Saturday, 16 June 2012

Catholic News in Tamil - 11/06/12

------------------------------------------------------------------------------------------------------

1. திருப்பீட அலுவல்களில் ஈடுபடுவதற்கென பயிற்சி பெற்றுவரும் அருள்பணியாளர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு

2. விமான நிலையங்களில் ஆன்மீகப் பணியாற்றும் குருக்கள் பயணிகளின் இன்ப, துன்பங்களில் பங்கேற்க வேண்டும் - திருத்தந்தை

3. புதிய வடிவங்களில் நற்செய்தியைப் பரப்பும் பணிகளுக்கு நாம் தொடர்ந்து அழைக்கப்படுகிறோம் - கர்தினால் Antonio Maria Vegliò

4. திருநற்கருணை பவனிகளுக்குத் திருத்தந்தை பாராட்டு

5. 50வது அகில உலக திருநற்கருணை மாநாட்டிற்குத் திருத்தந்தையின் சார்பில் சென்றுள்ள கர்தினால் Marc Ouellet ஆற்றிய மறையுரை

6. சிரியாவில் வாழும் கிறிஸ்துவர்கள் செபத்திலும், உன்னாநோன்பிலும் ஈடுபடுமாறு கிரேக்கக் கத்தோலிக்கப் பேராயர் அழைப்பு

7. நைஜீரியாவில் இரண்டு ஆலயங்கள் தாக்கப்பட்டன, 8 பேர் இறந்துள்ளனர். 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

8. கூடங்குளம் பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய, இலங்கை - இந்திய அதிகாரிகள் ஜூலையில் சந்திப்பு

------------------------------------------------------------------------------------------------------
1. திருப்பீட அலுவல்களில் ஈடுபடுவதற்கென பயிற்சி பெற்றுவரும் அருள்பணியாளர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு

ஜூன்,11,2012. இறைவனிடமிருந்து மக்கள் பிரிந்தாலும், மக்களுடன் கொண்டுள்ள உறவில் இறைவன் எப்போதும் உறுதியாய் நிலைத்துள்ளார் என்பதை விவிலியத்தில் காண்கிறோம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
திருப்பீட அலுவல்களில் ஈடுபடுவதற்கென பயிற்சி பெற்று வரும் அருள் பணியாளர்களைப் பயிற்றுவிககும் நிறுவனத்தின் மாணவ குருக்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
திருஅவைக்கும், சிறப்பாக, புனித பேதுருவின் வழித்தோன்றலான திருத்தந்தைக்கும் மிகவும் பிரமாணிக்கமாய் இருக்க திருப்பீடப் பயிற்சி நிறுவனம் காட்டிவரும் அக்கறையைப் பாராட்டியத் திருத்தந்தை, இந்நிறுவனத்தில் பயிற்சி பெறுவதன் முக்கிய நோக்கங்களையும் எடுத்துரைத்தார்.
ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பயிற்சியை முடித்து, திருப்பீடத்தின் பல்வேறு பணிகளுக்கென உலகெங்கும் அனுப்பப்படும் அருள் பணியாளர்களைத் திருத்தந்தை சந்திப்பது வழக்கம். இவ்வாண்டு இப்பயிற்சி முடிந்து பணிகளுக்கு செல்லவிருக்கும் 40 அருள்பணியாளர்களைச் சந்தித்தத் திருத்தந்தை, அவர்களுக்குத் தன் சிறப்பு ஆசீரை வழங்கி, வழியனுப்பி வைத்தார்.
உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்”; “நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும் என்று மத்தேயு நற்செய்தியில் கூறப்பட்டுள்ள வரிகளைக் கூறி, பயிற்சி நிறுவனத்தின் உறுப்பினர்களுக்குச் சிறப்பாக ஆசீர் வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


2. விமான நிலையங்களில் ஆன்மீகப் பணியாற்றும் குருக்கள் பயணிகளின் இன்ப, துன்பங்களில் பங்கேற்க வேண்டும் - திருத்தந்தை

ஜூன்,11,2012. உலகில் உள்ள விமானநிலையங்கள் உலக மயமாகிவரும் சமுதாயத்தின் ஓர் அடையாளமாக விளங்குகின்றன என்று திருத்தந்தை 16 ம் பெனடிக்ட் கூறினார்.
புலம் பெயர்ந்தோர், மற்றும் பயணிகளின் மேய்ப்புப்பணிக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவை நடத்தும் 15வது அகில உலக கத்தோலிக்கக் கருத்தரங்கில் கலந்து கொள்ள உலகின் பல நாடுகளிலிருந்தும் உறுப்பினர்கள் உரோம் நகர் வந்துள்ளனர்.
ஜூன் 11ம் தேதி இத்திங்கள் முதல் வியாழன் வரை நடைபெறும் 15வது உலகக் கத்தோலிக்க விமானப் பயணிகளின் ஆன்மீகப் பணியாளர்கள் கருத்தரங்கிற்கு வந்திருக்கும் உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் ஆன்மீகப் பணிகளின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.
அண்மையக் காலங்களில் விமான நிலையங்கள் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகி வருவதைக் குறித்தும் பேசியத் திருத்தந்தை, இந்த ஆபத்துக்களால் மக்களுக்கு மனித சமுதாயத்தின் மீது உள்ள நம்பிக்கை குறைந்துவருவதையும் எடுத்துரைத்தார்.
Loretoவின் மரியன்னையும், கபிரியேல் தூதரும் விமானப் பயணிகளுக்குப் பாதுகாவலர்கள் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, மனிதகுலத்தின் மகிழ்விலும், துயரத்திலும் மரியன்னை பங்கு கொள்வதுபோல், விமான நிலையங்களில் ஆன்மீகப் பணியாற்றும் குருக்களும் பயணிகளின் இன்ப, துன்பங்களில் பங்கேற்க வேண்டும் என்பதைக் கூறினார்.


3. புதிய வடிவங்களில் நற்செய்தியைப் பரப்பும் பணிகளுக்கு நாம் தொடர்ந்து அழைக்கப்படுகிறோம் - கர்தினால் Antonio Maria Vegliò

ஜூன்,11,2012. விசுவாச ஆண்டைத் துவக்குவதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், கிறிஸ்துவோடு நாம் மேற்கொள்ளும் விசுவாசப் பயணத்தில் ஆற்றவேண்டிய கடமைகளைச் சிந்திக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
உரோம் நகரில் இத்திங்களன்று துவங்கிய 15வது உலகக் கத்தோலிக்க விமானப் பயணிகளின் ஆன்மீகப் பணியாளர்கள் கருத்தரங்கில் துவக்க உரையாற்றிய புலம் பெயர்ந்தோர், மற்றும் பயணிகளின் மேய்ப்புப்பணிக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவையின்  தலைவர் கர்தினால் Antonio Maria Vegliò இவ்வாறு கூறினார்.
உலகின் கடையெல்லை வரை நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்பட்டிருக்கும் திருஅவையின் கண்கூடான அடையாளங்களாக விளங்குபவர்கள் விமானப் பயணிகளின் ஆன்மீகப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் என்று கர்தினால் Vegliò சுட்டிக் காட்டினார்.
உலகின் பல விமான நிலையங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சிற்றாலயங்களும், அங்கு திருநற்கருணை வடிவில் பிரசன்னாகியிருக்கும் இறைமகன் இயேசுவும் விமானப் பயணிகளுக்கு வழங்கிவரும் ஆறுதலையும், நம்பிக்கையையும் சுட்டிக்காட்டிய கர்தினால் Vegliò, புதிய வடிவங்களில் நற்செய்தியைப் பரப்பும் பணிகளுக்கு நாம் தொடர்ந்து அழைக்கப்படுகிறோம் என்பதையும் எடுத்துரைத்தார்.


4. திருநற்கருணை பவனிகளுக்குத் திருத்தந்தை பாராட்டு

ஜூன்11,2012. தெருக்கள் மற்றும் வளாகங்கள் வழியாகப் பாரம்பரியமாகத் தொடர்ந்து இடம்பெற்றுவரும் வெகு ஆடம்பரத் திருநற்கருணை பவனிகள் குறித்த தனது பாராட்டைத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஞ்ஞாயிறன்று பல நாடுகளில் சிறப்பிக்கப்பட்ட இயேசுவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழா, திருநற்கருணை மீதான பொது வழிபாட்டின் மாபெரும் செயலாக அமைந்துள்ளது என்றுரைத்த திருத்தந்தை, கொண்டாட்டங்களின் நேரங்களையும் கடந்து நம் ஆண்டவர் இந்த திருவருட்சாதனத்தில் என்றென்றைக்கும் பிரசன்னமாய் இருக்கிறார் என்று கூறினார்.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, திருநற்கருணைத் திருப்பவனி சமயப் பழக்கம் குறித்துப் பேசினார்.
அண்மையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வட இத்தாலியின் எமிலியா ரொமாஞ்ஞா பகுதியில் ஆலயங்கள் சேதமடைந்துள்ள போதிலும், சில இடங்களில் கிறிஸ்துவின் திருஉடல் வைக்கப்பட்டுள்ள திருநற்கருணை பேழைகள் இடிபாடுகளுக்கு இடையில் இருந்தன எனவும், திறந்த வெளிகளில் அல்லது கூடாரங்களில் இஞ்ஞாயிறு திருப்பலிகளில் கலந்து கொண்ட இம்மக்களின் சாட்சிய வாழ்வுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை.
ஒருவர் மற்றவரது வாழ்வையும் சொத்துக்களையும், சுமைகளையும் பகிர்ந்து கொள்ளவும், ஒருவர் ஒருவரை வரவேற்கவும் இயலக்கூடிய சக்தி திருநற்கருணையிலிருந்து பிறந்து அதில் புதுப்பிக்கப்படுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை.
மேலும், இஞ்ஞாயிறன்று உலக இரத்ததானம் தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டிப் பேசிய திருத்தந்தை, இரத்த தானம் வழங்குபவர்களைப் பாராட்டிப் பேசினார். இவர்களின் இந்தத் தானமானது, பல நோயாளிகளுக்கு இன்றியமையாதத் தேவையாக இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

  
5. 50வது அகில உலக திருநற்கருணை மாநாட்டிற்குத் திருத்தந்தையின் சார்பில் சென்றுள்ள கர்தினால் Marc Ouellet ஆற்றிய மறையுரை

ஜூன்,11,2012. அயர்லாந்து பல நூற்றாண்டுகளாகக் கத்தோலிக்க விசுவாசத்தில் ஊறிய ஒரு நாடு என்றும், இயற்கைவளங்கள் பலவும் நிறைந்த இந்நாடு, உயர்வான கலாச்சாரப் பரம்பரைக்கும், விருந்தோம்பலுக்கும் புகழ்பெற்ற ஒரு நாடு என்றும் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இஞ்ஞாயிறன்று அயர்லாந்தின் டப்ளின் நகரில் துவங்கிய 50வது அகில உலக திருநற்கருணை மாநாட்டிற்குத் திருத்தந்தையின் சார்பில் சென்றுள்ள ஆயர்கள் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Marc Ouellet,  துவக்கத் திருப்பலியில் ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.
கத்தோலிக்க விசுவாசத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள அயர்லாந்து, உலகெங்கும் இந்த விசுவாசத்தை விதைக்க தன் மக்களை நற்செய்திப் பணியாளர்களாக அனுப்பியுள்ளது என்று கர்தினால் Ouellet தன் மறையுரையில் சுட்டிக் காட்டினார்.        
ஒவ்வொரு ஞாயிறன்றும் கத்தோலிக்க விசுவாசிகள் கூடி வந்துத் திருப்பலியில் கலந்து கொள்வது, ஒரு சாதாரண சமுதாயக் கூட்டமாக உலகத்தின் கண்களுக்குத் தெரிந்தாலும், இந்த விசுவாச செயல்பாட்டில் அடங்கியுள்ள மேலான உண்மைகளை நாம் அறிவோம் என்று கர்தினால் Ouellet எடுத்துரைத்தார்.
அயர்லாந்தின் நான்கு உயர்மறைமாவட்டங்களிலிருந்தும் உலகின் பல நாடுகளிலிருந்தும் வந்திருக்கும் 12,500க்கும் அதிகமான கத்தோலிக்க விசுவாசிகள் கலந்து கொண்ட திருப்பலியில் Toronto பேராயர் கர்தினால் Thomas Collins உட்பட, பல பேராயர்கள் கூட்டுத் திருப்பலியாற்றினர்.


6. சிரியாவில் வாழும் கிறிஸ்துவர்கள் செபத்திலும், உன்னாநோன்பிலும் ஈடுபடுமாறு கிரேக்கக் கத்தோலிக்கப் பேராயர் அழைப்பு

ஜூன்,11,2012. சிரியாவில் வாழும் மக்களுக்கு இறைவன் நீடித்த அமைதியை வழங்கவேண்டி அந்நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்துவர்களும் செபத்திலும், உன்னாநோன்பிலும் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளார் தமாஸ்கு நகர் Melkite கிரேக்கக் கத்தோலிக்கப் பேராயர் மூன்றாம் Gregorios Laham.
பெந்தகோஸ்து எனப்படும் தூய ஆவியாரின் திருவிழாவுக்குப் பின், ஜூன் மாதம் கீழைரீதி கத்தோலிக்கத் திருஅவை, உண்ணா நோன்பு மேற்கொள்வது வழக்கம் என்று கூறிய பேராயர் Laham, ஜூன் மாதம் 29ம் தேதி கொண்டாடப்படும் புனித பேதுருவின் பெருவிழா வரை கத்தோலிக்க மக்கள் உண்ணாநோன்பை மேற்கொண்டு, சிரியாவில் அமைதி நிலவ செபிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிரியாவில் தொடர்ந்துவரும் வன்முறைகளால் மக்களுக்கு ஏற்படும் கண்ணீரைப் போக்க கிறிஸ்தவர்கள் மேற்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த வழி செபமும் உண்ணா நோன்பும் என்று பேராயர் Laham எடுத்துரைத்தார்.
அண்மையில் 100க்கும் அதிகமான கிறிஸ்துவர்கள் கொலையுண்ட Homs நகருக்கு அடுத்த Qusayr நகரில் வாழ்ந்து வரும் கிறிஸ்தவர்கள் விரைவில் அந்நகரைவிட்டு வெளியேற வேண்டுமென்று தீவிரவாதக் குழுவினர் விடுத்துவரும் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, அந்நகரைவிட்டு, கிறிஸ்தவர்கள் வேகமாக வெளியேறி வருகின்றனர் என்று கத்தோலிக்கச் செய்திகள் கூறுகின்றன.


7. நைஜீரியாவில் இரண்டு ஆலயங்கள் தாக்கப்பட்டன, 8 பேர் இறந்துள்ளனர். 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜூன்11,2012. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள ஜோஸ் நகரின் ஆலயத்துக்கு வெளியே இஞ்ஞாயிறன்று வாகனத் தற்கொலை குண்டுவைப்பு தாக்குதல் நடத்தப்பட்ட அதேவேளை, அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் மற்றுமோர் ஆலயத்தில் துப்பாக்கி ஏந்திய மனிதர் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர்.
அல் கெய்தா குழுவோடு தொடர்புடையதாகச் சொல்லப்படும் Boko Haram என்ற பயங்கரவாதக் குழு இத்தாக்குதல்களை நடத்தியிருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்நாட்டின் மத்திய மர்றும் வடக்குப் பகுதிகளில் வாழும் கிறிஸ்தவ சமூகங்களுக்கு இடையே வன்முறையை விதைத்து வருகிறது இக்குழு. 
இத்தாக்குதல்கள் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த ஜோஸ் பேராயர் Paul Kaigama, Boko Haram மற்றும் இது போன்ற அமைப்புகள் உரையாடலில் ஆர்வம் காட்டுவதில்லை என்று குறை கூறினார். அக்குழுக்கள் கொலை செய்கின்றன, அழிக்கின்றன, எரிக்கின்றன, இவை மிகவும் தொந்தரவாக இருந்து அதிகமான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன என்றும் பேராயர் தெரிவித்தார். 
இஞ்ஞாயிறன்று இரண்டு கிறிஸ்தவ ஆலயங்கள் குண்டு வைத்து தாக்கப்பட்டதில் 8 பேர் இறந்துள்ளனர் மற்றும் 50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஒரு வாரத்துக்கு முன்னர் Bauchi நகரில் இடம்பெற்ற தாக்குதல்களில் 12 பேர் இறந்தனர்.


8. கூடங்குளம் பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய, இலங்கை - இந்திய அதிகாரிகள் ஜூலையில் சந்திப்பு

ஜூன்,11,2012. கூடங்குளம் அணு விபத்து பேரிடர் மேலாண்மை தொடர்பாக இந்திய அணுசக்தி அதிகாரிகளை  இலங்கை அதிகாரிகள்  ஜூலை 9 முதல் 15-ம் தேதிக்குள் புதுடில்லியில் சந்தித்துப் பேச இருக்கின்றனர்.
கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல், கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அது இலங்கையையும் பாதிக்கும் என்று அங்குள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, அணு விபத்து பேரிடர் மேலாண்மை தொடர்பாக இந்தியாவுடன் உடன்பாடு செய்துகொள்ள இலங்கை விரும்பியது. இதன் ஒருபகுதியாகவே இந்திய அதிகாரிகளுடன் இலங்கை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
புதுடில்லியில் நடக்கவிருக்கும் சந்திப்பின்போது இரு நாட்டு அதிகாரிகளும் இருதரப்பு உடன்பாடு தொடர்பாக ஆலோசிப்பார்கள் என்று இஞ்ஞாயிறன்று பேசிய இலங்கையின் அணுசக்தி ஆணைய தலைவர் இரஞ்சித் விஜயவர்த்தன தெரிவித்தார்.
கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளியாகும் கதிரியக்கக் கழிவுகள் வங்கக்கடலை மாசுபடுத்தும். அதனால் இலங்கையின் கடலோரப் பகுதிகளில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று இலங்கை வார இதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...