Thursday, 21 July 2011

Catholic News - hottest and latest - 20 July 2011

1. திருத்தந்தையின் ஜெர்மனிக்கானத் திருப்பயணத் திட்டங்கள்

2. புனிதபூமிக் கிறிஸ்தவர்கள் எருசலேமில் தொடர்ந்து வாழ உரிமையைக் கொண்டிருக்கிறார்கள் - கர்தினால் தொரான்

3. கிழக்கு ஆப்ரிக்காவில் நூறாயிரக்கணக்கான மக்கள் பசிச்சாவை எதிர்நோக்கும் ஆபத்து - கோர் ஊனும் அவை

4. தென் சொமாலியாவின் இரண்டு பகுதிகள் பஞ்சப் பகுதிகள் - ஐக்கிய நாடுகள் நிறுவனம் அறிவிப்பு

5. ஞாயிற்றுக்கிழமை, வழிபாட்டிற்கும் ஓய்வுக்குமென ஒதுக்கப்பட வேண்டும் - பேரருட்திரு கலின்டோ 

6. இந்தியாவின் இராணுவ உதவி மியான்மாரில் வன்முறை அதிகரிக்க உதவக்கூடும் மனித உரிமை ஆர்வலர் குற்றச்சாட்டு

7. அழிந்து கொண்டிருக்கும் இலங்கையின் சனநாயக விழுமியங்களைக் கத்தோலிக்கர் தாங்கிப் பிடிக்க வேண்டும் பத்திரிக்கையாளர் கோரிக்கை

8. இலங்கையில் போர் மீண்டும் தொடங்கக்கூடும் - ICG குழு எச்சரிக்கை

9. தமிழகத்தில் நகர்ப்புற மக்கள் தொகை 14 விழுக்காடு அதிகரிப்பு

----------------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் ஜெர்மனிக்கானத் திருப்பயணத் திட்டங்கள்

ஜூலை20,2011. வருகிற செப்டம்பர் 22 முதல் 25 வரை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஜெர்மனிக்கு மேற்கொள்ளும் திருப்பயணம் குறித்த விவரங்களை இப்புதனன்று வெளியிட்டது திருப்பீடம்.
செப்டம்பர் 22ம் தேதி உள்ளூர் நேரம் காலை 8.15க்கு உரோம் Ciampino விமான நிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை பெர்லின் Tegel சர்வதேச விமான நிலையத்தை அடைந்து வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்.
அன்று பெர்லினில் ஜெர்மன் அரசுத்தலைவரைச் சந்தித்த பின்னர் மாலையில் நாடாளுமன்றம் செல்வார். அன்று மாலை யூதசமூகப் பிரதிநிதிகளைச் சந்திப்பார். பின்னர் பெர்லின் ஒலிம்பிக் மைதானத்தில் திருப்பலியும் நிகழ்த்துவார்.
23ம் தேதி முஸ்லீம் மதப் பிரதிநிதிகளைச் சந்தித்தல், Erfurt நகரில் ஜெர்மன் இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபைப் பிரதிநிதிகளைச் சந்தித்தல், Etzelsbach சென்று அன்னைமரி வழிபாட்டில் கலந்து கொள்ளுதல், மீண்டும் Erfurt செல்தல், 24 மற்றும் 25ம் தேதிகளில் Freiburg im Breisgau ல் நிகழ்ச்சித் திட்டங்களை நிறைவேற்றல், பின்னர் உரோமைக்குப் புறப்படுதல் ஆகியவை இப்பயணத்திட்டங்களில் உள்ளன.
ஜெர்மனிக்கான இத்திருப்பயணம்கடவுள் இருக்குமிடத்தில் எதிர்காலம் இருக்கின்றது என்ற தலைப்பில் இடம் பெறும்.

2. புனிதபூமிக் கிறிஸ்தவர்கள் எருசலேமில் தொடர்ந்து வாழ உரிமையைக் கொண்டிருக்கிறார்கள் - கர்தினால் தொரான்

ஜூலை20,2011. புனிதபூமியில் பகிர்ந்து வாழும் ஓர் எதிர்காலத்தைக் கட்டி எழுப்புவதற்கு அப்பகுதியின் கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் முஸ்லீம்கள், உரையாடலில் ஈடுபடுமாறு திருப்பீட அதிகாரி ஒருவர் இச்செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டார்.
புனிதபூமியில் கிறிஸ்தவர்கள் என்ற தலைப்பில், இங்கிலாந்தின் லாம்பெத் மாளிகையில் நடைபெற்ற இரண்டு நாள் கருத்தரங்கில், திருத்தந்தையின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய, திருப்பீட பல்சமய அவையின் தலைவர் கர்தினால் ஜான்-லூயி தொரான் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
ஓரேயோர் எதிர்காலம், அதுவும் பகிர்ந்து கொள்ளப்படும் எதிர்காலம் ஒன்றுதான் இருக்கின்றது என்பதை மதம் போலவே வரலாறும் நமக்குப் போதிக்கின்றது என்று கூறினார் கர்தினால் தொரான்.
புனிதபூமிக் கிறிஸ்தவர்களுக்கும் அவர்களது அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றுரைத்த கர்தினால், யூதர்கள் மற்றும் முஸ்லீம்களைப் போன்றே, கிறிஸ்தவர்களுக்கும் எருசலேம் புனித நகரம் மட்டுமல்ல, அது அவர்களின் பூர்வீக நகரமுமாகும், அங்கு அவர்கள் தொடர்ந்து வாழவும் வேலை செய்யவும் உரிமையைக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கோடிட்டுக் காட்டினார்.
புனிதபூமிக் கிறிஸ்தவர்கள் குறித்த இந்தக் கருத்தரங்கு, இங்கிலாந்து ஆங்லிக்கன் மற்றும் கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர்களால் நடத்தப்பட்ட முதல் நிகழ்வாகும். இது, புனிதபூமியின் பிறரன்பு நண்பர்கள் என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கிறிஸ்தவ, யூத மற்றும் இசுலாம் மதங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இவ்வமைப்பு பெத்லகேமில் முதியோர் இல்லம் ஒன்றை நடத்துகிறது. மேலும், வேலை வாய்ப்பை, சிறப்பாக இளையோர்ககு வேலைவாய்ப்பை வழங்கும் புதிய தொழில்களையும் ஊக்குவிக்கின்றது. உணவு மற்றும் மருந்துகளையும் விநியோகம் செய்கின்றது.

3. கிழக்கு ஆப்ரிக்காவில் நூறாயிரக்கணக்கான மக்கள் பசிச்சாவை எதிர்நோக்கும் ஆபத்து - கோர் ஊனும் அவை

ஜூலை20,2011. கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் மக்களின் அத்தியாவசியத் தேவைகள் குறைபடுவதால் அப்பகுதியில் நூறாயிரக்கணக்கான மக்கள் பசிச்சாவை எதிர்நோக்கும் ஆபத்தில் இருக்கின்றனர் என்று திருப்பீட கோர் ஊனும் பிறரன்பு அமைப்பு எச்சரித்தது.
திருச்சபையின் பிறரன்புப் பணிகளை மேற்பார்வையிடும் இந்தக் கோர் ஊனும் பிறரன்பு அமைப்பு, அப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் அவசரகால மனிதாபிமான உதவிகளுக்கு ஞாயிறன்று திருத்தந்தை விண்ணப்பித்ததையும் குறிப்பிட்டது.
மேலும், ஆப்ரிக்காவின் கொம்பு எனப்படும் திஜிபுத்தி, எத்தியோப்பியா, கென்யா, சொமாலியா ஆகிய இந்நாடுகளில் குறைந்தது ஐந்து இலட்சம் சிறார் புரதச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யூனிசெப் நிறுவனம் கூறியது.
இந்த அவசரகால நெருக்கடி அடுத்த ஆறு மாதங்களில் மேலும் மோசமடையக்கூடும் என்றும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

4. தென் சொமாலியாவின் இரண்டு பகுதிகள் பஞ்சப் பகுதிகள் - ஐக்கிய நாடுகள் நிறுவனம் அறிவிப்பு

ஜூலை20,2011. கடந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் தற்சமயம் கடும் வறட்சியை எதிர்கொள்ளும் தென் சொமாலியாவின் இரண்டு பகுதிகள் பஞ்சப் பகுதிகள் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் அறிவித்துள்ளது.
சொமாலியாவின் தெற்கு Bakool மற்றும் Lower Shabelle பகுதிகளின் மனிதாபிமான நிலைமை வேகமாக மோசமடைந்து வருகின்றது என்றுரைத்த ஐ.நா.நிறுவனம், கடந்த 19 ஆண்டுகளில் தற்போது அந்நாடு இத்தகைய பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளது என்று தெரிவித்தது.
சொமாலியாவில் அண்மை மாதங்களில் பஞ்சத்தால் பல்லாயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர் என்றும் உடனடியாக அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் (FAO) அறிவித்தது.
இம்மக்களுக்கு உதவுவதற்கென வருகிற திங்களன்று சர்வதேச அளவிலான உயர்மட்ட அமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டுமாறு ஜி-20 நாடுகள் அமைப்பின் தலைமையான பிரான்ஸ், FAO வுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதில் FAOவின் 191 உறுப்பு நாடுகளும் சர்வதேச நிறுவனங்களும் அரசு-சாரா அமைப்புகளும் ஐ.நா. நிறுவனங்களும் கலந்து கொள்ள பரிந்துரைக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஆப்ரிக்காவில் ஒரு கோடிப்பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5. ஞாயிற்றுக்கிழமை, வழிபாட்டிற்கும் ஓய்வுக்குமென ஒதுக்கப்பட வேண்டும் - பேரருட்திரு கலின்டோ 

ஜூலை20,2011. ஞாயிற்றுக்கிழமை, வழிபாட்டின் நாள் மற்றும் குடும்பத்தோடும் நண்பர்களோடும் ஓய்வெடுத்து நேரத்தைச் செலவழிக்க வேண்டிய நாளாகக் கடைபிடிக்கப்பட வேண்டுமென்று திருப்பீட பொதுநிலையினர் அவையின் நேரடிச் செயலர் பேரருட்திரு Miquel Delgado Galindo வலியுறுத்தினார்.
வாரத்தின் முதல் நாளாகிய இந்த நாளில் நாம், இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூருகிறோம் என்றுரைத்த அவர், இந்நாளை இறை வழிபாட்டிற்கும் மனித ஓய்வுக்குமென ஒதுக்க வேண்டுமெனத் திருச்சபை போதிக்கின்றது என்றார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் கத்தோலிக்கர் திருப்பலிகளில் பங்கெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பேரருட்திரு Galindo, வில்லை, எப்படி தொடர்ந்து வளைத்துக் கொண்டே இருக்க முடியாதோ அதேபோல், மனிதனும் எப்பொழுதும் வேலை செய்து கொண்டு இருக்க முடியாது என்றார்.

6. இந்தியாவின் இராணுவ உதவி மியான்மாரில் வன்முறை அதிகரிக்க உதவக்கூடும் மனித உரிமை ஆர்வலர் குற்றச்சாட்டு

ஜூலை20,2011. மியான்மார் இராணுவ அரசுக்கு 52 இராணுவ வண்டிகளுக்கு வெடிமருந்துக் குண்டுகளும் ஆயுதங்களும் வழங்கியதன் மூலம் இந்திய அரசு தனது சனநாயகக் கொள்கைகள் அனைத்தையும் மீறியுள்ளது என்று இந்திய கிறிஸ்தவர்களின் உலக அவைத் (GCIC) தலைவர் Sajan K George  குறை கூறினார்.
இந்தியாவின் இராணுவ வியாபாரம், மியான்மாரின் Kachin, Shan, Karen ஆகிய இனங்களின் மக்களுக்கு எதிரான வன்முறையை அதிகரிக்கின்றது என்றும் ஜார்ஜ் தெரிவித்தார்.
பல்வேறு மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள், பாலின வன்புணர்ச்சிகள் போன்றவற்றிற்கு மியான்மார் இராணுவம் ஏற்கனவே குறைகூறப்பட்டுவரும்வேளை, இந்தியாவின் இராணுவ உதவி, இலட்சக்கணக்கான அப்பாவி மக்களின் வாழ்க்கையில் கடும் விலைவுகளை ஏற்படுத்தும் என்றும் குறை கூறினார் ஜார்ஜ்.
கடந்த மார்ச் 30ம் தேதியிலிருந்து ஆட்சியிலிருக்கும் புதிய அரசின் அதிபர் Thien Sein, இராணுவத்தின் ஆதரவு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

7. அழிந்து கொண்டிருக்கும் இலங்கையின் சனநாயக விழுமியங்களைக் கத்தோலிக்கர் தாங்கிப் பிடிக்க வேண்டும் பத்திரிக்கையாளர் கோரிக்கை

ஜூலை20,2011. இலங்கையின் சனநாயக விழுமியங்கள், அழிவின் இறுதி எல்லைக்கே வந்துவிட்ட நிலையில் அவற்றைத் தாங்கிப் பிடிக்க வேண்டியது கத்தோலிக்க அருட்பணியாளரும் துறவியரும் பொதுநிலையினருமே என்று அந்நாட்டு முக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் கூறினார்.
இலங்கையின் தற்போதைய உண்மை நிலையும் கத்தோலிக்கரின் பணியும் என்ற தலைப்பில் சிலாவ் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய Ravaya செய்தித்தாளின் ஆசிரியர் Majuwana Kankanamage Victor Ivan, நாட்டில் சனநாயக விழுமியங்களை ஊக்குவிக்க நாம் தவறி விட்டோம் என்று கூறினார்.
நாட்டில் பரவலாக ஊழலும் பொது நிதி பெருமளவில் வீணாக்கப்படுவதையும் காண முடிகின்றது என்றுரைத்த Victor Ivan, பணம்படைத்தவர் எதையும் பெறலாம் என்று நமது அனுபவம் சொல்கிறது, அத்தகைய சமுதாயத்தில் உரிமைகள், பொறுப்புகள் இவை பற்றிய உணர்வே இருக்காது என்றார்.
இந்தக் கருத்தரங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

8. இலங்கையில் போர் மீண்டும் தொடங்கக்கூடும் - ICG குழு எச்சரிக்கை

ஜூலை20,2011. இலங்கையில் தமிமீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஈராண்டுகள் ஆகியுள்ள நிலையில் புதுப்பிக்கப்பட்ட போர் உருவாகும் ஆபத்து தெரிவதாக ICG என்ற அனைத்துலக நெருக்கடிகால குழு எச்சரித்தது.
இச்சர்வதேச குழு இத்திங்களன்று வெளியிட்ட அறிக்கையில்,  இலங்கை ஒப்புரவுக்கு வெகு தூரத்தில் இருக்கின்றது என்றும் அதிகாரமும் செல்வமும் அரசுத்தலைவர் ராஜபக்ஷ குடும்பத்தில் குவிந்துள்ளன என்றும் இலங்கையில் போர் மீண்டும் தொடங்கக்கூடும் ஆபத்து இருக்கின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 1,80,000 பேர் இன்னும் தற்காலிக முகாம்களில் இருப்பதையும், நாட்டின் வடக்கும் கிழக்கும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்பதையும் அக்குழு சுட்டிக் காட்டியுள்ளது.  

9. தமிழகத்தில் நகர்ப்புற மக்கள் தொகை 14 விழுக்காடு அதிகரிப்பு

ஜூலை 19,2011. தமிழகத்தில் கடந்த இருபது ஆண்டுகளில் நகர்ப்புற மக்கள் தொகை ஏறத்தாழ 14 விழுக்காடு அதிகரித்திருப்பதாக இச்செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை கூறுகிறது.
தமிழகத்தில் 1991ம் ஆண்டிலிருந்து நகர்ப்புற மக்கள் தொகை அதிகரித்திருப்பதாகத் தெரிவித்த, தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலக இயக்குனர் எஸ்.கோபாலகிருஷ்ணன், கடந்த இருபது ஆண்டுகளில் நகர்ப்புற மக்களின் எண்ணிக்கை, மொத்த மக்கள்தொகையில் 48.45 விழுக்காடு அதிகரித்திருப்பதாக அறிவித்தார்.
32 மாவட்டங்களைக் கொண்ட தமிழகத்தில், ஏழு கோடியே 21 இலட்சத்து 38 ஆயிரத்து 958 பேர் வாழ்கின்றனர் எனவும், இவர்களில் 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் வீதம் இருப்பதாகவும், எனினும், நீலகிரி மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கு 1014 பெண்கள் வீதம் இருப்பதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது.
கல்வியறிவு பெற்றவர்களின் விகிதம் 80.33 விழுக்காடாக இருக்கின்றது, இது 2001ல் 73.47 விழுக்காடாக இருந்தது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய மக்கள் தொகை பட்டியல் 120 கோடியாக இருக்கிறது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...