Friday, 8 June 2012

Catholic News in Tamil - 07/06/12


1. கால்பந்து விளையாட்டு ஒருவர் மற்றவரை மதிக்கக் கற்றுக்கொடுக்கும் கல்விக்கூடம் - திருத்தந்தை

2. கிறிஸ்தவ விசுவாசத்தை வாழ்வில் வெளிப்படுத்துவதே முதன்மையான நற்செய்திப் பணி - Mandalay பேராயர்

3. ஹெயிட்டியில் உள்ள கத்தோலிக்கத் திருஅவை நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து போராடி வருகிறது - அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பேராயர்

4. லிபியாவில் மக்களின் வாழ்க்கை மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது

5. இந்தோனேசிய அருள்பணியாளருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது

6. அமெரிக்காவில் மதச்சுதந்திரத்திற்காக எழுந்து நில்லுங்கள் அமைப்பின் இரண்டாவது போராட்டம்

7. உலக அரசுகள் வறுமையை ஒழிக்கும் முயற்சிகளில் முழு மூச்சுடன் ஈடுபடவேண்டும் - ஐ.நா. பொதுச்செயலர்

------------------------------------------------------------------------------------------------------

1. கால்பந்து விளையாட்டு ஒருவர் மற்றவரை மதிக்கக் கற்றுக்கொடுக்கும் கல்விக்கூடம் - திருத்தந்தை

ஜூன்,07,2012. கால்பந்து விளையாட்டு ஒருவர் மற்றவரை மதிக்கக் கற்றுக்கொடுக்கும் கல்விக்கூடம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
போலந்து மற்றும் உக்ரேய்ன் நாடுகளில் இவ்வெள்ளியன்று தொடங்கும் ஐரோப்பிய கால்பந்து விளையாட்டுப் போட்டிகளையொட்டி போலந்து ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Józef Michalikக்கு செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, இந்த விளையாட்டில் ஏற்படும் போட்டி மனப்பான்மைகள், தன்னலத்தைத் தியாகம் செய்து குழுவின் நலனுக்காக விளையாட அழைக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்பண்பானது சகோதரத்துவம் மற்றும் அன்பில் வளர உதவுகின்றது என்றும், இதுவே உண்மையான பொதுநலனை ஊக்குவிக்க உதவும் என்றும் திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.
விளையாட்டுகள், அவற்றை நடத்துவோர், அவற்றில் விளையாடுவோர் மற்றும் அவற்றைப் பார்வையிடுவோரை அவை உள்ளடக்கியிருந்தாலும், அவ்விளையாட்டுகள் இடம்பெறும் நாள்களில் திருவழிபாடுகள், மறைக்கல்வி, செபம் ஆகிய ஆன்மீகக் காரியங்களில் திருஅவையும் அக்கறை எடுக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
இம்மாதம் 8ம் தேதி முதல் ஜூலை ஒன்றாந்தேதி வரை ஐரோப்பிய கால்பந்து போட்டிகள் நடைபெறுகின்றன.


2. கிறிஸ்தவ விசுவாசத்தை வாழ்வில் வெளிப்படுத்துவதே முதன்மையான நற்செய்திப் பணி - Mandalay பேராயர்

ஜூன்,07,2012. தங்கள் கிறிஸ்தவ விசுவாசத்தை வாழ்வில் வெளிப்படுத்துவதே மியான்மாரில் உள்ள கத்தோலிக்கர்கள் மேற்கொள்ளக்கூடிய முதன்மையான நற்செய்திப் பணி என்று Mandalay உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Paul Zingtung Grawng, கூறினார்.
கடந்த பல ஆண்டுகளாக இராணுவ ஆட்சியால் கட்டுண்டு கிடக்கும் மியான்மாரில் மக்களாட்சியை நோக்கிச் செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், அந்நாட்டின் சமுதாய மாற்றங்களுக்குக் கத்தோலிக்கர்கள் பெருமளவில் உதவிகள் செய்யமுடியும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார் பேராயர் Zingtung Grawng.
கல்வி, நலப் பணிகள், வழியாக கிறிஸ்தவர்கள் செய்து வரும் பணிகளை மியான்மார் சமுதாயம் நன்கு உணர்ந்துள்ளது என்று கூறிய பேராயர் Zingtung Grawng, ஆழமான விசுவாச வாழ்வு வாழ்வதாலும், திருவழிபாடுகளில் ஈடுபடுவதன் மூலமும் மக்கள் தங்கள் அயலாருக்குக் கிறிஸ்துவை எடுத்துரைக்கமுடியும் என்று கூறினார்.
மியான்மாரில் 90 இலட்சம் மக்களைக் கொண்டுள்ள Mandalay உயர்மறைமாவட்டத்தில் 24,000 கத்தோலிக்கர்கள் 30 பங்குத் தளங்களில் வாழ்கின்றனர் என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


3. ஹெயிட்டியில் உள்ள கத்தோலிக்கத் திருஅவை நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து போராடி வருகிறது - அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பேராயர்

ஜூன்,07,2012. ஹெயிட்டி நாட்டில் உள்ள கத்தோலிக்கத் திருஅவை நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து போராடி வருகிறது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பேராயர் ஒருவர் கூறினார்.
2010ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி ஹெயிட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெருமளவு உயிர் சேதங்களையும், பொருள் சேதங்களையும் உருவாக்கியது.
இந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கடந்த ஈராண்டுகளாய் உதவிகள் செய்துவரும் அமெரிக்க ஆயர் பேரவையும், கத்தோலிக்கத் துயர் துடைப்பு அமைப்பும் அண்மையில் நடத்திய ஒரு கூட்டத்தில் உரையாற்றிய Miami பேராயர் Thomas Wenski, ஹெயிட்டி மக்களின் விசுவாசத்தைப் பாராட்டினார்.
ஹெயிட்டியின் தலைநகரை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகள் தொடர்ந்தாலும், எதிர்காலத்தில் நிலநடுக்கங்களைச் சமாளிக்கும் உறுதிகொண்ட கட்டிடங்களை உருவாக்க வேண்டியிருப்பதால், இன்னும் பல சவால்கள் உள்ளன என்று பேராயர் Wenski சுட்டிக்காட்டினார்.


4. லிபியாவில் மக்களின் வாழ்க்கை மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது

ஜூன்,07,2012. லிபியாவில் மக்களின் வாழ்க்கையும், கத்தோலிக்கத் திருஅவையின் வாழ்க்கையும் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது என்று Benghaziயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Sylvester Carmel Magro, கூறினார்.
கடந்த ஆண்டு லிபியாவில் நிகழ்ந்த உள்நாட்டுப் போருக்குப் பின் திருஅவை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது என்பதை Fides செய்தி நிறுவனத்திற்கு எடுத்துக்கூறிய ஆயர் Magro, ஆங்காங்கே மோதல்களும், குண்டு வெடிப்பு நிகழ்வுகளும் தொடர்ந்தாலும், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என்று எடுத்துரைத்தார்.
இயல்பு நிலைக்கு தங்கள் வாழ்வு திரும்பி வருகிறது என்பதற்கு, இவ்வெள்ளியன்று மீட்பின் அன்னைக்கு எடுக்கப்படும் நவநாள் முயற்சிகள் ஓர் எடுத்துக்காட்டு என்றும் ஆயர் Magro சுட்டிக்காட்டினார்.
லிபியாவில் உள்ள கத்தோலிக்கர்களில் பெரும்பாலானோர் பிலிப்பின்ஸ் நாட்டிலிருந்தும், ஆப்ரிக்க நாடுகளிலிருந்தும் இங்கு வேலைதேடி வந்தவர்கள் என்பதால், அவர்கள் மத்தியில் மரியன்னை மீது மிகுந்த பக்தி உள்ளது என்பதையும் Benghaziயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி கூறினார்.


5. இந்தோனேசிய அருள்பணியாளருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது

ஜூன்,07,2012. இயற்கை மீதும் சுற்றுச்சூழல் மீதும் மக்கள் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளவேண்டும் என்பதை நான் என் வாழ்வின் மூலம் உணர்த்த முயன்று ஓரளவு வெற்றியும் கண்டுள்ளேன் என்று இந்தோனேசியாவில் வாழும் கப்பூச்சின் துறவுமடத் தலைவர் அருள்பணியாளர் Samuel Oton Sidin, கூறினார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பணிகளில் சிறந்தோருக்கு இந்தோனேசிய அரசு ஒவ்வோர் ஆண்டும் சுற்றுச்சூழல் நாளன்று 'கல்பதரு' என்ற விருதை வழங்கி வருகிறது.
இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட உலகச் சுற்றுச்சூழல் நாளையொட்டி இந்தோனேசிய அரசு 12 பேருக்கு இவ்விருதை வழங்கியது. இவர்களில் அருள்பணியாளர் Oton Sidinம் ஒருவர்.
அருள்பணியாளர் Oton Sidin, Kubu Raya என்ற மாவட்டத்தில் 'வானவில்லின் இல்லம்' என்ற பொருள்படும் Rumah Pelangi என்ற ஒரு பாதுகாப்பான பகுதியை உருவாக்கி, அங்கு பல்வேறு மரங்களை கடந்த 15 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார் என்று UCAN செய்திக் குறிப்பு கூறுகிறது.
அருள்பணியாளர் Oton Sidinக்குக் கிடைத்துள்ள இந்த விருதைக் குறித்து தங்கள் மகிழ்வை வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இவரது முயற்சி அடுத்த தலைமுறைக்கு நல்ல பாடமாக அமையும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.


6. அமெரிக்காவில் மதச்சுதந்திரத்திற்காக எழுந்து நில்லுங்கள் அமைப்பின் இரண்டாவது போராட்டம்

ஜூன்,07,2012. மதச்சுதந்திரத்திற்காக எழுந்து நில்லுங்கள் என்ற அறைகூவலுடன் அமெரிக்காவில் இயங்கும் ஓர் அமைப்பு இவ்வெள்ளியன்று தன் இரண்டாவது போராட்டத்தை நடத்த உள்ளது.
கருக்கலைப்பையும், கருத்தடையையும் நலக் காப்பீட்டுத் திட்டத்தில் அமெரிக்க அரசு இணைக்கும் முயற்சிகளுக்கு எதிராக இயங்கும் இவ்வமைப்பு மேற்கொண்ட முதல் போராட்டம் அமெரிக்காவில் மார்ச் 23ம் தேதி நிகழ்ந்தது. அந்நாட்டின் 28 ஆயர்கள் இணைந்த இந்த போராட்டத்தில், 145 நகரங்களைச் சேர்ந்த 64,000க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர் என்று கத்தோலிக்க செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
இவ்வெள்ளியன்று நடைபெறும் போராட்டத்தில் அமெரிக்காவின் 49 மாநிலங்களைச் சேர்ந்த 154 நகரங்கள் பங்கேற்க உள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 8ம் தேதி நடைபெறும் போராட்டத்தைத் தொடர்ந்து, அமெரிக்க ஆயர்களுடன் கத்தோலிக்கர்கள் இணைந்து, மதச்சுதந்திரம் பற்றிய கருத்தரங்குகளை இருவாரங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.


7. உலக அரசுகள் வறுமையை ஒழிக்கும் முயற்சிகளில் முழு மூச்சுடன் ஈடுபடவேண்டும் - ஐ.நா. பொதுச்செயலர்

ஜூன்,07,2012. விரைவில் துவங்கவிருக்கும் Rio+20 பூமிக்கோள உச்சி மாநாடு வெற்றிகரமாக அமைய வேண்டுமெனில், உலக அரசுகள் வறுமையை ஒழிக்கும் முயற்சிகளில் முழு மூச்சுடன் ஈடுபடவேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
ஜூன் 20ம் தேதி முதல் 22ம் தேதி முடிய பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற உள்ள பூமிக்கோள உச்சி மாநாட்டினைப் பற்றி செய்தியாளர்களிடம் இப்புதனன்று பேசிய பான் கி மூன், தற்கால சந்ததியினர் தங்கள் வாழ்நாளில் காணவிருக்கும் இந்த முக்கிய நிகழ்வின் தாக்கம் அனைவரையும் சரிவர சென்றடைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
1992ம் ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற முதல் பூமிக்கோள உச்சி மாநாட்டின்போது இயற்கை வளங்களையும், எரிசக்தியையும் சரிவர பயன்படுத்தும் திட்டங்களுக்கு உலக அரசுகள் உறுதி அளித்தன. அந்த உறுதிகளுக்கு ஏற்ப கடந்த 20 ஆண்டுகள் கடந்துள்ளனவா என்பதை வருகிற உச்சி மாநாடு தீர்மானிக்கும் என்று பான் கி மூன் எடுத்துரைத்தார்.
அரசுகள் மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்கள், சமுதாய அமைப்புக்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து உழைத்தாலே நமது பூமிக் கோளத்தைக் காப்பாற்றும் முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என்று பான் கி மூன் எச்சரிக்கை விடுத்தார்.



No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...