Friday, 29 July 2011

Catholic News - hottest and latest - 28 July 2011

1.  கேமரூனின் சமூகத்தொடர்புக்கான தேசிய அவை தலைவராக அந்நட்டு ஆயர் ஒருவரை நியமித்துள்ளது அரசு

2.  பேச்சுவார்த்தைகளுக்கான உண்மையான விருப்பத்தைக் கொண்டுள்ளதாக சீனா கூறுவது பெரும்பொய் என்கிறார் கர்தினால்

3.  சுதந்திரம், நீதி மற்றும் அமைதிக்கான ஏக்கத்தின் வெளிப்பாடே மக்கள் எழுச்சி, என்கிறார் துனிசிய பேராயர்

4.  காம்பியா நாட்டில் பதட்டநிலைகள் அதிகரித்துள்ளதாக மறைப்பணியாளர்கள் கவலை

5.  வட கொரிய மக்களுக்கு 100 டன் மாவுப்பொருட்களை வழங்க உள்ளது கொரிய காரித்தாஸ் அமைப்பு

6.  தென்னாபிரிக்காவால் மட்டுமே இலங்கையின் நல்லிணக்கத்திற்கு உதவ முடியும்! - லூயிஸ் ஆர்பர்

----------------------------------------------------------------------------------------------------------------

1.  கேமரூனின் சமூகத்தொடர்புக்கான தேசிய அவை தலைவராக அந்நட்டு ஆயர் ஒருவரை நியமித்துள்ளது அரசு

ஜூலை 28, 2011.   கேமரூன் நாட்டின் சமூகத்தொடர்புக்கான தேசிய அவையினை வழிநடத்துபவராக அந்நாட்டு ஆயர் ஒருவரை நியமித்துள்ளார் அரசுத்தலைவர் பால் பியா.
அரசு நிர்வாகங்களிடையே தொடர்புகளை உருவாக்கி உயர் அதிகாரிகளுக்கு உதவும் இம்முக்கியப் பொறுப்பு அரசுத்தலைவர் மூலம் கேமரூனின் கிரிபி ஆயர் ஜோசப் பெஃபே அதேபாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
அரசு நிர்வாகத்தின் செய்திகளைத் தேசியப் பத்திரிகைகளுக்கு நேர்மையாக வழங்க, குறிப்பாக வரும் அக்டோபர் அரசுத்தலைவர் தேர்தலுக்குத் தயாரிப்பாக வழங்க இத்தகையதொரு நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகைத்துறையில் அதிக அனுபவமுடைய ஆயர் பெஃபே அதேபா, ஏற்கனவே ஆப்ரிக்க ஆயர் பேரவையின் சமூகத்தொடர்புத்துறைக்குப் பொறுப்பாக இருந்துள்ளதுடன், தற்போது கேமரூன் ஆயர் பேரவையின் சமூகத்தொடர்புத்துறைக்குத் தலைவராக இருந்து பணியாற்றி வருகிறார்.
ஏற்கனவே கேமரூன் தேர்தல் அவையின் அங்கத்தினராகப் பிறிதொரு ஆயர் Dieudonne Watio வை அரசுத்தலைவர் நியமித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

2.  பேச்சுவார்த்தைகளுக்கான உண்மையான விருப்பத்தைக் கொண்டுள்ளதாக சீனா கூறுவது பெரும்பொய் என்கிறார் கர்தினால்

ஜூலை 28, 2011.   திருத்தந்தையின் அனுமதியின்றி சீனாவில் ஆயர்கள் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளது, தலத்திருச்சபையின் இயல்பான வாழ்வுக்கும் நற்செய்தி அறிவிப்புப் பணிகளுக்கும் இன்றியமையாதது என சீன அரசு அறிவித்துள்ளது ஒரு கேலிக்கூத்து என குறை கூறியுள்ளார் ஹாங்காங் கர்தினால் ஜோசப் சென் செக்கியூன்.
தேசியத் திருச்சபை என்ற ஒன்றைத் தன் கீழ் கொண்டு கிறிஸ்தவர்களை அடக்கி ஆண்டுவரும் சீனத்திருச்சபை, தற்போது திருத்தந்தைக்கு விசுவாசமாக இருக்கும் மறைந்து வாழும் கிறிஸ்தவர்களையும் தன் குடையின் கீழ் கொணர முயல்வதாக குற்றஞ்சாட்டினார் கர்தினால்.
தனிமனிதர்களின் சுதந்திரத்தையும் மனச்சான்றின் சுதந்திரத்தையும் வன்முறைகள் கொண்டு அடக்கியதுடன், திருத்தந்தையின் அதிகாரத்தையும் இரக்க உணர்வையும் மதிக்கத்தவறிய சீன அரசு, தாங்கள் பேச்சுவார்த்தைகளுக்கான உண்மையான விருப்பத்தைக் கொண்டுள்ளதாக அறிவித்திருப்பது உலகின் மிகப்பெரிய பொய் என மேலும் கூறினார் கர்தினால் சென்.

3.  சுதந்திரம், நீதி மற்றும் அமைதிக்கான ஏக்கத்தின் வெளிப்பாடே மக்கள் எழுச்சி, என்கிறார் துனிசிய பேராயர்

ஜூலை 28, 2011.   துனிசியாவில் 23 ஆண்டு ஆட்சி செய்த அரசுத்தலைவர் நீக்கப்பட்டதற்கும், தற்போது, வரும் அக்டோபரில் தேர்தல் இடம்பெறுவதற்கும் காரணமான மக்கள் எழுச்சியானது, சுதந்திரம், நீதி மற்றும் அமைதிக்கான ஏக்கத்தின் வெளிப்பாடு என்றார் துனிசிய பேராயர் Maroun Lahham.
ஜனநாயகத்தை நோக்கிய பாதையில் காலடி எடுத்து வைத்திருக்கும் துனிசியாவில் மிகச்சிறுபான்மையினராக வாழும் கத்தோலிக்கர்கள், எதிர்தரப்புக்களிடையே பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதுடன், இசுலாமிய உலகிற்கும் மேற்கிற்கும் இடையேயான பாலமாகச் செயல்பட ஆவல் கொண்டுள்ளதாகவும் எடுத்துரைத்தார் பேராயர்.
ஒருபக்கம் புரட்சியையும் மறுபக்கத்தில் ஜனநாயகப் பாதைக்கான ஏக்கத்தையும் கொண்டிருக்கும் துனிசியாவில் ஒருவிதமானப் பதட்டநிலைகள் இடம்பெறுவதாக பத்திரிகையாளர் சந்திப்பின்போது உரைத்த பேராயர் Lahham, இவ்வளவு காலமும் அரசைக்கண்டு மக்கள் பயந்து வந்தனர், ஆனால் தற்போது மக்கள்சக்தியைக் கண்டு அரசு அஞ்சி வருகின்றது என மேலும் கூறினார்.
இசுலாமியர்களை பெரும்பான்மையினராகக் கொண்ட துனிசியாவில் 1கோடி இசுலாமியர்களிடையே 22,000 கத்தோலிக்கர்களே வாழ்கின்றனர். இங்குள்ள 11 பங்குத்தளங்களில் 49 குருக்கள் 121 பெண்துறவிகள் பணியாற்றுவதுடன் 11 பள்ளிகளையும் நடத்துகின்றனர். இக்கத்தோலிக்கப் பள்ளிகளில் 6,000 இசுலாமிய மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

4.  காம்பியா நாட்டில் பதட்டநிலைகள் அதிகரித்துள்ளதாக மறைப்பணியாளர்கள் கவலை

ஜூலை 28, 2011.   காம்பியா நாட்டில் தேர்தலுக்கு முன்னான அடக்குமுறை நடவடிக்கைகளின் விளைவாக பதட்டநிலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டில் பணிபுரியும் மறைப்பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
நவ‌ம்பர் தேர்தலை நோக்கி நாடுச் சென்று கொண்டிருக்கும் வேளையில் பல சமூக அமைப்புகளின் அங்கத்தினர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டு வருவது குறித்து கவலையை வெளியிட்ட மறைப்பணியாளர்கள், நாட்டின் மனித உரிமை மீறல்கள் குறித்து தங்கள் குரலை எழுப்பும் எவரின் வாழ்வும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவித்தனர்.
காம்பியாவில் வேலைவாய்ப்பின்மைகள் மிகப்பெரிய அளவில் இருக்கின்றபோதிலும், வட ஆப்ரிக்க நாடுகளைப்போல் இங்கு மக்கள் எழுச்சி இடம்பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்ற அவர்கள், அரசின் அடக்குமுறைகளையும் மக்களின் அமைதி இயல்புகளையும் அதற்கு காரணமாகக் காட்டியுள்ளனர்.
14 இலட்சம் மக்கள்தொகையைக் கொண்ட காம்பியாவில் 98 விழுக்காட்டினர் இசுலாமியர்.

5.  வட கொரிய மக்களுக்கு 100 டன் மாவுப்பொருட்களை வழங்க உள்ளது கொரிய காரித்தாஸ் அமைப்பு

ஜூலை 28, 2011.   வட கொரியாவில் பசியாவில் வாடும் மக்களுக்கு 100 டன் மாவுப்பொருட்களை நேரடியாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது கொரிய காரித்தாஸ் அமைப்பு.
அடக்குமுறைகளைக் கையாண்டு வரும் வடகொரிய அரசுக்கு எவ்வித உதவிகளையும் வழங்குதல் கூடாது என்பது உண்மையெனினும், பசியால் வாடும் மக்கள் குறித்துப் பாராமுகமாய் இருக்க முடியாது என்ற காரித்தாஸ் அமைப்பு, தங்கள் உதவிகள் யாவும் மக்களை நேரடியாகச் சென்றடைவதாக இருக்கும் என்றது.
தென்கொரியா மீது வட கொரியா திடீர்த் தாக்குதலை மேற்கொண்டதைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வடகொரியாவிற்கான தென்கொரிய உதவிகள் தற்போது சிறிய அளவில் ஐந்து அரசு சாரா அமைப்புகள் மூலம் துவக்கப்பட்டுள்ளன.

6.  தென்னாபிரிக்காவால் மட்டுமே இலங்கையின் நல்லிணக்கத்திற்கு உதவ முடியும்! - லூயிஸ் ஆர்பர்

நல்லிணக்கம் தொடர்பாக தென்னாப்ரிக்காவிடமிருந்து மட்டுமே இலங்கை பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியுமென்று சர்வதேச நெருக்கடிக் குழுவின் தலைவரான லூயிஸ் ஆர்பர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவ தென்னாப்ரிக்காவால் செய்யக்கூடியது என்ன என்ற தலைப்பில் பிரிட்டனின் த சன்டே டைம்ஸ் பத்திரிகையில் கருத்து தெரிவித்த  லூயிஸ் ஆர்பர்,கடந்த கால உண்மையை வெளியிடுவதற்கான உறுதியான முயற்சி இல்லாமல் பல ஆண்டுகளான உள்நாட்டு மோதலை வெற்றிகொள்ள ஆரம்பிக்க முடியாது என்பதுடன், நல்லிணக்கத்தையும் அர்ப்பணிப்புடன் முன்நகர்த்த இயலாது என்பதை எந்த நாடுகளையும் விட  தென்னாபிரிக்கா நன்கறிந்துள்ள நிலையில் அந்தப் பாடத்தை இலங்கை கற்றுக்கொள்ள முடியும் என்றார்.
விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் தோற்கடித்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டபோதிலும், யுத்தத்தின் பின்னரான அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் கொள்கைகள் நாட்டின் அரசியல் நிறுவனங்களை பாதிக்கச் செய்வதாகவும் இனப் பிளவுகளை ஆழமாக்குவதாகவும் காணப்படுகின்றன எனக் கூறிய அவர், பல்வேறு சவால்களுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக அரசானது, சிறுபான்மையினர் தொடர்பாக அவர்களின் பொருளாதார அரசியல் எதிர்காலத்தைத் துண்டிக்கும் நடவடிக்கைகளை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது எனவும் குறைகூறினார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...