1. திருத்தந்தை : விசுவாச ஆண்டில் கிறிஸ்தவ நிதி உதவி அமைப்புக்களின் பணிகள் விசுவாசத்தின் வெளிப்பாடாக அமைய வேண்டும்
2. திருத்தந்தை, மொந்தே நெக்ரோ அரசுத்தலைவர் சந்திப்பு
3. திருத்தந்தை லாத்வியா நாட்டின் பிரதமருடன் சந்திப்பு
4. விசுவாச ஆண்டில் இடம்பெறும் பொது நிகழ்வுகள்
5. வறியோரின் சார்பில் பணியாற்றுவதில் திருஅவை எப்போதும் முனைப்புடன் செயல்பட்டுள்ளது - பேராயர் சுல்லிக்காட்
6. Rio+20 பூமிக்கோள உச்சி மாநாட்டிற்கு ஐரோப்பிய ஆயர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை
7. பாகிஸ்தான் அரசியல் நிலைகுறித்து தலத் திருஅவை கவலை
8. நைஜீரியாவில் உள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுடன் நல்லுறவைக் கொண்டுள்ளனர் - ஆயர் பேரவைத் தலைவர்
9. Rio+20 பூமிக்கோள உச்சி மாநாட்டிற்கு இணையாக நடைபெற்று வரும் People’s Summit
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : விசுவாச ஆண்டில் கிறிஸ்தவ நிதி உதவி அமைப்புக்களின் பணிகள் விசுவாசத்தின் வெளிப்பாடாக அமைய வேண்டும்
ஜூன்,21,2012. கிறிஸ்தவ பராம்பரியத்தின் தாய்நாடாக விளங்கும் கிழக்குப்பகுதி, வறியோரின் தேவைகளை எப்போதும் நிறைவு செய்துவரும் ஒரு பாரம்பரியத்தை வளர்த்து வந்துள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
கீழைரீதி திருஅவைகளின் நிதி உதவி அமைப்புக்களின் கூட்டமைப்பான ROACO என்ற இயக்கத்தின் 85வது கூட்டம் கடந்த இரு நாட்கள் உரோம் நகரில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட 80க்கும் அதிகமான உறுப்பினர்களை இவ்வியாழன் நண்பகல் வேளையில் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, உலகில் இன்று நிலவும் பொருளாதாரச் சரிவையும், நிதி உதவி செய்யும் அமைப்புக்களின் பணிகளையும் பற்றி பேசினார்.
புனித பூமியிலும், ஏனைய கிழக்குப் பகுதிகளிலும் உள்ள மக்கள் பொருளாதார, ஆன்மீக உதவிகளை நீதியான, முறையான
வழிகளில் பெறவேண்டும் என்று 2007ம் ஆண்டு கீழைரீதி திருஅவைகளின்
பேராயத்திற்குத் தான் வழங்கிய உரையில் கூறியவற்றை மீண்டும் இச்சந்திப்பில்
எடுத்துக் கூறிய திருத்தந்தை, அதே வேண்டுகோளை மீண்டும் ROACO உறுப்பினர்களுக்கு முன் வைப்பதாகக் கூறினார்.
கீழைரீதி திருஅவையின் செயல்பாடுகள் உலகெங்கும் கானப்படுவதைச் சுட்டிக்காட்டிப் பேசியத் திருத்தந்தை, வருகிற விசுவாச ஆண்டில் ROACO போன்ற நிதி உதவி அமைப்புக்களின் பணிகள் கிறிஸ்தவ விசுவாசத்தின் வெளிப்பாடாக அமைய வேண்டும் என்ற தன் ஆவலை வெளியிட்டு, உறுப்பினர்களுக்குத் தன் ஆசீரையும் வழங்கினார்.
2. திருத்தந்தை, மொந்தே நெக்ரோ அரசுத்தலைவர் சந்திப்பு
ஜூன்,21,2012.
திருப்பீடத்துக்கும் மொந்தே நெக்ரோ குடியரசுக்கும் இடையே கையெழுத்தான
ஒப்பந்தத்தை அமல்படுத்துவது குறித்த வழிமுறைகள் பரிமாறப்பட்ட நிகழ்வையொட்டி
இவ்வியாழனன்று திருப்பீடத்தில் திருத்தந்தையைச் சந்தித்துப் பேசினார்
மொந்தே நெக்ரோ அரசுத்தலைவர் Filip Vujanović.
17 நிமிடங்கள் இடம்பெற்ற இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுடனான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் அரசுத்தலைவர் Filip Vujanović.
திருப்பீடத்துக்கும்
மொந்தே நெக்ரோ குடியரசுக்கும் இடையே 2011ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி
கையெழுத்தான ஒப்பந்தத்தை அமல்படுத்துவது குறித்த வழிமுறைகள், வத்திக்கான் அப்போஸ்தலிக்க மாளிகையில் இவ்வியாழனன்று இவ்விரு நாடுகளுக்கிடையே பரிமாறப்பட்டன.
திருப்பீடச் செயலர் கர்தினால் பெர்த்தோனே, மொந்தே நெக்ரோ அரசுத்தலைவர் Filip Vujanović ஆகியோருக்கிடையே இப்பரிமாற்றங்கள் இடம் பெற்றன. இந்நிகழ்வில் இவ்விரு நாடுகளின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய மொந்தே நெக்ரோ அரசுத்தலைவர் Filip Vujanović, இந்த ஒப்பந்தம் ஓராண்டுக்கு முன்னரே கையெழுத்தாகியிருந்தாலும், இவ்வாண்டு மே 29ம் தேதிதான் மொந்தே நெக்ரோ நாடாளுமன்றத்தில் இதற்கு இசைவு தெரிவிக்கப்பட்டதாகவும், திருப்பீடத்துக்கும்
மொந்தே நெக்ரோ குடியரசுக்கும் இடையேயான உறவில் வரலாற்று ஏட்டில் இது ஒரு
முக்கிய மற்றும் வளமையான பக்கமாக இருப்பதாகவும் கூறினார்.
3. திருத்தந்தை லாத்வியா நாட்டின் பிரதமருடன் சந்திப்பு
ஜூன்,21,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் லாத்வியா நாட்டின் பிரதமர் Valdis Dombrovskisஐ இப்புதன் பொதுமறைபோதகத்திற்குப் பின் சந்தித்தார். வத்திக்கானுக்கும், லாத்வியாவுக்கும் இடையே நிலவும் நல்லுறவைக் குறித்தும், கத்தோலிக்கத் திருஅவை லாத்வியா நாட்டில் மேற்கொண்டுவரும் நற்பணிகள் குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டன.
இருநாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளக்கூடிய செயல்பாடுகள் பற்றியும், ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதாரப் பின்னடைவுகள் குறித்தும் இச்சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டன.
இச்சந்திப்பிற்குப் பின், லாத்வியா
பிரதமர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே அவர்களையும்
பன்னாட்டு உறவுகளின் திருப்பீடச் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி
அவர்களையும் சந்தித்துப் பேசினார்.
4. விசுவாச ஆண்டில் இடம்பெறும் பொது நிகழ்வுகள்
ஜூன்,21,2012. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டு நிறைவு, கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி ஏடு வெளியிடப்பட்டதன் 20ம்
ஆண்டு நிறைவு ஆகிய இவ்விரு நிகழ்வுகளையும் கொண்டாடும் விதமாக விசுவாச
ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார் புதிய நற்செய்தி அறிவிப்பை
ஊக்குவிக்கும் திருப்பீட அவைத் தலைவர் பேராயர் Rino Fisichella.
இவ்வாண்டு
அக்டோபர் 11ம் தேதியன்று தொடங்கி 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதியன்று
நிறைவடையும் விசுவாச ஆண்டு குறித்து இவ்வியாழனன்று நிருபர் கூட்டத்தில்
விளக்கிய பேராயர் Fisichella தலைமையிலான குழு, இந்த விசுவாச ஆண்டில் 21 பொது நிகழ்வுகள் நடைபெறும் என அறிவித்தது.
வருகிற அக்டோபர் 11ம் தேதி வியாழனன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தை நிகழ்த்தும், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம்
ஆண்டு ஆடம்பரத் திருப்பலியோடு இந்த விசுவாச ஆண்டு தொடங்கும். உலக ஆயர்
மாமன்றத் தந்தையர்கள் திருத்தந்தையுடன் சேர்ந்து கூட்டுத்திருப்பலி
நிகழ்த்துவார்கள். பின்னர் அக்டோபர் 21ம் தேதி ஞாயிறன்று திருத்தந்தை
புனிதர் பட்டமளிப்புத் திருப்பலியை நிகழ்த்துவார் என்றும் பேராயர் Fisichella தெரிவித்தார்.
5. வறியோரின் சார்பில் பணியாற்றுவதில் திருஅவை எப்போதும் முனைப்புடன் செயல்பட்டுள்ளது - பேராயர் சுல்லிக்காட்
ஜூன்,21,2012. தனிமனித மாண்பை நிலைநாட்டுவதும், வறுமைப்பட்ட நாடுகளில் நிலவும் சமுதாய, சுற்றுச்சூழல் பிரச்சனைகளை உலகின் கவனத்திற்குக் கொண்டுவருவதும் Rio+20 பூமிக்கோள உச்சி மாநாட்டில் தன் பணி என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
இப்புதன் முதல் வெள்ளிமுடிய பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறும் Rio+20 பூமிக்கோள உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருக்கும், ஐ.நா.அவையில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட் Web TV Redentor என்ற தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
பொருளாதாரம், சமுதாயம், சுற்றுச்சூழல் ஆகிய மூன்று முக்கியக் கருத்தியல்களிலும் திருஅவை எப்போதும் தனிமனித மாண்பை நிலைநாட்டுவதிலும், வறியோரின் சார்பில் பணியாற்றுவதிலும் முனைப்புடன் செயல்பட்டுள்ளது என்று பேராயர் சுல்லிக்காட் கூறினார்.
திருஅவையின் பல்வேறு பிறரன்புப் பணிகள் அமைப்பின் பிரதிநிதிகளும், இன்னும் பல திருஅவை உயர் அதிகாரிகளும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ளனர்.
நீதியின்
அடிப்படையில் செல்வரும் வறியோரும் இணைந்து முன்னேற்றப் பாதையில் நடக்க
முடியும் என்பதை உலகத் தலைவர்கள் இம்மாநாட்டில் உணர்வார்கள் என்று
நம்புவதாக திருஅவையின் பிறரன்புப் பணிகள் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட
அறிக்கை ஒன்று கூறுகிறது.
6. Rio+20 பூமிக்கோள உச்சி மாநாட்டிற்கு ஐரோப்பிய ஆயர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை
ஜூன்,21,2012. இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படும் சரிநிகரான, நீடிக்கக்கூடிய முன்னேற்றத்தை Rio+20 பூமிக்கோள உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள் காண வேண்டும் என்று ஐரோப்பிய ஆயர்கள் கூறியுள்ளனர்.
பிரேசில் நாட்டில் இப்புதனன்று துவங்கியுள்ள Rio+20 பூமிக்கோள உச்சி மாநாட்டையொட்டி ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஆயர் பேரவைகள் இணைந்து வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், வறுமைப்பட்ட நாடுகளின் அவசரத் தேவைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
உணவு, சுத்தமான தண்ணீர், எரிசக்தி, நலவாழ்வுப் பாதுகாப்பு, கல்வி
ஆகிய அடிப்படைத் தேவைகள் உலகின் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைவதற்கு
இம்மாநாடு முயற்சிகள் செய்யவேண்டும் என்று இவ்வறிக்கை எடுத்துரைக்கிறது.
முன்னேற்றம் என்பது, வறுமையை ஒழிப்பதும், செல்வம் சேர்ப்பதும் மட்டும் அல்ல, மாறாக, வளர்ச்சி அடைந்த, செல்வம்
மிகுந்த நாடுகள் மனசாட்சியுடன் செயல்படுவதும் முன்னேற்றத்தின் முக்கிய
அம்சங்கள் என்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஆயர் பேரவைகள் இணைந்து
வெளியிட்டுள்ள இவ்வறிக்கை கூறியுள்ளது.
7. பாகிஸ்தான் அரசியல் நிலைகுறித்து தலத் திருஅவை கவலை
ஜூன்,21,2012.
நீதியையும் முன்னேற்றத்தையும் நிலைநிறுத்த பாகிஸ்தானில் உள்ள அனைத்து
அரசியல் கட்சிகளும் இணைந்து வருவதே நாட்டின் தற்போதைய அவசரமானத் தேவை என்று
இஸ்லாமாபாத் ஆயர் Rufin Anthony கூறினார்.
பாகிஸ்தான் பிரதமர் Yousaf Raza Gilani பதவியில் நீடிக்கமுடியாது என்று பாகிஸ்தான் உச்ச நீதி மன்றம் ஆணையிட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பதட்டமானச் சூழலைக் குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் ஆயர் Anthony இவ்வாறு கூறினார்.
மக்களின் உணவு, நீர், கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதும், நாட்டில் வளர்ந்துள்ள ஊழலை ஒழிப்பதும் இன்றைய அவசரமானத் தேவைகள் என்றும், யார் பெரியவர் என்ற போட்டி முக்கியமல்ல என்றும் ஆயர் Anthony எடுத்துரைத்தார்.
பல ஆண்டுகள் பாடுபட்டு இந்நாடு பெற்றுள்ள மக்களாட்சியை நிலைநிறுத்த வேண்டுமெனில், அரசு புதியப் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் உடனடியாகச் செயல்பட வேண்டுமென்று பாகிஸ்தான் ஆயர் பேரவை நீதி, அமைதி பணிக்குழுவின் இயக்குனர் அருள்தந்தை Emmanuel Yousaf Mani, UCAN செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
8. நைஜீரியாவில் உள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுடன் நல்லுறவைக் கொண்டுள்ளனர் - ஆயர் பேரவைத் தலைவர்
ஜூன்,21,2012. நைஜீரியாவில் வன்முறைகளை மேற்கொண்டுவரும் Boko Haram என்ற அடிப்படைவாதக் குழுவினர் கிறிஸ்தவர்களுக்கு எதிராகப் போர் தொடுப்பதாக அறிவித்துள்ளபோதிலும், நாட்டில் உள்ள ஏனைய இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுடன் நல்லுறவைக் கொண்டுள்ளனர் என்று நைஜீரிய ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Ignatius Ayau Kaigama கூறினார்.
அண்மைய நாட்களில் Kadunaவிலும், சுற்றுப் பகுதிகளிலும் 40 பேருக்கும் அதிகமானோர் பலியாவதற்குக் காரணமாய் இருந்த வன்முறைகளுக்கு Boko Haram குழுவினர் பொறுப்பேற்றுள்ளனர் என்று Fides செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
Boko Haram என்ற இவ்வன்முறை கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்களையும், பிறரையும் அழிப்பதில் இவ்வளவு தீவிரம் காட்டுவது வேதனையான ஒரு போக்கு என்று கூறிய Jos பேராயர் Kaigama, இவ்வன்முறை கும்பலுக்கு அயல்நாடுகளிலிருந்து நிதி உதவி கிடைத்து வருவது மேலும் அதிர்ச்சியைத் தருகிறது என்று கூறினார்.
நிதி உதவி செய்துவரும் அமைப்புக்களை உடனடியாகக் கண்டுபிடித்து, அவைகளைத் தடைசெய்வது அரசின் அவசரப்பணி என்றும், இதனால் மட்டுமே வன்முறைகளை நாட்டில் நிறுத்தமுடியும் என்றும் பேராயர் வலியுறுத்தினார்.
நைஜீரியாவில்
நிகழ்ந்து வரும் வன்முறைகளைக் குறித்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
இப்புதனன்று தான் வழங்கிய மறைபோதகத்தின் இறுதியில் எடுத்துக் கூறி, அங்கு அமைதி நிலவ தன் செபங்களை எழுப்பினார் என்பது குறிப்பிடத் தக்கது.
9. Rio+20 பூமிக்கோள உச்சி மாநாட்டிற்கு இணையாக நடைபெற்று வரும் People’s Summit
ஜூன்,21,2012. உலகின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது அரசுத் தலைவர்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் உள்ள ஒரு கடமை என்று மக்கள் இயக்கத் தலைவர் ஒருவர் கூறினார்.
பிரேசில் நாட்டில் இப்புதனன்று துவங்கியுள்ள Rio+20 பூமிக்கோள உச்சி மாநாட்டிற்கு இணையாக அந்நகரின் Flamengo பூங்காவில் நடைபெற்று வரும் People’s Summit என்றழைக்கப்படும் மக்கள் உச்சிமாநாட்டின் அமைப்பாளர்களில் ஒருவரான Rafael Soares de Oliveira இவ்வாறு கூறினார்.
பல்வேறு மக்கள் இயக்கங்கள், சமுதாய நல அமைப்புக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புக்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் மக்கள் உச்சி மாநாடு, 1992ம் ஆண்டிலும் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற பூமிக்கோள உச்சிமாநாட்டுக்கு இணையாக நடத்தப்பட்டது.
1992ம்
ஆண்டு கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை விட இம்முறை இரு மடங்காக
18000க்கும் அதிகமானோர் மக்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வர் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
இப்புதனன்று ஆரம்பமான Rio+20 பூமிக்கோள உச்சி மாநாடு, இவ்வெள்ளியன்று நிறைவடைகிறது.
No comments:
Post a Comment