Friday, 1 June 2012

Catholic News in Tamil - 01/06/12

1.மிலான் திருத்தந்தைக்காகக் காத்திருக்கிறது

2.துன்பங்கள் நிறைந்த உலகில் குடும்பம் பாதுகாப்பான இடம் கர்தினால் தெத்தமான்சி

3.சிரியாவில் பன்னாட்டு அளவிலானத் தாக்குதலைத் தவிர்க்குமாறு கர்தினால் டர்க்சன் வேண்டுகோள்

4.சமூகச் சந்தைப் பொருளாதாரத்துக்கு ஜெர்மன் கர்தினால் அழைப்பு

5. மேற்குலகில் குடியேற்றதாரர்கள் அனுபவித்துள்ள பேரச்சங்கள் குறித்து ஆயர்கள் கவலை

6.அடுத்த பத்தாண்டுகளில் புலம் பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஐ.நா.எச்சரிக்கை

7. புகையிலை ஒழிப்புக்கு எதிரான நடவடிக்கையில் தொழிற்சாலைகளின் தாக்குதல்களுக்கு எதிராக செயல்பட ஐ.நா.அழைப்பு

8. பிரிட்டனில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டவர்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது
-------------------------------------------------------------------------------------------

1.மிலான் திருத்தந்தைக்காகக் காத்திருக்கிறது

ஜூன்01,2012. இத்தாலியின் மிலான் நகரில் நடைபெறும் ஏழாவது அனைத்துலக குடும்ப மாநாட்டில் கலந்து கொள்வதற்கென இவ்வெள்ளி உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு உரோம் Ciampino விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
மிலான் Linate விமானநிலையத்தைச் சென்றடையும் திருத்தந்தை, Duomo வளாகத்தில் மிலான் குடிமக்களைச் சந்தித்தல், La Scala இசையரங்கத்தில் நடைபெறும் இசைக்கச்சேரியில் கலந்து கொள்ளல் போன்றவை இவ்வெள்ளிதின நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ளன.
சாட்சியங்களின் விழா நடக்கவுள்ள இச்சனிக்கிழமை மாலை, இத்தாலியில் அண்மையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட Emilia-Romagna பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும். இச்சனிக்கிழமை காலையில் மிலான் உயர்மறைமாவட்ட குருக்கள், துறவிகளையும் சந்திப்பார் திருத்தந்தை.
இஞ்ஞாயிறன்று ஏழாவது அனைத்துலக குடும்ப மாநாட்டு நிறைவுத் திருப்பலியை நிகழ்த்தி அன்றைய தினம் மாலை 6.30 மணிக்குத் திருத்தந்தை உரோம் வந்து சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2.துன்பங்கள் நிறைந்த உலகில் குடும்பம் பாதுகாப்பான இடம் கர்தினால் தெத்தமான்சி

ஜூன்01,2012. உழைப்பாளர்கள் அடிக்கடி பெருந்துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும்வேளை, வருங்காலத்துக்குரிய நம்பிக்கை குடும்பங்களிலிருந்து பிறக்கின்றது என்று மிலானின் முன்னாள் பேராயர் கர்தினால் Dionigi Tettamanzi கூறினார்.
மிலான் நகரில் நடைபெற்று வரும் ஏழாவது அனைத்துலக குடும்ப மாநாட்டின் கருப்பொருளின் அர்த்தம் குறித்து விளக்கிய கர்தினால்  Tettamanzi, தொழிலுக்கு அர்த்தத்தையும், இடைவிடாத தொடர்பையும் பயனுறுதியையும் கொடுக்கும் இடம் குடும்பம் என்று  கூறினார். 
தயாரிப்பு மற்றும் முதலீட்டைச் சார்ந்து இருக்காமல் மனித முதலீட்டை உருவாக்குவதிலேயே இக்காலத்தில் கவனம் செலுத்தப்படுவதால், தொழிலுக்குத் தரத்தை வழங்குவது குடும்பம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த மே 30ம் தேதியன்று தொடங்கிய ஏழாவது அனைத்துலக குடும்ப மாநாடு, இஞ்ஞாயிறன்று நிறைவு பெறும்.

3.சிரியாவில் பன்னாட்டு அளவிலானத் தாக்குதலைத் தவிர்க்குமாறு கர்தினால் டர்க்சன் வேண்டுகோள்

ஜூன்01,2012. தனது குடிமக்களைப் பாதுகாக்க வேண்டியது ஓர் அரசின் முதல் கடமையாக இருப்பதால், சிரியாவில் அமைதியைக் கொண்டு வருவதற்குத் தீவீரமாக முயற்சித்து வரும் ஐ.நா.சிறப்புத் தூதர் Kofi Annan விடுத்துவரும் அழைப்புக்கு சிரியா அரசு செவிசாய்க்குமாறு வலியுறுத்தியுள்ளார் கர்தினால் பீட்டர் டர்க்சன்.
லிபியாவில் நடைபெற்றது போல, மற்றுமொரு சர்வதேச அளவிலான போர் சிரியாவிலும் ஏற்படக்கூடிய ஆபத்தைத் தவிர்க்குமாறு கேட்டுள்ளார் திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் டர்க்சன்.
அமைதியைக் கட்டியெழுப்பும் கத்தோலிக்கருக்கு எழுந்துள்ள புதிய சவால்கள் என்ற தலைப்பில் அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம், அமைதியைக் கட்டியெழுப்பும் கத்தோலிக்க கூட்டமைப்பு, அமெரிக்க ஐக்கிய நாட்டு நோத்ரு தாம் பல்கலைக்கழகத்தின் பன்னாட்டு அமைதி குறித்த ஆய்வு நிறுவனம் ஆகியவற்றுடன் சேர்ந்து இத்திருப்பீட அவை நடத்திய கருத்தரங்கின் இறுதியில் நிருபர் கூட்டத்தில் பேசிய போது இவ்வாறு கூறினார் கர்தினால் டர்க்சன்.
திருத்தந்தை அருளாளர் 23ம் அருளப்பர் எழுதிய உலகில் அமைதி என்ற திருமடல் வெளியிடப்பட்டதன் 50ம் ஆண்டு 2013ம் ஆண்டில் சிறப்பிக்கப்படவிருப்பதை முன்னிட்டு நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில், நைஜீரியா, இலங்கை, பிலிப்பீன்ஸ், உகாண்டா, சொமாலியா, மியான்மார், கொலம்பியா, காங்கோ குடியரசு போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சிரியா அரசு, அனைத்துலகச் சமூகத்தின் முயற்சிகளை மதிக்குமாறும், அந்நாட்டில் தூதரக வழியில் அமைதியைக் காண முயற்சிக்குமாறும் கேட்டுக்கொண்ட கர்தினால் டர்க்சன், குண்டுவீச்சுத் தாக்குதல்களும் போரும் படைவீரர்களையும் குடிமக்களையும் பாகுபாடின்றி கொலை செய்கின்றன என்று கூறினார்.
4.சமூகச் சந்தைப் பொருளாதாரத்துக்கு ஜெர்மன் கர்தினால் அழைப்பு

ஜூன்01,2012. கடந்த ஆண்டு முழுவதும் ஐரோப்பாவின் பெரும் பகுதியை முடக்கிப் போட்டிருந்த நிதிப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு சமூகச் சந்தைப் பொருளாதாரத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஜெர்மன் கர்தினால் Reinhard Marx.
உலகின் பொருளாதாரம் இன்னும் நியாயமான வழியில் நடத்தப்படுவதற்கு முதலீட்டையும் கடந்து செல்லக்கூடிய ஒரு பொருளாதாரம் தேவைப்படுகின்றது என்று வாஷிங்டன் ஜார்ஜ்டவுண் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் கூறினார் கர்தினால்  Marx.
பொருளாதார நெருக்கடி, மாற்றத்திற்கான வாய்ப்பு என்றும் உரைத்த கர்தினால் Marx, 1989ம் ஆண்டில் நிகழ்ந்த புரட்சியை இந்த நெருக்கடிக்கு ஒரு முன் உதாரணமாகக் கூறலாம் என்றும், வரலாற்றுக்கு வெளியே நாம் செல்ல முடியாது, மாறாக அதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென்றும் கூறினார்.
வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களைக் கிறிஸ்தவம் தனது பங்குக்கு உருவாக்கியுள்ளது எனவும், நீ உலகில் வாழ்ந்த போது உலகை நல்லதோர் இடமாக மாற்றினாயா என்று நமது இறுதித் தீர்வு நாளில் இயேசு கேட்பார் எனவும் ஜெர்மன் கர்தினால் Reinhard Marx  கூறினார்.

5. மேற்குலகில் குடியேற்றதாரர்கள் அனுபவித்துள்ள பேரச்சங்கள் குறித்து ஆயர்கள் கவலை

ஜூன்01,2012. மேற்கத்திய உலகில் குடியேற்றதாரர்கள் அனுபவித்துள்ள பேரச்சங்களுக்குக் காரணமான சக்திகளை, வடக்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்க ஆயர்களும் கரீபியன் பகுதி ஆயர்களும் கண்டித்துள்ளனர்.
வறுமையின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் நாடுகளைவிட்டு வெளியேறி அன்றாட உணவுக்கான வழிகளைத் தேடுகின்றனர் என்றுரைத்த ஆயர்கள், குடியேற்றதாரர் குறித்த சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், இந்தக் குடியேற்றத்துக்கான அடிப்படை பிரச்சனைக்குத் தீர்வு காணப்படாவிட்டால், மக்கள் தொடர்ந்து பெருமெண்ணிக்கையில் தங்கள் சொந்த நாடுகளைவிட்டு வெளியேறுவார்கள் என்றும் எச்சரித்தனர்.
தொமினிக்கன் குடியரசின் Santo Domingo வில் இவ்வாரத்தில் கூட்டத்தை நிறைவு செய்த பின்னர் அறிக்கை வெளியிட்ட ஆயர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மெக்சிகோ வழியாக அமெரிக்க ஐக்கிய நாடு செல்லும் மத்திய அமெரிக்க நாடுகளின் மக்கள் எதிர்கொள்ளும் கடுந்துன்பங்களையும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர் ஆயர்கள். 

6.அடுத்த பத்தாண்டுகளில் புலம் பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஐ.நா.எச்சரிக்கை

ஜூன்01,2012. போர், இயற்கைப் பேரிடர்கள், வெப்பநிலை மாற்றம் போன்ற காரணிகளால் அடுத்த பத்து ஆண்டுகளில் உலக அளவில் புலம் பெயர்வோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கும் என்று, UNHCR  என்ற ஐ.நா. அகதிகள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
இவ்விவகாரம் குறித்து தீர்வு காண்பதற்கு பன்னாட்டு அளவில் ஒருமைப்பாடு தேவை என்பதையும் இவ்வறிக்கை வலியுறுத்துகிறது.
இவ்வறிக்கை தொடர்பாகப் பேசிய, UNHCR நிறுவனத் தலைவர் António Guterres, புலம் பெயர்வோர் குறித்த பிரச்சனைக்குத் தீர்வுகளை வெளியிடுவதைக் காட்டிலும், மக்களின் புலம் பெயர்வை உருவாக்குவதில் உலகம் வேகம் காட்டுகின்றது என்று குறை கூறினார்.
பெருமளவு மக்கள் பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் வாழ்கின்றனர், இவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பி வரமுடியாத நிலையிலே இருந்து, பின்னர் புலம் பெயர்ந்த நாடுகளிலேயே குடியேறிவிடுகின்றனர் அல்லது வேறு நாட்டுக்குச் செல்கின்றனர் என்று Guterres மேலும் கூறினார்.
உலக அளவில் இடம்பெறும் புலம் பெயர்வு ஒரு பன்னாட்டுப் பிரச்சனை, இதற்குப் பன்னாட்டு அளவில் அரசியல்ரீதியான தீர்வுகள் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.   
போர், இயற்கைப் பேரிடர்கள், வெப்பநிலை மாற்றம், மக்கள்தொகை பெருக்கம், உணவுப் பாதுகாப்பின்மை, நகர்ப்புறமாதல், தண்ணீர்ப் பற்றாக்குறை போன்ற காரணிகளால் தற்போது 4 கோடியே 30 இலட்சம் பேர் கட்டாயமாக தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர், இவர்களில் 80 விழுக்காட்டினர் வளர்ந்த நாடுகளில் குடியேறியுள்ளனர் என்றும் ஐ.நா.அறிக்கை கூறுகிறது.

7. புகையிலை ஒழிப்புக்கு எதிரான நடவடிக்கையில் தொழிற்சாலைகளின் தாக்குதல்களுக்கு எதிராக செயல்பட ஐ.நா.அழைப்பு

ஜூன்01,2012. உலகில் ஆண்டுதோறும் சுமார் 60 இலட்சம் பேர் இறப்பதற்குக் காரணமாகும் புகையிலைப் பயன்பாட்டைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்டுவரும்   முயற்சிகளைச் செயலிழக்கச் செய்வதற்கு புகையிலைத் தொழிற்சாலைகள் எடுக்கும் கடும் நடவடிக்கைகளை எதிர்க்குமாறு ஐ.நா.அதிகாரிகள் அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மே31, இவ்வியாழனன்று புகையிலை ஒழிப்பு நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி  செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் மற்றும் உலக நலவாழ்வு நிறுவன இயக்குனர் இவ்வாறு நாடுகளின் அரசுகளைக் கேட்டுள்ளனர்.
புகையிலைப் பயன்பாட்டைக் குறைக்கவும், மக்களின் நலவாழ்வைப் பாதுகாக்கவும் அரசுகளும் அனைத்துலக நலவாழ்வு சமூகமும் தீவிரமாய் முயற்சித்து வரும்வேளை, தங்களது உற்பத்தியால் மனிதரைக் கொல்லும் தொழிற்சாலைகளால், இம்முயற்சிகள் கடுமையாய் எதிர்க்கப்படுகின்றன என்று கூறியுள்ளார் பான் கி மூன்.
2005ம் ஆண்டில் அமலுக்கு வந்த புகையிலைக் கட்டுபாடு குறித்த ஒப்பந்தம், ஐ.நா.வரலாற்றில் வேகமாக செயலுக்கு வந்த ஒப்பந்தமாக நோக்கப்படுகிறது.

8. பிரிட்டனில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டவர்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது

ஜூன்01,2012. பிரிட்டனில் இருந்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட சிலர் அந்நாட்டை அடைந்ததும் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாவது கடந்த ஈராண்டுகளுக்கு மேலாக இடம்பெற்று வருவதால், அடைக்கலம் தேடும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களை அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாமென Human Rights Watch (HRW) என்ற மனித உரிமைகள் கழகம் கேட்டுள்ளது.
புகலிடம் தேடும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களை அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதை பிரிட்டன் அரசு உடனடியாக நிறுத்தவேண்டுமெனவும், இவ்விவகாரத்தில் பிரிட்டன் அரசு தனது கொள்கைகளை மறுபரிசீலனை செய்யவேண்டுமெனவும் அம்மனித உரிமைகள் கழகம் வலியுறுத்தியுள்ளது.
பல தமிழர்கள் இவ்வியாழனன்று இலண்டன் விமானநிலயத்திலிருந்து கட்டாயமாக கொழும்புவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்ற செய்தி வெளியானதையொட்டி இவ்வாறு அக்கழகம் கோரியுள்ளது.
பிரிட்டன் எல்லைப்புற நிறுவனத்தால் கடந்த ஆண்டில் 555 பேர் கட்டாயமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...