Monday, 11 July 2011

Catholic News - hottest and latest - 09 July 2011

1 .  தனிநாடாக உருவாகும் தென் சூடானியருக்குத் திருப்பீடப் பேச்சாளர் வாழ்த்து

2. திருச்சபை பற்றிய புள்ளி விபரங்கள் கொண்ட Atlas Hierarchicus திருத்தந்தையிடம் கொடுக்கப்பட்டது

3. பெண் குழந்தைகளின் பாலினத்தை மாற்றும் அறுவைசிகிச்சைக்கு இந்திய ஆயர்கள் கண்டனம்

4. கிராமப்புற இளையோரின் திறமைகளை வளர்ப்பது இந்தியாவை வளப்படுத்துவதாகும் - பெல்லாரி ஆயர்

5. கிரீஸின் பொருளாதார நெருக்கடியால் கத்தோலிக்கத் திருச்சபையின் சமூகநலத் திட்டங்கள் நிறுத்தப்படும் அபாயம்

6. திருச்சபை சட்டத்துக்குப் புறம்பேயான ஆயர் திருநிலைப்பாடுகளில் சீன ஆயர்கள் கலந்து கொள்வதைத் தடை செய்ய குருக்கள் முயற்சி

7. உலக மக்கள்தொகை தினம்-ஐ.நா.பொதுச் செயலரின் செய்தி

8. இத்தாலியில் திருமண முறிவுகள் அதிகரிப்பு

9. இந்தியாவில் 4 ஆண்டில் வறுமை பாதியாகக் குறையும் ஐ.நா.

----------------------------------------------------------------------------------------------------------------

1 . தனிநாடாக உருவாகும் தென் சூடானியருக்குத் திருப்பீடப் பேச்சாளர் வாழ்த்து

ஜூலை09,2011. சூடானில் ஒவ்வொரு சமூகத்தின் தனிப்பட்ட பண்புகளுக்குத் தகுந்த மதிப்பளிக்கும் மற்றும் முரண்பாடுகளையும் போராட்டங்களையும் மேற்கொள்ள உதவும் ஓர் அரசியலமைப்பைக் கண்டு கொள்வதில் அம்மக்கள் வெற்றியடைவார்களாக என்று   வாழ்த்தினார் திருப்பீடப் பேச்சாளர் அருட்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி.
ஜூலை 09, இச்சனிக்கிழமை நள்ளிரவில் தென் சூடான், தனி நாடாக அதிகாரப்பூர்வமாக உருவாகியுள்ள கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளதையொட்டி ஒக்டாவா தியெஸ் (Octava Dies) என்ற வத்திக்கான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அருட்தந்தை லொம்பார்தி, இவ்வாறு கூறினார்.
சூடானில், குறிப்பாக, தென் சூடானில் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக தொடர்ந்து இடம் பெற்ற உள்நாட்டுச் சண்டையில் உயிரிழந்த மற்றும் கட்டாயமாக வீடுகளைவிட்டு வெளியேறியிருக்கின்ற இலட்சக்கணக்கான அப்பாவி மக்களின் துன்பங்களையும் செபங்களையும் இந்த நேரத்தில் குறிப்பிடாமல் இருக்க முடியாது என்று கூறிய அருட்தந்தை லொம்பார்தி, அம்மக்களுடனானத் தமது ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்தார்.
ஆப்ரிக்காவில் தற்போது திசைமாறி வீசிக் கொண்டிருக்கும் காற்று, அக்கண்டத்தில் மனித உரிமைகளையும் மனித மாண்பையும் உண்மையாகவே மதிக்கும் புதுப்பிக்கப்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புகள்  உருவாக வழி அமைக்கும் என்ற தனது நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
இந்நாடு, உலகின் மிக ஏழை நாடுகளில் ஒன்றாக இருக்கின்றது மற்றும் உள்நாட்டில் ஒன்றிப்பை ஏற்படுத்துவதற்குக் கடும் பிரச்சனைகளையும் எதிர்நோக்குகின்றது, எனினும், அம்மக்கள் எதிர்பார்க்கும் சுதந்திரமும் அமைதியும் நிறைந்த எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க உலக சமுதாயத்தால் இயலும் என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
புதிய தென் சூடான் நாட்டில் இடம் பெற்று வரும் சுதந்திர தின நிகழ்வுகளில் திருப்பீடப் பிரதிநிதிகள் குழு, ஐ.நா.பொதுச் செயலர், சூடான் அரசுத்தலைவர், அமெரிக்க ஐக்கிய நாடு, ஐரோப்பிய சமுதாய அவை, சீனா உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
2005ம் ஆண்டில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய நாடாக உருவாகியுள்ள தென் சூடான், உலகில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட 193 வது நாடாக அமைந்துள்ளது மற்றும் இது ஆப்ரிக்காவில் ஐ.நா.வின் 54 வது உறுப்பு நாடாகவும் மாறியுள்ளது.
சூடான் உள்நாட்டுப் போரில் சுமார் இருபது இலட்சம் பேர் இறந்தனர் மற்றும் சுமார் நாற்பது இலட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

2. திருச்சபை பற்றிய புள்ளி விபரங்கள் கொண்ட Atlas Hierarchicus திருத்தந்தையிடம் கொடுக்கப்பட்டது

ஜூலை09,2011.  கத்தோலிக்கத் திருச்சபையின் புள்ளி விபரங்கள் குறித்த வரைபடங்கள் மற்றும் தகவல்களைக் கொண்ட Atlas Hierarchicus என்ற புத்தகம் திருத்தந்தை 16ம் பெனடிக்டிடம் திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத் தலைவர் பேராயர் பெர்னாண்டோ ஃபிலோனி சமர்ப்பித்தார்.
Atlas Hierarchicus என்ற இந்தப் புத்தகத்தை உர்பான் பாப்பிறைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது, அதற்குத் திருத்தந்தையும் முன்னுரை எழுதியுள்ளார்.
திருச்சபையில் அண்மை ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட மறைமாவட்டங்கள் பற்றிய விபரங்கள் உட்பட உலகின் ஐந்து கண்டங்களிலுள்ள திருச்சபை பற்றிய அனைத்துப் புள்ளி விபரங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த அட்லஸின் முந்தைய பிரதி 1992ல் வெளியிடப்பட்டது. இது முதன் முதலாக 1913ல் இறைவார்த்தை சபையின் Karl Streit என்ற டச்சு நாட்டுத் துறவியால் தயாரிக்கப்பட்டது. இவர் இதன் முதல் பிரதியை பாப்பிறை பத்தாம் பத்திநாதரிடம் கொடுத்தார்.

3. பெண் குழந்தைகளின் பாலினத்தை மாற்றும் அறுவைசிகிச்சைக்கு இந்திய ஆயர்கள் கண்டனம்

ஜூலை09,2011. இந்தியாவில் பெண் குழந்தைகளின் பாலினத்தை மாற்றும் மிகக் கொடுமையான அறுவைசிகிச்சை நடவடிக்கையை இந்திய ஆயர்கள் வன்மையாகக் கண்டிப்பதாக இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையச் செயலர் அருட்பணி சார்லஸ் இருதயம் கூறினார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆண் குழந்தைகளை விரும்பும் பெற்றோரின் வேண்டுகோளின்பேரில் பெண் குழந்தைகளின் பாலினத்தை மாற்றுவதற்கு மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்வது குறித்து ஃபீதெஸ் வத்திக்கான் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அருட்பணி இருதயம் இவ்வாறு கூறினார்.
மத்திய பிரதேச மாநிலத்தின் இன்டோர் நகரில் ஒரு வயதுக்குட்பட்ட 300 பெண் குழந்தைகளுக்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மாநில அரசும் இந்நடவடிக்கை குறித்து அதிகாரப்பூர்வ விசாரணையை மேற்கொண்டுள்ளதாகச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்த ஒவ்வோர் அறுவை சிகிச்சைக்கும் சுமார் 3200 டாலர் செலவாகின்றது. இந்த வன்செயலுக்கு, புதுடெல்லி, மும்பை போன்ற மாநகரங்களைச் சேர்ந்தோர் இன்டோரைத் தேர்வு செய்கின்றனர் என்றும் ஊடகச் செய்தி கூறுகிறது.
நூறு கோடிக்கு மேற்பட்ட மக்களைக் கொண்ட இந்தியாவில்  ஏறக்குறைய 50 கோடிப் பேர் பெண்கள்.

4. கிராமப்புற இளையோரின் திறமைகளை வளர்ப்பது இந்தியாவை வளப்படுத்துவதாகும் - பெல்லாரி ஆயர்

ஜூலை09,2011. கிராமப்புற இளையோரின் திறமைகளை வளர்ப்பது இந்தியாவை வளப்படுத்துவதாகும் என்று பெல்லாரி ஆயர் ஹென்ரி டி சூசா கூறினார்.
பெல்லாரி மறைமாவட்டத்தின் ரெய்ச்சூரில் வேலையின்றி இருக்கும் கிராமப்புற இளையோருக்கு அவர்களின் திறமைகளை வளர்க்கும் பயிற்சி வகுப்புக்களை இவ்வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்துப் பேசிய ஆயர் டி சூசா இவ்வாறு கூறினார்.
இந்தியாவில் 70 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர், இவர்களில் ஏறக்குறைய பாதிப்பேர் இளையோர், இவர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு இவர்களின் திறமைகளை வளர்ப்பது மிகவும் முக்கியம், தங்களுக்காகப் புதிய எதிர்காலத்தை அமைக்கும் இவர்கள் புதியதோர் இந்தியாவுக்கும் வழி அமைப்பார்கள் என்றார் பெல்லாரி ஆயர் டி சூசா.
பெல்லாரி மறைமாவட்டம் மற்றும் சலேசிய சபையினரால் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.   

5. கிரீஸின் பொருளாதார நெருக்கடியால் கத்தோலிக்கத் திருச்சபையின் சமூகநலத் திட்டங்கள் நிறுத்தப்படும் அபாயம்

ஜூலை09,2011. கிரீஸ் நாடு தற்போது எதிர்நோக்கும் கடும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபை தனது உயிரூட்டமானப் பிறரன்பு மற்றும் சமூகநலத் திட்டங்களைக் கட்டாயமாக நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக ஏத்தென்ஸ் கத்தோலிக்கப் பேராயர் நிக்கோலாஸ் ஃபோஸ்கோலோஸ் அறிவித்தார்.
கிரீஸ் நாடு தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடி அந்நாட்டின் வரலாற்றில் மிக மோசமானதாக இருக்கின்றது என்று பேராயர் ஃபோஸ்கோலோஸ் சி.என்.எஸ்.கத்தோலிக்க செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
நாட்டில் எல்லா இடங்களிலும், குறிப்பாக அரசியல்வாதிகள் மத்தியில் ஊழல் மலிந்து விட்டது, திருச்சபைக்கு எங்கிருந்தும் உதவி கிடையாது, எனவே தனது நற்பணிகளை நிறுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றது என்றார் அவர்.
இதற்கிடையே, கிரீஸ் நாட்டின் 48,500 கோடி டாலர் வெளிநாட்டுக் கடனில் கொஞ்சத்தைக் கட்டுவதற்கென அவசரகாலக் கடனாக 15,600 கோடி டாலரை வழங்க சர்வதேச நிதியகமும் ஐரோப்பிய சமுதாய அவையும் இசைவு தெரிவித்துள்ளன.

6. திருச்சபை சட்டத்துக்குப் புறம்பேயான ஆயர் திருநிலைப்பாடுகளில் சீன ஆயர்கள் கலந்து கொள்வதைத் தடை செய்ய குருக்கள் முயற்சி

ஜூலை09,2011. சீனாவில் திருத்தந்தையின் ஒப்புதலின்றி ஆயர் திருநிலைப்பாடு வழங்குவதற்கு அந்நாட்டில் ஆயர்கள் கட்டாயப்படுத்தப்படும்வேளை, இதற்காக ஷென்யாங் ஆயர் கட்டாயமாக  தனது இல்லத்தை விட்டு வெளியேற்றப்படுவதைத் தடுப்பதற்கு அருட்பணியாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.
ஷென்யாங் ஆயர் Paul Pei Junmin என்பவர், Shantou வில் அருட்பணி Joseph Huang Bingzhang என்பவரை இம்மாதம் 14ம் தேதி ஆயராகத் திருநிலைப்படுத்துவதற்குச் செல்லுமாறு கட்டளையிடப்பட்டுள்ளார். இவர் கட்டாயமாக அங்கு அழைத்துச் செல்லப்படக்கூடும் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், மறைமாவட்ட அருட்பணியாளர்கள் ஷென்யாங் ஆயர் இல்லத்தின் முன்பாகக் கூடியிருக்கின்றனர் என்று சொல்லப்பட்டுள்ளது.
சீன அரசு அதிகாரிகளின் ஆயர்கள் மீதான வற்புறுத்தல் வலுவாக இருப்பதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன.

7. உலக மக்கள்தொகை தினம்-ஐ.நா.பொதுச் செயலரின் செய்தி

ஜூலை09,2011. இப்புவியானது எழுநூறு கோடி மக்களைக் கொண்டிருக்கும் நாளை விரைவில் நாம் காணவிருக்கும்வேளை நமது கவனம் எல்லாம் எப்பொழுதும் மக்களைப் பற்றியதாகவே இருக்க வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் வலியுறுத்தினார்.
ஜூலை 11, இத்திங்களன்று கடைபிடிக்கப்படும் உலக மக்கள்தொகை தினத்திற்கென செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர், நல்லதோர் உலகை உருவாக்க ஏழு பில்லியன் திட்டங்கள் என்று, உலக மக்கள் தொகைக்கு ஏற்ப, ஐ.நா.மக்கள்தொகை நிதி அமைப்பு எடுத்துள்ளது பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.
சமூகப்பணிகள் மற்றும் மாற்றத்திற்கான வேலைகளில் தனிப்பட்ட நபர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் உலகில் ஒரு வித்தியாசத்தைக் காண முடியும் என்ற பான் கி மூன், மக்களின் பெருமளவான சக்தி ஒன்று திரண்டதன் மூலமாக, துன்பம் நிறைப் பாகுபாடுகளை எதிர்நோக்கியவர்கள் நம்பிக்கையைப் பெற்றதற்கு இவ்வாண்டில் பல எடுத்துக்காட்டுகளைக் காண முடிந்தது என்றும் கூறியுள்ளார்.
ஒவ்வொருவருக்கும் போதுமான உணவை நாம் கொண்டிருந்தாலும் இன்னும் சுமார் நூறு கோடிப் பேர் பசியால் வாடுகின்றனர், பல நோய்களை ஒழிக்க நம்மிடம் வழிகள் இருந்தும் இன்னும் அந்நோய்கள் பரவுகின்றன என்றும் அவரின் செய்தி கூறுகிறது.
இந்தப் புவியின் எழுநூறாவது வாசிக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க இந்த உலக தினத்தில் தீர்மானிப்போம் என்றும் அவரின் செய்தி அழைப்பு விடுக்கிறது.

8. இத்தாலியில் திருமண முறிவுகள் அதிகரிப்பு

ஜூலை09,2011. இத்தாலியில் திருமண முறிவுகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன என்று புதிய புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
இஸ்டாட் என்ற தேசிய புள்ளி விபர நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி 54,456 தம்பதியர் திருமண முறிவுக்காக வழக்குப் பதிவு செய்துள்ளனர் மற்றும் 85,945 பேர் ஏற்கனவே பிரிந்து வாழ்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது.
1995ல் பதிவு செய்யப்பட்ட ஒவ்வோர் 1000 திருமணங்களில் 158 தம்பதியர் பிரிந்து வாழ்ந்தனர் மற்றும் 80 தம்பதியர் திருமண முறிவு பெற்றனர். 2009ல் இவ்வெண்ணிக்கை ஏறக்குறைய இரண்டு மடங்கானது என்று அவ்வறிக்கை கூறுகிறது.  

9. இந்தியாவில் 4 ஆண்டில் வறுமை பாதியாகக் குறையும் ஐ.நா.

ஜூலை09,2011. இந்தியாவில் அடுத்த 4 ஆண்டில் கடும் ஏழைகள் எண்ணிக்கை பாதியாகக் குறையும் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
மில்லென்யம் வளர்ச்சி இலக்குகள் என்ற கொள்கை குறித்து தனது ஆண்டு அறிக்கையை வெளியிட்ட ஐ.நா. நிறுவனம், உலக அளவில் வறுமை ஒழிப்பில் இந்தியாவும், சீனாவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை பல நாடுகளில் வேகமாக குறைந்து வருகிறது என்று கூறியது.
1990 முதல் 2005 வரை 15 ஆண்டுகளில் இந்தியா, சீனா நாடுகளில் மட்டும் 45.5 கோடி பேர் வறுமைக்கோட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். 2015ல் மேலும் 32 கோடிப்பேர் ஏழ்மையில் இருந்து விடுபடுவார்கள். இந்தியாவில் 1990ம் ஆண்டில் ஏழைகள் எண்ணிக்கை 51 விழுக்காடாக இருந்தது. அது 2015ம் ஆண்டில் 22 விழுக்காடாகக் குறையும். அதாவது, 1990ல் ஏழைகளாக இருந்தவர்கள் எண்ணிக்கையில் பாதிப்பேர் மட்டுமே வறுமை கோட்டுக்குள் இருப்பார்கள் என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.
வறுமை, பசி, பட்டினி, ஆண், பெண் சமநிலை, குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்தல், பிரசவகால மருத்துவ வசதியை முன்னேற்றுதல், எச்ஐவி/எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் அடிப்படையில் நாடுகளின் நிலை என்ன என்றும் ஆராயப்பட்டது. இந்தியாவில் பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும் நிலையிலும், பணக்காரர்கள் மேலும் வளமையாகவும், ஏழைகள் விடுபட்டவர்களாகவும் நீடிக்கும் நிலை உள்ளது. இவ்வாறு ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...