Friday, 8 June 2012

Catholic News in Tamil - 05/06/12

1.குவாத்தமாலா கர்தினால் கெசாதா தொருனோ இறைவனடி சேர்ந்தார், திருத்தந்தை இரங்கல்

2. உலகின் பசியைப் போக்குவதற்கு உலகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு காரித்தாஸ் தலைவர் அழைப்பு

3. சமுதாய மோதல்களுக்குத் தீர்வுகாண பெரு நாட்டு கர்தினால் அழைப்பு

4.இயேசுவின் வாழ்வைக் குறித்த முதல் முப்பரிமாணத் திரைப்படம் இந்தியாவில்

5.கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியார் ஆலயப் பகுதியைப் புனித பூமியாக அறிவிக்க மாநகர சபை முடிவு

6.நைஜீரியாவில் நிகழ்ந்த துயர நிகழ்வுகள் தலத்திருஅவையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன - ஆயர் பேரவையின் தலைவர்

7.சீன அரசின் Tiananmen அடக்கு முறைகளின் 23ம் ஆண்டு நினைவுக் கூட்டத்தில் 1,80,000 மக்கள்

8.உலகைப் பாதுகாக்கும் வீரர்கள் என்ற விருதுக்கு ஆறுபேர் தெரிவு - ஐ.நா.அமைப்பு
-------------------------------------------------------------------------------------------

1.குவாத்தமாலா கர்தினால் கெசாதா தொருனோ இறைவனடி சேர்ந்தார், திருத்தந்தை இரங்கல்

ஜூன்05,2012. மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலா கர்தினால் Rodolfo Quezada Toruño இறைபதம் அடைந்ததையொட்டி தனது அனுதாபங்களைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Santiago de Guatemala நகரின் முன்னாள் பேராயராகிய கர்தினால் கெசாதா தொருனோ அவர்கள் அகிலத் திருஅவைக்கும், தலத்திருஅவைக்கும் நாட்டுக்கும் ஆற்றிய அருஞ்சேவைகளைப் பாராட்டியுள்ள திருத்தந்தை, அவரின் ஆன்மா நிறைசாந்தியடையத் தான் செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குவாத்தமாலாவின் 36 வருட உள்நாட்டுச் சண்டை முடிவுக்கு வருவதற்கு இடைநிலை வகித்த கர்தினால் கெசாதா தொருனோவின் பங்கு குறிப்பிடும்படியானது. 1990களில் அந்நாட்டில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும் இவர் முக்கிய அங்கம் வகித்தார்.
தூய்மையிலும் தங்களது சொந்த வாழ்க்கையிலும் தங்களது அழைப்பைக் கண்டுணரும் உண்மையான விசுவாசமுள்ள கிறிஸ்தவர்களை நாம் அதிகமாகக் கொண்டிருக்கும்வரை  மனிதாபிமானமும் நீதியும் நிறைந்த சமுதாயத்தை நாம் கொண்டிருப்போம் என்று சொல்லியிருப்பவர் இறந்த கர்தினால் கெசாடா தொருனோ.
இத்திங்களன்று இறைபதம் சேர்ந்த கர்தினால் கெசாதா தொருனோ, 2003ம் ஆண்டில் அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். கடந்த மார்ச் 8ம் தேதி தனது 80வது வயதை நிறைவு செய்துள்ளார் கர்தினால் கெசாதா தொருனோ.

2. உலகின் பசியைப் போக்குவதற்கு உலகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு காரித்தாஸ் தலைவர் அழைப்பு

ஜூன்05,2012. உலகில் பசியால் ஒவ்வொரு 12 வினாடிகளுக்கும் ஒரு குழந்தை இறக்கும்வேளை, பசிக்கொடுமை தவிர்க்க முடியாதது அல்ல எனவும், இதற்கு சமூக, பொருளாதார மற்றும் அரசியலே காரணம் எனவும் அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத் தலைவர் கர்தினால் Oscar Rodriguez Maradiaga கூறினார்.
பசியற்ற வருங்காலம் என்ற தலைப்பில் ஆஸ்ட்ரியாவின் வியன்னாவில் இம்மாதம் 1,2 தேதிகளில் அனைத்துலக காரித்தாஸ் நிறுவனம் நடத்திய கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால்  Maradiaga, உலகில் பசியால் வாடும் சுமார் 92 கோடியே 50 இலட்சம் மக்களின் பசியைப் போக்குவதற்கு உலக அளவில் தீர்வுகள் காணப்படுமாறு கேட்டுக் கொண்டார்.
பிரேசில் நாட்டு ரியோடி ஜெனிரோவில் நடைபெறவிருக்கும் ஐ.நா.மாநாட்டில், உணவுப் பாதுகாப்பு குறித்த விவகாரம் முக்கிய அங்கம் வகிக்க வேண்டுமென்றும், உலகின் பசியைப் போக்குவதற்கு உலகத்தலைவர்கள் நடவடிக்கை எடுக்குமாறும் காரித்தாஸ் தலைவர் அழைப்பு விடுத்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிகளைக் களைவதற்கு வளர்ச்சியடைந்த நாடுகள் தீவிரமாய் முயற்சித்து வரும்வேளை, சுமார் 100 கோடி மக்களுக்கான உணவுப் பாதுகாப்புக்கும் உலகின் பசியை அகற்றுவதற்கும் அந்நாடுகள் முயற்சி எடுக்குமாறும் கர்தினால் மாராதியாகா வலியுறுத்தியுள்ளார்.

3. சமுதாய மோதல்களுக்குத் தீர்வுகாண பெரு நாட்டு கர்தினால் அழைப்பு

ஜூன்,05, 2012. உண்மைக்கு இயைந்த வழிகளை வாழ்க்கையில் பின்பற்றும்போதுதான் சமுதாய மோதல்களுக்கு தீர்வுகாண முடியும் என மீண்டுமொருமுறை பெரு நாட்டின் அமைதிக்கான திருஅவையின் விண்ணப்பத்தை முன்வைத்துள்ளார் அந்நாட்டு கர்தினால் Juan Luis Cipriani.
சுரங்கத்தொழிலுக்கு எதிரான அண்மைப் போராட்டங்களில் இருவர் கொல்லப்பட்ட‌து குறித்து தலத்திருஅவையின் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட, தலைநகர் லீமா கர்தினால் சிப்ரியானி, உண்மை, அமைதி மற்றும் நீதியின்மீது ஆர்வமில்லாதபோது பேச்சுவார்த்தைக்கு அங்கு இடமில்லை என உரைத்ததுடன், கற்களையும் பொய்களையும் கொண்டு மக்கள் வளர்ச்சியைப் பெற முடியாது எனவும் கூறினார்.
அனைத்துப் பெரு நாட்டு மக்களும் வளர்ச்சியை விரும்பினாலும், அது வன்முறை மூலம் பெறப்படுவதை அவர்கள் ஏற்கவில்லை எனவும் கூறினார் கர்தினால்.
அமைதி என்பது அதிகாரத்தில் உள்ளோரின் பணி மட்டுமல்ல, அது அனைத்துப் பெரு நாட்டு மக்களின் ஒன்றிணைந்த பணி என மேலும் கூறினார் கர்தினால் சிப்ரியானி.

4.இயேசுவின் வாழ்வைக் குறித்த முதல் முப்பரிமாணத் திரைப்படம் இந்தியாவில்

ஜூன்,05, 2012. இயேசுவின் வாழ்வைக் குறித்த முதல் முப்பரிமாண திரைப்படம் மூன்றரை கோடி ருபாய் செலவில் இந்தியாவில் எடுக்கப்படவுள்ளது.
ஒன்பது மொழிகளில் எடுக்கப்படும் இத்திரைப்படம், வரும் மாதம் இறுதியில் துவக்கப்பட்டு, 2013ம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறு முதல், உலகம் முழுவதும் 5,000 திரையரங்குகளில் திரையிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவிலிய வல்லுனர்களுடன் பலச் சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியபின்னர், புதிய ஏற்பாட்டின் அடிப்படையில் இத்திரைப்படத்திற்கான ஆவணங்களை இறுதி முடிவு செய்ய ஏறத்தாழ பத்தாண்டுகள் பிடித்தது என்றார் இதன் தயாரிப்பாளர் Johny Sagarika.
ஆந்திராவின் ஹைத‌ராபாத்தில் உள்ள‌ ராமோஜி ராவ் திரைப்ப‌ட‌ ந‌க‌ரில் இத்திரைப்ப‌ட‌ம் துவ‌க்க‌ப்ப‌ட்டு, சில‌ காட்சிக‌ள் எருச‌லேமிலும், க‌ர்நாட‌க‌ மாநில‌த்திலும் எடுக்க‌ப்ப‌டும் என‌வும் அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
'முப்ப‌து வெள்ளிக் காசுகள்' என‌ப் பெய‌ரிட‌ப்ப‌ட்டுள்ள‌ இத்திரைப்ப‌ட‌த்தில் 300 ந‌டிக‌ர்க‌ள் இட‌ம்பெற‌வுள்ள‌துட‌ன், வெளிநாட்டுத் தொழிநுட்ப‌க் க‌லைஞ‌ர்க‌ள் ப‌லரும் பங்குகொள்வர்

5.கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியார் ஆலயப் பகுதியைப் புனித பூமியாக அறிவிக்க மாநகர சபை முடிவு

ஜூன்,05, 2012. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலயம் மற்றும் அதைச்சுற்றியுள்ளப் பகுதியை புனித பூமியாக அறிவிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் கொழும்பு மாநகர சபையில் முன்வைத்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேயர் ஏ. ஜே. எம். முஸம்மில் தலைமையில் கூடிய கொழும்பு மாநகர சபையின் அண்மை மாதக் கூட்டத்தில், புனித பூமி அறிவிப்புக்கான தீர்மானத்தை முன்வைத்து உரையாற்றிய உறுப்பினர் அநுர சுஜீவ, இலங்கைவாழ் கிறிஸ்தவ மக்களின் வணக்கத்திற்கும் பக்திக்கும் உரித்தான புனித‌ அந்தோணியார் ஆலயத்தையும் அதனைச் சுற்றியுள்ள பகுதியையும் புனித பூமியாக அறிவிக்க வேண்டும் என விண்ணப்பித்தார்.
இவ்வறிவிப்பினால் அப்பகுதியில் உள்ள ஏனைய மத்த் தலங்களுக்கு பாதிப்பு ஏற்படாது, மற்றும் அம்மத்த் தலங்களும் புனித பூமியில் அங்கமாக்கப்படும் என தெரிவித்துள்ளார் அவர்.
இம்மாதம் 13ம் தேதி அந்தோணியார் ஆலயத் திருவிழா இடம் பெறவுள்ளதால், அதற்கு அப்பகுதி பாதைகளைச் செப்பனிட்டுத் தருமாறும் உறுப்பினர் அநுர சுஜீவ குமார வேண்டுகோள் விடுத்தார்.

6.நைஜீரியாவில் நிகழ்ந்த துயர நிகழ்வுகள் தலத்திருஅவையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன - ஆயர் பேரவையின் தலைவர்

ஜூன்,05,2012. இஞ்ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரு நாட்கள் நைஜீரியாவில் நிகழ்ந்த துயர நிகழ்வுகள் தலத்திருஅவையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று நைஜீரிய ஆயர் பேரவையின் தலைவர் கூறினார்.
ஜூன் 3, இஞ்ஞாயிறன்று Lagos நகருக்கருகே ஏற்பட்ட விமான விபத்தில் 153 பேர் கொல்லப்பட்டனர், இதைத் தொடர்ந்து, இத்திங்களன்று Bauchi நகரில் வாகன வெடிகுண்டு மூலம் ஒரு கிறிஸ்தவக் கோவில் தாக்கப்பட்டதில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
இவ்விரு நிகழ்வுகளையும் குறித்து Fides செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்த நைஜீரிய ஆயர் பேரவைத் தலைவரும், Jos பேராயருமான Ignatius Ayau Kaigama,  நைஜீரியாவில் தொடந்து நிகழும் தீவிரவாதத் தாக்குதல்களும், ஆயுதம் தாங்கிய கொள்ளைகளும் நாட்டிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் என்று கூறினார்.
நாட்டில் அமைதி நிலவுவதற்காக இஞ்ஞாயிறன்று நடைபெற்ற நாடுதழுவிய கத்தோலிக்கத் திருப்பயணத்தில் கலந்து கொள்ள பேராயர் Kaigamaவும் இன்னும் மற்ற ஆயர்களும் தலைநகர் Abujaவுக்கு வந்திருந்ததாகவும், இத்திருப்பயணத்தின் இறுதியில் ஆயர்கள் அரசுத் தலைவர் Goodluck Jonathan அவர்களைச் சந்தித்ததாகவும் பேராயர் தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அரசுத்தலைவருடன் ஆயர்கள் மேற்கொண்ட சந்திப்பில் நாட்டின் பாதுகாப்பு குறித்த பல்வேறு விடயங்கள் பேசப்பட்டன என்றும், இச்சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது என்றும் பேராயர் Kaigama தெரிவித்தார்.

7.சீன அரசின் Tiananmen அடக்கு முறைகளின் 23ம் ஆண்டு நினைவுக் கூட்டத்தில் 1,80,000 மக்கள்

ஜூன்05,2012. 1989ம் ஆண்டு சீனாவின் Tiananmen சதுக்கத்தில் சீன அரசால் மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறைகளின் 23ம் ஆண்டு நினைவுக் கூட்டம் ஹாங்காங் பகுதியில் உள்ள விக்டோரியா பூங்காவில் இத்திங்களன்று நடைபெற்றபோது, 1,80,000 மக்கள் கலந்து கொண்டனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களின் எண்ணிக்கை கூடிவருவதாக ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
1989ம் ஆண்டு Tiananmen சதுக்கத்தில் நடைபெற்ற இளையோர் போராட்டத்தில் கலந்து கொண்டபோது, இராணுவ பீரங்கி வண்டி கால்களில் ஏறியதால் இரு கால்களையும் இழந்த Fang Zheng என்பவர் இக்கூட்டத்தில் உரையாற்றியபோது, ஹாங்காங் மக்கள் சீன மக்கள் மனசாட்சியின் குரலாகச் செயல்படுகின்றனர் என்பதை எடுத்துரைத்தார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் கல்லூரிகளில் பயிலும் இளையோர் என்பது தனக்கு மிகவும் மன நிறைவைத் தருகிறது என்று Fang Zheng மேலும் கூறினார்.
விக்டோரியா பூங்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு முன்னர், கத்தோலிக்கர்கள் நூற்றுக்கணக்கில் இணைந்து ஒரு செப வழிபாட்டை மேற்கொண்டனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது. இக்கூட்டத்தில் 20 விழுக்காட்டினர் சீனாவின் மத்திய பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

8.உலகைப் பாதுகாக்கும் வீரர்கள் என்ற விருதுக்கு ஆறுபேர் தெரிவு - ஐ.நா.அமைப்பு

ஜூன்,05,2012. இம்மாதம் பிரேசில் நாட்டின் Rio de Janeiroவில் நடைபெறவிருக்கும் Rio+20 உலக மாநாட்டை முன்னிட்டு, 2012ம் ஆண்டு உலகை பாதுகாக்கும் வீரர்கள் என்ற விருதுக்கு ஆறுபேரைத் தெரிவு செய்துள்ளது ஐ.நா.அமைப்பு.
மங்கோலியாவின் அரசுத் தலைவர் Tsakhia Elbegdorj, பிரேசில் நாட்டு வங்கி இயக்குனர் Fábio C. Barbosa, ஐக்கிய அரபு அரசுகளில் மறுசுழற்சி சக்திகளைப் பயன்படுத்தும் தொழிலதிபர் Sultan Ahmed Al Jaber, சுவிட்சர்லாந்து நாட்டில் விமானங்களை இயக்குவதில் புலமைபெற்ற ஆய்வாளர் Bertrand Piccard, Dutch நாட்டின் அறிவியலாளர் Sander van der Leeuw கென்யாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள Samson Parashina ஆகியோர் இந்தப் புகழ்பெற்ற விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் அது சமுதாயக் குழுக்களுக்கும், வர்த்தகத்திற்கும், நாட்டிற்கும் பயன்தரும் என்பதற்கு இந்த ஆறு பேரும் சான்றுகள் என்று ஐ.நா.சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் இயக்குனர் Achim Steiner கூறினார்.
சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் சுத்தமான எரிசக்திகளின் பயன்பாடு, பசுமையை வளர்க்கும் முயற்சிகள் ஆகிய செயல்பாடுகளில் ஈடுபட்ட இவர்களைப்போல பலரும் முன்வந்தால், இந்த உலகம் பாதுகாக்கப்படும் என்று ஐ.நா.வின் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...