Tuesday 26 June 2012

Catholic News in Tamil - 20/06/12

1. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட Emilia Romagna பகுதியைத் திருத்தந்தை பார்வையிடுவார்

2. நிலத்தடிக் கல்லறைகளைச் சீரமைக்கும் பணிக்கு ஓர் இஸ்லாமிய நாடு உதவி செய்ய முன்வந்திருப்பது வரலாற்றில் முதல் முறை - வத்திக்கான் அதிகாரி

3. கத்தோலிக்கத் திருஅவை நாடோடி மக்களின் நலனில் அக்கறை காட்டிவருகிறது

4. Homs நகரில் சிக்குண்டிருக்கும் மக்களை உடனடியாக விடுதலைச் செய்யவேண்டும் -தலத்திருஅவை விண்ணப்பம்

5. நைஜீரியாவின் Kaduna பகுதியில் அமைதி மீண்டும் திரும்பியுள்ளது - பேராயர்

6. Taiwan நாட்டில் உள்ள Sun Moon என்ற ஏரியில் மிதக்கும் சிற்றாலயம்

7. உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டிருப்பவர் ஒரு தமிழ் நாட்டுச் சிறுமி

------------------------------------------------------------------------------------------------------
1. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட Emilia Romagna பகுதியைத் திருத்தந்தை பார்வையிடுவார்

ஜூன்,20,2012 மேமாதம் இருமுறை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட Emilia Romagna பகுதியைத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அடுத்த வாரம் செவ்வாயன்று பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 26 செவ்வாயன்று காலை 9 மணியளவில் வத்திகானிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கிளம்பும் திருத்தந்தை, 10 மணியளவில் San Marino di Carpi என்ற திடலைச் சென்றடைவார்.
அங்கிருந்து வாகனம் வழியே பயணத்தைத் தொடரும் திருத்தந்தை, நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட அலேக்சாந்திரியாவின் புனித கத்தரீனா ஆலயத்தைப் பார்வையிடுவார்.
பின்னர் அந்நகர மக்கள் மற்றும் அரசு அதிகாரிகளைச் சந்தித்து உரை வழங்கியபின், மீண்டும் மதியம் ஒரு மணியளவில் வத்திக்கானுக்குத் திரும்புவார்.


2. நிலத்தடிக் கல்லறைகளைச் சீரமைக்கும் பணிக்கு ஓர் இஸ்லாமிய நாடு உதவி செய்ய முன்வந்திருப்பது வரலாற்றில் முதல் முறை - வத்திக்கான் அதிகாரி

ஜூன்,20,2012 கிறிஸ்துவர்களின் பழங்கால நிலத்தடிக் கல்லறைகளைச் சீரமைக்கும் பணிக்கு ஓர் இஸ்லாமிய நாடு உதவி செய்ய முன்வந்திருப்பது இதுவே வரலாற்றில் முதல் முறை என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
உரோம் நகரின் Casalina பகுதியில் அமைந்துள்ள புனித மார்செலினுஸ் மற்றும் பேதுரு நிலத்தடிக் கல்லறைகளைச் சீரமைக்கும் பணிகளுக்கு Azerbaijan குடியரசு முன்வந்துள்ளது.
இந்நாட்டின் Heydar Alieyev என்ற அறக்கட்டளைக்கும், வத்திக்கானுக்கும் இடையே வருகிற வெள்ளியன்று ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த நிகழ்வைப்பற்றி செய்தியாளர்களிடம் பேசியத் திருப்பீடக் கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi, இந்த ஒப்பந்தம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு என்று குறிப்பிட்டார்.
கலாச்சாரங்களுக்கு இடையே நடைபெறும் உயர்ந்த உரையாடல்களின் ஒரு வெளிப்பாடாக இதையொத்த முயற்சிகள் அமைகின்றன என்று கர்தினால் Ravasi தன் மகிழ்வை வெளியிட்டார்.


3. கத்தோலிக்கத் திருஅவை நாடோடி மக்களின் நலனில் அக்கறை காட்டிவருகிறது

ஜூன்,20,2012 கத்தோலிக்கத் திருஅவை Roma என்று அழைக்கப்படும் நாடோடி மக்களின் நலனில் அக்கறை காட்டிவருகிறது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
"கதவுகளைத் திறக்க" (“Opening Doors”) என்ற மையக்கருத்துடன் ஹங்கரி நாட்டின் Eger எனுமிடத்தில் இச்செவ்வாய் முதல் வியாழன் முடிய நடைபெற்றுவரும் ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய திருப்பீடப் பயணிகள் நல அவையின் இணைச் செயலர் அருள்தந்தை Gabriel Bentoglio இவ்வாறு கூறினார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இயேசுசபை அருள்தந்தை Jean Fleury அவர்களின் முயற்சியால் 1948ம் ஆண்டு Roma நாடோடி மக்களுக்கு ஆன்மீகப் பணிகள் துவக்கப்பட்டன என்று அருள்தந்தை Bentoglio தன் உரையில் நினைவு கூர்ந்தார்.
கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, திருஅவை இம்மக்களுக்கு ஆற்றிய பல்வேறு பணிகளையும் எடுத்துக் கூறிய அருள்தந்தை Bentoglio, 1988ம் ஆண்டு அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் திருப்பீட பயணிகள் நல அவையை உருவாக்கியதன் மூலம் திருஅவை இம்மக்களுக்கு காட்டிவரும் தனிப்பட்ட அக்கறையை நாம் உணரலாம் என்று எடுத்துரைத்தார்.


4. Homs நகரில் சிக்குண்டிருக்கும் மக்களை உடனடியாக விடுதலைச் செய்யவேண்டும் -தலத்திருஅவை விண்ணப்பம்

ஜூன்,20,2012 சிரியாவில் அரசுக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையே நிகழ்ந்துவரும் மோதல்களில் அப்பாவி பொதுமக்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், Homs நகரில் சிக்குண்டிருக்கும் மக்களை உடனடியாக விடுதலைச் செய்யவேண்டும் என்றும் தலத்திருஅவை விண்ணப்பித்துள்ளது.
சிரியாவின் Homs நகரில் சிக்கியுள்ள 800க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள், போரிட்டுவரும் இருதரப்பினரும் பயன்படுத்தக்கூடிய மனிதக் கேடயங்களாக மாறி வருகின்றனர் என்று Fides செய்தி கூறியது.
இம்மக்களில் பாதிக்கு மேல் கிறிஸ்தவர்கள் என்றும், இவர்கள் அனைவரும் பெண்கள் மற்றும் வயதானவர்கள் என்றும் அருள்தந்தை Boutros Al Zein, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
அப்பகுதியில் உழைத்துவரும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ அருள்பணியாளர்கள் இம்மக்களை விடுவிக்க மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ளதென்றும் கூறப்படுகிறது.


5. நைஜீரியாவின் Kaduna பகுதியில் அமைதி மீண்டும் திரும்பியுள்ளது - பேராயர்

ஜூன்,20,2012 நைஜீரியாவின் Kaduna பகுதியில் அமைதி மீண்டும் திரும்பியுள்ளது என்று Kaduna பேராயர் Matthew Man-oso Ndagoso கூறினார்.
ஜூன் 17 இஞ்ஞாயிறன்று கிறிஸ்து அரசர் பேராயலாம் உட்பட இரு கிறிஸ்துவ கோவில்கள் வெடி குண்டு தாக்குதல்களுக்கு உள்ளானது. இத்துடன் நைஜீரியாவில் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் பல இடங்களில் வன்முறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர் என்பதை திருத்தந்தை இப்புதனன்று வழங்கிய மறைபோதகத்தின்போது குறிப்பிட்டார்.
இஞ்ஞாயிறு நிகழ்ந்த குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களின் விளைவாக 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று பேராயர் Ndagoso எடுத்துரைத்தார்.
இச்செவ்வாய் முதல் அரசு மேற்கொண்ட முயற்சிகளால் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று பேராயர் மேலும் தெரிவித்தார்.


6. Taiwan நாட்டில் உள்ள Sun Moon என்ற ஏரியில் மிதக்கும் சிற்றாலயம்

ஜூன்,20,2012 Taiwan நாட்டில் உள்ள Sun Moon என்ற பெரும் ஏரியில் மிதக்கும் சிற்றாலயம் ஒன்றை உருவாக்க Taichung மறைமாவட்ட ஆயர் Martin Su Yao-wen கப்பல் கட்டும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
பயணிகளுக்கும் தகுந்த ஆன்மீகப் பணிகளைச் செய்யவேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறிவருவதை எதிரொலிக்கும் விதத்தில் இந்தச் சிற்றாலயம் கட்டப்படுகிறது என்று இம்முயற்சியை ஒருங்கிணைக்கும் James Liao, UCAN செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
50 பேர் அமரக்கூடிய வகையில் அமையவிருக்கும் இந்தச் சிற்றாலயத்திற்குத் தேவையான மின்சக்தி அனைத்தும் சூரிய ஒளியிலிருந்து உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டின் இறுதிக்குள் அமையவிருக்கும் இந்தக் கோவில் வழியாக திரட்டப்படும் நிதி, மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் கல்விக்காகச் செலவிடப்படும் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


7. உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டிருப்பவர் ஒரு தமிழ் நாட்டுச் சிறுமி

ஜூன்,20,2012 IQ எனப்படும் அறிவுத்திறன் அளவில் உலகிலேயே மிக அதிக அளவுத் திறன் கொண்டிருப்பவர் ஒரு தமிழ் நாட்டுச் சிறுமி என்று ஊடகங்கள் கூறியுள்ளன.
திருநெல்வேலிக்கு அருகில் உள்ள பாளயம்கோட்டையில் வாழும் விஷாலினி என்ற 11 வயது சிறுமி உலகிலேயே மிக அதிக அளவு அறிவுத் திறன் பெற்றவர் என்று கூறப்படுகிறார்.
இவருக்கு தற்போது 11 வயதே நிறைந்துள்ளதால், இவரது உலகச்சாதனை தற்போது கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெறாது என்றும், இவருக்கு 14 வயதாகும்போதே இந்தச் சாதனை இடம்பெறும் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.
எட்டாம் வகுப்பில் பயிலும் விஷாலினி, கணனியில் அபூர்வ அறிவுபெற்றவராய் இருக்கிறார். இவரது அறிவுத்திறனால், பல பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு சொற்பொழிவுகள் வழங்கி வருகிறார்.
தற்போது உலக அளவில் மிக உயர்ந்த அறிவுத்திறன் கொண்டவர் என்று கருதப்படுபவர் கொரியாவைச் சேர்ந்த Kim Ung-Yong. இவரது அறிவுத் திறன் அளவு 210. இதுவே தற்போது உலகச்சாதனையாக உள்ளது. விஷாலினியின் அறிவுத்திறன் அளவு 225 என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் அறிவுத்திறன் அளவு 160 என்றும், லியோனார்டோ டாவின்சியின் அறிவுத்திறன் 200 என்றும் சொல்லப்படுகிறது.

 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...