Tuesday, 26 June 2012

Catholic News in Tamil - 23/06/12


1. திருப்பீடப் பல்வேறு பேராயங்களின் தலைவர்களுடன் திருத்தந்தை சந்திப்பு

2. உறுதியான வளர்ச்சித் திட்டங்களில் மனிதர்கள் மையப்படுத்தப்பட வேண்டும் : ரியோ+20  மாநாட்டில் திருத்தந்தையின் பிரதிநிதி வலியுறுத்தல்

3. புலம்பெயரும் மக்களுக்குத் தேவை நம்பிக்கை : அருள்தந்தை லொம்பார்தி

4. சமய சுதந்திரத்துக்காகப் போராட வேண்டும் : பேராயர் லோரி

5. சுற்றுச்சூழல் என்ற கடவுளின் தோட்டத்தில் நாம் உடன் பணியாளர்கள் : தென் கொரிய ஆயர்

6. கைம்பெண்களுக்கு எதிரானப் பாகுபாடுகள் அகற்றப்பட ஐ.நா.பொதுச் செயலர் அழைப்பு

7. ரியோ+20 உச்சி மாநாட்டின் தீர்மானங்களைச் செயல்படுத்த உலகத் தலைவர்களுக்கு பான் கி மூன் அழைப்பு

8. இந்தியாவில் அதிகரிக்கும் இளவயது தற்கொலைகள்

------------------------------------------------------------------------------------------------------
1. திருப்பீடப் பல்வேறு பேராயங்களின் தலைவர்களுடன் திருத்தந்தை சந்திப்பு

ஜூன்23,2012. திருப்பீடத் தலைமையகத்தின் பல்வேறு துறைகளின் தலைவர்களுடன் இச்சனிக்கிழமை கூட்டம் ஒன்றை நடத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இக்கூட்டம் குறித்த நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, திருப்பீடத் தலைமையகத்தின் பணியில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் விவகாரங்கள் தொடர்பாக இக்கூட்டம் நடைபெற்றது என்று கூறினார்.
திருப்பீடத்தின் பணிக்கு இந்த ஒத்துழைப்பு இக்காலத்துக்கு மிக முக்கியமாகவும் அவசரமாகவும் தேவைப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
உரோமன் தலைமையகத்தின் பணியில் நல்ல அமைதியும் நம்பிக்கையும் நிறைந்த சூழலை நிலைநாட்டுவதற்கு உதவுகின்ற பரிந்துரைகளையும் கருத்துக்களையும் பெறும் நோக்கத்தில் திருஅவைப் பணியில் பல்வேறு துறைகளில் நீண்டகால அனுபவங்களைக் கொண்டுள்ள கர்தினால்களையும் இச்சனிக்கிழமை மாலையில் திருத்தந்தை சந்திக்கிறார் என்றும்  அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.  
இந்தச் சிந்தனைகளையும் பகிர்வுகளையும் அடுத்த சில நாள்களுக்குத் திருத்தந்தை தொடர்ந்து நடத்துவார் என்றும், தூயவர்கள் பேதுரு பவுல் பெருவிழாவுக்கென உரோமைக்குப் பல திருஅவைத் தலைவர்கள் வருவது இதற்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.   
தனது அறையிலிருந்து நம்பகத்தன்மை கொண்ட ஆவணங்கள் வெளியேறியது தொடர்பாக, திருஅவை நிர்வாகத்தில் அவரோடு பொறுப்பைப் பகிர்ந்து கொள்பவர்களுடன் உரையாடல் நடத்தித் தனது சிந்தனைகளைத் திருத்தந்தை பகிர்ந்து கொள்கிறார் என்றும் அருள்தந்தை லொம்பார்தி அறிவித்தார்.
நம்பகத்தன்மை கொண்ட ஆவணங்கள் வெளியானது குறித்து இடம்பெற்று வரும் விசாரணைகள் பற்றிய விரிவான செய்திகளை அறிய விரும்பி, இந்த விசாரணையை நடத்துவதற்கு அவர் நியமித்துள்ள கர்தினால் Julian Herranz தலைமையிலான கர்தினால்கள் குழுவை கடந்த சனிக்கிழமையன்றும் திருத்தந்தை சந்தித்தார் என்றும் அருள்தந்தை லொம்பார்தி நிருபர்களிடம் கூறினார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி கர்தினால் ஜார்ஜ் பெல், ஆயர்கள் பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet, பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, உரோம் மறைமாவட்ட முன்னாள் துணைத்தலைவர் கர்தினால் Camillo Ruini, நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் முன்னாள் தலைவர் கர்தினால் Jozef Tomko ஆகியோரை இச்சனிக்கிழமை மாலை சந்திக்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


2. உறுதியான வளர்ச்சித் திட்டங்களில் மனிதர்கள் மையப்படுத்தப்பட வேண்டும் : ரியோ+20  மாநாட்டில் திருத்தந்தையின் பிரதிநிதி வலியுறுத்தல்

ஜூன்23,2012. உலகின் உறுதியான வளர்ச்சித் திட்டங்களில் மனிதர்கள் மையப்படுத்தப்பட வேண்டும் என்று ரியோ+20  உலக உச்சி மாநாட்டில் வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தையின் பிரதிநிதி கர்தினால் Odilo Pedro Scherer.
பிரேசில் நாட்டு ரியோ டி ஜெனிரோவில் இவ்வெள்ளியன்று நடந்து முடிந்துள்ள ஐ.நா. உச்சி மாநாட்டில் திருத்தந்தையின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய பிரேசில் நாட்டு Sao Paulo வின் முன்னாள் பேராயர் கர்தினால் Scherer இவ்வாறு கூறினார்.
இறைவனால் படைக்கப்பட்ட உலகில் மையமாக இருப்பவர்கள் மனிதர்கள் எனவும், ரியோவில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற முதல் அனைத்துலக உச்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது போன்று, உறுதியான வளர்ச்சியில் மனிதர்கள் மத்திய இடத்தைக் கொண்டிருக்க வேண்டுமெனவும் கர்தினால் Scherer கூறினார்.
இந்த உலகின் ஏராளமான வளங்கள் நியாயமாகப் பகிரப்படுவதற்குத் திருஅவைத் தனது ஆதரவைத் தருகின்றது என்பதை உறுதிப்படுத்திய கர்தினால் Scherer, உணவு, நீர், நலவாழ்வு, கல்வி ஆகிய இவற்றை ஒவ்வொருவரும் கொண்டிருப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்குத் துணிச்சலாக முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
கருக்கலைப்பைச் சட்டரீதியாக ஊக்குவிப்பது வளர்ச்சிக்குக் கடும் எதிரி என்பதையும் மாநாட்டினருக்கு நினைவுபடுத்திய அவர், மனித வாழ்வுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாகிய தாயின் வயிற்றிலே மனித வாழ்வு கொல்லப்படுவதை நலவாழ்வு விவகாரத்தோடு சேர்க்க முடியாது என்றும் கூறினார்.


3. புலம்பெயரும் மக்களுக்குத் தேவை நம்பிக்கை : அருள்தந்தை லொம்பார்தி

ஜூன்23,2012. புலம்பெயரும் மக்களுக்கு உறைவிடமும் உணவும் வழங்குவதோடு, அவர்களுக்குப் பிறர்மீதும் வாழ்க்கை மீதும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டுமென்று இயேசு சபை அருள்தந்தை லொம்பார்தி கேட்டுக் கொண்டார்.
வத்திக்கான் தொலைக்காட்சியின் வார நிகழ்ச்சியில் இவ்வாறு பேசிய அவர், அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள், பசி எனப் பல காரணங்களால் தங்கள் நாடுகளைவிட்டுப் புலம் பெயரும் மக்கள் சொல்வதைக் கேட்டு அவர்களைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு மனித மற்றும் ஆன்மீக ஆதரவை வழங்குவதன் மூலம் எதிர்காலத்தின்மீது அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்ட முடியும் என்று கூறினார்.
நல்லதோர் எதிர்காலத்தை உண்மையிலேயே அமைக்க விரும்பும் விசுவாசிகளுக்கும் நன்மனம் கொண்ட மக்களுக்கும் இது ஒரு பெரிய சவாலாக இருக்கின்றது என்றும்  அருள்தந்தை லொம்பார்தி தெரிவித்தார்.
இந்த மக்கள் புலம்பெயரும் போது பசி, தாகம், திருடர்களின் தாக்குதல், படகு கவிழ்தல் போன்ற பல இடர்களால் இறக்கின்றனர் எனவும், அண்மை ஆண்டுகளில் ஐரோப்பாவுக்கு வர முயற்சித்தவர்களில் இருபதாயிரம் பேர் பயணங்களின்போது இறந்தனர் எனவும், கடந்த ஆண்டில் மத்தியதரைக்கடல் வழியாக இத்தாலிக்கு வந்தவர்களில் சுமார் 3,000 பேர் இறந்தனர் எனவும் அவர் கூறினார்.
மக்கள் பணக்கார நாடுகளுக்கு மட்டும் வருவதற்கு முயற்சிக்கவில்லை என்றும் உரைத்த அவர், மாலி நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டுச் சண்டையால் Mauritania வின் Mberra முகாமில் 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அடைக்கலம் தேடினர் என்று தெரிவித்தார்.


4. சமய சுதந்திரத்துக்காகப் போராட வேண்டும் : பேராயர் லோரி

ஜூன்23,2012. அமெரிக்கக் கலாச்சாரத்திலிருந்து மதத்தின் தாக்கத்தை அகற்ற முயற்சிக்கும் சக்திகளுக்கு எதிராகக் கத்தோலிக்கர் போராட வேண்டுமென்று பால்டிமோர் பேராயர் வில்லியம் லோரி கேட்டுக் கொண்டார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் சமய சுதந்திரத்துக்காகத் தொடங்கப்பட்டுள்ள இரண்டு வாரப் போராட்டத்தின் துவக்கத் திருப்பலியில் இவ்வாறு கேட்டுக் கொண்ட பேராயர் லோரி, திருஅவையின் போதனகளும், அந்நாட்டை உருவாக்கியபோது வெளியிடப்பட்ட ஏடுகளும் மனச்சான்றின் சுதந்திரத்தை பலவழிகளில் அங்கீகரிக்கின்றன என்று கூறினார்.
செபம், சமய சுதந்திரத்தை ஆதரித்துப் பேசும் கூட்டங்கள், இந்தச் சுதந்திரம் குறித்த கல்வியறிவு போன்ற நடவடிக்கைகள், இந்த இரண்டு வாரங்களில் அந்நாடு முழுவதும் ஆயர்களால் நடத்தப்படும்.
சமய சுதந்திரத்துக்கான இந்த இரண்டு வார இந்நடவடிக்கை வருகிற ஜூலை 4ம் தேதியன்று நிறைவடையும்.


5. சுற்றுச்சூழல் என்ற கடவுளின் தோட்டத்தில் நாம் உடன் பணியாளர்கள் : தென் கொரிய ஆயர்

ஜூன்23,2012. சுற்றுச்சூழல் இறைவனின் கொடை என்பதை உணர்ந்து அதனைப் பாதுகாப்பதற்குக் கத்தோலிக்கர் பொறுப்பேற்க வேண்டுமென்று தென் கொரிய ஆயர்கள் கூறியுள்ளனர்.
தென் கொரியச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி செய்தி வெளியிட்ட கொரிய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையத் தலைவர் ஆயர் Matthias Ri Iong-hoon, நம் ஆண்டவர் நம்மை நினைத்துப் பெருமைப்படும்படியான பசுமையான புதிய சமுதாயத்தைச் சமைப்பதற்கு கத்தோலிக்கர் தங்களை அர்ப்பணிக்குமாறு  வலியுறுத்தியுள்ளார்.
இக்காலத்தில் உலகின் ஒவ்வொரு மூலையிலும் சுற்றுச்சூழல் மிகவும் சேதமடைந்துள்ளதால் கத்தோலிக்கர், சுற்றுச்சூழலைச் சேதப்படுத்தாமல் செயல்படுமாறு ஆயர் தனது செய்தியில் கூறியுள்ளார்.


6. கைம்பெண்களுக்கு எதிரானப் பாகுபாடுகள் அகற்றப்பட ஐ.நா.பொதுச் செயலர் அழைப்பு

ஜூன்23,2012. கணவன்கள் இறந்த பின்னர் பெண்கள் பல்வேறு விதமான இழப்புக்களை எதிர்கொள்ளும்வேளை, கைம்பெண்களுக்கு எதிரானப் பாகுபாடுகள் அகற்றப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அழைப்பு விடுத்தார்.
ஜூன்23, இச்சனிக்கிழமை அனைத்துலக கைம்பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட பான் கி மூன், வாரிசுரிமை, சொத்துரிமை, சமூகப்பாதுகாப்பு, நலவாழ்வு, கல்வி போன்றவை கைம்பெண்களுக்கு மறுக்கப்படுகின்றன  என்று கவலை தெரிவித்தார்.
கைம்பெண்கள் பலவகையானப் பாகுபாடுகளை எதிர்நோக்குகின்றனர் என்றும், இயற்கைப் பேரிடர்கள், போர்கள் போன்ற சூழ்நிலைகளில் இவர்களின் நெருக்கடிநிலை கவலைக்குரியதாக இருக்கின்றதென்றும் அவரின் செய்தி கூறுகின்றது.
கைம்பெண்களுக்கு எதிரானப் பாகுபாடுகள் அகற்றப்படவும் அவர்கள் தங்களின் மனித உரிமைகளை முழுமையாய் அனுபவிக்கவும் இந்த அனைத்துலக தினத்தில் ஆவன செய்யவும் உலகினரைக் கேட்டுக் கொண்டார் ஐ.நா.பொதுச் செயலர்.


7. ரியோ+20 உச்சி மாநாட்டின் தீர்மானங்களைச் செயல்படுத்த உலகத் தலைவர்களுக்கு பான் கி மூன் அழைப்பு

ஜூன்23,2012. உலகின் அனைத்து மக்களும் நல்ல பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூக வளமையை அடையும்பொருட்டு ரியோ+20 உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை உலகத் தலைவர்கள் செயல்படுத்துமாறு பான் கி மூன் கேட்டுக் கொண்டார். 
மாநாட்டின் உரைகள் முடிந்து விட்டன, இப்பொழுது வேலைகள் தொடங்கப்பட வேண்டும் என்று இந்த மூன்று நாள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் கூறினார் பான் கி மூன்.
சுமார் 100 நாடுகள் மற்றும் அரசுகளின் தலைவர்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், உலகின் உறுதியான வளர்ச்சிக்கென அரசுகளும் தொழிற்சாலைகளும், வணிகர்களும், நிதி அமைப்புகளும், தனியாட்களும் சுமார் 51,300 கோடி டாலர் நிதியுதவிக்கு உறுதியளித்துள்ளனர்.
பத்துக்கோடி மரங்களை நடுதல், ஆப்ரிக்காவில் பசுமைப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு 5,000 பெண்கள் அமைப்புகளுக்கு உதவுதல், 8 இலட்சம் டன் polyvinyl chloride ஐ மறுசுழற்சி செய்தல் போன்ற திட்டங்களுக்கு நாடுகள் உதவ முன்வந்துள்ளன.
ஊடகங்கள் வழியாக 5 கோடிக்கு மேற்பட்ட மக்கள் இதில் கலந்து கொண்டனர்.


8. இந்தியாவில் அதிகரிக்கும் இளவயது தற்கொலைகள்

ஜூன்23,2012. இந்திய இளையோரின் இறப்புக்களுக்கு இரண்டாவது காரணமாக இருப்பது தற்கொலை எனவும், உலகில் அதிகமானவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாகவும் Lancet மருத்துவ இதழ் வெளியிட்ட புதிய ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களில் 60 விழுக்காட்டினர் 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இளம்பருவத்தினர் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வசதிகளில் முன்னேறியிருக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தற்கொலைகள் அதிகம் நடப்பதாகவும் இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.
இந்தியாவில் 2010ம் ஆண்டில் 1,90,000 தற்கொலைகள் இடம்பெற்றன என்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறியது.
உலக அளவில் ஆண்டுக்கு 9 இலட்சம் தற்கொலைகள் நடக்கின்றன, இவற்றில் சீனாவில் இரண்டு இலட்சம் என அந்நிறுவனம் கூறியது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...