Thursday, 21 July 2011

Catholic News - hottest and latest - 18 July 2011

1. திருத்தந்தை, மலேசியப் பிரதமர் சந்திப்பு

2. திருத்தந்தையின் மூவேளை செப உரை

3. சொமாலிய உதவிகளுக்கு திருத்தந்தையின் விண்ணப்பம்

4. கத்தோலிக்கப் பள்ளிகளின் நிர்வாகத்தில் தலையிடுவதை மத்திய பிரதேச அரசு நிறுத்தவேண்டும் போபால் பேராயர்

5. ஒரு மாதத்தில் மூன்று காரித்தாஸ் பணியாளர்கள் கொலம்பியாவில் கொலை

6. பத்து ஆண்டுகளில் 15.5 இலட்சம் கோடி ரூபாய் ஊழல்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை, மலேசியப் பிரதமர் சந்திப்பு

ஜூலை 18, 2011.  இத்திங்கள் காலை திருத்தந்தையை அவரின் காஸ்தல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்தில் சந்தித்து உரையாடினார் மலேசிய பிரதமர் Najib Bin Abdul Razak.
திருத்தந்தையைத் தனியாகச் சந்தித்து உரையாடிய பின், திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுடன் ஆன திருப்பீட உறவுகளுக்கான செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்து இன்றைய உலகச் சூழல்கள் குறித்து கலந்துரையாடினார் பிரதமர்.
திருப்பீடத்திற்கும் மலேசியாவிற்கும் இடையேயான உறவு முன்னேற்றங்கள், அரசியல் உறவை நிலைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இன்றைய உலகின் அரசியல் மற்றும் சமூகச்சூழல்கள், குறிப்பாக ஆசிய நிலைகள், அமைதியையும் நீதியையும் மேம்படுத்தும் நோக்கிலான கலாச்சாரங்களிடையேயான மற்றும் மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளின் அவசியம் போன்றவை குறித்தும் இச்சந்திப்பின்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

2. திருத்தந்தையின் மூவேளை செப உரை

ஜூலை 18, 2011.  தீமைகளுக்கு எதிரானப் போராட்டத்தில் பொறுமை காப்பதன் அவசியம் குறித்து இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்தியம்பினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
நல்விதைகளும் களைகளும் பற்றிய இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து தன் கோடை விடுமுறை இல்லம் இருக்கும் காஸ்தல் கன்தோல்ஃபோவிலிருந்து உரை வழங்கிய திருத்தந்தை, நம்முள் விதைக்கப்பட்டுள்ள மிக இரகசியமான மற்றும் சிறிய விதை, அடக்கி வைக்க முடியாத உயிர் சக்தியைத் தன்னுள் கொண்டுள்ளது என்றார். இறைவனின் திட்டத்திற்கு ஏற்றபடி வாழ்வின் நிலத்தில் பயிர்செய்யப்படும் இவ்விதை அனைத்துத் தடைகளையும் தாண்டிப் பலன் தரும் என்றார். முதலில் களைகள் போல் தோன்றுபவை பின்னர் பலன் தரும் கோதுமைப் பயிர்களாக மாறும் என, புனித அகுஸ்தீனார் இந்த உவமை குறித்து எடுத்துரைத்துள்ளதையும் சுட்டிக்காட்டிய பாப்பிறை, தீமையின் விதைகள் நம்முள் முளைவிடாமல் இருக்க இறைவன் மீதான விசுவாசத்தை வளர்க்கவேண்டியதன் அவசியத்தையும் எடுத்தியம்பினார்.
நன்மை நிரம்பிய தந்தையின் பிள்ளைகளாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் அவரைப் போல் செயல்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன் வைத்தார் பாப்பிறை.

3. சொமாலிய உதவிகளுக்கு திருத்தந்தையின் விண்ணப்பம்

ஜூலை 18, 2011.  காஸ்தல் கன்தோல்ஃபோ விடுமுறை இல்லத்திலிருந்து வழங்கிய இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், துன்புறும் சொமாலியா நாட்டின் சர்வதேச அளவிலான ஒருமைப்பாட்டிற்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
சொமாலியாவில் வறட்சியாலும் சில பகுதிகளின் வெள்ளப்பெருக்காலும் ஏற்பட்டுள்ள மனிதகுல நெருக்கடி குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை, மிகப்பெரும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணற்ற மக்கள் சொமாலியாவில் உணவு தேடி அலைந்து கொண்டிருக்கும் வேளையில், சர்வதேச சமுதாயத்தின் உதவிகள் உடனடியாக அனுப்பப்படும் என நம்பிக்கைக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
ஏற்கனவே திருப்பீடத்தின் பிறரன்பு அமைப்பான 'கோர் ஊனும்' அவை திருச்சபை அக்கறையின் அடையாளமாக எழுபதாயிரம் டாலர்களை சொமாலியா நாட்டிற்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

4. கத்தோலிக்கப் பள்ளிகளின் நிர்வாகத்தில் தலையிடுவதை மத்திய பிரதேச அரசு நிறுத்தவேண்டும் போபால் பேராயர்

ஜூலை 18, 2011.  மத்திய பிரதேச மாநில அரசு கத்தோலிக்கப் பள்ளிகளில் தலையிடுவதை நிறுத்தி, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த உழைக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் போபால் பேராயர் லியோ கொர்னேலியோ.
100க்கும் மேற்பட்ட கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளின் போபால் கூட்டத்தில் உரையாற்றிய பேராயர், கத்தோலிக்கப் பள்ளிகளின் நிர்வாகத்தில் மாநில அரசின் தலையீட்டு முயற்சிகள் குறித்து கவலையை வெளியிட்டார்.
கத்தோலிக்கப் பள்ளிகள் எவ்விதப் பாகுபாடுமின்றி அரசால் நடத்தப்பட்டு அதற்கேயுரிய மாண்புடன் நடத்தப்பட வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார் போபால் பேராயர் கொர்னேலியோ. மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களில் தலத்திருச்சபை ஒரு பங்குதாரராக நோக்கப்படவேண்டும் என்ற விண்ணப்ப்த்தையும் அரசுக்கு முன் வைத்தார் பேராயர்.

5. ஒரு மாதத்தில் மூன்று காரித்தாஸ் பணியாளர்கள் கொலம்பியாவில் கொலை

ஜூலை 18, 2011.  கொலம்பிய நாட்டில் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்புடன் இணைந்து பணியாற்றிய மூவர் கொலைச் செய்யப்பட்டுள்ளதாக அக்கத்தோலிக்க நிறுவனம் அறிவித்தது.
கொலம்பியாவின் கொர்தோபா மாநிலத்தில் தொடரும் இந்த வன்முறை நிகழ்வுகள், மக்களிடையே அச்சம், நிச்சயமற்ற நிலை, வேதனை மற்றும் ஏமாற்றங்களுக்கு இட்டுச் செல்வதாக கவலையை வெளியிட்டுள்ளது மறைமாவட்ட காரித்தாஸ்  அறிக்கை.
எத்தகைய துன்பங்கள், இழப்புகள் வரினும், துன்புறும் மக்களிடையேயான தங்கள் பணிகள் தொடரும் எனவும், அதுவே இறைவார்த்தை மற்றும் திருச்சபையின் சமூகப்படிப்பினைகளின் ஒளியிலான பணி எனவும் கூறியுள்ளது கொலம்பிய காரித்தாஸ் அமைப்பு.

6. பத்து ஆண்டுகளில் 15.5 இலட்சம் கோடி ரூபாய் ஊழல்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஜூலை 18, 2011.  கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவில் 15.5 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என, புனேயைச் சேர்ந்த "இந்தியா போரன்சிக்' என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் அடிப்படையில், ஊழல் என்ற பெயரில், தனிப்பட்ட நபர் ஒவ்வொருவரும், 2,000 ரூபாய் வரை செலவிடுவதாகத் தெரியவந்துள்ளது. மேலும், கடந்த 2000-09 ஆண்டுகளில், 70 ஆயிரத்து 773 ஊழல் வழக்குகள் விசாரிக்கப்பட்டதாகவும், இவற்றில், ஊழலில் தொடர்புடைய 190 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, வர்த்தக மோசடி, கடத்தல், போதை மருந்து கடத்தல், வரி ஏய்ப்பு, வங்கி மோசடிகள் ஆகியவற்றால், நாட்டு பொருளாதாரத்துக்கு, 22 ஆயிரத்து 528 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, "சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் பணம் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் உள்ளது' என அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சுவிஸ் வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள  இந்தியர்களின் பணம்,  50 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என  இந்திய அரசியல்வாதிகளும், அரசு சார்பற்ற அமைப்புகளும் குறைகூறி வருகின்ற நிலையில், சுவிஸ் நாட்டின் மத்திய வங்கியோ, கடந்த 2010ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, சுவிஸ் வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் பணம் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மட்டுமே என்கிறது.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...