Friday, 29 July 2011

Catholic News - hottest and latest - 27 July 2011

1. திருப்பீடமும் மலேசியாவும் அரசியல் உறவை உருவாக்கியுள்ளன

2. ஐரோப்பா இளையோர் பற்றாக்குறையால்துன்புறுகின்றது - இஸ்பெயின் கர்தினால் ரோக்கோ

3. மெக்சிகோ நகரில் படிக்காத எழுபது இலட்சம் இளையோர் குற்றக்கும்பல்களால் பயன்படுத்தப்படும் ஆபத்து -  மெக்சிகோ உயர்மறைமாவட்டம் கவலை

4. சுவாசிலாண்ட் நாட்டில் சனநாயகச் சீர்திருத்தங்களுக்கு ஆயர்கள் அழைப்பு

5. டிரிப்போலியில் குடிமக்கள் மீதான நேட்டோ குண்டுவீச்சுத் தாக்குதல்களுக்கு டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி கண்டனம்

6. ஒரு பிரித்தானிய அருட்சகோதரி நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற அரசாணை தவறானது இந்திய அரசு

7. நைஜீரியாவின் வடகிழக்கில் சகிக்க முடியாத வன்முறைச்சூழல் நிலவுகிறது - Maiduguri ஆயர்

8. இரகசிய முகாம்களில் ஐந்தாயிரம் வரையில் தமிழ் இளையோர் தடுத்துவைப்பு

9. மொகதிஷூவில் உதவி கேட்டு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு ஐ.நா.

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருப்பீடமும் மலேசியாவும் அரசியல் உறவை உருவாக்கியுள்ளன

ஜூலை27,2011. திருப்பீடமும் மலேசியாவும் தங்களுக்கிடையே நட்புறவை வளர்த்துக் கொள்ளும் ஆவலில் இவ்விரு தரப்பும் அரசியல் உறவை உருவாக்கத் தீர்மானித்துள்ளன என்று இப்புதனன்று அறிவிக்கப்பட்டது.
திருப்பீடத்தைப் பொறுத்தவரை அப்போஸ்தலிக்கத் தூதரகம் என்ற நிலையிலும், மலேசியாவைப் பொறுத்தவரை தூதரகம் என்ற நிலையிலும் இவ்வரசியல் உறவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், மலேசியா, திருப்பீடத்துடன் அரசியல் உறவைக் கொண்டிருக்கும் 179வது நாடாக மாறியுள்ளது.
மலேசியப் பிரதமர் Najib Razak, இம்மாதம் 18ம் தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்டை காஸ்தல் கந்தோல்ஃபோவில் சந்தித்துப் பேசியதற்குப் பின்னர் இவ்வறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏறக்குறைய 2 கோடியே 83 இலட்சத்து 6,700 மக்கள் தொகையைக் கொண்ட மலேசியாவில் 60.4 விழுக்காட்டினர் இசுலாமியர். 19.2 விழுக்காட்டினர் புத்தமதத்தினர். 9.1 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். 6.3 விழுக்காட்டினர் இந்துக்கள். 2.6 விழுக்காட்டினர் சீனப் பாரம்பரிய மதத்தினர். 2.4 விழுக்காட்டினர் இயற்கையை வழிபடுபவர்கள்.
தென்கிழக்கு ஆசிய நாடாகிய மலேசியாவில் 1511ம் ஆண்டில் கத்தோலிக்கத் திருச்சபை வேரூன்றத் தொடங்கியது. இந்நாட்டின் மலாக்காவில் முதல் போர்த்துக்கீசிய மறைப்பணியாளர்கள் தங்கள் பணியைத் தொடங்கினர். 1545ல் தூய பிரான்சிஸ் சவேரியார் மலாக்கா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்சமயம் மலேசியாவில் 11 ஆயர்கள், 274 மறைமாவட்ட குருக்கள், 119 துறவறக் குருக்கள், 123 அருட்சகோதரர்கள், 759 அருட்சகோதரிகள் மற்றும் 8,50,720 கத்தோலிக்கர் உள்ளனர்.

2. ஐரோப்பா இளையோர் பற்றாக்குறையால்துன்புறுகின்றது - இஸ்பெயின் கர்தினால் ரோக்கோ

ஜூலை27,2011. ஐரோப்பாவிலும் இஸ்பெயினிலும் குழந்தை பிறப்பு விகிதம் மிகக் குறைவாக இருப்பதால் அப்பகுதி இளையோர் பற்றாக்குறையைஎதிர்கொள்கிறது என்று இஸ்பெயின் ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் அந்தோணியோ மரிய ரோக்கோ வரெலா தெரிவித்தார்.
இஸ்பெயினின் ஹூவான் கார்லோஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இளையோர்க்கானப் பணி குறித்த கருத்தரங்கில் இவ்வாறு தெரிவித்த மத்ரித் பேராயரான கர்தினால் ரோக்கோ,  இஸ்பெயினில் 22 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும், திருச்சபையிலும் பிற பகுதிகளிலும் இறையழைத்தல்கள் மிகக் குறைவாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்றும் கூறினார்.
வருகிற ஆகஸ்ட் 18 முதல் 21 வரை நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினம், புதுப்பிக்கப்பட்ட நற்செய்திப்பணிக்கும், இறையழைத்தல் அதிகரிக்கவும், கிறிஸ்தவக் குடும்பங்கள் உறுதிப்படுத்தப்படவும் உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார் கர்தினால் ரோக்கோ.
திருச்சபையில் உலக இளையோர் தினம், மறைந்த திருத்தந்தை 2ம் ஜான் பாலால் உருவாக்கப்பட்டதையும் கர்தினால் ரோக்கோ நினைவுகூர்ந்தார்.

3. மெக்சிகோ நகரில் படிக்காத எழுபது இலட்சம் இளையோர் குற்றக்கும்பல்களால் பயன்படுத்தப்படும் ஆபத்து -  மெக்சிகோ உயர்மறைமாவட்டம் கவலை

ஜூலை27,2011. மெக்சிகோ நகரில் எழுபது இலட்சம் இளையோர் கல்வியறிவு பெறாமலும் வேலை கிடைக்காமலும் இருக்கும்வேளை, இவர்கள் குற்றக் கும்பல் அமைப்புக்களினால் பயன்படுத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் என்று மெக்சிகோ உயர்மறைமாவட்டம் கூறியது.
மெக்சிகோ உயர்மறைமாவட்டத்தின் "Desde la Fe" என்ற வார இதழில் வெளியான செய்தியின்படி, மெக்சிகோவில் திட்டமிட்டக் குற்றக் கும்பல்கள் வழங்கும் பணத்தை, தங்களது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும்கூட அதை வேலையற்ற இளையோர் பெற்றுக் கொள்ளத் தயங்குவதில்லை என்றும் தற்சமயம் சிறைகளில் இருப்போரில் 80 விழுக்காட்டினர் 20க்கும் 35 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்றும் தெரிய வருகிறது.
வன்முறைக் குற்றவாளிகளில் பத்துக்கு ஒன்பது பேர் இளையோர் என்றும் "Desde la Fe" கூறுகிறது.
இலத்தீன் அமெரிக்காவில் 15க்கும் 29 வயதுக்கும் உட்பட்ட ஏறக்குறைய நான்கு கோடி இளையோரின் எதிர்காலம் நிச்சயமற்று இருக்கின்றது, ஏனெனில் இவர்களுக்குப் படிப்போ வேலையோ கிடையாது என்றும் அவ்விதழில் கூறப்பட்டுள்ளது.

4. சுவாசிலாண்ட் நாட்டில் சனநாயகச் சீர்திருத்தங்களுக்கு ஆயர்கள் அழைப்பு

ஜூலை27,2011. சுவாசிலாண்ட் நாட்டில் வறுமையும் திறமையற்ற அரசியல் நிர்வாகமும் ஊழலும் மிகுந்து காணப்படுவது குறித்து தென்மண்டல ஆப்ரிக்க ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலை குறித்து கவலை தெரிவித்த தென்மண்டல ஆப்ரிக்க ஆயர்கள், சுவாசிலாண்டில் 1973ம் ஆண்டின் அவசரகாலநிலை விதிமுறையை அகற்றி, அரசியல் நடவடிக்கைகள் சுதந்திரமாக நடைபெறுவதற்கு வழிவகுக்குமாறு அந்நாட்டு அரசர் மூன்றாம் Mswati க்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தை அங்கீகரிக்கவும், சனநாயக அரசுக்கு உறுதி வழங்கும் அரசியல் அமைப்பைத் தயாரிப்பதற்கானப் பாதையைத் திறந்து விடவும் சுவாசிலாண்ட் அரசருக்கு மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளனர் ஆயர்கள்.
தென்னாப்ரிக்காவுக்கும் மொசாம்பிக் நாட்டுக்கும் இடையே அமைந்துள்ள சிறிய நாடாகிய சுவாசிலாண்ட், உலகிலே அதிகமான எய்ட்ஸ் நோயாளிகள் விகிதத்தைக் கொண்டுள்ளது. மக்களின் ஆயுட்காலமும்  மிகக்குறைவு. அதாவது 32 ஆண்டுகள். வேலைவாய்ப்பின்மை 40 விழுக்காடாகும். அந்நாட்டின் 70 விழுக்காட்டு மக்கள் ஒரு நாளைக்கு 6 டாலருக்குக் குறைவான ஊதியத்தில் வாழ்கின்றனர். மேலும், அரசு எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தடுப்பதற்கென, அந்நாட்டில் 37 வருடங்களாக அவசரகாலநிலை அமலில் இருக்கின்றது.

5. டிரிப்போலியில் குடிமக்கள் மீதான நேட்டோ குண்டுவீச்சுத் தாக்குதல்களுக்கு டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி கண்டனம்

ஜூலை27,2011. லிபிய நாட்டு டிரிப்போலியில் நேட்டோப் படையினர், குடிமக்கள் மீது குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்துவதற்குத் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார் டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜொவான்னி மர்த்தினெல்லி.
வத்திக்கான் ஃபீதெஸ் செய்தி நிறுவனத்திடம் இவ்வாறு தெரிவித்த ஆயர் மர்த்தினெல்லி, உணவுக் கடைகள் போன்ற அப்பாவி குடிமக்களைப் பாதிக்கும் இடங்களை நேட்டோப் படையினர் தாக்குகின்றனர் என்று குறை கூறினார்.
தொடர் குண்டுவீச்சுக்களால் அப்பாவி மக்கள் மனஅழுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆயர் மேலும் கூறினார்.

6. ஒரு பிரித்தானிய அருட்சகோதரி நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற அரசாணை தவறானது இந்திய அரசு

ஜூலை27,2011. இந்தியாவில் ஒரு பிரித்தானிய அருட்சகோதரி நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று அரசால் கொடுக்கப்பட்ட ஆணை தவறானது என்று சொல்லி அச்சகோதரி தான் விரும்பும் வரை நாட்டில் தங்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
1982ம் ஆண்டு மருத்துவத் தன்னார்வப் பணியாளராக இந்தியா வந்த Montfort மறைபோதகச் சபை சகோதரி Jacqueline Jean McEwan, அன்று முதல் பெங்களூர் சுமனஹல்லி மையத்தில் தொழுநோயாளர் மத்தியில் பணி செய்து வருகிறார். இவர் 24 மணி நேரத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென இரண்டு நாட்களுக்கு முன்னர் உள்துறை அமைச்சகத்தின் ஆணையைப் பெற்றார். எனினும் அமைச்சர் ப.சிதம்பரத்தின் தலையீட்டால் இவ்வாணைத் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அம்மைய இயக்குனர் கிளேரிசியன் சபை அருள்தந்தை George Kannanthanam, இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

7. நைஜீரியாவின் வடகிழக்கில் சகிக்க முடியாத வன்முறைச்சூழல் நிலவுகிறது - Maiduguri ஆயர்

ஜூலை27,2011. ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் தாக்குதல்கள் இடம் பெறும் நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் காணப்படும் வன்முறைச்சூழல், சகிக்க முடியாததாக இருக்கின்றது என்று அந்நாட்டு Maiduguri ஆயர் Oliver Dashe Doeme தெரிவித்தார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான போர்னோவில் கடந்த வெள்ளிக்கிழமை JTF  என்ற பிரிவின் படைவீரர்கள் மக்கள் கூட்டத்தின்மீது கண்மூடித்தனமாகச் சுட்டதில் குறைந்தது 23 பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் கழகம் வெளியிட்ட செய்தியையொட்டி இவ்வாறு ஆயர் கூறினார்.
தினமும் தாக்குதல்கள் நடக்கின்றன, ஆனால் இதற்குப் பொறுப்பானவர்கள் கைது செய்யப்படவில்லை, எனவே இராணுவத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்றும் Maiduguri ஆயர் கூறினார்.
ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் கழகத்தின் கூற்றுப்படி, இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து 250 பேர் கொல்லப்பட்டனர்.

8. இரகசிய முகாம்களில் ஐந்தாயிரம் வரையில் தமிழ் இளையோர் தடுத்துவைப்பு

ஜூலை 27,2011. அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் உட்பட இலங்கை தேசிய மூலச் சட்டத்திற்கு முரணான வகையில் இரகசியமான மர்ம முகாம்களில் ஐந்தாயிரம் வரையிலான தமிழ் இளைஞர், இளைஞிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று சோஷலிச இளைஞர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
அரசியல் கைதிகள் மற்றும் மர்ம முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை அரசு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அவர்களின் விபரங்களை நாம் சிறப்பு நடவடிக்கைகள் வழியாக பாராளுமன்றில் சமர்ப்பிக்க நேரிடும் என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.
பத்தரல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி. தலைமையகத்தில் இச்செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய சோஷலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்னாயக்க கூறுகையில், 1983 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்செயல்களினால் தேசிய அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டது மட்டுமின்றி பிரிவினைவாதம், ஆயுதப் போராட்டம் என்று இனமுரண்பாடு தீவிரமடைந்தது என்று தெரிவித்தார்.

9. மொகதிஷூவில் உதவி கேட்டு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு ஐ.நா.

ஜூலை27,2011. சொமாலியாவில் நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்த சுமார் ஒரு இலட்சம் பேர் கடந்த இரண்டு மாதங்களாக உணவு, தண்ணீர், குடியிருப்பு மற்றும்பிற வசதிகளைத் தேடி அலைந்த பின்னர் தலைநகர் மொகதிஷூ வந்துள்ளனர் என்று ஐ.நா அகதிகள் அமைப்பு இச்செவ்வாயன்று அறிவித்தது.
ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் வீதம் இவர்கள் வந்து கொண்டிருப்பதால் இவ்வெண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்று UNHCR பேச்சாளர் விவியன் தான் ஜெனீவாவில் தெரிவித்தார்.
அண்மை மாதங்களில் கென்ய எல்லையிலுள்ள ததாப் முகாம்களில் சொமாலிய அகதிகளின் எண்ணிக்கை 3,80,000 த்தை எட்டியுள்ளது. தினமும் சுமார் 1300 பேர் வீதம் அங்கு  வருவதால் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்று தான் கூறினார். 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...