக்களைத் தயார் செய்பவர்கள் பயணிகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும், அதேசமயம், சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் நாடுகளும் அவர்களின் எதிர்பார்ப்புக்களையும் வாழ்க்கைமுறையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று அச்செய்தி கூறுகிறது.
2011ம் ஆண்டின் சுற்றுலா தினத்திற்குரிய செய்தியில் திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்வோர்க்கான அவைத் தலைவர் பேராயர் அந்தோணியோ மரிய வெலியோ, செயலர் ஆயர் ஜோசப் கலத்திப்பரம்பில் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

2. சீனாவிலுள்ள கத்தோலிக்கத் திருச்சபை, திருச்சபையின் கோட்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் - திருப்பீடம்

ஜூலை06,2011. கத்தோலிக்கமாக இருக்கும் திருச்சபையைச் சீனா விரும்பினால் அது திருச்சபையின் கோட்பாடுகளையும் ஒழுங்கு விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று திருப்பீடம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
சீனாவில் கடந்த மாதம் 29ம் தேதி அருட்பணி பால் லெய் ஷியின், திருத்தந்தையின் ஒப்புதலின்றி ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டதற்குப் பதிலளிக்கும் விதமாக இந்த அறிக்கையை வெளியிட்டது திருப்பீடம்.
இதேபோன்ற ஆயர் திருநிலைப்பாடு, கடந்த நவம்பரிலும் இடம் பெற்றது.
அருட்பணி பால் லெய் ஷியின், ஆயராகப் பணியாற்றுவதற்குரிய நபர் என்பது கனமான காரணங்களினிமித்தம் திருப்பீடத்தால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாக இருக்கின்றது என்பது, சில காலத்திற்கு முன்னரே அவருக்கு அறிவிக்கப்பட்டது என்பதையும் அவ்வறிக்கைச் சுட்டிக் காட்டுகிறது.
திருத்தந்தையின் ஒப்புதலின்றி நடைபெற்றுள்ள லெய் ஷியினின் ஆயர் திருநிலைப்பாடு, திருச்சபை சட்டத்திற்குப் புறம்பானது, எனவே லெய் ஷியின், கத்தோலிக்க மறைமாவட்டத்தை நிர்வாகம் செய்வதற்கு எந்தவித அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை, இவர் லெஷென் மறைமாவட்ட ஆயர் என்பதைத் திருப்பீடம் அங்கீகரிக்கவில்லை என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
திருச்சபை சட்டம் 1382ன்படி, திருத்தந்தையின் ஒப்புதலின்றி ஒருவரை ஆயராகத் திருநிலைப்படுத்தும் ஓர் ஆயரும், அந்த ஆயர் திருநிலைப்பாட்டை பெறும் நபரும் திருச்சபைக்குப் புறம்பாக்கப்படுகின்றனர் என்பதையும் அவ்வறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது.
சீனாவிலுள்ள கத்தோலிக்கத் திருச்சபை மீது திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் என்பதும், கடந்த மே 24ம் தேதி சீனத் திருச்சபைக்காகச் சிறப்பாகச் செபிப்பதற்குத் திருத்தந்தை அழைப்பு விடுத்து செபித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3. ஜிம்பாபுவேயில் அருட்பணியாளர்கள் தாக்கப்படக்கூடும், திருச்சபையின் நீதி அவை கவலை

ஜூலை06,2011. ஜிம்பாபுவே தலைநகர் ஹராரேயில் இடம் பெறும் அரசியல் நோக்குடைய பூசல்கள் நிறுத்தப்படுவதற்கு அரசியல் தலைவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபையின் நீதி மற்றும் அமைதி அவை அண்மையில் அறிக்கை வெளியிட்டதையடுத்து அருட்பணியாளர்கள் தாக்கப்படக்கூடும் என்ற அச்சத்தை வெளியிட்டுள்ளார் அவ்வவை இயக்குனர் அலாய் ஷாம்பும்பா.
ஆப்ரிக்க நாடான ஜிம்பாபுவேயின் அரசியல் சகிப்பற்றதன்மைக்கு எதிராக அந்நாட்டு ஆயர்கள் இவ்வாண்டின் தொடக்கத்தில் வெளிப்படையாய்ப் பேசியதற்குப் பின்னர் ஆயர்களும் அருட்பணியாளர்களும் குறிவைக்கப்பட்டனர், அதே நிலைமை தற்போதும் ஏற்படலாம் என்று ஷாம்பும்பா, அமெரிக்கக் கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
சனநாயக உரிமைகளை எதிர்க்கும் அரசியல் ஆதரவுடைய குழுக்கள் நடத்தும் மோதல்களில் சிக்கிவிடுவதைத் தவிர்க்கும் நோக்கத்தில், சில ஆண்கள் தங்கள் குடும்பங்களுக்கு இரவு நேரங்களில் இரகசியமாகச் செல்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
ஜிம்பாபுவேயில் பதிவு செய்யப்பட்ட சுமார் 55 இலட்சம் வாக்காளர்களில் ஏறக்குறைய 27 விழுக்காட்டினர் இறந்து விட்டனர் எனவும், இன்னும் பலர் வாக்களிப்பதற்கான வயது வரம்புக்குக் குறைவானவர்கள் எனவும், பலர் தங்கள் பெயர்களை ஒரு மாவட்டத்திற்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

4. கொலம்பியாவில் புரட்சிக் குழுக்களுடன் அமைதிக்கானப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு கத்தோலிக்கத் திருச்சபை தயாராகவுள்ளது

ஜூலை06,2011. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அமைதிக்கானப் பேச்சுவார்த்தைகளில் அரசுக்கும் கெரில்லாக் குழுக்களுக்குமிடையே நடுநிலை வகி்ப்பதற்கு அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபை முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொலம்பியாவின் FARC புரட்சிக்குழுத் தலைவர் Cano எனப்படும் Guillermo Leon Sanchez Vargas ஐ பிடிப்பதற்குத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு, அத்தலைவர் அதிகாரிகளிடம் சரணடையுமாறு கொலம்பிய ஆயர் பேரவைச் செயலர் ஆயர் ஹூவான் விசென்த்தே கோர்தோபா அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன், இந்த நீண்டகாலக் கெரில்லாப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்தில் அரசுக்கும் கெரில்லாக் குழுக்களுக்குமிடையே நடுநிலை வகி்ப்பதற்கும் ஆயர் முன்வந்துள்ளார்.
கொலம்பியாவில் ஏறக்குறைய அரை நூற்றாண்டாக இடம் பெற்று வரும் இந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வருவதற்கு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ரூபன் சலசாரும் அழைப்பு விடுத்துள்ளார்.
கொலம்பியாவில் இடம் பெற்று வரும் இந்தக் கெரில்லாப் போர் இலத்தீன் அமெரிக்காவிலே நீண்டகாலமாக இடம் பெற்று வரும் போர் என்று கூறப்படுகின்றது.

5. கொரியத் தீபகற்பத்திற்கு உணவுப் பாதுகாப்பு ஒரு சவாலாக இருக்கின்றது ஆயர் மத்தியாஸ்

ஜூலை06,2011. தாராளமயமாக்கப்பட்ட உலகப் பொருளாதாரம், உலகளாவிய வெப்பநிலை மாற்றம், பிரச்சனைக்குரிய நான்கு நதிகள் திட்டம் ஆகியவற்றால் உணவுப் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளது என்று தென் கொரிய ஆயர் ஒருவர் தனது அண்மை அறிக்கையில் குறை கூறியுள்ளார்.
உலகில் ஏறக்குறைய நூறு கோடிப்பேர் பசியால் வாடுகின்றனர் என்றுரைத்த ஆயர் Matthias Ri Ioung-hoon, வட கொரியாவுடன் தொடர்ந்து இடம் பெற்று வரும் பதட்டநிலைகளால் தென் கொரியா உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கிறது என்றார்.
தென் கொரியாவில் இம்மாதம் 17ம் தேதி விவிசாயிகள் ஞாயிறு கடைபிடிக்கப்படுவதையொட்டி அறிக்கை வெளியிட்ட ஆயர் மத்தியாஸ், உணவு இறக்குமதிகளைப் போர் தடை செய்தால் நான்கில் மூன்று பகுதி தென் கொரியர்கள், தங்கள் வாழ்க்கைக்காக உணவைச் சேமித்து வைக்க முடியாது என்று கூறினார். 
தென் கொரியாவில் கடந்த ஆண்டில் 26.7 விழுக்காட்டு விவசாயிகள் மட்டுமே தன்னிறைவோடு வாழ்ந்தனர் என்றும் ஆயர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

6. மியான்மார் அகதிகளுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்கி வருகிறது திருச்சபை

ஜூலை06,2011. மியான்மார் அரசுக்கும் KIA என்ற Kachin புரட்சிப் படைக்கும் இடையே நடை பெற்று வரும் சண்டையில் அகதிகளான மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்கி வருகிறது மியான்மார் திருச்சபை.
Kachin மாநிலத்தில் அகதிகளாகியுள்ள மக்களுக்கு அரிசி, மருந்துகள் மற்றும் பிற உணவுப் பொருட்களை அளித்து வருகிறது திருச்சபை.
சீன எல்லைப்புறத்திலுள்ள ஐந்து பங்குகள், 6,500க்கும் மேற்பட்ட அகதிகளுக்கு அடிப்படை நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன.

7. காவல்துறை, நீதிமன்றங்கள், நீதித்துறை போன்றவை பெண்கள் விடயத்தில் தவறுகின்றன ஐ.நா.

ஜூலை06,2011. உலகில் வேலை செய்யும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பற்ற வேலைகளில் உள்ளனர், இவர்களுக்குப் பல நேரங்களில் தொழிற்சட்டங்களின் பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றது என்று ஐ.நா.வின் புதிய பெண்கள் நிறுவனம் வெளியிட்ட முதல் அறிக்கை கூறுகின்றது.
வீட்டு வன்முறை 125 நாடுகளில் சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தாலும், இத்தகைய வன்முறை, குற்றம் என்று கணிக்கப்படாத நாடுகளில் அறுபது கோடியே முப்பது இலட்சம் பெண்கள் வாழ்கின்றனர், சட்ட அமைப்பாளர்களில் குறைந்தது முப்பது விழுக்காட்டினரைச் பெண்களாகக் கொண்ட நாடாளுமன்றங்கள் 28 நாடுகளில் மட்டுமே இருக்கின்றன என்று அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.
உலகப் பெண்களின் முன்னேற்றம் : நீதிக்கான தேடலில் என்ற தலைப்பில் ஐ.நா.பெண்கள் நிறுவனம் இப்புதனன்று வெளியிட்ட 169 பக்க அறிக்கையில், 139 நாடுகளும் பிரதேசங்களும் அரசியல் அமைப்புகளில் பாலினச் சமத்துவத்திற்கு உறுதி அளித்துள்ளன என்று கூறியது.
53 விழுக்காட்டு வேலை செய்யும் பெண்கள், அதாவது சுமார் 60 கோடிப் பேர் தொழிற்சட்டங்களால் பாதுகாக்கப்படாத நிலையில் உள்ளனர் எனவும், பெண்கள் சார்ந்த சட்டங்கள் தாளில் எழுதப்பட்டவைகளாக மட்டுமே இருக்கின்றன எனப் பல பெண்கள் உணருவதாகவும் அவ்வறிக்கை குறை கூறுகிறது.

8. அபுதாபி அனைத்துலக தீவிரவாத எதிர்ப்பு மாநாடு

ஜூலை06,2011. பயங்கரவாதத்துக்கு எதிரான மூன்று நாள் அனைத்துலக மாநாடு அபு தாபியில் வரும் அக்டோபர் 30ம் தொடங்கவுள்ளது.
பயங்கரவாதம் இன்று பல நாடுகளிலும் பரவியுள்ளது. இதனால் அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது குறித்து உலக நாடுகள் பல உத்திகளை வகுத்து வருகின்றன.
இந்நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிராக மூன்று நாள் அனைத்துலக மாநாடு அபுதாபியில் இவ்வாண்டு அக்டோபர் 30ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 2-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது, தாக்குதல் நடைபெற்றால் அதை எவ்வாறு வெற்றிகரமாக முறியடிப்பது உள்ளிட்டவை குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளதாக மாநாடு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
புவியியல் அமைப்பின்படி முக்கிய இடத்தில் அமைந்துள்ள துபை பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உன்னத பங்காற்றி வருவதாகவும் அவர்கள் கூறினர்.
பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச மாநாட்டில், உலக நாடுகளிலிருந்து பாதுகாப்பு நிபுணர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் பங்கேற்க உள்ளனர்.
இணையளதளங்கள் மூலம் வரும் அச்சுறுத்தல்கள், பொதுமக்கள், தனிநபர் பாதுகாப்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், அணுமின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களைப் பயங்கரவாதிகளின் தாக்குதலிருந்து காப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள், புதிய தொழில்நுட்பங்கள், உத்திகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் மாநாடு அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
தரை, வான் மற்றும் கடல்வழித் தாக்குதல்கள், புலனாய்வுத் தகவல்கள் சேகரிப்பு மற்றும் பரிமாற்றம் உள்ளிட்டவை குறித்தும் இதில் விவாதிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment