Friday 1 June 2012

Catholic News in Tamil - 31/05/12

1.  வட இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்குத் திருத்தந்தையின் அனுதாபத் தந்தி

2. மிலான் நகரில் ஆரம்பமான ஏழாவது அகில உலக குடும்ப மாநாட்டின் முதல் நாள்

3. அகில உலக காரித்தாஸ் அமைப்பின் தலைவர்: 12 நொடிகளுக்கு ஒரு குழந்தை இவ்வுலகில் உணவு பற்றாக்குறையால் இறக்கின்றது

4. "கத்தோலிக்க வழியில் அமைதியைக் கட்டியெழுப்புவதில் சந்திக்கும் புதிய சவால்கள்" வத்திக்கான் கருத்தரங்கு

5. சிரியாவில் நடைபெறும் சமாதான முயற்சிகளையும் கருத்தில் கொள்ளவேண்டும் - திருப்பீடத் தூதர்

6. அடிப்படைவாதத்தின் பல்வேறு வடிவங்களையும் புறக்கணித்தால் மட்டுமே ஆப்ரிக்க நாடுகளில் அமைதி உருவாகும் - நைஜீரியப் பேராயர்

7.  2008ம் ஆண்டிலிருந்து உலகம் சந்தித்து வரும் பொருளாதாரச் சரிவின் அதிகமான தாக்கத்தை இளையோரே அனுபவிக்கின்றனர்

8. மனிதர்களை விட தக்காளியில் 7000 மரபணுக்கள் அதிகம்


1.  வட இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்குத் திருத்தந்தையின் அனுதாபத் தந்தி

மே,31,2012. வட இத்தாலியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும் காயமடைந்துள்ளோரின் குடும்பங்களுக்கும் தன் அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவிப்பதாகத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

மேமாதம் 29, இச்செவ்வாயன்று வட இத்தாலியில் Modena எனுமிடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17 பேர் உயிரிழந்தனர், 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தன் அனுதாபங்களையும், அருகாமையும் வெளிப்படுத்தி, Modena-Nonantola உயர்மறைமாவட்ட பேராயர் Antonio Lanfranchi அவர்களுக்கு திருத்தந்தையின் சார்பில் தந்தியொன்றை அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே.

கடந்த 10 நாட்களுக்குள் வட இத்தாலியில் இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டு, பல பழமை வாய்ந்த கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தற்காலிகக் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேமாதம் 20ம் தேதி நிகழ்ந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் துயர்துடைப்புப் பணிகளுக்கு திருத்தந்தை அண்மையில் நிதி உதவிகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. மிலான் நகரில் ஆரம்பமான ஏழாவது அகில உலக குடும்ப மாநாட்டின் முதல் நாள்

மே,31,2012. கடவுளின் பிரசன்னத்தில் ஆணும் பெண்ணும் சம மதிப்புடன் உருவாக்கும் ஓர் அழகிய இல்லமே குடும்பம் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.

இத்தாலியின் மிலான் நகரில் இப்புதனன்று ஆரம்பமான ஏழாவது அகில உலக குடும்ப மாநாட்டின் முதல் நாளன்று உரையாற்றிய திருப்பீடக் கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi, ஆபத்துக்களிலும், துன்பங்களிலும் இணைந்து வாழும் குடும்பங்களே பாதுகாப்பையும் உணர்கின்றன என்று கூறினார்.

இம்மாநாட்டிற்குத் தயாரிக்கும் ஒரு செயல்பாடாக, குடும்பங்களுக்குத் தரப்படும் மதிப்பைப் பற்றிய கருத்துக்கணிப்பு 47 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது. இக்கருத்துக்கணிப்பின் முடிவுகளில் ஒன்றாக, 47 நாடுகளில் 46 நாடுகள் குடும்பங்களுக்கு முதலிடம் தந்துள்ளன என்ற கருத்து இம்மாநாட்டின் ஆரம்ப நாள் உரைகளில் எடுத்துரைக்கப்பட்டது.

சரிவையும், ஆபத்தையும் சந்தித்து வரும் உலகப் பொருளாதாரம் மீண்டும் உறுதி பெறுவதற்கு குடும்பங்கள் ஒரு முக்கிய காரணி என்ற கருத்தும்  இம்மாநாட்டின் முதல் நாள் உரைகளில் வெளியாயின என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.

3. அகில உலக காரித்தாஸ் அமைப்பின் தலைவர்: 12 நொடிகளுக்கு ஒரு குழந்தை இவ்வுலகில் உணவு பற்றாக்குறையால் இறக்கின்றது

மே,31,2012. ஒவ்வொரு நாளும் 12 நொடிகளுக்கு ஒரு குழந்தை இவ்வுலகில் உணவு பற்றாக்குறையால் இறக்கின்றது என்று அகில உலக காரித்தாஸ் அமைப்பின் தலைவர் கர்தினால் Óscar Rodríguez Maradiaga கூறினார்.

ஜூன் மாதம் முதல் தேதியும் இரண்டாம் தேதியும் ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் நடைபெற உள்ள அகில உலக காரித்தாஸ் நிறுவனத்தின் கருத்தரங்கைக் குறித்து இப்புதனன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்தினால் Maradiaga, உலகின் பசியைப் போக்கும் வழிகள் இக்கருத்தரங்கில் ஆய்வு செய்யப்படும் என்று கூறினார்.

உலகப் பசியும் உணவு பாதுகாப்பும் என்ற கருத்தில் நடைபெற உள்ள இக்கருத்தரங்கில் உணவு பற்றாக்குறையால் உலகெங்கும் அவதியுறும் 92 கோடியே 50 இலட்சம் மக்களின் துயர் துடைக்கும் வழிகளைப் பற்றிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்று கர்தினால் Maradiaga எடுத்துரைத்தார்.

அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், மனிதநலப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர், உலக அளவில் திட்டங்கள் வகுப்போர் என்று பலத் துறைகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் இந்தக் கருத்தரங்கில் உலகப்பசிக்குக் காரணமாக விளங்கும் அரசியல் அநீதிகளும் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பசியை நீக்குவது நடைமுறைக்கு ஒவ்வாத கனவு என்று கூறிவரும் இவ்வுலகின் எண்ணங்களுக்கு எதிராக, இந்த இலக்கு அடையக்கூடிய ஒன்று என்பதை உலகிற்கு அறிவிக்கும் ஒரு முக்கிய பணியில் காரித்தாஸ் ஈடுபட்டுள்ளது என்று அகில உலகக் காரித்தாஸ் அமைப்பின் செயலர் Christoph Schweifer கூறினார்.

4. "கத்தோலிக்க வழியில் அமைதியைக் கட்டியெழுப்புவதில் சந்திக்கும் புதிய சவால்கள்" வத்திக்கான் கருத்தரங்கு

மே,31,2012. போர்களாலும் உள்நாட்டுப் போராட்டங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள பல நாடுகளில் கத்தோலிக்கத் திருஅவை அமைதியை நிலைநாட்ட எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் பெரும்பாலும் வெளியில் தெரிவதில்லை என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

"கத்தோலிக்க வழியில் அமைதியைக் கட்டியெழுப்புவதில் சந்திக்கும் புதிய சவால்கள்" என்ற தலைப்பில் இச்செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்கள் வத்திக்கானில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்த திருப்பீட அமைதி மற்றும் நீதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் இவ்வாறு கூறினார்.

தெற்கு சூடான், பிலிப்பின்ஸ், காங்கோ, மத்திய கிழக்குப் பகுதி, மத்திய அமெரிக்கா ஆகிய பல பகுதிகளில் நீதியையும் அமைதியையும் கொணர கத்தோலிக்கத் திருஅவை ஒரு முக்கிய கருவியாகச் செயல்பட்டுள்ளது என்று கர்தினால் டர்க்சன் வலியுறுத்திக் கூறினார்.

அண்மைக் காலங்களில் அமைதி மிகவும் சீர்குலைந்துள்ள பகுதிகளான நைஜீரியா, இலங்கை, உகாண்டா, சொமாலியா, காங்கோ குடியரசு ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தக் கருத்தரங்கில் வன்முறைகளைக் களைந்து, ஒப்புரவை வளர்க்கும் வழிகள் ஆராயப்பட்டன என்று கத்தோலிக்க செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.

'உலகில் சமாதனம்' என்று பொருள்படும் Pacem in terris என்ற சுற்றுமடலை அருளாளர் திருத்தந்தை 23ம் ஜான் வெளியிட்ட 50ம் ஆண்டைக் கொண்டாடவிருக்கும் இவ்வேளையில், கத்தோலிக்கத் திருஅவை உலகெங்கும் அமைதியின் கருவியாகச் செயல்படும் வழிகள் இக்கருத்தரங்கில் பேசப்பட்டன.

5. சிரியாவில் நடைபெறும் சமாதான முயற்சிகளையும் கருத்தில் கொள்ளவேண்டும் - திருப்பீடத் தூதர்

மே,31,2012. ஐ.நா.வும் உலக நாடுகளும் சிரியாவில் நடைபெறும் தாக்குதல்களை மட்டும் தங்கள் கவனத்தில் கொள்ளாமல், அங்கு நடைபெறும் சமாதான முயற்சிகளையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்று தமாஸ்குவின் திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari கூறினார்.

சிரியாவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் போர்களால் மனம் சோர்ந்துள்ள இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் சமுதாயத்தின் அடிமட்டத்தில் வாழும் மக்களாக இருந்தாலும், அவர்களுக்கே உரிய பாணியில் அமைதி வழிகளைத் தேடி வருகின்றனர் என்று கூறிய பேராயர் Zenari, அண்மையில் Houla எனுமிடத்தில் நடைபெற்ற கொடூரங்கள் மக்களிடம் விழிப்புணர்வை உருவாகியுள்ளது என்று கூறினார்.

சிரியாவின் தற்போதையப் பிரச்சனை அரசியல் நிலையற்ற நெருக்கடி மட்டும் அல்ல என்று கூறிய பேராயர் Zenari, ஓராண்டுக்கும் மேலாக, நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதால், கொள்ளை, ஆள் கடத்தல் ஆகிய குற்றங்களும் பெருகியுள்ளன என்ற கவலையை வெளியிட்டார்.

கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் திருஅவைத் தலைவர்கள், இஸ்லாமியத் தலைவர்கள் இணைந்து இப்புதனன்று Homs நகரில் ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.

6. அடிப்படைவாதத்தின் பல்வேறு வடிவங்களையும் புறக்கணித்தால் மட்டுமே ஆப்ரிக்க நாடுகளில் அமைதி உருவாகும் - நைஜீரியப் பேராயர்

மே,31,2012. ஆப்ரிக்கக் கண்டத்தில் உள்ள அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் அடிப்படைவாதத்தின் பல்வேறு வடிவங்களையும் புறக்கணித்தால் மட்டுமே ஆப்ரிக்க நாடுகளில் அமைதி உருவாகும் என்று நைஜீரியாவைச் சேர்ந்த பேராயர் ஒருவர் கூறினார்.

"நைஜீரியாவில் போராட்டமும் அமைதியும் - மதங்களின் பங்கு" என்ற தலைப்பில் ஆப்ரிக்க மதத்தலைவர்களின் அவை நடத்திய ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய இவ்வவையின் தலைவரும் Abujaவின் பேராயருமான John Olorunfemi Onaiyekan, இவ்வாறு கூறினார்.

பல அடிப்படைவாதக் கொள்கைகளால் வன்முறைகள் வளர்ந்துவரும் ஆபிரிக்கச்  சூழலில், மதங்களிடையே அடிப்படைவாதத்தின் தாக்கம் ஊடுருவாமல் தடுக்க மத நல்லிணக்கக் குழுக்கள் இன்னும் பல ஆப்ரிக்க நாடுகளில் அமைக்கப்படுவது அவசியம் என்று பேராயர் Onaiyekan எடுத்துரைத்தார்.

இயற்கைப் பேரிடர், பசி, நோய், பொருளாதாரம் என்று ஆப்ரிக்காவைத் தாக்கி வரும் பல்வேறு கொடுமைகளுடன், அடிப்படைவாதத்தால் எழும் வன்முறைகள், பயங்கரவாதத் தாக்குதல்கள் என்ற பிரச்சனைகளையும் நாம் சேர்க்கக்கூடாது என்று பேராயர் Onaiyekan இக்கருத்தரங்கில் அழைப்பு விடுத்தார்.

7.  2008ம் ஆண்டிலிருந்து உலகம் சந்தித்து வரும் பொருளாதாரச் சரிவின் அதிகமான தாக்கத்தை இளையோரே அனுபவிக்கின்றனர்

மே,31,2012. இளையோருக்குச் சரியான வழியில் எதிர்காலத்தை அமைத்துத் தர இன்றைய சமுதாயம் தவறிவிட்டது என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ILO எனப்படும் உலக உழைப்பாளர் நிறுவனத்தின் 101வது அமர்வு இப்புதனன்று ஜெனீவாவில் துவங்கியது. வருகிற ஜூன் மாதம் 15ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கருத்தரங்கில் ILOவின் உறுப்பினர்களாக உள்ள 185 நாடுகளின் பிரதிநிதிகளாக 5000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இக்கருத்தரங்கின் முதல் அமர்வில் உரையாற்றிய ILOவின் இயக்குனர் Juan Somavia, வேலைகள் இல்லாமல் நம்பிக்கை இழந்து வரும் இளையோரைத் தன் உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

2008ம் ஆண்டிலிருந்து உலகம் சந்தித்து வரும் பொருளாதாரச் சரிவின் அதிகமான தாக்கத்தை இளையோரே அனுபவிக்கின்றனர் என்பதை எடுத்துரைத்த ILO இயக்குனர், இந்நிலையை சரி செய்ய வேண்டுமெனில், ஒவ்வோர் ஆண்டும் இவ்வுலகில் 5 கோடி புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற அழைப்பை விடுத்தார்.

இளையோரை மையப்படுத்தி நடத்தப்படும் இக்கருத்தரங்கிற்கு முன்னதாக, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஜெனீவா வந்திருந்த 5000 இளையோருடன் ILO 46 அமர்வுகள் நடத்தி, இளையோரின் எண்ணங்களை அறிந்துள்ளது என்று ஐ.நா.வின் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

அண்மையில் மியான்மார் தேர்தலில் வெற்றிபெற்ற எதிர் கட்சித் தலைவர் ASS இக்கருத்தரங்கில் ஜூன் 14ம் தேதி உரையாற்றுவார் என்று ஐ.நா. அறிவித்துள்ளது.

8. மனிதர்களை விட தக்காளியில் 7000 மரபணுக்கள் அதிகம்

மே,31,2012. மனிதர்களில் உள்ள மரபணுக்களைவிட தக்காளியில் அதிக அளவு மரபணுக்கள் உள்ளதாக அறிவியல் ஆய்வு ஒன்று கூறுகிறது.

மனிதர்களைவிட 7000 மரபணுக்கள் அதிகமாக, 31,760 மரபணுக்களைக் கொண்ட தக்காளியின் மரபணு வரைபடத்தைப் பற்றிய ஓர் ஆய்வை கடந்த ஒன்பது ஆண்டுகளாக 14 நாடுகளில் மேற்கொண்ட ஓர் ஆய்வுக் குழுவினர் தங்கள் கண்டுபிடிப்புக்களை Nature என்ற ஓர் அறிவியல் ஆய்வு இதழில் வெளியிட்டுள்ளனர்.

இந்த மரபணுக்களின் வரைபடத்தை சரிவரப் புரிந்துகொண்டால் மரபணு மாற்றங்கள் செய்யாமலேயே மிக அதிக அளவு தக்காளி வகைகளை உருவாக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பல்பொருள் அங்காடிகளில் வைக்கப்பட்டுள்ள தக்காளி வகைகள் அதிகம் பழுத்து, அழுகிவிடாமல் நீண்டகாலம் நீடிக்கவேண்டும் என்பதற்காக அவற்றின் மரபணுக்களை மாற்றம் செய்வது தற்போதைய வழக்கம். இந்த மரபணு மாற்றங்களால் தக்காளியில் உள்ள இயற்கை மணம் இல்லாமல் போய்விடுகிறது என்ற குறை எழுந்துள்ளது.

இந்த மரபணு வரைபடத்தின் நுணுக்கங்களைச் சரிவர ஆய்வு செய்தால், இந்த மரபணு மாற்றங்கள் இல்லாமல், பலவிதமான தக்காளியை உருவாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...