Wednesday 6 July 2011

Catholic News - hottest and latest - 05 July 2011

1. 150ம் ஆண்டைச் சிறப்பிக்கும் L'Osservatore Romano வுக்குத் திருத்தந்தை பாராட்டு

2. ஆப்ரிக்க மக்கள் தங்களது இன்ப துன்ப நேரங்களில் இறைவார்த்தையில் சக்தியைப் பெற திருத்தந்தை அழைப்பு

3. கிழக்கு ஆப்ரிக்காவில் திருச்சபை வளர்ந்து வருகிறது மலாவி பேராயர்

4. வத்திக்கானின் ஏறக்குறைய நூறு முக்கிய தொன்மை ஆவணங்கள் முதன் முறையாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது

5. குடியேற்றதாரரைச் சட்ட ரீதியாகப் பாதுகாப்பும் பொறுப்பை அரசுகள் ஏற்க வேண்டும் - அமெரிக்க ஆயர்கள் வலியுறுத்தல்

6. இந்தியாவில் தலித் கிறிஸ்தவர்கள் இந்து மதத்திற்கு மாறி வருகிறார்கள் கர்நூல் ஆயர்

7. பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் சட்டத்துக்குப் புறம்பேயான கொலைகளுக்குக் கண்டனம்

8. கேரள அரசுக்கு உலக வங்கி 20 கோடி டாலர் கடனுதவி

----------------------------------------------------------------------------------------------------------------

1. 150ம் ஆண்டைச் சிறப்பிக்கும் L'Osservatore Romano வுக்குத் திருத்தந்தை பாராட்டு

ஜூலை05,2011. திருப்பீடச்சார்புத் தினத்தாளான L'Osservatore Romano, விசுவாசிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, கிறிஸ்துவின் அருள்வாக்கு மற்றும் திருச்சபையின் அதிகாரப்பூர்வப் போதனைகளின் ஒளியில் காண உதவுகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பாராட்டினார்.
L'Osservatore Romano வத்திக்கான் தினத்தாள் பிரசுரமானதன் 150ம் ஆண்டையொட்டி இச்செவ்வாய்க்கிழமை காலை அத்தினத்தாளின் அலுவலகத்திற்குச் சென்று அதன் பணியாளர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை, அத்தினத்தாள் கடந்த 150 ஆண்டுகளில் மைல்கல் பதித்துள்ளது எனப் புகழ்ந்தார்.
அதன் பணியாளர்கள் தங்களது பணியைச் செய்வதற்கு, நவீனத் தொழிட்நுட்பங்களில் போதுமானப் பயிற்சிகளையும்  திறமைகளையும் வளர்த்துக் கொள்வது மட்டும் போதாது, அத்துடன் செப உணர்வு, சேவை மனப்பான்மை, கிறிஸ்துவுக்கும் அவரது திருச்சபையின் போதனைகளுக்கும் விசுவாசமாக இருப்பது ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளுமாறும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
L'Osservatore Romano தினத்தாள், உலகப் பத்திரிகைத் துறையில் ஒரு தனிப்பட்ட இடத்தைக் கொண்டுள்ளது எனவும், மனித மற்றும் கிறிஸ்தவ மதிப்பீடுகளிலிருந்து விலகிச் செல்லக் காரணமாக அமையும் எதிர்மறைச் செய்திகள் மத்தியில் உண்மைகளை எடுத்துரைக்கும் பணியைச் செய்கின்றது எனவும் திருத்தந்தை கூறினார்.
L'Osservatore Romano  தினத்தாள் 1861ம் ஆண்டு ஜூலை ஒன்றாந்தேதி பிரசுரமானது.

2. ஆப்ரிக்க மக்கள் தங்களது இன்ப துன்ப நேரங்களில் இறைவார்த்தையில் சக்தியைப் பெற திருத்தந்தை அழைப்பு

ஜூலை05,2011. ஆப்ரிக்க மக்கள் தங்களது இன்ப துன்ப நேரங்களில் இறைவார்த்தையைப் பின்பற்றுவதன்மூலம் அவர்கள் உயிர்த்த கிறிஸ்துவோடு என்றும் இருந்து அவரில் வாழ முடியும் என்று திருத்தந்தை கூறினார்.
ஆப்ரிக்க மக்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்நோக்கும் சவால்களைச் சந்திப்பதற்கு விடுதலையளிக்கும் நற்செய்தி வார்த்தைகளை எடுத்துரைத்து வரும் ஆயர்களின் பணிகளையும் பாராட்டினார் திருத்தந்தை.
AMECEA என்ற கிழக்கு ஆப்ரிக்க கத்தோலிக்க ஆயர் பேரவை கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் பொன்விழாவை நைரோபியில் சிறப்பித்த ஆயர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.
இச்செய்தியை திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருத்தந்தையின் பெயரில் அக்கூட்டமைப்பின் தலைவர் மலாவி பேராயர் Tarcisio Ziyaye க்கு அனுப்பியுள்ளார்.
மேலும், கிழக்கு ஆப்ரிக்க ஆயர்களும் தங்களது நன்றியைத் தெரிவித்து திருத்தந்தைக்குச் செய்தி அனுப்பியுள்ளனர்.

3. கிழக்கு ஆப்ரிக்காவில் திருச்சபை வளர்ந்து வருகிறது மலாவி பேராயர்

ஜூலை05,2011. கிழக்கு ஆப்ரிக்காவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு தலத்திருச்சபைகளில் முன்னேற்றங்கள் இடம் பெற்றுள்ளன என்று பேராயர் தர்ச்சீசியோ ஜியாயே , கூறினார்.
கென்ய நாட்டு நைரோபியில் நடைபெற்ற AMECEA கூட்டமைப்பின் பொன்விழாத் திருப்பலியில் மறையுரையாற்றிய பேராயர் ஜியாயே, கிழக்கு ஆப்ரிக்காவில் 1961ல் 47 ஆக இருந்த மறைமாவட்டங்கள் தற்போது 119 ஆக வளர்ச்சி கண்டுள்ளது என்றார்.
1961ல் 53 இலட்சத்து 71 ஆயிரமாக இருந்த கத்தோலிக்கரின் எண்ணிக்கை தற்போது ஐந்து கோடியாக உயர்ந்துள்ளது என்றும் உரைத்த அவர், தலத்திருச்சபையின் மீது பற்றுதல் கொண்டு அதன் வளர்ச்சியில் ஆர்வம் காட்டும் பொதுநிலையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் சுட்டிக் காட்டினார்.  
AMECEA என்பது, எரிட்ரியா, எத்தியோப்பியா, கென்யா, மலாவி, சூடான், டான்சானியா, உகாண்டா, ஜாம்பியா ஆகிய எட்டு கிழக்கு ஆப்ரிக்க நாடுகளின் ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பாகும். சொமாலியா, திஜிபுத்தி ஆகிய நாடுகளின் ஆயர் பேரவைகளும் இதில் உறுப்பினர்களாக உள்ளன.

4. வத்திக்கானின் ஏறக்குறைய நூறு முக்கிய தொன்மை ஆவணங்கள் முதன் முறையாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது

ஜூலை05,2011.வத்திக்கானில் நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்த  பல முக்கிய தொன்மை ஆவணங்களில் ஏறக்குறைய நூறு ஆவணங்கள் முதன் முறையாக 2012ம் ஆண்டு பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை உரோம் Capitolini மாநகராட்சி அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று அறிவித்தது வத்திக்கான்.
திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே தலைமையிலான குழு இச்செவ்வாய்க்கிழமை நிருபர் கூட்டத்தில் இத்தகவலை வெளியிட்டது.
அறிவியலாளர் கலிலேயோ கலிலியின் கண்டுபிடிப்புகள் குறித்த வத்திக்கானின் நடவடிக்கைகள், இங்கிலாந்து அரசர் எட்டாம் ஹென்ரியின் திருமணம் குறித்து ஆங்கில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் திருத்தந்தை ஏழாம் கிளமெண்ட் எழுதிய கடிதம், பாப்பிறைகளின் தலைமைத்துவம் பற்றி திருத்தந்தை ஏழாம் கிரகரியின் அறிக்கை, இரண்டாம் உலகப் போர் தொடர்புடைய அறிக்கைகள் உட்பட சுமார் நூறு முக்கிய ஆவணங்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும்.
“Lux in Arcana”  என்ற தலைப்பில் வைக்கப்படும் இவை வத்திக்கான் இரகசிய ஆவணக் காப்பகத்தில் நானூறு ஆண்டுகளாகக் காக்கப்பட்டவை என்றும், இவை, உலகின் மிக முக்கிய ஆவணங்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

5. குடியேற்றதாரரைச் சட்ட ரீதியாகப் பாதுகாப்பும் பொறுப்பை அரசுகள் ஏற்க வேண்டும் - அமெரிக்க ஆயர்கள் வலியுறுத்தல்

ஜூலை05,2011. குடியேற்றதாரர்களுக்குச் சட்ட ரீதியாகப் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை அரசுகள் ஏற்று நடத்துமாறு வடக்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளின் ஆயர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் குடியேற்றதாரர் பெருந்துன்பங்களை எதிர்நோக்குவதைத் தாங்கள் நேரடியாகக் காண முடிகின்றது என்று அந்நாடுகளின் ஆயர்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிக்காவின் சான் ஹோசேயில் கூட்டம் நடத்திய ஆயர்கள், கடந்த ஆண்டில் எழுபதுக்கும் மேற்பட்ட தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கக் குடியேற்றதாரர் கடத்தப்பட்டு வட மெக்சிகோவில் கொல்லப்பட்டனர் என்று கூறினர்.
2008க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் 9,758 குடியேற்றதாரர் கடத்தப்பட்டனர் என்று மெக்சிகோ தேசிய மனித உரிமைகள் அவை கூறுகிறது. 

6. இந்தியாவில் தலித் கிறிஸ்தவர்கள் இந்து மதத்திற்கு மாறி வருகிறார்கள் கர்நூல் ஆயர்

ஜூலை05,2011. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் அரசின் சலுகைகள் தலித் கிறிஸ்தவர்க்குக் கிடைக்காததால் அவர்களில் பலர் இந்து மதத்திற்கு மாறி வருகிறார்கள் என்று ஆந்திர மாநில ஆயர் ஒருவர் தெரிவித்தார்.
தங்களையொத்த தலித் இந்துக்களுக்குக் கிடைப்பது போன்று கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளும், பிரதிநிதித்துவமும், மற்றும்பிற சலுகைகளும்  கிடைக்காததால் பல தலித் கிறிஸ்தவர்கள் மதம் மாறுகிறார்கள் என்று கர்நூல் ஆயர் அந்தோணி பூலா கூறினார்.
ஓர் இந்தியரை முதலில் தனித்துவப்படுத்திக் காட்டுவது அவர் சார்ந்துள்ள இனம் என்றும் ஒருவரின் மதம் அவரின் இனத்தை மாற்றாது என்றும் ஆயர் பூலா மேலும் கூறினார்.
பாரதீய ஜனதா கட்சி தலித் கிறிஸ்தவர்களின் இக்கோரிக்கைக்கு ஆதரவு தர மறுப்பதையும், இவ்விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி மௌனம் காப்பதையும் வருத்தத்துடன் தெரிவித்தார் கர்நூல் ஆயர்.
வருகிற ஆகஸ்ட் முதல் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இவ்விவகாரம் குறித்த மசோதா தாக்கல் செய்யப்படுமாறு ஆயர் தனது கோரிக்கையை முன்வைத்தார்.
மேலும், இம்மாதம் 25 முதல் 27 வரை இவ்விவகாரம் குறித்து புது டில்லியில் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்படவிருக்கின்றது.

7. பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் சட்டத்துக்குப் புறம்பேயான கொலைகளுக்குக் கண்டனம்

ஜூலை05,2011. பாகிஸ்தானில் வெளிநாட்டவர்கள் சட்டத்துக்குப் புறம்பே கொல்லப்படுவது குறித்து அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர்.
ஷெஷனியர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்பட்டதைக் கண்டித்துப் பேசிய அருட்பணியாளர் ஒருவர், இக்கொலைகள் குறித்து ஒளிவுமறைவற்ற விசாரணை இடம் பெறுமாறு அழைப்பு விடுத்தார்.
மேலும், பாகிஸ்தானில் சமய சுதந்திரத்திற்கு அழைப்பு விடுத்து இலண்டனில் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஊர்வலம் நடத்தினர்.
பாகிஸ்தானில் இடம் பெறும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து ஊர்வலம் நடத்திய அவர்கள், பாகிஸ்தான் கிறிஸ்தவர்களுக்கும் பிற சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பு வழங்கப்படுமாறும் அழைப்பு விடுத்தனர். இதில் சீக், இந்து மற்றும் முஸ்லீம் மதங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

8. கேரள அரசுக்கு உலக வங்கி 20 கோடி டாலர் கடனுதவி

ஜூலை05,2011. கேரளாவில் உள்ளாட்சித்துறை புறநகர் மற்றும்  நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு உலகவங்கி இருபது கோடி டாலர் கடனுதவி அளித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் உலகவங்கி மற்றும் இந்தியா இடையே இத்திங்களன்று கையெழுத்தானது.
கேரள மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்ற அரசு உள்ளாட்சித்துறையில் இரண்டாம் தலைமுறை சீர்திருத்தம் என்ற கொள்கையின்படி மாநிலத்தில் புறநகர், நகர்புற வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறைகள் ஆகியவற்றின் உள்கட்டமைப்பு திட்டங்களை வலுப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. இதன் துவக்கமாக உலகவங்கியிடம் கடனுதவி ‌கேட்டிருந்தது. இதன்படி கேரள அரசுக்கு உலகவங்கி 20 கோடி டாலர் கடனுதவி அளிக்க முன்வந்துள்ளது. 0.75 சதவீத வட்டியுடன், 30 ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்தும் உத்தரவாதத்துடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான நிதித்துறை அமைச்சக இணைச்செயலாளர் வேணு ராஜாமணி, கேரள அரசின் உள்ளாட்சித்துறை முதன்மை செயலர் ஜேம்ஸ்வர்க்கீஸ், உலகவங்கி ஆட்சிமன்ற குழுவின் இந்தியாவிற்கான ஆ‌‌‌‌லோசகர் ரோலாண்ட் லூம் ஆகியோரிடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...