Tuesday, 26 June 2012

Catholic News in Tamil - 26/06/12

1. நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட Emilia Romagna பகுதிகளைப் பார்வையிட்டார் திருத்தந்தை

2. பேராயர் Augustine Di Noia "கடவுளின் திருஅவை" என்ற திருப்பீட அவையின் உபத்தலைவராக நியமனம்

3. ஜூன் 25ம் தேதி ஒப்புரவின் செப நாளையொட்டி, தென்கொரிய ஆயர்கள் விடுத்துள்ள செய்தி

4. குழந்தைகள் அதிகம் உள்ள குடும்பங்களைத் தண்டிக்கும் வகையில் பிரித்தானிய அரசு செயல்படுவது மிகுந்த கவலை அளிக்கிறது - கத்தோலிக்கத் திருஅவை

5. எகிப்தின் புதிய அரசுத்தலைவர் நாட்டுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது - காப்டிக் கத்தோலிக்க ஆயர்

6. உலகின் அதிகமான இடங்களில் அப்பாவி மக்கள் ஆயுதத் தாக்குதல்களில் சிக்குண்டு உயிரிழந்து வருகின்றனர் - ஐ.நா. பொதுச்செயலர் கவலை

7. ஜூன் 26 - போதைப்பொருள் ஒழிப்பு தினம்

8. ஒவ்வொரு இரண்டு நிமிடத்துக்கும் தாய்மைப்பேறு கொண்ட ஒரு பெண் இறக்கிறார் - ஐ.நா. பொதுச்செயலர்

------------------------------------------------------------------------------------------------------

1. நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட Emilia Romagna பகுதிகளைப் பார்வையிட்டார் திருத்தந்தை

ஜூன்,26,2012. போர்களால் சிதைக்கப்பட்ட இத்தாலி, மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையாலும், மற்றவரது உதவிகளாலும் தன்னையே மீண்டும் கட்டியெழுப்பியதுபோல், இந்த நில நடுக்கத்தின் விளைவுகளில் இருந்தும் தன்னை மீண்டும் கட்டியெழுப்பும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
மே மாதம் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட Emilia Romagna பகுதிகளை இச்செவ்வாயன்று பார்வையிட்ட திருத்தந்தை, நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களையும், திருஅவைத் தலைவர்கள், அரசு அதிகாரிகள் அனைவரையும் சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
ஒவ்வொரு நாளும் அருள்பணியாளர்கள் சொல்லும் செபங்களைப்பற்றி குறிப்பிட்டத் திருத்தந்தை, கடந்த சில நாட்களாக, திருப்பாடல் 46ல் கூறப்பட்டுள்ள வார்த்தைகளை அருள்பணியாளர்களுடன் இணைந்து தானும் செபித்ததாகக் கூறினார்.
இத்திருப்பாடலில் "கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே. ஆகையால், நிலவுலகம் நிலைகுலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும், கடலின் அலைகள் கொந்தளித்துப் பொங்கினாலும், அவற்றின் பெருக்கால் குன்றுகள் அதிர்ந்து நடுங்கினாலும் எங்களுக்கு அச்சமென்பதே இல்லை." என்று கூறப்பட்டுள்ள வரிகளை மக்களுக்கு எடுத்துரைத்த திருத்தந்தை, இயற்கையின் சீற்றங்களில் இருந்து இறைவன் தங்களைக் காப்பார் என்ற நம்பிக்கையை மக்கள் பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நிலநடுக்கத்தின்போது, கோவில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த அருள்பணியாளர் Ivan Martini அவர்களைப்பற்றி குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, மக்களின் துன்ப துயரங்களில் பங்கேற்று சிறப்புப் பணியாற்றும் குருக்களைப் பாராட்டினார்.
இச்செவ்வாய் காலை 9 மணியளவில் Emilia Romagna பகுதிகளைப் பார்வையிட வத்திக்கானிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பயணித்தத் திருத்தந்தை, மீண்டும் 12 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு, மதியம் 1.15 மணியளவில் மீண்டும் வத்திக்கான் வந்தடைந்தார்.


2. பேராயர் Augustine Di Noia "கடவுளின் திருஅவை" என்ற திருப்பீட அவையின் உபத்தலைவராக நியமனம்

"கடவுளின் திருஅவை" (“Ecclesia Dei”) என்ற திருப்பீட அவையின் உபத்தலைவராக பேராயர் Augustine Di Noia அவர்களைத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நியமித்துள்ளார்.
பழமைப் பாரம்பரிய எண்ணங்களில் உறுதிகொண்டு, கத்தோலிக்கத் திருஅவையுடன் உறவுகளைத் துண்டித்துள்ள பல சபைகளை மீண்டும் திருஅவையுடன் இணைக்கும் ஒரு முயற்சியாக, 1988ம் ஆண்டு அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களால் "கடவுளின் திருஅவை" என்ற திருப்பீட அவை உருவாக்கப்பட்டது.
இந்த அவை 2009ம் ஆண்டு விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் ஓர் அங்கமாக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் இணைக்கப்பட்டது.
விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் தலைவரான கர்தினால் William Levada, இத்திருப்பீட அவையின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.
இத்திருப்பீட அவையின் உபத் தலைவராக தொமினிக்கன் துறவுச் சபையைச் சேர்ந்த பேராயர் Di Noia அவர்களைத் திருத்தந்தை நியமித்துள்ளதாக விசுவாசக் கோட்பாட்டு பேராயம் இச்செவ்வாயன்று அறிவித்துள்ளது.
இந்த நியமனத்திற்கு முன்னதாக, பேராயர் Di Noia திருவழிபாட்டுப் பேராயத்தின் செயலாராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


3. ஜூன் 25ம் தேதி ஒப்புரவின் செப நாளையொட்டி, தென்கொரிய ஆயர்கள் விடுத்துள்ள செய்தி

ஜூன்,26,2012. "வட கொரியாவில் வாழும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அமைதி உண்டாகுக" என்று தென் கொரிய ஆயர்கள் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளனர்.
1950ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே போர் மூண்டது. அந்தப் போர் மூன்றாண்டுகள் நீடித்தது.
இரு நாடுகளுக்கும் இடையே ஒப்புரவு உருவாக வேண்டுமென்றும், இரு நாடுகளும் ஒரே நாடாக இணையவேண்டுமென்றும் தென்கொரிய ஆயர்கள் 1965ம் ஆண்டு முதல் ஒரு செப நாளை உருவாக்கினர். ஜூன் 25ம் தேதியை ஓட்டிவரும் ஞாயிறன்று இந்த செப நாள் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.
இவ்வாண்டு ஜூன் 25ம் தேதியை நெருங்கிவந்த இஞ்ஞாயிறன்று ஒப்புரவின் செப நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி, தென்கொரிய ஆயர்கள் விடுத்துள்ள ஒரு செய்தியில் வடகொரிய மக்களுக்கு நிறைவான அமைதி கிடைக்கவேண்டும் என்ற தங்கள் விருப்பத்தையும், செபங்களையும் தெரிவித்துள்ளனர்.
தென்கொரிய ஆயர் பேரவையில் கொரிய மக்கள் ஒப்புரவுப் பணிக்குழுவின் தலைவர் ஆயர் Peter Lee Ki-Heon கையெழுத்திட்டு அனுப்பியுள்ள இந்த செய்தியில், அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகளாய் பிரிந்து கிடக்கும் கொரிய மக்களின் குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைய இறைவனிடம் வேண்டுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒப்புரவு செபநாளையோட்டி சிறப்புத் திருப்பலிகளும், செப வழிபாடுகளும், ஊர்வலங்களும் இஞ்ஞாயிறன்று நடத்தப்பட்டன என்று கொரியாவின் பாப்பிறை மறைபரப்புப் பணி கழகங்களின் தலைவர் அருள்தந்தை John Bosco Byeon கூறினார்.


4. குழந்தைகள் அதிகம் உள்ள குடும்பங்களைத் தண்டிக்கும் வகையில் பிரித்தானிய அரசு செயல்படுவது மிகுந்த கவலை அளிக்கிறது - கத்தோலிக்கத் திருஅவை

ஜூன்,26,2012. இங்கிலாந்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் காக்கும் வழிகளை உருவாக்குவதற்குப் பதிலாக, குழந்தைகள் அதிகம் உள்ள குடும்பங்களைத் தண்டிக்கும் வகையில் பிரித்தானிய அரசு செயல்படுவது மிகுந்த கவலை அளிக்கிறது என்று கத்தோலிக்கத் திருஅவை கூறியுள்ளது.
இலவசமாகக் கிடைத்துவரும் நலவாழ்வுச் சலுகைகளைக் குறைக்கப்போவதாக, இத்திங்களன்று பிரித்தானிய பாராளு மன்றத்தில் பிரதமர் David Cameron கூறியதைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் உள்ள காரித்தாஸ் அமைப்பு தன் கவலையை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே தங்கள் நாடு பொருளாதாரச் சரிவினால் இன்னல்களைச் சந்தித்துவரும் வேளையில், பிரதமர் கூறியுள்ள ஆலோசனைகள் பெரும் குடும்பங்களை இன்னும் அதிகம் பாதிக்கும் என்று காரித்தாஸ் கருத்து வெளியிட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் 80,000க்கும் அதிகமான இளையோர் வீடின்றி தெருக்களிலும், சாலைகளிலும் தங்க வேண்டியுள்ளது என்று கூறும் Depaul UK என்ற ஒரு பிறரன்பு நிறுவனம்பிரதமர் கூறியுள்ள ஆலோசனைகள் வீடின்றி தவிக்கும் இளையோரை அதிக அளவில் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளது.


5. எகிப்தின் புதிய அரசுத்தலைவர் நாட்டுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது - காப்டிக் கத்தோலிக்க ஆயர்

ஜூன்,26,2012. எகிப்து நாட்டில் Muslim Brotherhood என்ற இஸ்லாமியக் கட்சியிலிருந்து Mohammed Mursi அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை ஏற்பதற்கு கிறிஸ்தவர்கள் தயக்கம் கொண்டிருந்தாலும், புதிய அரசுத்தலைவர் நாட்டுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என்று Luxorல் உள்ள காப்டிக் கத்தோலிக்க ஆயர் Joannes Zakaria கூறினார்.
இஞ்ஞாயிறன்று, எகிப்தின் புதிய  அரசுத் தலைவராக Mursi அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து Aid to the Church in Need என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புக்குப் பேட்டியளித்த ஆயர் Zakaria, புதிய அரசுத் தலைவர் இஞ்ஞாயிறன்று தொலைக்காட்சியில் பேசியபோது கூறிய வார்த்தைகள் நம்பிக்கை தருவதாய் அமைந்தன என்று கூறினார்.
புதிய அரசுத் தலைவர் அமைக்கவிருக்கும் அமைச்சர்கள் அவையில் அனைத்து மதத்தினருக்கும் இடம் அளிப்பார் என்று நம்புவதாகவும் ஆயர் Zakaria தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.
Muslim Brotherhood என்ற கட்சி இதுவரை ஆட்சிப் பொறுப்பில் இல்லாததால் பல்வேறு வகையில் பேசியிருந்தாலும், தற்போது பொறுப்பில் இருப்பதால், தங்கள் கட்சியின் கொள்கைகளை நாட்டின் நலனுக்கு ஏற்ற வகையில் அமைத்துக் கொள்வர் என்று எதிர்பாப்பதாகவும் காப்டிக் கத்தோலிக்க ஆயர் Zakaria கூறினார்.


6. உலகின் அதிகமான இடங்களில் அப்பாவி மக்கள் ஆயுதத் தாக்குதல்களில் சிக்குண்டு உயிரிழந்து வருகின்றனர் - ஐ.நா. பொதுச்செயலர் கவலை

ஜூன்,26,2012. இன்று உலகின் அதிகமான இடங்களில், ஆயுதத் தாக்குதல்களில் சிக்குண்டு உயிரிழந்து வரும் அப்பாவி மக்களின் எண்ணிக்கை கூடிவருகிறது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் தன் கவலையை வெளியிட்டார்.
ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் உயர்மட்டக் கூட்டத்தில் இத்திங்களன்று உரையாற்றிய பான் கி மூன், போரிடும் குழுக்களுக்கு இடையே நிகழும் ஆயுதத் தாக்குதல்களில் மக்கள் இறக்க வேண்டியுள்ளது என்றும், பல இடங்களில் பொதுமக்கள் தாக்குதல்களுக்கு இலக்காகவும் மாறி வருகின்றனர் என்றும் பான் கி மூன் சுட்டிக்காட்டினார்.
கொல்லப்படுவது மட்டுமல்லாமல், பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாதல், எவ்விதத் தடயமும் இன்றி காணாமற் போதல், சித்திரவதைகளுக்கு உள்ளாதல் போன்ற ஏனைய கொடுமைகளுக்கும் அப்பாவி பொதுமக்கள் ஆளாகிறார்கள் என்று பான் கி மூன் எடுத்துரைத்தார்.
மக்களைக் காக்கச் செல்லும் ஐ.நா.பாதுகாப்புப் படைவீரர்களும் அண்மையக் காலங்களில் வன்முறைகளுக்கு உள்ளாகி இறக்கவேண்டியுள்ளது என்ற கவலையையும் வெளியிட்டார் ஐ.நா.பொதுச் செயலர்.
உலகில் பாதுகாப்பானச் சூழலை உருவாக்க விழையும் ஐ.நா.வின் முயற்சிகளுக்கு பன்னாட்டு அரசுகளும் முழு ஒத்துழைப்பைத் தர வேண்டும் என்று பான் கி மூன் அழைப்பு விடுத்தார்.
ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் உயர் மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய உயர் அதிகாரிகளும், ஐ.நா. பொதுச் செயலரின் எண்ணங்களை ஆமோதித்து பேசினர்.


7. ஜூன் 26 - போதைப்பொருள் ஒழிப்பு தினம்

ஜூன்,26,2012. போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜூன் 26ம் தேதி போதைப்பொருள் மற்றும் சட்ட விரோதக் கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
போதைப்பொருள், அதை பயன்படுத்துபவரை மட்டும் பாதிப்பதில்லை. அவரது குடும்பம், சமுதாயத்தையும் பாதிக்கிறது. அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடியாக இருப்பது போதைப்பொருள் தான். உலகில் இலட்சக்கணக்கானோர் இதற்கு அடிமையாக மாறியிருப்பது கவலைக்குரியது.
உலக வர்த்தகத்தில் பெட்ரோல் மற்றும் இராணுவ தளவாடங்களுக்கு அடுத்து, மூன்றாவது இடத்தில் போதைப்பொருள் வியாபாரம் உள்ளது. ஓர் ஆண்டிற்கு 500 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு போதைப்பொருள் வியாபாரம் நடக்கிறது.
போதைப் பொருள் பயன்படுத்துதல், கடத்துதல், விற்பனை செய்தல் ஆகியவற்றை ஒழிக்க, சட்டங்கள் மூலம் உலக நாடுகள் முயற்சிகள் எடுக்கின்றன. ஆனாலும் இதன் பயன்பாடு அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன.
ஒவ்வோர் ஆண்டும் போதைபொருள் பழக்கத்திற்கு அடிமையாகி இறப்போரின் எண்ணிக்கை 2,50,000 என்று கணிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இளையோர் என்பது வேதைனையான ஓர் உண்மை.


8. ஒவ்வொரு இரண்டு நிமிடத்துக்கும் தாய்மைப்பேறு கொண்ட ஒரு பெண் இறக்கிறார் - ஐ.நா. பொதுச்செயலர்

ஜூன்,26,2012. தாய்மைப்பேறு கொண்ட பெண்களில், ஒவ்வொரு இரண்டு நிமிடத்துக்கும் ஒருவர், கருவுற்ற காலத்தில் அல்லது குழந்தை பிறப்பின்போது  இறக்கிறார், இவர்களில் பெரும்பாலானோர் வளர்இளம் சிறுமிகள் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
இப்பிரச்சனையைத் தீர்க்க, 2010ம் ஆண்டில் பெண்கள் மற்றும் சிறாரின் நலவாழ்வு குறித்த வழிமுறைகள் உலக அளவில் எடுக்கப்பட்டன என்றுரைத்த பான் கி மூன், நலவாழ்வு தொடர்புடைய மில்லென்ய இலக்குகளை ஊக்குவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சரியான தகவல், சரியான தலையீடு போன்றவை மூலம் இப்பெண்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று, ஜெனீவாவில் கடந்த வாரத்தில் மனிதப் பிறப்பு கொள்கை குறித்து நடைபெற்ற கூட்டத்திற்கு அனுப்பிய செய்தியில் ஐ.நா. பொதுச்செயலர் கூறியுள்ளார்.
2015ம் ஆண்டுக்குள் 1 கோடியே 60 இலட்சம் பெண்கள் மற்றும் சிறாரின் வாழ்வைப்  பாதுகாப்பதும், இன்னும் இலட்சக்கணக்கானவர்களின் வாழ்வை மேம்படுத்துவதும் தங்களது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...