Thursday, 21 July 2011

Catholic News - hottest and latest - 19 July 2011

1. நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஆர்வம் தேவை - ஈராக் பேராயர்

2. மும்பை குண்டுவெடிப்புக்களில் பலியானவர்களுக்கென‌ டெல்லி உயர்மறைமாவட்டத்தில் சிறப்புச் செப வழிபாடு

3. கிழக்கு ஆப்ரிக்காவில் பசிச்சாவை எதிர்கொள்ளும் சுமார் ஒரு கோடி மக்களுக்கு உதவிக்காக அழைப்பு

4. சூடான் மோதல்கள், அமைதிக்கான அச்சுறுத்தல்கள் என்கிறது கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு

5. தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் உரிமைக்காக உண்ணாவிரதப் போராட்டம்

6. கர்வார் மறைமாவட்ட முதல் ஆயர் இறைபதம் எய்தினார்

----------------------------------------------------------------------------------------------------------------

1. நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஆர்வம் தேவை - ஈராக் பேராயர்

ஜூலை 19, 2011.   நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஆர்வத்துடன் ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளிருந்து துவங்கவேண்டும் என ஈராக்கின் அனைத்து இன மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு பேராயர் லூயிஸ் சாக்கோ.
கிர்குக் கல்தேய ரீதி உயர்மறைமாவட்டமும், குர்திஸ்தான் பகுதியின் 'அச்சுறுத்தப்பட்டுள்ள மக்களுக்கான அமைப்பும்' இணைந்து நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட 150க்கும் மேற்பட்ட அரசியல் மற்றும் மதத்தலைவர்களுக்கு உரையாற்றிய பேராயர் சாக்கோ, நாட்டின் அனைத்து மதப்பிரிவினரிடையே அமைதியான இணக்க வாழ்வு இடம்பெறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
பல்வேறு பிரிவுகள் இருப்பினும் ஐக்கியத்தில் வாழ முடியும் என்பதற்கும், பல்வேறு மதங்களும் சகிப்புத்தன்மையுடன் ஒன்றிணைந்து வாழமுடியும் என்பதற்கும் எடுத்துக்காட்டாக ஈராக் நாடு திகழ முடியும் என்றார் பேராயர். தனியார் நலன்களில் அரசியல், தனிப்பட்ட அக்கறை காட்டுவதாலேயே பிரிவினைகளும் மோதல்களும் பிறக்கின்றன என்ற அவர், ஐக்கிய முயற்சிகளுக்கே முதலிடம் கொடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியதோடு, பேச்ச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கவேண்டிய மதங்களின் கடமையையும் வலியுறுத்தினார்.
மதத்தை அரசியலில் கலப்பதை நீக்கினாலே, பல்வேறு பிரச்னைகளுக்கு ஈராக்கில் தீர்வு காணமுடியும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் பேராயர் சாக்கோ.

2. மும்பை குண்டுவெடிப்புக்களில் பலியானவர்களுக்கென‌ டெல்லி உயர்மறைமாவட்டத்தில் சிறப்புச் செப வழிபாடு

ஜூலை19, 2011. கடந்த வார மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பலியான 19 பேருக்கான சிறப்புச் செப வழிபாட்டை நடத்தியது டெல்லி உயர் மறைமாவட்டம்.
மதங்களிடையேயான இந்த‌ச் செபவழிபாட்டிற்கு ஏற்பாடு செய்த டெல்லி பேராயர் வின்சென்ட் கொன்சசாவோ உரைக்கையில், அப்பாவி மக்களின் உயிர்களைப் பலிவாங்கிய இந்தச் செயல் மிகுந்த கவலை தருவதாக உள்ளது என்றார்.
தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து இத்தகைய அழிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பயங்கரவாதிகள் மனம் திருந்தவேண்டும் என செபிக்குமாறும் விண்ணப்பித்தார் பேராயர்.
கடந்த புதனன்று மும்பையில் இடம்பெற்ற மூன்று தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்களில் 19 பேர் உயிரிழந்தனர், ஏறத்தாழ 130 பேர் காயமடைந்தனர்.

3. கிழக்கு ஆப்ரிக்காவில் பசிச்சாவை எதிர்கொள்ளும் சுமார் ஒரு கோடி மக்களுக்கு உதவிக்காக அழைப்பு

ஜூலை19,2011. கிழக்கு ஆப்ரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் பசிச்சாவை எதிர்கொள்ளும் சுமார் ஒரு கோடி மக்களுக்கான உதவிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது பிரிட்டனை மையமாகக் கொண்ட கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனம்.
வெளிநாட்டு வளர்ச்சிக்கான இக்கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவன இயக்குனர் Geoff O'Donoghue வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், இம்மக்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான சுத்தமான நீர், மருந்து மற்றும் உணவுக்காக விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவித்தார்.
கென்யா, எத்தியோப்பியா, சொமாலியா, தென் சூடான் ஆகிய நாடுகளில் இவ்வாண்டில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி, தங்கள் வாழ்நாளில் இதுவரைக் கண்டிராத நிலையாக இருக்கின்றது என்று அப்பகுதியில் பணியாற்றும் இடர்துடைப்புப் பணியாளர்கள் கூறுகின்றனர்.
கென்யாவின் தாதாப்பிலுள்ள மூன்று அகதிகள் முகாம்களுக்குத் தினமும் 1300 பேர் வீதம் வருவது அம்முகாம்களின் கொள்ளளவிற்குச் சவாலாக இருக்கின்றது என்றார் O'Donoghue.
அம்முகாம்கள் 90,000 பேருக்கென அமைக்கப்பட்டன, ஆனால், தற்சமயம் அவற்றில் 3,80,000 அகதிகள் வாழ்கின்றனர் என்றார் அவர்.
2010ன் இறுதியிலும் 2011லும் மழை இல்லாததால் இவ்வறட்சி ஏற்பட்டுள்ளது என்றார் O'Donoghue.
  
4. சூடான் மோதல்கள், அமைதிக்கான அச்சுறுத்தல்கள் என்கிறது கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு

ஜூலை 19, 2011. சூடானுக்கும் புதிய நாடான தென் சூடானுக்கும் இடையே எல்லைப்பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்கள் அமைதிக்கானப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், கோவில்கள் திட்டமிட்டுத் தாக்கப்படுவதாகவும் கவலையை வெளியிட்டுள்ளார் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு ஒன்றின் தலைவர்.
இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பகுதியான தென் கோர்டோஃபானில் பல ஆயிரக்கணக்கான மக்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள் என்றுரைத்த Church in Need  என்ற பிறரன்பு அமைப்பின் இங்கிலாந்து இயக்குனர் Kyrke Smith, அப்பாவி மக்களும் கிறிஸ்தவக் கோவில்களும் திட்டமிட்டு தாக்கப்பட்டு வருவது கவலை தருவதாக உள்ளது என்றார்.
சூடானின் இசுலாமிய அரசு கடந்த காலங்களில் தென்பகுதி சிறுபான்மை மதத்தவர் மீது நடத்திய தாக்குதல்களை நினைவுபடுத்துவதாக தற்போதைய தாக்குதல்கள் உள்ளன என்றார் அவர்.
நிலையான ஓர் அமைதியைப் பெறும் நோக்கில் சூடான் மற்றும் தென் சூடான் நாடுகளின் அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேசவேண்டிய கடமை சர்வதேச சமுதாயத்திற்கு உள்ளது என்பதையும் நினைவுறுத்தினார் Smith.

5. தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் உரிமைக்காக உண்ணாவிரதப் போராட்டம்

ஜூலை19,2011. இந்தியாவில் தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் தாழ்த்தப்பட்டவர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பெருமெண்ணிக்கையில் உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை, இந்திய தேசிய கிறிஸ்தவ சபைகள் அவை, தேசிய தலித் கிறிஸ்தவர்கள் அவை, ஆகியவை இணைந்து இம்மாதம் 25 முதல் 27 வரை  உண்ணாவிரதப் போராட்டத்தையும், 28ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கிய நடைபயணத்தையும் நடத்தத் திட்டமிட்டுள்ளன.
இந்தியாவில், பொருளாதார, கல்வி மற்றும் சமூகநல வாய்ப்புக்களுக்கு இந்து தலித்துக்களுக்கு மட்டும் வழிஅமைக்கும் இந்திய அரசியல் அமைப்பு எண் 3, 1950ல் அங்கீகரிக்கப்பட்டது. பின்னர் 1956ல் புத்த மதத்தினருக்கும் 1990ல் சீக்கியர்களுக்கும் இவ்வுரிமை கொடுக்கப்பட்டது. அதேமாதிரியான உரிமைகள் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தலித் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.  
தற்போதைய நடுவண் அரசும் பிஜேபி அரசு போன்றே உள்ளது, எந்த மாற்றமும் இல்லை என்று தலித் உரிமைகள் ஆர்வலர் வின்சென்ட் மனோகரன் கூறினார்.

6. கர்வார் மறைமாவட்ட முதல் ஆயர் இறைபதம் எய்தினார்

ஜூலை 19, 2011. கர்நாடக மாநிலத்தின் கர்வார் மறைமாவட்ட முதல் ஆயர் வில்லியம் லியோனார்டு டி'மெல்லோ இச்செவ்வாயன்று தனது 80ம் வயதில் காலமானார்.
மங்களூர் மறைமாவட்டத்தின் Cascia எனுமிடத்தில் 1931ம் ஆண்டு பிறந்த ஆயர் வில்லியம் டி'மெல்லோ, 1957ம் ஆண்டு பெங்களூர் உயர்மறைமாவட்டத்தின் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். கர்வார் என்ற புதிய மறைமாவட்டம் உருவாக்கப்பட்டபோது அதன் ஆயராக 1977ம் ஆண்டு திருநிலைப்படுத்தப்பட்ட இவர்30 ஆண்டுகள் தொடர்ந்து அம்மறைமாவட்டத்தின் வளர்ச்சிக்காக உழைத்து, வயது மற்றும் உடல் நிலை காரணமாக 2007ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். சிலகாலம்  நோயுற்றிருந்த ஆயர் வில்லியம் டி'மெல்லோ இச்செவ்வாய்க் காலை இந்திய நேரம் 11 மணி 5 நிமிடங்களுக்கு, குரு முல்லர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலமானார்.
 

No comments:

Post a Comment