Tuesday 26 June 2012

Catholic News in Tamil - 25/06/12

1. திருத்தந்தை : கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை

2. வட இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு

3. கிராமப்புற வாழ்வை மையப்படுத்திய நான்காம் அனைத்துலக மாநாட்டில் கர்தினால் பீட்டர் டர்க்சன் வழங்கிய உரை

4. இறையழைத்தல்களை உருவாக்குவதில் குடும்பங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது திருப்பீட ஏடு

5. செல்வமும், கடனும் எளியோரை வதைக்கும் கருவிகளாக மாறிவிடுகின்றன - பேராயர் சில்வானோ தொமாசி

6. "நைஜீரிய வரலாற்றில் கிறிஸ்தவர்களுக்கு இந்த ஜூன் மாதம் இரத்தம் சிந்தும் மாதமாக அமையும்" - Boko Haram

7. எகிப்து நாட்டின் புதிய அரசுத் தலைவருக்கு காப்டிக் ரீதி ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் பேராயர் அனுப்பிய செய்தி

8. இலண்டன் ஒலிம்பிக் விழாவில் சென்னை இசைக்குழு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை

ஜூன்,25,2012. கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை, கடவுளுக்கு எல்லாம் இயலக்கூடியதே என்பதை இஞ்ஞாயிறன்று திருஅவை சிறப்பித்த திருமுழுக்கு யோவானின் பிறப்பு நமக்கு நினைவுபடுத்துகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, யோவான், உண்மையிலேயே, அவரது தாயின் வயிற்றிலிருந்தே இயேசுவுக்கு முன்னோடியாக இருக்கிறார் என்று உரைத்தார்.
யோவான் தாயின் வயிற்றில் அற்புதமாக உருவானதே, கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதன் அடையாளமாக இருக்கின்றது என்று கூறிய திருத்தந்தை, நமது அன்னைமரியாவுக்குப் பிறகு புனித யோவானின் பிறப்பே திருவழிபாட்டில் திருவிழாவாகச் சிறப்பிக்கப்படுகின்றது, ஏனெனில் இப்பிறப்பு இறைமகன் மனிதஉரு எடுத்தப் பேருண்மையோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது என்றும் கூறினார்.
கிறிஸ்துவுக்கானப் பாதையையும் புதிய உடன்படிக்கையையும் தயாரித்ததன் மூலம் பழைய உடன்படிக்கையை நிறைவு செய்த இறைவாக்கினர் என்று புனித யோவானை நான்கு நற்செய்தியாளர்களும் அழுத்தம்கொடுத்து கூறியுள்ளனர் என்ற திருத்தந்தை, பெண்களில் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிட பெரியவர் இல்லை என்ற இயேசுவின் வார்த்தைகளையும் குறிப்பிட்டார்.
புனித யோவான், யோர்தான் ஆற்றில் மெசியாவுக்குத் திருமுழுக்கு அளித்து, வன்முறை இறப்பிலும் இயேசுவுக்கு முன்னோடியாய் இருந்து தனது மறைப்பணியை நிறைவு செய்தார் என்ற திருத்தந்தை, வயதான தனது உறவினர் எலிசபெத் யோவானைக் கருத்தாங்கியிருந்த காலத்தில் கன்னிமரியா அவருக்கு உதவினார் என்று சொல்லி இம்மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.


2. வட இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு

ஜூன்,25,2012. வட இத்தாலியில் அண்மையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட Emilia Romagna பகுதி மக்களை இச்செவ்வாயன்று தான் சந்திக்கவிருப்பதாக இஞ்ஞாயிறு மூவேளை உரைக்குப் பின் அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உலகளாவியத் திருஅவை இம்மக்களுக்குத் தெரிவிக்கும் ஒருமைப்பாட்டுச் செயலாக இந்தச் சந்திப்பை தான் நோக்குவதாகவும், செபத்தால் தன்னோடு ஒன்றித்திருக்குமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
இம்மக்களுக்கு Cor Unum பிறரன்பு அவை வழியாக, ஒரு இலட்சம் யூரோக்களை திருத்தந்தை ஏற்கனவே வழங்கியுள்ளார். இத்தாலிய ஆயர் பேரவையும் 2 இலட்சம் யூரோக்களை வழங்கியுள்ளது.
இச்செவ்வாய் காலை 9 மணிக்கு வத்திக்கானிலிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் திருத்தந்தை, San Marino di Carpi யின் விளையாட்டுத் திடலுக்கு முதலில் செல்வார். பின்னர், ஆபத்தான நிலநடுக்கப்பகுதி எனக் குறிக்கப்பட்டுள்ள பகுதி வழியாகப் பேருந்தில் Rovereto di Novi செல்வார். அந்நிலநடுக்கத்தில் அங்குள்ள புனித Caterina di Alessandria ஆலயம் இடிந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த அன்னைமரியா திருவுருவத்தை எடுக்கச்சென்ற பங்குத்தந்தை Ivan Martini இறந்த இடத்தைப் பார்வையிடுவார். அதன்பின்னர் நகர அதிகாரிகள், ஆயர்கள், பங்குக் குருக்கள், பொதுமக்கள் என அனைவரையும் திருத்தந்தை சந்திப்பார்.
இஞ்ஞாயிறன்று உலகெங்கும் திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்காக உண்டியல் எடுக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, தனது பணிக்குத் தாராளமாக உதவும் அனைவருக்கும் நன்றியும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


3. கிராமப்புற வாழ்வை மையப்படுத்திய நான்காம் அனைத்துலக மாநாட்டில் கர்தினால் பீட்டர் டர்க்சன் வழங்கிய உரை

ஜூன்,25,2012. ஐம்பது ஆண்டுகளுக்கு முன், வேளாண்மையைப் பற்றியும், நிலஉடமைப் பற்றியும் திருஅவை சிந்தித்துள்ளது என்று திருப்பீட உயர்  அதிகாரி ஒருவர் கூறினார்.
கிராமப்புற வாழ்வை மையப்படுத்திய நான்காம் அனைத்துலக மாநாடு உரோம் நகரில் இஞ்ஞாயிறன்று ஆரம்பமானது. இந்த மாநாட்டில் இத்திங்களன்று உரையாற்றிய திருப்பீட நீதி, அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், அருளாளர் திருத்தந்தை 23ம் ஜான் எழுதிய Mater et Magistra சுற்றுமடலில் காணப்படும் கருத்துக்களை எடுத்துக் கூறினார்.
இரண்டாம் உலகப் போரிலிருந்து நாடுகள் மீண்டதையும், காலனிய ஆதிக்கத்திலிருந்து பல நாடுகள் விடுதலைப் பெற்றதையும் 1960களில் நாம் கண்டோம் என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் டர்க்சன், அக்காலக்கட்டத்தில் திருத்தந்தையாக இருந்த 23ம் ஜான் வெளியிட்ட Mater et Magistra சுற்றுமடல் வேளாண்மையைக் குறித்தும், நில உடமையைக் குறித்தும் பேசியது காலத்திற்கு ஏற்றதாக அமைந்தது என்றும் எடுத்துரைத்தார்.
"மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்" என்ற திருப்பாடல் 24ன் ஆரம்ப வார்த்தைகளை மேற்கோளாகக் கூறிய கர்தினால் டர்க்சன், இன்றைய உலகில் இந்த வார்த்தைகளுக்கு எதிரானச் சூழல் உருவாகியுள்ளது என்பதைக் கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உட்பட அண்மையத் திருத்தந்தையர்கள் அனைவரும், தற்போது உலகில் நிலவிவரும் ஏழ்மையும், பட்டினியும் ஏற்றுக் கொள்ள முடியாத அவலநிலை என்று கூறி வந்துள்ளனர் என்பதை தன் உரையில் சுட்டிக்காட்டிய திருப்பீட நீதி அமைதி அவையின் தலைவர், அடிப்படைத் தேவைகள் இன்றி தவிக்கும் 200 கோடி மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க உலக அரசுகள் நிரந்தர முடிவுகள் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
திருப்பீட நீதி, அமைதி அவையும், ICRA எனப்படும் அனைத்துலகக் கத்தோலிக்கக் கிராமிய அமைப்பும் இணைந்து நடத்தும் இந்த மாநாடு ஜூன் 27, வருகிற புதனன்று நிறைவடையும்.


4. இறையழைத்தல்களை உருவாக்குவதில் குடும்பங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது திருப்பீட ஏடு

ஜூன்,25,2012. குருத்துவத்துக்கான எந்த ஓர் அழைப்பும் இறைவனின் கொடையாக இருந்தாலும், குடும்பங்கள், பங்குத்தளங்கள், கிறிஸ்தவ சமூகங்கள், குருக்கள் ஆகியோர் கிறிஸ்தவ வாழ்வை இக்காலத்தில் வாழ்வதைப் பொருத்தும் குருத்துவத்தின் வருங்காலம் அமைந்துள்ளது என்று திருப்பீடம் இத்திங்களன்று வெளியிட்ட ஏடு கூறுகிறது.
திருப்பீடக் கத்தோலிக்க கல்விப் பேராயமும், குருத்துவ அழைத்தலை ஊக்குவிக்கும் பாப்பிறைப் பணியகமும் இணைந்து, குருத்துவத் திருப்பணிக்கு அழைத்தல்களை ஊக்குவிப்பதற்கான மேய்ப்புப்பணி வழிகாட்டி என்ற தலைப்பில் வெளியிட்ட 27 பக்க ஏடு இவ்வாறு கூறுகிறது.  
இன்றைய உலகில் இறையழைத்தல்களின் நிலை, இறையழைத்தல் மற்றும் குருத்துவத்தின் தனிப்பண்பு, குருத்துவ வாழ்வுக்கு இறையழைத்தல்களை ஊக்குவித்தல் என மூன்று முக்கிய தலைப்புக்களில் வெளிவந்துள்ள இவ்வேட்டில், மேற்கிலுள்ள பாரம்பரியக் கிறிஸ்தவ நாடுகளில் பரவி வரும் உலகப்போக்கான மனநிலை இளைஞர்கள் குருத்துவ அழைப்பை புறக்கணிக்க வைக்கின்றது என்று கூறியுள்ளது.
பொது வாழ்க்கையிலிருந்து குருக்கள் மெது மெதுவாக ஓரங்கட்டப்படுதலும், பொது வாழ்வில் குருக்கள் தங்களது வாழ்வின் இயல்பை இழந்து வருவதும், பல இடங்களில் கன்னிமை வாழ்வு கேள்விக்கு உட்படுத்தப்படுவதும், உலகப்போக்கு மனநிலை மட்டுமல்லாமல், திருஅவைக்குள்ளே கன்னிமை வாழ்வு குறித்தத் தவறான கருத்துக்கள் இருப்பதும், இப்படி பல காரணங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது இவ்வேடு.
கடவுள்பற்றிய உண்மையை நேரடியாகப் பெறும் கிறிஸ்தவ அனுபவத்தை சிறுவர்களும் இளைஞர்களும் பெறுவதற்கு இறையழைத்தல் குறித்த மேய்ப்புப்பணிகள் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தும் இவ்வேடு, இறையழைத்தல்களை உருவாக்குவதில் குடும்பங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்பதை உணரச்செய்ய வேண்டுமென்றும் கூறுகிறது.
இறையழைத்தல்களை ஊக்குவிப்பது, குறிப்பாக, குருத்துவப் பணிக்கென இறைவன் அழைப்பதை வரவேற்பது திருஅவைக்குத் தொடர்ந்து சவாலாக இருந்து வருகிறது என்றும் அவ்வேட்டின் இறுதியில் கூறப்பட்டுள்ளது.


5. செல்வமும், கடனும் எளியோரை வதைக்கும் கருவிகளாக மாறிவிடுகின்றன - பேராயர் சில்வானோ தொமாசி

ஜூன்,25,2012. நீதி தவறும்போது, மனிதர்கள் ஈட்டும் செல்வமும், அவர்கள் தரும் கடனும் மற்ற மனிதரை, சிறப்பாக, எளியோரை வதைக்கும் கருவிகளாக மாறி விடுகின்றன என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜூன் 18 முதல் ஜூலை 6ம் தேதி முடிய ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா.வின் மனித உரிமை அவையின் 20வது அமர்வில் உரையாற்றிய திருப்பீட நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி இவ்வாறு கூறினார்.
மனித உரிமைகளைக் காக்கும் வண்ணம் அந்நியநாட்டுக் கடன் வழங்கப்படும் வழிமுறைகள் குறித்து நடைபெறும் இந்த அமர்வில் செல்வத்தைப்பற்றியும் கடன் வழங்குவதுபற்றியும் திருஅவையில் காணப்படும் கருத்துக்களைப் பேராயர் தொமாசி முன்வைத்தார்.
மனிதமாண்பை மையப்படுத்திய பொருளாதாரம், அரசியல், மற்றும் சமுதாய அமைப்பையே திருஅவை எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் தொமாசி, மனித மாண்பை மிகவும் சீர்குலைக்கும் வகையில், செல்வம், கடன் ஆகிய வடிவங்களில் பணம் உயர்ந்ததொரு இடத்தைப் பெற்றுவருவது வேதனையான ஒரு போக்கு என்று எடுத்துரைத்தார்.
கடன்பட்டிருக்கும் ஏழை நாடுகளின் கடன்களை நீக்கும் முயற்சிகள் தொடர்வதை ஐ.நா.வுடன் இணைந்து திருஅவையும் ஆர்வமாய் வரவேற்கிறது என்று பேராயர் தன் உரையில் குறிப்பிட்டார்.
ஒவ்வோர் அரசும், செல்வம் மிகுந்த நிறுவனங்களும் பண விடயத்தில் ஒளிவு மறைவற்ற வழிகளைப் பின்பற்றினால், உலகின் பொருளாதாரச் சரிவை ஓரளவாகிலும் நாம் சரி செய்யமுடியும் என்று பேராயர் தொமாசி கேட்டுக்கொண்டார்.


6. "நைஜீரிய வரலாற்றில் கிறிஸ்தவர்களுக்கு இந்த ஜூன் மாதம் இரத்தம் சிந்தும் மாதமாக அமையும்" - Boko Haram

ஜூன்,25,2012. நைஜீரியாவில் வாழும் அப்பாவி பொதுமக்களைக் காப்பாற்றவும், அடிப்படைவாதக் குழுக்களின் வன்முறைகளால் மற்ற குழுக்கள் வன்முறையில் இறங்குவதைத் தடுக்கவும் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நைஜீரியாவில் உள்ள திருஅவையும் ஏனைய கிறிஸ்தவ சபைகளும் விண்ணப்பித்துள்ளன.
"நைஜீரிய வரலாற்றில் கிறிஸ்தவர்களுக்கு இந்த ஜூன் மாதம் இரத்தம் சிந்தும் மாதமாக அமையும்" என்று கடந்த சில நாட்களாய் நைஜீரியாவில் உள்ள Boko Haram என்ற அடிப்படைவாதக் குழுவினர் விடுத்துவரும் எச்சரிக்கையினைத் தொடர்ந்து கிறிஸ்தவ அமைப்புக்கள் பலவும் இணைந்து அரசிடம் விண்ணப்பித்துள்ளன.
நைஜீரியாவில் கடந்த சில வாரங்களாய் நிகழ்ந்து வரும் வன்முறைகளாலும், எதிர் வன்முறைகளாலும் உயிர் இழந்துள்ள இஸ்லாமியக் குடும்பங்களிலிருந்து மகனையோ, மகளையோ தற்கொலைப் படையினராய் தாங்கள் உருவாக்கிவருகிறோம் என்று Boko Haram குழுவினர் கூறி வருகின்றனர்.
இந்த வன்முறை கும்பலுடன், பன்னாட்டு வன்முறை கும்பலான அல் கெய்தாவுக்குத் தொடர்பு இருப்பதாலேயே Boko Haram இதுபோன்ற எச்சரிக்கைகளைத் துணிவுடன் வெளியிட்டு வருகின்றனர் என்று நைஜீரியாவில் உள்ள ஓர் அரசு சாரா அமைப்பு Fides செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளது.


7. எகிப்து நாட்டின் புதிய அரசுத் தலைவருக்கு காப்டிக் ரீதி ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் பேராயர் அனுப்பிய செய்தி

ஜூன்,25,2012. கடந்த 16 மாதங்களாய் எகிப்து நாடு கடந்துவந்த பிரச்சனைகள் நிறைந்த பாதையில் ஒரு முக்கிய திருப்பமாக, அந்நாட்டின் அரசுத் தலைவரின் நியமனம் அமைந்துள்ளது என்று காப்டிக் ரீதி ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் பேராயர் Angaelos கூறியுள்ளார்.
Muslim Brotherhood  கட்சியின் சார்பில் போட்டியிட்ட Mohammed Mursi என்பவர் அரசுத் தலைவர் போட்டியில் வெற்றிபெற்றுள்ளார் என்று இஞ்ஞாயிறன்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பேராயர் Angaelosன் இவ்வறிக்கை இலண்டனில் இருந்து வெளியானது.
புதிய அரசுத்தலைவர், மக்களாட்சியில் நாட்டைத் தொடர்ந்து வழிநடத்தவும், பிளவுபட்டிருக்கும் மக்களை ஒன்று சேர்க்கவும் இறைவன் அவருக்குத் தேவையான ஞானத்தை வழங்க வேண்டும் என்று பேராயர் தன் செய்தியில் கூறியுள்ளார்.
தங்கள் அயலவர் எந்த மதத்தையும், அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் என்பதில் எகிப்து மக்கள் அதிக கவனம் செலுத்தாமல், ஒருங்கிணைந்த நாட்டை உருவாக்க ஒவ்வொருவரும் என்ன செய்யமுடியும் என்பதில் கவனம் செலுத்துவதே தற்போதையத் தேவை என்று காப்டிக் ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் தலைவர் பேராயர் Angaelos தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.


8. இலண்டன் ஒலிம்பிக் விழாவில் சென்னை இசைக்குழு

ஜூன்,25,2012. இலண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்க, சென்னையைச் சேர்ந்த ஸ்டக்காட்டோ இசைக் குழுவுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
ஆசியாவிலிருந்து பல்வேறு குழுக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் போட்டியிட்டாலும், இந்தியாவிலிருந்து தங்கள் குழுவுக்கு மட்டும் வாய்ப்புக் கிடைத்திருப்பதாகவும், சீனாவிலிருந்து ஒரு குழு தேர்வாகியிருப்பாதகவும், அந்தக் குழுவின் மேலாளர் அஜய் ஞானசேகரன் பிபிசி ஊடகத்திடம் தெரிவித்தார்.
இந்தியக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் இசையின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் தங்களது இசையின் மாதிரியை ஒலிம்பிக் கலைநிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாளரான பிரபல இயக்குநர் Danny Boyleக்குத் தாங்கள் அனுப்பியதாகவும் அதுவே தங்களுக்கு வெற்றியைத் தேடித்தந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜூலை 25ம் தேதி தங்கள் குழு இலண்டன் செல்ல இருப்பதாக அஜய் தெரிவித்தார். ஜூலை 30ம் தேதியும், ஆகஸ்ட் 2ம் தேதியும் ஒலிம்பிக் கலை நிகழ்ச்சிகளில் தங்கள் குழு நிகழ்ச்சியை நடத்தவிருப்பதாகவும் அஜய் தெரிவித்தார்.
ஸ்டக்காட்டோ இசைக் குழுவில் 12 பேர் இடம் பெற்றிருக்கிறார்கள்.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...