Friday, 29 June 2012

மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை அவர்களை அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்கான ஆவணங்களைத் திருத்தந்தை அங்கீகரித்துள்ளார்

மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை அவர்களை அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்கான ஆவணங்களைத் திருத்தந்தை அங்கீகரித்துள்ளார்

ஜூன்29,2012. தமிழகத்தின் கோட்டாறு மறைமாவட்டத்தில் கிறிஸ்தவ விசுவாசத்திற்காக 1752ம் ஆண்டு கொடூரமாய்க் கொல்லப்பட்ட பொதுநிலை விசுவாசி தேவசகாயம்பிள்ளை உட்பட நான்கு மறைசாட்சிகளின் வீரத்துவமான வாழ்க்கை வரலாறு குறித்த விபரங்களை ஏற்றுக்கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட.
திருஅவையில் புனிதர்கள் மற்றும் அருளாளர் நிலைக்கு உயர்த்துவதற்கானத் திருப்பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ இவ்வியாழனன்று திருப்பீடத்தில் திருத்தந்தையைச் சந்தித்து, தமிழரான தேவசகாயம்பிள்ளை உள்ளிட்ட நான்கு மறைசாட்சிகள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் Rochesterன் முன்னாள் பேராயர் ஃபுல்ட்டன் ஷீன் உட்பட 4 இறையடியார்களின் வீரத்துவமான புண்ணியங்கள், இன்னும், புனித டாரதி சகோதரிகள் சபையைத் தொடங்கிய இத்தாலிய மறைமாவட்ட குரு லூக்கா பாசி, பிரேசில் நாட்டு பொதுநிலை விசுவாசி பிரான்செஸ்கா தெ பவுலா தெ ஹேசுஸ் ஆகியோரின் பரிந்துரைகளால் நடைபெற்ற புதுமைகள் ஆகிய விபரங்களைச் சமர்ப்பித்தார். 
1712ம் ஆண்டு முதல் 1752ம் ஆண்டு வரை வாழ்ந்த இறையடியார் தேவசகாயம்பிள்ளை, திருவிதாங்கூர் பேரரசர் மார்த்தாண்ட வர்மாவின் நீதிமன்றத்தில் அதிகாரியாகப் பணியாற்றியவர். இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு மனம் மாறிய தேவசகாயம்பிள்ளை, டச்சு கப்பற்படைத் தளபதி Eustachius De Lannoy என்பவரின் தூண்டுதலால் கத்தோலிக்கத்தைத் தழுவி மற்றவர்களும் திருமுழுக்குப் பெறுவதற்குத் தூண்டினார். தேவசகாயம்பிள்ளை கிறிஸ்தவரான பின்னர் வேறுபாடின்றி எல்லாச் சாதியினரோடும் சமூகத்தின் எல்லாத் தரப்பினரோடும் நன்றாகப் பழகியதால், பிராமணர்கள் உட்பட உயர் சாதியினரின் வெறுப்பைப் பெற்றார். அரசருக்கும் இந்து தெய்வங்களுக்கும் இவர் அவமரியாதை செய்கிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டார். இதனால் 1749ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி திருவிதாங்கூர் மன்னரின் ஆணைப்படிக் கைது செய்யப்பட்டு பல கொடிய சித்ரவதைகளுக்கு உள்ளாகி 1752ம் ஆண்டு சனவரி 14 அல்லது 15ம் தேதியன்று படைவீரர்களால் 5 கனத்த ஈயக் குண்டுகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறை, கோட்டாறு மறைமாவட்டப் பேராலயமான புனித பிரான்சிஸ் சவேரியார் பேராலயத்தில் உள்ளது.  
இந்திய மண்ணில் பிறந்த முதல் மறைசாட்சியான இறையடியார் தேவசகாயம்பிள்ளை இறந்து அடக்கம் செய்யப்பட்ட நாள்முதல், இவரது கல்லறையை, மதம், இனம், மொழி என்ற பாகுபாடின்றி ஆயிரக்கணக்கான மக்கள் தரிசித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...