1. அருட்பணியாளர்கள் இன்றி திருஅவை இருக்க முடியாது- கர்தினால் பியாச்சென்சா
2. மனிதர் உறுதியான வளர்ச்சியின் மையமாக வைக்கப்பட வேண்டும் – வத்திக்கான்
3. ஜி20 மாநாட்டில் உணவுப் பாதுகாப்பின்மை குறித்து விவாதிக்கப்பட வேண்டும் – CIDSE கூட்டமைப்பு வலியுறுத்தல்
4. ஆயுத வியாபாரத்தை நிறுத்துமாறு ஆசிய ஆயர்கள் உலகத் தலைவர்களுக்கு அழைப்பு
5. துன்பங்களின் அர்த்தம் குறித்து ஈராக் பேராயர் வார்தா
6. சிரியாவை மறக்கவோ கைவிடவோ கூடாது : அருள்தந்தை லொம்பார்தி
7. முதியோர் துன்புறுத்தப்படுவது குறித்த முதல் உலக விழிப்புணர்வு நாள் (ஜூன்15)
8. மனநலம் பாதிக்கப்பட்டவர்க்கு எதிரான உரிமை மீறல்கள் நிறுத்தப்படுவதற்கு ஐ.நா. முயற்சி
9. இலங்கையில் போர் இடம்பெற்ற பகுதிகளில் இராணுவத்தினர் தொடர்ந்து இருப்பது சிறார்களின், மனங்களிலிருந்த போரின் வடுக்கள் ஆறுவதை தடுக்கிறது
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. அருட்பணியாளர்கள் இன்றி திருஅவை இருக்க முடியாது- கர்தினால் பியாச்சென்சா
ஜூன்16,2012.
அருட்பணியாளர்கள் இன்றி திருஅவை இருக்க முடியாது என்று அருட்பணியாளர்களின்
தூய வாழ்வுக்காகச் செபிக்கும் உலக நாளையொட்டிக் கூறினார் குருக்கள்
பேராயத் தலைவர் கர்தினால் மவ்ரோ பியாச்சென்சா.
இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட இவ்வுலக நாளையொட்டி “Avvenire” என்ற இத்தாலிய தினத்தாளுக்குப் பேட்டியளித்த கர்தினால் பியாச்சென்சா, திருஅவைக்கும் உலகுக்கும் புனிதக் குருக்கள் தேவைப்படுகின்றார்கள் என்று கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்டும், அவர் பாப்பிறைப் பணியைத் தொடங்கியதிலிருந்து விடாமல் இவ்வாறு கூறி வருகிறார் என்றும் உரைத்த கர்தினால் பியாச்சென்சா, புனித ஜான் மரிய வியானியை குருக்கள் எப்போதும் தங்களது எடுத்துக்காட்டாய்க் கொண்டு அவரைப் பின்பற்றி நடக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இயேசுவின் திருஇதய விழாவன்று அருட்பணியாளர்களின் தூய வாழ்வுக்காகச் செபிக்கும் உலக நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
2. மனிதர் உறுதியான வளர்ச்சியின் மையமாக வைக்கப்பட வேண்டும் – வத்திக்கான்
ஜூன்16,2012. உலகின் உறுதியான வளர்ச்சிக்கும் ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்துக்கும் மையமாக இருக்க வேண்டியவர்கள் மனிதர்கள் என்று, உறுதியான வளர்ச்சி குறித்த ஐ.நா. மாநாட்டுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருப்பீட அறிக்கை கூறுகிறது.
இம்மாதம்
20 முதல் 22 வரை பிரேசில் நாட்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவிருக்கும்
உறுதியான வளர்ச்சி குறித்த ஐ.நா. மாநாட்டில் தனது நிலையை வலியுறுத்தும்
நோக்கத்தில் திருப்பீடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், உலக மக்கள் சேர்ந்து வாழும் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மனிதருக்கும் இயற்கைக்கும் இடையே ஓர் உடன்பாடு இல்லாத நிலையில் மனிதக் குடும்பம் அழிவையே சந்திக்கும் எனக்கூறும் அவ்வறிக்கை, உறுதியான
வளர்ச்சியில் மனிதர்க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று ரியோ
உச்சி மாநாட்டில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்
என வலியுறுத்துகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்னர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற அனைத்துலக பூமி மாநாட்டின் தொடர்ச்சியாக, தற்போது ரியோ+20 என்ற மாநாடு நடைபெறவிருக்கின்றது.
3. ஜி20 மாநாட்டில் உணவுப் பாதுகாப்பின்மை குறித்து விவாதிக்கப்பட வேண்டும் – CIDSE கூட்டமைப்பு வலியுறுத்தல்
ஜூன்16,2012. வருகிற திங்களன்று மெக்சிகோவில் G20 நாடுகளின் தலைவர்கள் இரண்டு நாள் மாநாட்டை நடத்தவிருக்கும்வேளை, உலகில் தற்போது நிலவி வரும் உணவுப் பாதுகாப்பின்மை குறித்த விவகாரம் இம்மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டுமென்று CIDSE என்ற கத்தோலிக்க வளர்ச்சித்திட்ட நிறுவனங்களின் கூட்டமைப்பு கேட்டுள்ளது.
சமத்துவமின்மையைக் குறைத்து உறுதியான வளர்ச்சியை ஊக்குவித்தல் குறித்து இந்த G20
மாநாட்டில் முக்கிய இடம்பெறுவதன் மூலம் உணவுப் பாதுகாப்பின்மையை குறுகிய
காலத்துக்கும் நீண்ட காலத்துக்கும் குறைக்க முடியும் என்று CIDSE கூட்டமைப்பு கூறியது.
பசிப் பிரச்சனையும், மக்கள் ஓரங்கட்டப்படுதலும், பொருளாதார
ரீதியாக ஒதுக்கப்படுவதும் அகற்றப்படுவதைத் தாங்கள் எதிர்பார்ப்பதாக இந்தக்
கூட்டமைப்பின் உணவு மற்றும் வேளாண்மைக்கான ஆலோசகர் Gisele Henriques கூறினார்.
G20 நாடுகளின் மெக்சிகோ மாநாடு, ஜூன் 18,19 தேதிகளில் நடைபெறவிருக்கின்றது.
4. ஆயுத வியாபாரத்தை நிறுத்துமாறு ஆசிய ஆயர்கள் உலகத் தலைவர்களுக்கு அழைப்பு
ஜூன்16,2012. உலகில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு முக்கிய காரணமாக ஆயுத வியாபாரம் இருக்கின்றது என்று சொல்லி, ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் ஆசிய ஆயர்கள்.
ஐ.நா.வால்
கொண்டுவரப்பட்ட ஆயுத வியாபாரத் தடை ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை
நடத்துவதற்காக வருகிற ஜூலை 2ம் தேதிக்கும் 27ம் தேதிக்கும் இடைப்பட்ட
நாள்களில் நியுயார்க்கில் உலக வல்லரசுகள் கூட்டம் நடத்தவிருப்பதையொட்டி
ஆசிய ஆயர்கள் இவ்வழைப்பை முன்வைத்துள்ளனர்.
FABC என்ற ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் மனிதவள மேம்பாட்டு ஆணையத் தலைவர் பேராயர் Charles Bo வெளியிட்டுள்ள விண்ணப்ப அறிக்கையில், ஆயுத வியாபாரத்தை நிறுத்துவதற்கு ஆசிய ஆயர்கள் முன்வைத்துள்ள குறிப்புக்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
உலக அளவில் இராணுவச் செலவுகளுக்கும் ஆயுத வியாபாரத்துக்கும் ஆண்டுக்கு, ஆயிரம் பில்லியன் டாலர் செலவாகிறது என்று குறிப்பிட்டுள்ள யாங்கூன் பேராயர் போ, நாடுகளின் உள்கட்டமைப்பு, சமூக முன்னேற்றம், நலவாழ்வு, சமூகத்தொடர்புகள் ஆகியவற்றுக்குச் செலவழிக்கப்படும் நிதியைவிட இராணுவத்துக்கென அதிகம் செலவழிக்கப்படுகின்றன என்று குறை கூறினார்.
5. துன்பங்களின் அர்த்தம் குறித்து ஈராக் பேராயர் வார்தா
ஜூன்16,2012. துன்பங்கள் எப்போதும் மனிதத்தன்மையைச் சீர்குலைக்கின்றன என்று ஈராக்கின் Erbil கல்தேய ரீதி பேராயர் Bashar Warda கூறினார்.
அயர்லாந்து நாட்டு டப்ளினில் நடைபெற்று வரும் 50வது அனைத்துலக திருநற்கருணை மாநாட்டில், “துன்பங்கள் மற்றும் குணப்படுத்தலில் ஒன்றிப்பு” என்ற தலைப்பில் உரையாற்றிய பேராயர் Warda, இன்றைய சமூகத்தில் மக்களைப் பாதிக்கும் பல்வேறு வகையான துன்பங்கள் பற்றிப் பேசினார்.
மனிதத்
துன்பங்கள் பற்றிப் பேசும்போதெல்லாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து
அனுபவித்த துன்பங்களே முதலில் நம் கண்முன் வருகின்றன என்றும் உரைத்த
பேராயர், அவர் சிலுவையில் தொங்கிய வேளையிலும் ஒன்றிப்பை உருவாக்கினார் என்று கூறினார்.
இம்மாதம் 10ம் தேதி தொடங்கிய 50வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு, இஞ்ஞாயிறன்று நிறைவடையும்.
6. சிரியாவை மறக்கவோ கைவிடவோ கூடாது : அருள்தந்தை லொம்பார்தி
ஜூன்16,2012.
கடந்த 15 மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து தாக்குதல்கள் இடம்பெற்று வரும்
சிரியாவில் எல்லா வயதுடைய அப்பாவி மக்களும் எல்லா மதத்தினரும் தொடர்ந்து
கொல்லப்பட்டுவரும்வேளை, அந்நாடு
உள்நாட்டுப் போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என மக்கள் எண்ணத்
தொடங்கி விட்டார்கள் என்று இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி
கூறினார்.
“சிரியாவில் ஓர் இருளான இரவு” என்ற தலைப்பில் வத்திக்கான் தொலைக்காட்சியின் வார நிகழ்ச்சியில் உரையாற்றிய அருள்தந்தை லொம்பார்தி, முஸ்லீம் உலகத்தின் பல பிரிவுகளோடும், கிறிஸ்தவ சபைகளோடும் நல்லுறவில் இருந்துவந்த சிரியா, தற்போது வன்முறையிலும் குழப்பத்திலும் சிக்குண்டுள்ளது என்று கவலை தெரிவித்தார்.
திருத்தந்தை, பல்வேறு சமயத் தலைவர்கள், நாடுகளின் தலைவர்கள் போன்றோர் விடுத்த தொடர்ந்த அழைப்புக்குச் சிரியா அரசு சரியாகச் செவிசாய்க்கவில்லை என்றும், சர்வதேச அளவிலான ஆயுதத் தலையீடு ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பது மிகவும் கவலையளிக்கின்றது என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
விசுவாசிகளாகிய நாம் தற்போது சிரியா மீது பரிவு கொண்டு அந்நாட்டுக்காகச் செபிப்போம், துன்புறுவோருக்கு உதவிகள் செய்வோம், நாம் சிரியாவை மறக்கவோ கைவிடவோ கூடாது என்று கேட்டுக் கொண்டார் அருள்தந்தை லொம்பார்தி.
7. முதியோர் துன்புறுத்தப்படுவது குறித்த முதல் உலக விழிப்புணர்வு நாள் (ஜூன்15)
ஜூன்16,2012.
உலகில் வாழும் வயதானோரில் 4 முதல் 6 விழுக்காட்டினர் ஏதாவது ஒருவகையில்
துன்புறுத்தப்படுகின்றனர் என்று ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
முதியோர்
துன்புறுத்தப்படுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கென ஐநா.வால்
இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட முதல் உலக நாளுக்கென செய்தி வெளியிட்ட
பான் கி மூன், உடல், உணர்வு, பணம் என முதியோர் பல வகைகளில் துன்புறுத்தப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
முதியோரின் மனித மாண்பு மற்றும் மனித உரிமைகளைத் தாக்கும் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை என்று கூறும் அவரின் செய்தி, சமுதாயத்தின் ஒருங்கிணைந்த அங்கங்களாக முதியோர் மதிக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.
8. மனநலம் பாதிக்கப்பட்டவர்க்கு எதிரான உரிமை மீறல்கள் நிறுத்தப்படுவதற்கு ஐ.நா. முயற்சி
ஜூன்16,2012. மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளையும் மாண்பையும் காப்பதற்கும், அவர்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் நிறுத்தப்படுவதற்கும் உதவும் புதிய வழிகாட்டிகளை வழங்கியுள்ளது உலக நலவாழ்வு நிறுவனம்.
பல இடங்களில், குறிப்பாக வருவாய் குறைவான நாடுகளில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் மீறப்படுகின்றன, அவர்களுக்கான சமூகநல வசதிகள் மோசமான நிலைகளில் உள்ளன என்று அந்நிறுவனத்தின் மனநலப் பிரிவின் இயக்குனர் Shekar Saxena கூறினார்.
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள Tool Kit என்ற வழிகாட்டி கையேடு, 2006ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்த அனைத்துலக ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
9. இலங்கையில் போர் இடம்பெற்ற பகுதிகளில் இராணுவத்தினர் தொடர்ந்து இருப்பது சிறார்களின், மனங்களிலிருந்த போரின் வடுக்கள் ஆறுவதைத் தடுக்கிறது
ஜூன்16,2012. இலங்கையில் போர் இடம்பெற்ற பகுதிகளில் இராணுவத்தினர் தொடர்ந்து இருப்பது சிறார்களின், மனங்களிலிருந்த போரின் வடுக்கள் ஆறுவதைத் தடுக்கிறது என Save the Children அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி மேனகா கல்யாணரத்தினா தெரிவித்துள்ளார்.
இலங்கைத்தீவில்
போர் இடம்பெற்ற பகுதிகளில் சிறார்களின் நிலவரம் குறித்த நிகழ்ச்சியொன்றில்
ஆஸ்திரேலிய ஊடகமொன்று கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது இத்தகவலை அவர்
தெரிவித்தார்.
இலங்கையில் போர் இடம்பெற்ற பகுதிகளில் இராணுவத்தினர் தொடர்ந்து இருப்பது சிறார்களின், மனங்களிலிருந்த போரின் வடுக்கள் ஆறுவதை தடுக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment