Monday, 25 July 2011

Catholic News - hottest and latest - 25 July 2011

1. கர்தினால் நோயே காலமானார். திருத்தந்தையின் அனுதாபச் செய்தி

2. திருத்தந்தையின் மூவேளை செப உரை

3. நார்வே நாட்டிற்கான திருத்தந்தையின் அனுதாபச் செய்தி

4. இலங்கையின் வடக்கில் குழந்தைகள் கைவிடப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு

5. பருவநிலை மாற்றத்தால் உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: சுவிஸ் நிபுணர் எச்சரிக்கை

6. அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சு தோல்வி

7. மருத்துவக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

----------------------------------------------------------------------------------------------------------------

1. கர்தினால் நோயே காலமானார். திருத்தந்தையின் அனுதாபச் செய்தி

ஜூலை 25, 2011. வத்திக்கான் பேராலயத்தின் முன்னாள் முதுபெரும் தந்தையாக பதவி வகித்த கர்தினால் விர்ஜில்யோ நோயே இஞ்ஞாயிறன்று இறைபதம் சேர்ந்ததைத் தொடர்ந்து தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டு இரங்கற்தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
கர்தினால் நோயேயின் மரணத்தையொட்டி அவரின் சகோதரி மரியா நோயேயுக்குத் திருத்தந்தை அனுப்பியுள்ள இரங்கற்தந்தியில், கர்தினாலின் குடும்பத்தினரின் துன்பத்தில் தானும் பங்குகொள்வதாகவும், அவருக்கானச் செபங்களுக்கு உறுதிகூறுவதாகவும் தெரிவித்துள்ளார். கர்தினால் நோயே திருச்சபைக்கு ஆற்றியுள்ள ஒப்பற்ற பணியும் அத்தந்திச்செய்தியில் குறிப்பிடப்பட்டுப் பாராட்டப்பட்டுள்ளது.
1922ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி இத்தாலியின் பவியா மறைமாவட்டத்தில் பிறந்த கர்தினால் நோயே 1944ல் குருவாகவும், 1982ல் பேராயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். திருப்பீடத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இவர், 1991ம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.
கர்தினால் விர்ஜில்யோ நோயேயின் இறப்புடன் திருச்சபையில் கர்தினால்களின் எண்ணிக்கை 195 ஆகக் குறைந்துள்ளது. இதில் 114 பேரே திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதிற்குட்பட்டவர்கள்.

2. திருத்தந்தையின் மூவேளை செப உரை

ஜூலை 25, 2011.  நன்மை எது என்பதைக் கண்டுகொண்டு அதனை நாடிச் செல்லும் ஓர் இதயத்தின் வளர்ச்சியிலேயே வாழ்வின் உண்மையான தரம் அடங்கியுள்ளது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
'உம் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்' என சாலமன் மன்னன் இறைவனை நோக்கி வேண்டிய வார்த்தைகளுடன் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையை காஸ்தல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்திலிருந்து வழங்கிய திருத்தந்தை, இளவயதில் ஆட்சிக்கு வந்த சாலமன் மன்னன் தன் கனவில் தோன்றிய இறைவனிடம் வேண்டியது குறித்து எடுத்துரைத்தார்.
நீண்ட ஆயுளையோ, பெரும்செல்வத்தையோ, எதிரிகளின் அழிவையோ இறைவனிடம் வேண்டாத சாலமன், நன்மை தீமை பகுத்தறியும் ஞானம் நிறைந்த உள்ளத்தை தந்தருளுமாறு வேண்டியது, உண்மையின் குரலைக் கண்டுகொண்டு செயல்படும் மனச்சான்றின் தேவையைக் குறிப்பிடுவதாக உள்ளது என்றார் பாபிறை.
அரசு நிர்வாகப் பணியில் உள்ளோருக்கு, மேலும் பல பொறுப்புணர்வுகள் உள்ளன என்ற திருத்தந்தை, அவர்களுக்கு இறைவனின் தேவையும் அதிகம் அதிகமாக உள்ளது என்றார்.
நம் வாழ்வின் உண்மை தரமானது, சரியான முறையில் வடிவமைக்கப்பட்ட மனச்சான்றைச் சார்ந்துள்ளது எனத் தன் ஞாயிறு மூவேளை செப உரையின்போது மேலும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

3. நார்வே நாட்டிற்கான திருத்தந்தையின் அனுதாபச் செய்தி

ஜூலை 25, 2011.  நார்வேயின் ஓஸ்லோ நகரின் குண்டு வெடிப்பு மற்றும் அண்மைத் தீவின் இளைஞர் முகாமில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு ஆகியவை குறித்து தன் ஆழ்ந்த கவலையையும் அனுதாபங்களையும் வெளியிட்டு அந்நாட்டிற்கு இரங்கற்தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இந்த வன்முறைகளால் இடம்பெற்றுள்ள உயிரிழப்புகள் குறித்து தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக நார்வே மன்னர் 5ம் ஹெர்ரால்டுக்கு அனுப்பியுள்ள அத்தந்திச்செய்தியில் உரைத்துள்ள திருத்தந்தை, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கானத் தன் செபத்திற்கும் உறுதி கூறியுள்ளார்.
இந்தத் துன்பகரமான நேரத்தில் ஒரே குடும்பமாய் ஆன்மீக ஒன்றிப்பைக் காணும் நார்வே நாடு, பகைமை மற்றும் மோதல்களின் வழியை ஒதுக்கித்தள்ளும் என நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும் அதில் கூறியுள்ளார் பாப்பிறை.

4. இலங்கையின் வடக்கில் குழந்தைகள் கைவிடப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு

ஜூலை 25, 2011. வட இலங்கையில் குழந்தைகள் கைவிடப்படல் மற்றும் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சண்டே டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. குறிப்பாக வன்னியிலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வவுனியா மற்றும் செட்டிக்குளம் பகுதிகளில் நான்கு குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகவும், இரண்டு குழந்தைகள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
கைவிடப்பட்ட நான்கு குழந்தைகளும் துணியால் சுற்றப்பட்டு மத்திய‌ வவுனியா பேருந்து நிலையத்தில் கிடத்தப்பட்டிருந்தன.
போருக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள வறுமை, குடும்பத் தலைவர்கள் இல்லாமை போன்றவையே இதற்கான காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. பருவநிலை மாற்றத்தால் உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: சுவிஸ் நிபுணர் எச்சரிக்கை

ஜூலை 25, 2011. பருவ நிலை மாற்றத்தால் உலகப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என சுவிஸ் நாட்டின் ஆய்வு நிபுணர் குர்ட் ஸ்பில்மான் எச்சரித்துள்ளார்.
கடந்த வார துவக்கத்தில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாதுகாப்பு அவைக் கூட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்புக் குறித்து விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது கருத்துக்களை வெளியிட்ட சூரிச் பாதுகாப்பு ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் குர்ட் ஸ்பில்மான்பருநிலை மாற்ற நிகழ்வால் நாடுகளுக்கு இடையே உடனடி மோதலை ஏற்படுத்தாதிருப்பினும் இந்த நிலை நீடிக்கும் போது பிரச்சனைகள் வெடிக்கும் என எச்சரித்தார். பருவநிலை மாற்ற நிகழ்வால் தற்போது ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் சில பகுதிகளில் மோதல்கள், பதட்டம், நெருக்கடி ஏற்பட்டுள்ளன என அவர் சுட்டிக்காட்டினார்.

6. அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சு தோல்வி

ஜூலை 25, 2011. ஐக்கிய நாடுகள் நிறுவனத்துக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பாலித கோஹனவுடன் கடந்த வாரம் நியூயார்க்கில் இடம்பெற்ற சந்திப்பின் போது பாலித கோஹன தலைமையிலான குழுவினர், இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்று முழுமையாக மறுப்பு வெளியிட்டுள்ளதாக Amnesty International எனும் அனைத்துலக மனித உரிமைகள் கழகம் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
அனைத்துலக மனித உரிமைகள் கழகம் வித்தியாசமான அணுகுமுறையுடன் நடத்திய‌ உறுதியான கலந்துரையாடலுக்கு இலங்கைக் குழுவினர் இணங்காத நிலையில் இந்த‌ சந்திப்பு வெற்றி பெறவில்லை என்று அனைத்துலக மனித உரிமைகள் கழகத்தின் இலங்கைக்கானச் சிறப்பு நிபுணர் ஜிம் மெக்டொனாலட் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக மனித உரிமைகள் கழகத் தலைவர் ஜோஸ் லூயிஸ் டய்சுக்கும் பாலித கோஹனவுக்கும் இடையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பான சேனல் 4 காணொளித் தொடர்பிலேயே கலந்துரையாடல் அமைந்திருந்தது.
இந்தப் பேச்சுவார்த்தை குறித்து கருத்துரைத்த பாலித கோஹன, இலங்கையின் நீண்ட வரலாற்றை கொண்ட நீதித்துறை கலாச்சாரத்தை இந்தப் பிரச்சனைக்காக மாற்றிக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பாலித கோஹனவுடனான சந்திப்பின்போது அனைத்துலக மனித உரிமைகள் கழகம், இலங்கைக்குப் பயணம் செய்வதற்கான கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் அதனை பாலித கோஹன பலமுறை நிராகரித்ததாக மெக்டோனோல்ட் தெரிவித்துள்ளார்.

7. மருத்துவக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

ஜூலை 25, 2011.   இந்தியாவில்  "எய்ட்ஸ்போன்ற ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் அபாயம் கொண்ட மருத்துவக் கழிவுகளை அகற்றுவதில், பல மருத்துவமனைகள் மெத்தனமாக உள்ளதால், தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது என நல ஆர்வலர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சையில் வெளியாகும் மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்ற, 1998ம் ஆண்டில் விதிமுறைகளை உருவாக்கி, இந்திய மத்திய அரசு, தனிச் சட்டம் இயற்றி, இந்த நடைமுறைகள் அனைத்தும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் பல மருத்துவமனைகள் இந்த விதிகளைப் பின்பற்றுவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம், 2,252 பெரிய மருத்துவமனைகளும், 317 அரசு மருத்துவமனைகளும், சிறிய மருத்துவமனைகளும் ஆயிரக்கணக்கில் உள்ளன.
'சென்னையில் மருத்துவக் கழிவு அப்புறப்படுத்தும் திட்டத்தின் கீழ், 258 மருத்துவமனைகள்தான் பதிவு செய்துள்ளன. ஆனால், 5,000க்கும் மேற்பட்ட சிறிய மருத்துவமனைகள் இதில் பதிவு செய்யவில்லை' என மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment