Tuesday, 26 June 2012

Catholic News in Tamil - 22/06/12

1. போதைப்பொருள் வியாபாரத்தால் பாதிக்கப்பட்டவர்கள்மீது மிகுந்த அக்கறை காட்டுமாறு கொலம்பிய ஆயர்களிடம் திருத்தந்தை வலியுறுத்தல்

2. திருத்தந்தை: தற்போதைய பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகள் வேளாண்துறையையும் பாதித்துள்ளது

3. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சைகள் கிடைப்பதற்குத் திருப்பீடச் செயலர் வேண்டுகோள்

4. பெண் சிசுக்கொலைகளும் கருக்கலைப்புகளும் நிறுத்தப்பட மும்பை ஆயர் வேண்டுகோள்

5. பெண்கள் வாழ்வதற்கு மோசமான இடம் இந்தியா, புதிய அறிக்கை

6. இந்தோனேசியாவில் ஊழலை ஒழிப்பதற்குத் திருஅவைத் தலைவர்களும் பொதுநிலையினர் இயக்கங்களும் முயற்சி

7. வட கொரியாவில் கடும் உணவு நெருக்கடி, ஐ.நா.எச்சரிக்கை

8. ஆதி மனிதன் முழு எலும்புக்கூடு இலங்கையில் தோண்டியெடுப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. போதைப்பொருள் வியாபாரத்தால் பாதிக்கப்பட்டவர்கள்மீது மிகுந்த அக்கறை காட்டுமாறு கொலம்பிய ஆயர்களிடம் திருத்தந்தை வலியுறுத்தல்

ஜூன்22,2012. இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்கள், கடும் ஏழைகள், தங்களது அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட புலம் பெயர்ந்தவர்கள், ஆயுதம் தாங்கியக் குற்றக்கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தால் பாதிக்கப்பட்டவர்கள்மீது மிகுந்த அக்கறை காட்டுமாறு கொலம்பிய ஆயர்களிடம் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அட் லிமினாவையொட்டி கொலம்பிய நாட்டு ஆயர்களில் முதல் குழுவினரை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, சமூகத்தில் பலவிதங்களில் பாதிக்கப்பட்டவர்களுடன் ஆயர்கள் மிக நெருக்கமாக வாழுமாறு வலியுறுத்தினார்.
கொலம்பியாவில் மட்டுமல்லாமல் இலத்தீன் அமெரிக்காவின் பல பகுதிகளில் Pentecostal மற்றும் Evangelical சபைகள் வளர்ந்து வருவதைப் புறக்கணிக்கவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ முடியாது என்றும் கூறிய திருத்தந்தை, இறைமக்கள் சமுதாயம் தங்களது விசுவாசத்தைத் தூய்மைப்படுத்தி அதனைப் புதுப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
கத்தோலிக்கத் திருஅவையை விட்டு விசுவாசிகள் விலகிச் செல்வதற்கானக் காரணத்தை விளக்கிய திருத்தந்தை, பங்குத்தளங்களிலும் கிறிஸ்தவச் சமூகங்களிலும் நல்ல கிறிஸ்தவர்களை உருவாக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், தாங்கள் ஒதுக்கப்பட்டவர்கள் என்று உணரக்கூடாத வகையில் வசுவாசிகள் பராமரிக்கப்பட வேண்டுமெனவும் பரிந்துரைத்தார்.


2. திருத்தந்தை: தற்போதைய பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகள் வேளாண்துறையையும் பாதித்துள்ளது

ஜூன்22,2012. Coldiretti என்ற இத்தாலிய தேசிய வேளாண் கூட்டமைப்பின் நூறு பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தற்போது பல நாடுகள் எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகள் வேளாண்துறையையும் அதிகமாகப் பாதித்துள்ளது என்று கூறினார்.
வேளாண் உலகத்தில் குடும்பத்தினரின் பங்கு பற்றியும் அவர்களுக்குப் பாதுகாப்பு தேவை என்பது பற்றியும் எடுத்துரைத்த திருத்தந்தை, இந்தக் கூட்டமைப்பை ஆரம்பித்த Paolo Bonomi என்பவரின் இலக்கு தொடர்ந்து வளர்க்கப்படுவதற்கு முயற்சிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பொறுமையுடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் எப்போதும் உழைக்கும் மக்களின் நியாயமான உரிமைகள் பாதுகாக்கப்படவும், பகிர்வு, தியாகம், ஒருமைப்பாட்டுணர்வு போன்ற மனிதரின் நல்ல பண்புகள் காக்கப்படவும் தொடர்ந்து உழைக்குமாறும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார். 
மனித மாண்பு மதிக்கப்படல், மனிதரின் உரிமைகள் காக்கப்படல், நிர்வாகப்பணிகளில் நேர்மை, ஒளிவு மறைவின்மை விளங்குதல், உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தோழமையுணர்வை வளர்த்தல்  போன்றவை உண்மையான உழைப்பில் வெளிப்படும் என்றும் அவர் கூறினார். 
வேளாண்துறையும் விவசாயிகளும் தக்கவிதமாய்ப் பாதுகாக்கப்படுவதற்கு மட்டுமல்லாமல், நல்ல சமூகநலக் கொள்கைகள் உருவாக்கப்படுவதற்கு இந்த Coldiretti  கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்து வருவதையும் திருத்தந்தை பாராட்டினார். 
1944ம் ஆண்டு அக்டோபர் 30 தேதி Paolo Bonomi என்பவரால் உருவாக்கப்பட்ட Coldiretti என்ற இத்தாலிய அமைப்பு, 19 மாநில வேளாண் கழகங்களைக் கொண்ட ஒரு கூட்டமைப்பாகும். இதில் 16 இலட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இது 850 உழவர் சந்தைகளையும் கொண்டுள்ளது.


3. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சைகள் கிடைப்பதற்குத் திருப்பீடச் செயலர் வேண்டுகோள்

ஜூன்22,2012. உலகில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பராமரிப்பும், அவர்களுக்கு இலவச சிகிச்சைகள் கிடைப்பதற்கும் ஆவன செய்யப்படுமாறு திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே பன்னாட்டு சமூகத்திற்கு அழைப்பு விடுத்தார்.
முதலில் இந்த உதவியை எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டுள்ள தாய்மார் மற்றும் குழந்தைகளிலிருந்து தொடங்குவோம் என்றும் கேட்டுக்கொண்டார் கர்தினால் பெர்த்தோனே.
உரோம் சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு ஏற்பாடு செய்த எய்ட்ஸ் நோய் குறித்த 8வது அனைத்துலக கருத்தரங்கில் இவ்வெள்ளியன்று பேசிய கர்தினால் பெர்த்தோனே, தங்களுக்கென்று பேசுவதற்கு யாரும் இல்லாத நிலையில் துன்புறும் பலருக்காக, திருத்தந்தை 16ம் பெனடிக்டின் பெயரால் இக்கூட்டத்தில் தான் கேட்பதாகவும் கூறினார். 
நாள்களைக் கடத்தாமல் இதற்குத் தேவையான வளங்களை முதலீடு செய்யுமாறும் அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கருத்தரங்கில் கினி நாட்டு அரசுத்தலைவரின் மனைவி, 20 ஆப்ரிக்க அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


4. பெண் சிசுக்கொலைகளும் கருக்கலைப்புகளும் நிறுத்தப்பட மும்பை ஆயர் வேண்டுகோள்

ஜூன்22,2012. வட இந்தியாவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பெண் சிசுக்கொலை நடவடிக்கைகள், சிறுமிகளுக்கு எதிரான பாகுபாடுகள் மற்றும் கொடுமைகளுக்கு எடுத்துக்காட்டுகளாய் இருக்கின்றன என்று மும்பை உயர்மறைமாவட்ட துணை ஆயர் Agnelo Gracias கூறினார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் Beed மாவட்டத்தில் பல்வேறு வளர்நிலையில் பெண்சிசுக்கள் கருவிலே கொல்லப்பட்டிருப்பது இந்த ஜூன் மாதத் தொடக்கத்தில் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்த ஆயர் Gracias, நாட்டில் இடம்பெறும் கருக்கலைப்புகள் அதிர்ச்சியூட்டுகின்றன என்று  கூறினார்.
மனித வாழ்வு தாயின் வயிற்றில் உருவான நேரமுதற்கொண்டே புனிதமானது என்றுரைத்த ஆயர் Gracias, பெண் சிசுக்கொலைகளும் கருக்கலைப்புகளும் நிறுத்தப்படுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த எட்டு மாதங்களில் கட்டாயக் கருக்கலைப்புகளில் இறந்த 5 பெண் சிசுக்களின் உறுப்புகளைக் காவல்துறை கண்டுபிடித்துள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
மேலும், இராஜஸ்தான் மாநில அரசு பெண்சிசுக்கொலைக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்ற போதிலும், அம்மாநிலத்தில் சிறுமிகளைக் கொல்வதற்குப் புதிய வழிமுறைகளை மக்கள் பயன்படுத்துகின்றனர் என்று அதிகாரிகள் சந்தேக்கின்றனர் என்று UCA செய்தி நிறுவனம் கூறுகிறது.  
இராஜஸ்தான் மாநிலத்தின் Jaisalmer மாவட்டத்தில் இரண்டு கிராமங்களில் கடந்த 12 நாள்களில் மூன்று பெண்குழந்தைகள் புதிரான முறையில் இறந்துள்ளன.  இம்மாவட்டத்தில் ஆயிரம் சிறுவர்களுக்கு 849 சிறுமிகள் வீதம் உள்ளனர்.


5.    பெண்கள் வாழ்வதற்கு மோசமான இடம் இந்தியா, புதிய அறிக்கை

ஜூன்22,2012. பெண் சிசுக்கொலை, குழந்தைத் திருமணம், அடிமைத்தனம் ஆகிய மூன்றும் இந்தியாவை, பெண்கள் வாழ்வதற்கு மோசமான இடமாக ஆக்குகின்றன என்று பன்னாட்டு வல்லுனர்கள் கூறுகின்றனர்.
பெண்கள் வாழ்வதற்குச் சிறந்த இடமாக கானடாவை அறிவித்துள்ள அவ்வல்லுனர்கள், சவுதிஅரேபியா, இந்தோனேசியா, தென்னாப்ரிக்கா, மெக்சிகோ, துருக்கி ஆகிய நாடுகள்கூட இவ்விவகாரத்தில் இந்தியாவைவிட நன்றாக இருக்கின்றன என்று தெரிவித்துள்ளனர்.
பெண்கள் நடத்தப்படும் விதம் குறித்து 165 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில், இந்தியா 141வது இடத்தில் இருப்பதாக Newsweek இதழ் வெளியிட்ட புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
இந்தியாவில் பெண்களும் சிறுமிகளும் உடைமைப் பொருள்களாக விற்கப்படுவது தொடர்ந்து இடம்பெறுவதாகவும், சிறுமிகள் சுமார் 10 வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்படுவதாகவும், வரதட்சணை தொடர்பாகப் பெண்கள் உயிரோடு எரிக்கப்படுவதாகவும், வீட்டுவேலைகளின்போது இளஞ்சிறுமிகள் பாலியல்ரீதியாகப் பயன்படுத்தப்படுவது தொடர்ந்து காணப்படுவதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது.


6. இந்தோனேசியாவில் ஊழலை ஒழிப்பதற்குத் திருஅவைத் தலைவர்களும் பொதுநிலையினர் இயக்கங்களும் முயற்சி

ஜூன்22,2012. இந்தோனேசியாவில் இடம்பெறும் ஊழலை ஒழிப்பது குறித்த நடவடிக்கை ஒன்றை அந்நாட்டுத் திருஅவைத் தலைவர்களும் பொதுநிலையினர் இயக்கங்களும் தொடங்கியுள்ளன.
இந்தோனேசிய ஆயர் பேரவையும் Bhumiksara நிறுவனமும் இணைந்து நடத்திய மூன்று நாள் கருத்தரங்கில் கலந்து கொண்ட குருக்கள், வல்லுனர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பலர் நாட்டில் ஊழலை ஒழிப்பது குறித்த பரிந்துரைகளை முன்வைத்தனர்.
நேர்மை மற்றும் ஒளிவு மறைவில்லாத தன்மையை அடிப்படையாகக் கொண்ட பொது நிர்வாகம் உட்பட நல்ல பழக்கவழக்கங்கள் தேவை என்பது இக்கருத்தரங்கில் பரிந்துரைக்கப்பட்டது.
ஆசியாவில் ஊழல் மிகக் கடுமையான பிரச்சனைகளில் ஒன்றாக இருந்து வருகின்றது. இந்தோனேசியா, கம்போடியா, சீனா, வியட்நாம், பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளில் இந்தப் பிரச்சனை பொதுவான துறைகளையும், பெரிய நிறுவனங்களையும் பாதிப்பதோடு சாதாரண மக்களிலும் காணப்படுகின்றது என்று ஊடகங்கள் கூறுகின்றன.


7. வட கொரியாவில் கடும் உணவு நெருக்கடி, ஐ.நா.எச்சரிக்கை

ஜூன்22,2012. வட கொரியா கடந்த நூறு ஆண்டுகளில் இவ்வாண்டு கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளவேளை, அந்நாட்டின் உணவுப் பாதுகாப்பு, கடும் நெருக்கடியை எதிர்நோக்கக்கூடும் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்த வறட்சியால் அந்நாட்டின் 90 விழுக்காட்டுச் சாகுபடி நிலங்கள் கடுமையாய்ப் பாதிக்கக்கூடும் என்றும், 30 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கடும் உணவு பற்றாக்குறையை எதிர்நோக்குவார்கள் என்றும் அந்நிறுவனம் கூறியது.
பன்னாட்டு மனிதாபிமானக் குழுக்களும், உதவி செய்யும் நிறுவனங்களும் வட கொரியாவின் உணவு நெருக்கடியைப் போக்குவதற்கு உதவுமாறும் ஐ.நா. நிறுவனம் கேட்டுள்ளது.


8. ஆதி மனிதன் முழு எலும்புக்கூடு இலங்கையில் தோண்டியெடுப்பு

ஜூன்22, 2012. இலங்கையில் சுமார் 37 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதெனக் கருதப்படும் ஆதிமனிதனின் முழுமையான எலும்புக்கூடு ஒன்று ஃபாஹியங்கல குகையில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொல்லியல்துறை கூறியுள்ளது.
இலங்கையின் கலுத்துறை மாவட்டத்திலே ஃபாஹியங்கல என்ற இடத்தில் தொல்லியல் ஆய்வுகள் செய்யப்பட்டுவரும் குகையில் இருந்து பலங்கொட மனிதன் (Balangoda Man) என்று சொல்லப்படும் இலங்கையின் ஆதி மனிதனுடைய முழுமையான எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியில்துறை மேலும் கூறியது.
ஆனால் இந்தக் குகைகளில் ஏற்கனவே நடந்த அகழ்வாராய்ச்சியில் இங்கே கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களின் வயதை வைத்துப் பார்க்கும்போது இந்த எலும்புக்கூடு நிச்சயம் 37 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என அகழாய்வுப் பணிகளின் இயக்குனரான நிமல் பெரேரா தெரிவித்தார்.
நத்தை, மட்டி போன்ற ஓடுடைய உயிரினங்களை இவர்கள் உண்டு வாழ்ந்தார்கள் என்றும், உப்பு பற்றி இவர்கள் அறிந்திருந்தார்கள் என்றும் நம்ப இடமிருப்பதுபோல இங்கே கண்டெடுக்கப்பட்ட விஷயங்கள் அமைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தெற்கு ஆசிய மனிதர்கள் இலங்கையில் சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குடியேறி கலாச்சாரத்தை வளர்த்துக் கொண்டதற்கான சான்றுகள் இங்கு கிடைத்திருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...