Friday, 8 June 2012

Catholic News in Tamil - 06/06/12


1. இங்கிலாந்து அரசியின் வைர விழாவையொட்டி திருத்தந்தை அனுப்பிய வாழ்த்துச் செய்தி

2. 'அஞ்சாதீர்கள்' என்ற முக்கிய செய்தியை மிலான் நகர மக்களுக்கும், உலக மக்களுக்கும் திருத்தந்தை விடுத்துள்ளார்

3. மேய்ப்புப்பணி பயணங்களால் கிடைக்கும் அருள் வரங்கள் உள்ளத்தில் புத்துணர்ச்சியைத் தருகின்றது - திருத்தந்தை

4. அயர்லாந்தில் நடைபெறவிருக்கும் அகிலஉலகத் திருநற்கருணை மாநாடு அந்நாட்டிற்கு ஒரு திருப்பு முனையாக அமையும் - திருப்பீட அதிகாரி

5. புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் இவ்வியாழனன்று மாலை திருத்தந்தை நிறைவேற்றவிருக்கும் திருப்பலிக்கு அழைப்பு

6. திருத்தந்தை மிலான் நகரில் கூறிய 'அஞ்சாதீர்கள்' என்ற வார்த்தையை லிபியாவில் வாழும் கத்தோலிக்கர்களும் உணர வேண்டும் - Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி

7. இயற்கை மருத்துவ முறைகள் வழியாக நோயுற்றோருக்கு முழுமையான நலம் வழங்க முடியும் - அருள் சகோதரி வலேரியன்

8. உலகச் சுற்றுச்சூழல் நாளையொட்டி ஐ.நா.பொதுச் செயலர் வெளியிட்ட செய்தி

------------------------------------------------------------------------------------------------------

1. இங்கிலாந்து அரசியின் வைர விழாவையொட்டி திருத்தந்தை அனுப்பிய வாழ்த்துச் செய்தி

ஜூன்,06,2012. ஒரு கிறிஸ்தவ அரசுத்தலைவர் கொண்டிருக்கவேண்டிய பல நற்பண்புகளுடன் உண்மைச் சுதந்திரம், நீதி, மக்கள்அரசு ஆகிய விழுமியங்களின் கொள்கைகளை முன்னிறுத்தியவர் இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இம்மாதம் 2ம் தேதி சனிக்கிழமை முதல் இச்செவ்வாய் முடிய இலண்டன் மாநகரிலும், இங்கிலாந்திலும் நடைபெற்ற இரண்டாம் எலிசபெத் அரசியின் வைர விழாவையொட்டி தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியத் திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.
2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் இங்கிலாந்து சென்ற வேளையில் எலிசபெத் அரசி தனக்கு அளித்த வரவேற்பினை நினைவிற்கொண்டு அவருக்குத் தன் நன்றியை மீண்டும் ஒருமுறை தன் வாழ்த்துச் செய்தியில் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
பல்வேறு மதங்களுக்கிடையே மதிப்பை உருவாக்குவதிலும், கத்தோலிக்கத் திருஅவைக்கும் பிற சபைகளுக்கும் இடையே ஆழமான புரிதலை வளர்ப்பதிலும் எலிசபெத் அரசி காட்டிவரும் அக்கறையை தான் பாராட்டுவதாகத் திருத்தந்தை கூறினார்.
அரசியையும், அவரது குடும்பத்தையும் இறைவன் தன் பாதுகாப்பில் வழிநடத்த தன் செபங்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக திருத்தந்தை தன் வாழ்த்துச் செய்தியின் இறுதியில் கூறியுள்ளார்.


2. 'அஞ்சாதீர்கள்' என்ற முக்கிய செய்தியை மிலான் நகர மக்களுக்கும், உலக மக்களுக்கும் திருத்தந்தை விடுத்துள்ளார்

ஜூன்,06,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 'அஞ்சாதீர்கள்' என்ற முக்கிய செய்தியை மிலான் நகர மக்களுக்கும், உலக மக்களுக்கும் விடுத்துள்ளார் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே கூறினார்.
ஜூன் 3 இஞ்ஞாயிறன்று மிலான் நகரில் நிறைவுபெற்ற அகில உலக குடும்ப மாநாட்டின் இறுதி மூன்று நாட்களின் நிகழ்வுகளில் திருத்தந்தை கலந்து கொண்டபோது அங்கு அவருக்குக் கிடைத்த வரவேற்பைக் குறித்து TG1 என்ற  இத்தாலிய தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியொன்றில் கர்தினால் பெர்த்தோனே இவ்வாறு கூறினார்.
அண்மையக் காலங்களில் திருத்தந்தையின் தனிப்பட்டக் கடிதங்கள் ஊடகங்களில் வெளியானது பற்றி வத்திக்கானில் வழக்குகள் நடந்து வரும் வேளையில், திருத்தந்தை மேற்கொண்ட இந்த மேய்ப்புப்பணி பயணத்தில் அவருக்கு மக்களால் வழங்கப்பட்ட வரவேற்பு, திருத்தந்தை மீது மக்கள் கொண்டுள்ள பெரும் மதிப்பை எடுத்துக் காட்டுகிறது என்று கர்தினால் சுட்டிக்காட்டினார்.
உலகின் பல பகுதிகளில் நிலவி வரும் வன்முறைகள், திருஅவையில் காணப்படும் பிரச்சனைகள் மத்தியிலும் மக்கள் மனம் தளராது நம்பிக்கை கொண்டிருக்கவேண்டும் என்ற முக்கியச் செய்தியை மிலான் நகரில் திருஅவை தலைவர்கள், இளையோர், பொது மக்கள் அனைவருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் திருத்தந்தை வழங்கினார் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பெர்த்தோனே எடுத்துரைத்தார்.


3. மேய்ப்புப்பணி பயணங்களால் கிடைக்கும் அருள் வரங்கள் உள்ளத்தில் புத்துணர்ச்சியைத் தருகின்றது - திருத்தந்தை

ஜூன்,06,2012. மேய்ப்புப்பணி பயணங்கள் உடலளவில் சோர்வைத் தந்தாலும், இப்பயணங்களால் கிடைக்கும் அருள் வரங்கள் உள்ளத்தில் புத்துணர்ச்சியைத் தருகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன்னிடம் உரைத்ததாக மிலான் நகரப் பேராயர் கர்தினால் Angelo Scola கூறினார்.
மேமாதம் 30ம் தேதி முதல், ஜூன் மாதம் 3ம் தேதி வரை ஐந்து நாட்களாக மிலான் நகரில் நடைபெற்ற அகில உலக குடும்ப மாநாட்டின் முக்கிய அம்சங்களைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மிலான் பேராயர் கர்தினால் Scola, இந்த மாநாட்டின் சிகரமாக அமைந்தது திருத்தந்தையின் இறுதித் திருப்பலி என்றுரைத்தார்.
Bresso விமானத்தளத்தில் நடைபெற்ற இந்தத் திருப்பலியில் 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர் என்பதை மகிழ்வுடன் எடுத்துரைத்த கர்தினால் Scola, திருத்தந்தையின் மீது கத்தோலிக்க மக்களும், பிற மதங்களைச் சார்ந்த மக்களும் கொண்டிருக்கும் மதிப்பும் அன்பும் மிலான் நகர நிகழ்வுகளில் வெளியானது என்று கூறினார்.
இத்தாலிய ஊடகங்களும், இன்னும் பிற ஊடகங்களும் வத்திக்கானைக் குறித்தும், திருத்தந்தையைக் குறித்தும் வெளியிட்டுவரும் ஆதாரமற்ற செய்திகள் மக்கள்மீது எந்தவித எதிர்மறையான பாதிப்புக்களையும் உருவாக்கவில்லை என்பதை மிலான் நகரில் திருத்தந்தைக்கு வழங்கப்பட்ட ஆரவாரமான வரவேற்பு உலகிற்கு உணர்த்தியது என்று கர்ஹினால் Scola செய்தியாளர்களிடம் வலியுறுத்திக் கூறினார்.
பிரச்சனைகள் நிறைந்த உலகில் திருஅவை உயிர் பெற்றுத் திகழ்வதற்கு மக்களே காரணம் என்பதை இச்செய்தியாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்திக் கூறிய திருப்பீடக் குடும்ப அவையின் தலைவர் கர்தினால் Ennio Antonelli, திருஅவையைக் குறித்து சொல்லப்படும் அவதூறுகளுக்குக் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் வாழும் இத்திருஅவையைக் குறித்து கவனம் செலுத்துவது சிறந்தது என்று எடுத்துரைத்தார்.


4. அயர்லாந்தில் நடைபெறவிருக்கும் அகிலஉலகத் திருநற்கருணை மாநாடு அந்நாட்டிற்கு ஒரு திருப்பு முனையாக அமையும் - திருப்பீட அதிகாரி

ஜூன்,06,2012. அயர்லாந்தில் நடைபெறவிருக்கும் அகிலஉலகத் திருநற்கருணை மாநாடு அந்நாட்டிற்கும், அனைத்துலகிற்கும் ஒரு திருப்பு முனையாக, விசுவாசத்தைத் தூண்டும் கருவியாக அமையும் என்று தான் நம்புவதாக திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜூன் 10ம் தேதி, வருகிற ஞாயிறன்று அயர்லாந்தின் டப்ளின் நகரில் 50வது அகில உலக  திருநற்கருணை மாநாட்டில் திருத்தந்தையின் சார்பில் கலந்துகொண்டு, துவக்கத் திருப்பலியை ஆற்றும் ஆயர்களின் திருப்பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாக அயர்லாந்து திருஅவை சந்தித்தப் பிரச்சனைகளை மனதில் கொண்டு, அவற்றிலிருந்து பாடங்களைப் பயிலவும், தொடர்ந்து தனது விசுவாசப் பயணத்தை மேற்கொள்ளவும் இந்தத் திருநற்கருணை மாநாடு தூண்டுதலாக அமையும் என்று கர்தினால் Ouellet எடுத்துரைத்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 49வது அகில உலக  திருநற்கருணை மாநாடு கனடாவின் Quebec நகரில் நடைபெற்றபோது, அங்கு பேராயராக இருந்து மாநாட்டை நடத்திய கர்தினால் Ouellet, கடவுள் பற்றற்ற வழியில் திரும்பியிருந்த கனடா நாட்டுக்கு 49வது மாநாடு பல பாடங்களைச் சொல்லித்தந்தது என்று கூறினார்.


5. புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் இவ்வியாழனன்று மாலை திருத்தந்தை நிறைவேற்றவிருக்கும் திருப்பலிக்கு அழைப்பு

ஜூன்,06,2012. மனித குலத்திற்கு இறைவன் வழங்கியுள்ள ஒப்பற்ற கொடையாகிய திருநற்கருணையின் புகழை மக்கள் அறிந்துகொள்ளவும், திருநற்கருணையில் நாம் கொண்டுள்ள விசுவாசத்தைத் திருத்தந்தையுடன் இணைந்து வெளிப்படுத்தவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று கர்தினால் Agostino Vallini, கூறினார்.
உரோம் மறைமாவட்டத்தின் அனைத்து  மக்களையும், குருக்களையும், புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் இவ்வியாழனன்று மாலை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நிறைவேற்றவிருக்கும் திருப்பலிக்கு வருமாறு அழைப்பு விடுத்த கர்தினால் Vallini, இவ்வாறு கூறினார்.
அண்மைக் காலங்களில் திருப்பீடம் சந்தித்து வரும் சவால்கள் நிறைந்த கேள்விகளை திருநற்கருணை நாதருக்கு முன்பாக எழுப்பி, அவர் வழியாக மக்களின் விசுவாசத்தைத் தூண்டும் ஒரு தருணமாக இது அமைய நாம் முயற்சிகள் மேற்கொள்வோம் என்று கர்தினால் Vallini தன் அழைப்பில் எடுத்துரைத்தார்.
இயேசு கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் என்ற மறையுண்மையில் மக்களின் விசுவாசத்தை உறுதி செய்யும் வண்ணம் 1264ம் ஆண்டு திருத்தந்தை 4ம் உர்பான் என்பவரால் கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தத் திருவிழா நிறுவப்பட்டது என்று உரோம் மறைமாவட்ட செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


6. திருத்தந்தை மிலான் நகரில் கூறிய 'அஞ்சாதீர்கள்' என்ற வார்த்தையை லிபியாவில் வாழும் கத்தோலிக்கர்களும் உணர வேண்டும் - Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி

ஜூன்,06,2012. அண்மையில் திருத்தந்தை மிலான் நகரில் கூறிய 'அஞ்சாதீர்கள்' என்ற வார்த்தையை லிபியாவில் வாழும் கத்தோலிக்கர்களும் உணர வேண்டும் என்று Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giovanni Innocenzo Martinelli, கூறினார்.
அண்மையில் போராட்டக் குழுவினர் Tripoliயின் விமானத்தளத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கு நிலவிய பதட்டநிலை இச்செவ்வாயன்று சீரடைந்ததைக் குறித்து Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்ட பேராயர் Martinelli, லிபியாவில் தொடர்ந்து அனைத்துத் தரப்பினரும் ஆயுதங்களைக் களைந்து உரையாடலில் ஈடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இம்மாதத்தின் மத்தியில் நடைபெறவிருக்கும் தேர்தல்கள் மீண்டும் தள்ளிவைக்கப்படலாம் என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய ஆயர் Martinelli, உரையாடல் ஒன்றே தங்கள் நாட்டிற்கு நீடித்தத் தீர்வைத் தரும் என்பதை அனைத்துத் தரப்பினரும் உணரவேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.


7. இயற்கை மருத்துவ முறைகள் வழியாக நோயுற்றோருக்கு முழுமையான நலம் வழங்க முடியும் - அருள் சகோதரி வலேரியன்

ஜூன்,06,2012. Allopathy எனப்படும் மருத்துவ முறைக்கு மாற்றாக அமையும் இயற்கை மருத்துவ முறைகள் வழியாக நோயுற்றோருக்கு நீடித்த, முழுமையான நலம் வழங்க முடியும் என்று அருள் சகோதரி வலேரியன் கூறினார்.
இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட உலகச் சுற்றுச்சூழல் நாளையொட்டி ஆசிய செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அருள்சகோதரி வலேரியன் இவ்வாறு கூறினார்.
மும்பையின் Bandra பகுதியில் பணிபுரியும் PDDM என்ற அமைப்பின் தலைவரான அருள்சகோதரி வலேரியன், மக்களின் முழுமையான உடல், மன நலன்களை உருவாக்கும் பணிகளில் தங்கள் அமைப்பினர் ஈடுபட்டு வருவதைக் குறித்துப் பேசினார்.
தென் கொரியா, சீனா ஆகிய நாடுகளிலிருந்து கற்றுக்கொண்ட மருத்துவ முறைகளுடன் இந்திய மண்ணில் உருவான பல மருத்துவ முறைகளையும் இணைத்து, மக்களுக்கு முழு நலனை வழங்கும் பணிகளில் இவ்வமைப்பைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


8. உலகச் சுற்றுச்சூழல் நாளையொட்டி ஐ.நா.பொதுச் செயலர் வெளியிட்ட செய்தி

ஜூன்,06,2012. சரியான திட்டங்களை வகுத்து, பொருத்தமான வழிகளை உலக அரசுகள் பின்பற்றினால் சுற்றுச் சூழலையும், மக்களின் முன்னேற்றத்தையும் இணைத்துச் செல்லமுடியும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட உலகச் சுற்றுச்சூழல் நாளையொட்டி செய்தி வெளியிட்ட ஐ.நா. பொதுச்செயலர், உலகில் தற்போது உள்ள இயற்கைச் செல்வங்களை அனைவரும் சரிவர பயன்படுத்தும் வழிகளை ஆய்வு செய்யும் கடமை உள்ளது என்று கூறினார்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் 1972ம் ஆண்டு உலகச் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை உருவாக்கவும், உலகின் இயற்கைச் செல்வங்களைத் தேவையான அளவு பயன்படுத்தும் கலாச்சாரத்தை வளர்க்கவும் ஐ.நா.அவை உருவாக்கிய நாள் உலகச் சுற்றுச் சூழல்  நாள்.
இம்மாதம் 20ம் தேதி முதல் 22ம் தேதி முடிய பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற உள்ள Rio+20 அகில உலக உச்சி மாநாடு, சுற்றுச் சூழலைப் பற்றிய விழிப்புணர்வை மீண்டும் மக்களுக்கு எழுப்பும் என்று தான் நம்புவதாக பான் கி மூன் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Rio+20 மாநாட்டில் மனித குலத்திற்குத் தேவையான சக்திகளை உருவாக்கும் புதிய வழிகளைக் கண்டறியவும், புதுவகை வேளாண்மை முறைகளைக் கண்டுபிடிக்கவும் வழிமுறைகள் ஆய்வு செய்யப்படவேண்டும் என்று ஐ.நா.வின் கல்வி மற்றும் கலாச்சார அமைப்பான UNESCOவின் தலைவர் Irina Bokova, உலகச் சுற்றுச்சூழல் நாளையொட்டி வெளியிட்ட தன் செய்தியில் கூறியுள்ளார்.



No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...