Saturday, 16 June 2012

Catholic News in Tamil - 13/06/12

1. உலகில் தேவையான அளவு உணவு இருந்தாலும் அது சரிவரப் பகிரப்படுவதில்லை - திருத்தந்தை

2. மனித மாண்பை நிலைநிறுத்தும் முன்னேற்றங்களைச் சிந்திக்க வேண்டும் - பேராயர் தொமினிக் மம்பர்த்தி அழைப்பு

3. குழந்தைகளும், சிறுவர்களும் பாதுகாப்பானச் சூழலில் வளர்வதற்குத் திருஅவை தீவிரமான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது

4. திருப்பீடக் கலாச்சார அவை நடத்தும் கருத்தரங்கு ஜூன் 29ம் தேதி இத்தாலியத் தூதரகத்தில் நடைபெறும்

5. அமெரிக்கத் திருஅவை சந்தித்து வரும் பிரச்சனைகள், விசுவாசத்தைக் காக்க விடுக்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு - திருப்பீடத் தூதர்

6. அமெரிக்கத் திருஅவை எடுத்துக் கொண்ட தீவிர முயற்சிகளின் விளைவாக, குழந்தைகள் பாதுகாப்பாக வாழும் சூழல் உருவாகியுள்ளது

7. வருகிற சனிக்கிழமையன்று, உலக அமைதிக்கான நொபெல் பரிசை 20 ஆண்டுகளுக்கு முன் வென்ற Aung San Suu Kyi யின் ஏற்புரை

8. பெண்களுக்கான நிலைமையில் மிக மோசமான இடத்தில் இந்தியா

9. ஐரோப்பிய நிதி நெருக்கடி எதிரொலி: நொபெல் பரிசுத்தொகையும் குறைப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. உலகில் தேவையான அளவு உணவு இருந்தாலும் அது சரிவரப் பகிரப்படுவதில்லை - திருத்தந்தை

ஜூன்,14,2012. உலகில் தேவையான அளவு உணவு இருந்தாலும், அரசியல், பொருளாதார, சமுதாயத் தடைகள் பெருகியுள்ளதால், இந்த உணவு சரிவரப் பகிரப்படுவதில்லை என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
FAO எனப்படும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் இயக்குனர் José Graziano da Silva, அவர்களை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, உலகில் நிலவும் உணவு பற்றாக்குறை பற்றி அவருடன் பேசினார்.
உலகின் பல பகுதிகளில், சிறப்பாக ஆப்ரிக்கக் கண்டத்தில் வறுமையையும், பசியையும் போக்க திருஅவை எடுத்துவரும் முயற்சிகளுக்காக FAO இயக்குனர் தன் பாராட்டுக்களைத் திருத்தந்தைக்குத் தெரிவித்தார்.
உணவுப் பொருட்களின் பரிமாற்றம் உலகெங்கும் தகுந்த வகையில் நடைபெற வேண்டும் என்று இச்சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.
திருதந்தையைச் சந்தித்தபின், FAO இயக்குனர் da Silva, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்தோனே, மற்றும் திருப்பீட நாடுகளுடனான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார்.

2. மனித மாண்பை நிலைநிறுத்தும் முன்னேற்றங்களைச் சிந்திக்க வேண்டும் - பேராயர் தொமினிக் மம்பர்த்தி அழைப்பு

ஜூன்,14,2012. தனி மனிதர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மாண்பு ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டால், நாம் இன்று சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பன்னாட்டுத் தூதர்களை இத்திங்களன்று உரோம் நகரில் சந்தித்த திருப்பீட நாடுகளுடனான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி, ஐரோப்பிய நாடுகள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து பேசினார்.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளும் பொருளாதாரம், வர்த்தகம் ஆகிய அம்சங்களில் ஒருங்கிணைப்பை உருவாக்கி வந்துள்ளது என்பதைக் கூறிய பேராயர் மம்பர்த்தி, அரசியல் கருத்தியலிலும் நாடுகள் ஒன்றிணைந்து வரும் முயற்சிகள் தேவை என்பதை எடுத்துரைத்தார்.
தொழில் நுட்பத்தில் மிக அதிகமான அளவு முன்னேற்றம் கண்டுள்ள ஐரோப்பிய நாடுகள், மனித வளம் குறித்தும் சிந்திக்க வேண்டும் என்றும், நன்னெறி மதிப்பீடுகளையும், மனித மாண்பையும் நிலைநிறுத்தும் முன்னேற்றங்களைச் சிந்திக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார், பேராயர் தொமினிக் மம்பர்த்தி.


3. குழந்தைகளும், சிறுவர்களும் பாதுகாப்பானச் சூழலில் வளர்வதற்குத் திருஅவை தீவிரமான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது

ஜூன்,14,2012. குழந்தைகளுக்கு உரிய மதிப்பை வழங்கும் ஒரு புதிய கலாச்சாரத்தை கத்தோலிக்கத் திருஅவை வளர்ப்பதில் மிகவும் முனைப்பாய் உள்ளது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அயர்லாந்தில் நடைபெறும் 50வது அனைத்துலக திருநற்கருணை மாநாட்டிற்குத் திருத்தந்தையின் சார்பில் சென்றுள்ள திருப்பீட ஆயர்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Ouellet இத்திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்கள் அயர்லாந்தில் உள்ள Lough Derg என்ற தீவுக்கு, அயர்லாந்தின் திருப்பீடத் தூதர் பேராயர் Charles Brown அவர்களுடன் திருப்பயணம் சென்றிருந்தார்.
அயர்லாந்தின் பாதுகாவலரான புனித பாட்ரிக் அவர்களின் மிகப் பழமையானத் திருத்தலம் உள்ள இந்தத் தீவுக்குத் திருத்தந்தையின் விருப்பப்படி சென்றிருந்த கர்தினால் Ouellet, அங்கு செபத்திலும், உண்ணா நோன்பிலும் ஒரு நாள் கழித்தார்.
அயர்லாந்தின் குருக்கள் சிலரால் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளானவர்கள் ஒரு சிலரை அத்திருத்தலத்தில் சந்தித்த கர்தினால் Ouellet, அவர்களிடம் மீண்டும் ஒருமுறை மன்னிப்பை வேண்டினார்.
தான் இப்பழமையான திருத்தலத்திற்குத் திருப்பயணம் மேற்கொண்டு, பாலியல் வன்முறைகளுக்குள்ளானவர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்பது திருத்தந்தை தனக்களித்த சிறப்பான பணி என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Ouellet, குழந்தைகளும், சிறுவர்களும் பாதுகாப்பானச் சூழலில் வளர்வதற்குத் திருஅவை தீவிரமான முயற்சிகள் மேற்கொண்டு வருவதைச் சுட்டிக்காட்டினார்.


4. திருப்பீடக் கலாச்சார அவை நடத்தும் கருத்தரங்கு ஜூன் 29ம் தேதி இத்தாலியத் தூதரகத்தில் நடைபெறும்

ஜூன்,14,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வழங்கிய தூண்டுதலால், புறவினத்தார் முற்றம் என்ற பெயரில் திருப்பீடக் கலாச்சார அவை நடத்திவரும் கருத்தரங்கு இம்மாதம் 29ம் தேதி உரோம் நகரில் உள்ள இத்தாலியத் தூதரகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத நம்பிக்கை உள்ளவர்களும், மத நம்பிக்கை அற்றவரும் இணைந்து மேற்கொள்ளும் உரையாடல் முயற்சிகளின் அமைப்பாகச் செயல்படும் 'புறவினத்தார் முற்றம்' கருத்தரங்கில் திருப்பீட கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi மற்றும், திருப்பீடப் பல்சமய உரையாடல் அவையின் தலைவர் கர்தினால் Jean Louis Tauran ஆகியோர் துவக்க அமர்வில் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'அரசியல் உறவும், உண்மையும்' என்ற மையக்கருத்துடன் நடைபெறவிருக்கும் இக்கருத்தரங்கில், வத்திக்கானில் பணியாற்றும் பல்வேறு நாட்டுத் தூதர்களும் கலந்துகொள்வர் என்று கூறப்பட்டுள்ளது.


5. அமெரிக்கத் திருஅவை சந்தித்து வரும் பிரச்சனைகள், விசுவாசத்தைக் காக்க விடுக்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு - திருப்பீடத் தூதர்

ஜூன்,14,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள தலத் திருஅவை தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகள், விசுவாசத்தைக் காக்கும் முயற்சிகளில் அனைவரும் இணைந்து வருவதற்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு என்று அமெரிக்க ஐக்கிய நாட்டில் பணிபுரியும் திருப்பீடத் தூதர் பேராயர் Carlo Maria Viganò, கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் ஆண்டுக் கூட்டம் இச்செவ்வாயன்று Atlanta நகரில் துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் துவக்க உரையாற்றிய பேராயர் Viganò, தற்போதைய பிரச்சனைகளைச் சவால்களாக நோக்கும்படி ஆயர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் கத்தோலிக்கத் திருஅவை வரலாற்றில் தற்போதைய காலக்கட்டம் மிகவும் சவால் நிறைந்த ஒரு காலம் என்று கூறிய பேராயர் Viganò, மனசாட்சிக்கும், மத உரிமைகளுக்கும் எதிராகத் தற்போது எழுந்துள்ள பிரச்சனைகளை அமெரிக்கத் திருஅவை சரியான வழியில் சந்திக்கும் என்ற தன் நம்பிக்கையையும் வெளியிட்டார்.
பிரிவுகளை உருவாக்குவது எந்த ஒரு பிரச்சனையிலும் இவ்வுலகம் மேற்கொள்ளும் வழி என்பதை எடுத்துரைத்த பேராயர் Viganò, ஒன்றிணைந்து பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது அமெரிக்கத் தலத் திருஅவைக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய சவால் என்பதை வலியுறுத்தினார்.


6. அமெரிக்கத் திருஅவை எடுத்துக் கொண்ட தீவிர முயற்சிகளின் விளைவாக, குழந்தைகள் பாதுகாப்பாக வாழும் சூழல் உருவாகியுள்ளது

ஜூன்,14,2012. கடந்த பத்து ஆண்டுகளில் அமெரிக்கத் தலத் திருஅவை எடுத்துக் கொண்ட பல தீவிர முயற்சிகளின் விளைவாக, தற்போது அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பாக வாழும் சூழல் உருவாகியுள்ளது என்று ஓர் அறிக்கை கூறுகிறது.
குருக்கள் சிலரால் குழந்தைகள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, இக்கொடுஞ்செயலைக் களைய அமெரிக்கத் திருஅவை 2002ம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு வரை மேற்கொண்ட முயற்சிகளைப் பொது நிலையினர் அடங்கிய குழு ஒன்று ஆய்வு செய்துவந்தது.
இந்த ஆய்வறிக்கை இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும், குற்றம் செய்தோருக்குத் தகுந்த தண்டனைகள் வழங்கவும் 2002ம் ஆண்டு 77 மறைமாவட்டங்களில் சட்டங்கள் இருந்தன என்று கூறும் இவ்வறிக்கை, தற்போது, இந்த விதிமுறைகள் அமெரிக்காவின் 195 மறைமாவட்டங்களில் நடைமுறையில் உள்ளன என்று கூறுகிறது.
குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழல் உருவாகியிருந்தாலும், குருக்கள்மீது பொது நிலையினரின் நம்பிக்கையை வளர்ப்பதில் அமெரிக்க ஆயர்கள் இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று இவ்வறிக்கை பரிந்துரைக்கிறது.


7. வருகிற சனிக்கிழமையன்று, உலக அமைதிக்கான நொபெல் பரிசை 20 ஆண்டுகளுக்கு முன் வென்ற Aung San Suu Kyi யின் ஏற்புரை

ஜூன்,14,2012. தனது ஐரோப்பியப் பயணம் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாகத் தன் வாழ்வில் இருக்கும் என்று மியான்மார் எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyi கூறினார்.
1980களில் ஐரோப்பிய நாடுகளில் தங்கி பயின்று வந்த Suu Kyi, 24 ஆண்டுகளுக்குப் பின் ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளும் பயணத்தின் முதல் படியாக, இச்செவ்வாய் மாலை சுவிட்சர்லாந்து சென்றடைந்தார்.
இராணுவ ஆட்சியிலிருந்து மக்களாட்சி நோக்கி முன்னேறிவரும் மியான்மார் வரலாற்றில், Suu Kyi ஐரோப்பாவில் மேற்கொண்டு  வரும் பயணங்கள் முக்கியமான தருணம் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
1991ம் ஆண்டு உலக அமைதிக்கான நொபெல் பரிசை வென்ற Suu Kyi, அவ்வேளை வழங்கமுடியாத ஏற்புரையை வருகிற சனிக்கிழமையன்று நார்வே நாட்டின் Oslo நகரில் வழங்குவார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
17 நாட்கள் தொடரும் Suu Kyiயின் இப்பயணத்தின்போது பிரான்ஸ், அயர்லாந்து, ஆகிய நாடுகளுக்கும் சென்று, இறுதியில் அவர் இங்கிலாந்து செல்வார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.


8. பெண்களுக்கான நிலைமையில் மிக மோசமான இடத்தில் இந்தியா

ஜூன்,14,2012. உலகில் முன்னேற்றம் கண்டுவரும் மற்றும் செல்வம் மிகுந்த நாடுகள் அளவில் நடத்தப்பட்டுள்ள ஆய்வொன்றில், பெண்களுக்கான நிலைமைகளில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ள ஒரு நாடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தாம்ஸன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை அமைப்பு நடத்திய இந்த ஆய்வில் பெண்களின் கல்வி, நலப்பாதுகாப்பு, தொழில் வாய்ப்புகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என பல்வேறு விடயங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார வழியில் முன்னேற்றம் அடைந்துவரும் 19 நாடுகள் பற்றி, குறிப்பாக மெக்ஸிக்கோ, இந்தோனேசியா, பிரேசில், மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பற்றி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் எதுவும் இந்த ஆய்வில் உள்ளடக்கப்படவில்லை.
இந்தியாவில் நடந்துவரும் சிறுவயது திருமணங்கள், வரதட்சணைக் கொடுமைகள், வீட்டில் நடக்கும் வன்முறைகள், பெண் குழந்தைகள் கருவில் அழிக்கப்படுதல் உள்ளிட்ட விவகாரங்களால் தான் இந்தியா இந்த நாடுகளின் பட்டியலில் பெண்கள் நலனில் மிக அடிமட்டத்தில் இருக்கின்றது என்று இவ்வாய்வறிக்கை கூறுகிறது.
வீட்டில் நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக 7 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட சட்டம் முன்னேற்றப் போக்கைக் காட்டிவருவதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைப் பொறுத்தவரை, சமூகத்தில் பெண்களுக்கு உள்ள அந்தஸ்து மற்றும் அங்கீகாரம் என்பது அவர்களின் வர்க்கம் மற்றும் செல்வத்தைப் பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகிறது.
நன்றாகப் படித்த, தொழில்புரிகின்ற மேற்குல வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கின்ற, சுதந்திரத்தை அனுபவிக்கின்ற மேல்தட்டு வர்க்கப் பெண்கள் உள்ள இந்தியாவில், பின்தங்கிய கிராமங்களிலும் வளர்ச்சிக்குறைந்த மாநிலங்களிலும் நிலைமை தலைகீழாக உள்ளது என இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தாம்ஸன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை அமைப்பு நடத்திய இந்த ஆய்வுப்படி, பெண்கள் நலன் பற்றிய விடயத்தில் கனடாதான் மிகச்சிறந்த நாடாக இருக்கிறது. அடுத்தபடியாக, ஜெர்மனியும், பிரிட்டனும் இருக்கின்றன. இப்பட்டியலில் அமெரிக்கா 6வது இடத்தில் இருக்கிறது.


9. ஐரோப்பிய நிதி நெருக்கடி எதிரொலி: நொபெல் பரிசுத்தொகையும் குறைப்பு

ஜூன்,14,2012. ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் நிதி நெருக்கடி காரணமாக, நொபெல் பரிசுத்தொகை, 20 விழுக்காடு வரை குறைக்கப்பட உள்ளது.
"டைனமைட்' என்ற வெடிமருந்தைக் கண்டுபிடித்த ஆல்பிரெட் நொபெல் என்ற ஸ்வீடன் நாட்டு அறிஞர், தன்னுடைய கண்டுபிடிப்பு அழிவு வேலைக்கு பயன்படுவதைக் கண்டு மனம் வருந்தினார். இதையடுத்து தனது 150 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, ஆக்கப்பூர்வமானப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விருதாக அளிக்கும்படி கூறி, உயில் எழுதி வைத்தார்.
1901ம் ஆண்டு முதல் நொபெல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கும், அமைதிப் பணியில் ஈடுபடுபவர்களுக்கும் நொபெல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறைக்கும், 6.4 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.
தற்போது ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத அளவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், ஆட்குறைப்பு, ஊதியம் மற்றும் ஓய்வூதிய குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போதுள்ள சூழலில் நொபெல் பரிசுக்கான, 6.4 கோடி ரூபாய் தொகை அளிக்க வேண்டுமா என்பது குறித்து, நொபெல் பரிசுக்குழு கூடி ஆலோசனை நடத்தியது. எனவே, தற்போதைய பரிசு தொகையில், 20 விழுக்காடு குறைக்க இந்தக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...